Tuesday, April 22, 2025
முகப்புவாழ்க்கைபெண்விருத்தாச்சலம், சென்னை - உழைக்கும் பெண்கள் தின நிகழ்வுகள்

விருத்தாச்சலம், சென்னை – உழைக்கும் பெண்கள் தின நிகழ்வுகள்

-

குருதியில் மலர்ந்த உழைக்கும் பெண்கள் தினம் – விருத்தாச்சலம்

பெண் விடுதலையை முன்னெடுப்போம்! சமூக விடுதலையைச் சாதிப்போம்

ஆர்ப்பாட்டம்

08-03-2016 செவ்வாய் மாலை 4 மணி பாலக்கரை விருத்தாச்சலம்

தலைமை : தோழர் ரேவதி, பெண்கள் விடுதலை முன்னணி, விருத்தாச்சலம்

wwd-virudhai-poster-2

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
விருத்தாசலம்

 சென்னை தெருமுனை பிரச்சாரம்

பெண்களின் வாழ்வை சீரழிக்கும் டாஸ்மாக்கை மூடுவோம்
உலக பெண்கள் தினமான மார்ச்-8-ல் உறுதியேற்போம்!

உழைக்கும் பெண்களே!

“ஊருக்கு ஊரு சாராயம் கதறுது தமிழகம்” என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கம் தமிழகத்தின் அவலத்தை நாடி பிடித்துக் கூறுகிறது என்றால் அது மிகையல்ல. டாஸ்மாக்கால் ஆண்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் என குடித்துச் சாகின்றனர். தமிழகமே சுடுகாடாய் மாற்றப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான். அவர்களின் துயரத்தை, கதறலைச் சொல்ல வார்த்தைகள் போதாது.

குடித்துவிட்டு வந்து அடிப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, சந்தேகிப்பது போன்றவைகளால் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்வது, கணவன் வேலைக்குப் போகாததால் தன் பிள்ளைகளுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் மாடாய் உழைப்பது, ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழ்வது என பெண்களின் வாழ்க்கையே சீரழிந்து கொண்டிருக்கிறது. அதுவும் கணவனை இழந்த பெண்கள் என்றால் அவர்களது துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கணவன் இல்லாததால் மற்ற ஆண்களின் பாலியல் சீண்டல், விதவை என்று சமூகம் புறக்கணிப்பது என்ற ஒரு நரக வாழ்க்கையைத்தான் அனுபவிக்கின்றனர். இதற்கு மேலும் டாஸ்மாக் கொடூரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமா? கடலென திரண்ட மக்கள் அதிகாரம் நடத்திய திருச்சி மாநாட்டில் தன் வேதனையை வெளிப்படுத்திய நாகராஜின் அவலத்தைக் கேளுங்கள்.

“நான் பித்தளை பாத்திர வேலை செய்பவன். குடிக்கு அடிமையானதால், வாங்குகிற சம்பளத்தை முழுக்கக் குடித்தேன். என்னுடைய குழந்தையின் பசிக்குப் பால் வாங்கக் கூட காசு தர மாட்டேன். குடித்து விட்டால் தினம் சண்டைதான் போடுவேன். ஒரு கட்டத்தில் இவனைத் திருத்தவே முடியாது. இவனுடன் வாழவும் முடியாது என்று முடிவு பண்ணி என்னுடைய 3 குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள் என் மனைவி சர்மிளா. என் மனைவியைக் காப்பாற்றப் போனபோது என்னுடைய கைகளும், முகமும் நெருப்பில் வெந்து போய் விட்டன. இனி என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. பசியால் வாடும் என் குழந்தைகளுக்கு பாலோ, பிஸ்கட்டோ கூட வாங்கித் தர முடியவில்லை” என்று அழுது புலம்பினார்.

இப்படித் தமிழகம் முழுக்க பல சர்மிளாக்கள் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். பல குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவைகளை மேலும் எழுதினால் பக்கங்கள் போதாது. அழுதும் மாளாது.

டாஸ்மாக்கால் குடும்பம் மட்டுமா சீரழிகிறது? மொத்த சமூகமும்தானே சீரழிகிறது. இந்தக் குடிவெறி, 6 வயது குழந்தையா 60 வயது மூதாட்டியா என்று கூட பார்ப்பதில்லை. இதன் விளைவு சிவகங்கையில் 13 வயது சிறுமியை அவளுடைய அப்பாவும், அண்ணனுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதற்குக் காரணம் என்ன? குடிவெறிதானே! டெல்லி மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்யத் தள்ளியது எது? குடிவெறிதானே! இப்படி பல சம்பவங்களை நாம் செய்தித் தாள்களில் படிக்கிறோம்… வேதனைப்படுகிறோம்… போராடவும் செய்கிறோம்.

