பெண்களை அடிமைப்படுத்துவதற்கு ஆண்களும் கடவுள்களும் சேர்ந்து அமைத்த கூட்டணிக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண் எப்படி அடிமையாக ஆயுள்கைதியாக வாழவேண்டும் என்று பார்ப்பனியம் மட்டுமல்ல, அல்லாவைத் தொழும் முசுலீம் மதமும் வரையறுத்து வைத்திருக்கிறது. ஆனால் உலகெங்கிலும் முசுலீம் பெண்கள் அப்படித்தான் வாழ்வதாக வகாபிய வெறியர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து தத்தமது நாட்டின் பெண்களை அடக்கி வருகிறார்கள்.
அது உண்மையல்ல என்பதற்கு இந்த புகைப்படக் கட்டுரை ஒரு சான்று. மதமோ, மார்க்கமோ, புனித நூலோ தராத ஒரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஒரு சண்டைக் கலை தந்ததாக மகிழ்கிறார்கள் இந்த பெண்கள். உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி இந்த இளம் பெண்கள் கூறும் செய்தியை நினைவிலிருத்துவோம்.
She Fighter – ஷி ஃபைட்டர்– ஜோர்டான் நாட்டில் 2012-ம் ஆண்டில் முதன் முதலாக நிறுவப்பட்ட பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி நிலையமாகும்.
இதன் நிறுவனர் லீனா கலீப் கூறுகையில் பாரம்பரிய தற்காப்பு நுட்பங்களோடு ஒரு பெண்ணின் சுய பாதுகாப்பு மற்றும் சுய பலத்தை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்கிறார். பெண்களின் உரிமைக்காக 10 மாநாடுகளை நடத்துவதை காட்டிலும் SheFighter அவர்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறார்
ஒரு வருடத்திற்கு முன்பு அவருடைய சக ஊழியர் ஒருவர் சொந்த சகோதரனால் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளானார். அதுவே லீனா இந்நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. தலைநகரம் அம்மானில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி முடித்திருக்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் இங்கு இளம் பெண்களுக்கு சுவராசியமான முறையில் தற்காப்பு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. பயிற்சியில் முடிவில் “ அவள் கோபமானவள், அவள் அடிப்பாள்” என்று முழக்கமிடுகிறார்கள் இந்த பெண்கள்.










செய்தி – புகைப்படங்கள்: நன்றி அல் ஜசிரா