டாஸ்மாக்கால் ஒட்டுமொத்த தமிழகமும் பெண்களின் வாழ்வும் சிதைக்கப்படுவது பற்றி நம்மை ஆளும் அரசு அதிகாரிகளுக்கோ, ஓட்டு வாங்கிப் போன அமைச்சர்களுக்கோ துளியும் வருத்தமோ, வேதனையோ இல்லை. அதனால்தான், “டாஸ்மாக்கை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகும், அரசுக்கு வருமானம் போய்விடும்” என்று வாய்கூசாமல் பேச முடிகிறது அமைச்சர் நத்தம் விஸ்வநாதனால்.

ஆனால் கள்ளச்சாராயத்தை எப்படி தடுப்பது? என்றும், அரசுக்கு வருமானம் பெருக்குவதற்கும் வழி சொல்கின்றனர். மக்கள் அதிகாரம் மாநாட்டில் கலந்து கொண்ட டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகள். “ஆம்புலன்ஸ்க்கு 108 என்று ஒரு எண் இருப்பது போல், கள்ளச் சாராயத்தை ஒழிக்க ஒரு போன் நம்பர் கொடுங்க, தகவல் சொல்றோம். போலீசு வந்து புடிச்சிட்டுப் போகும்.அப்புறம் என்ன? கள்ளச்சாராயத்தைத் தடுத்திடலாமே” என்கின்றனர்.

“ஒரு வீட்ல ஒரு கணவன் 500 ரூபாய்க்குக் குடிக்கிறான். அப்போ ஒரு மாதம் 15,000 ரூபாயும், வருசத்துக்கு 1,80,000 ரூபாயும் டாஸ்மாக்குக்கே கொடுக்கிறான். அதை வீட்டுப் பெண்கள்கிட்ட கொடுத்தா காய்கறி, மளிகை மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவாங்க. குடும்பமும் நல்லாருக்கும், அரசுக்கும் மறைமுகமா வருமானம் வருமே” என்கின்றனர்.

இவர்களுக்கு இருக்கும் அறிவும் அக்கறையும் பொறுப்பும் ஆட்சியாளர்களுக்கு இருந்தால் நிச்சயம் கள்ளச்சாராயத்தையும், அம்மா சாராயத்தையும் ஒழிக்க முடியும். ஆனால், இவர்கள் செய்ய மாட்டார்கள். டாஸ்மாக்கை அதிகப்படுத்தி கல்லா கட்டுவதே இவர்கள் கொள்கையாகிருக்கும் போது, இவர்கள் எப்படி கள்ளச் சாராயத்தையும் அம்மா சாராயத்தையும் ஒழிப்பார்கள்?

அப்படி என்றால் நம்முடைய பிரச்சனையை வேதனையை துன்பத்தை கஷ்டத்தை தீர்த்து வைக்க வக்கில்லாத இவர்களிடம் நாம் ஏன் மூடச் சொல்லி கெஞ்ச வேண்டும்? வீதியில் இறங்குவோம்! டாஸ்மாக் கடைகளை நாமே இழுத்து மூடுவோம்!

போராட முடியுமா? டாஸ்மாக்கை இழுத்து மூட முடியுமா நம்மால்?

முடியும்.

நமக்கு இடப்பட்ட விலங்குகளான பெண்ணடிமைத்தனத்தையும் நம்மை ஒவ்வொரு நொடியும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆணாதிக்கத்தையும் நம்மை போராட விடாமல் மழுங்கடித்து வரும் நுகர்வு – சீரழிவுப் பண்பாட்டையும் உடைத்தெறிய முன்வருவது மூலம் நிச்சயம் முடியும். முன்வருவோம் என்று உலகப் பெண்கள் தினமான மார்ச்-8ல் உறுதியேற்போம்!

உழைக்கும் பெண்களே!

  • நம்மீது திணிக்கப்பட்டுள்ள பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் உடைத்தெறிவோம்!
  • ஆணுக்கு பெண் சமம் என்பதை உயர்த்திப் பிடிப்போம்!
  • நம்மை மழுங்கடித்து வரும் நுகர்வு-சீரழிவுப் பண்பாட்டை உதறியெறிவோம்!
  • உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் பார்ப்பனிய பண்பாட்டை வேரறுப்போம்!
  • புதிய ஜனநாயகப் பண்பாட்டை கட்டியமைப்போம

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை

திருச்சி – ஃபேசியல் மட்டுமா சுதந்திரம் ? அரங்கக் கூட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க