Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 3

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 3

-

புதுச்சேரி

பேசுவது தேசபக்தி! செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது!
பார்ப்பன பாசிச பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!

மார்ச்-23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு தினம்! தனது 23 வயதில் நமது நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடை ஏறிய மாவீரன்! தாய் நாட்டிற்காகவும், தேசப்பற்றுக்காகவும் இளம் வயதில் தனது மரணத்தையே விடுதலைப் போராட்டத்திற்கான உந்து சக்தியாக மாற்ற, தூக்கு மேடைக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி கொண்ட மாவீரன் தான் உண்மையான ஹீரோ என்பதை உணர்த்தும் வகையிலும், முதலாளித்துவ சுரண்டல் அமைப்பை ஒழிப்பதும், மதவெறி பாசிச சக்திகளின் வெறியாட்டங்களை முறியடித்து மக்கள் வர்க்கமாக ஒன்றுபட வேண்டும் என்ற அவரது எழுத்துக்களும், அரசியல் நிலைப்பாடுகளும், வாழ்க்கையும் இன்றைய அரசியல் சூழலில் நாம் வரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், முதலாளித்துவ சுரண்டலை பாதுகாக்கும் வகையில், மக்களை வர்க்கமாகச் சேரவிடாமல் தடுக்கும் பார்ப்பன பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம் என அறைகூவும் வகையிலும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு புதுச்சேரியின் முக்கிய சாலைச் சந்திப்பான ராஜா திரையரங்கம் அருகில் நடத்தப்பட்டது.

march-23-puthuvai-posterஆர்ப்பாட்ட்த்திற்கு புதுச்சேரி பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பு.ஜ.தொ.மு திருபுவனை கிளைத் தலைவர் தோழர் சங்கர் மற்றும் புதுச்சேரி பு.ஜ.தொ.மு மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

march-23-puthuvai-demo-3இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்காக கடைவீதிகள், வீடுகள், பேருந்துகளிலும், இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தின் மூலம் கிராமப் புறங்களில் வாகனங்களில் கொடி கட்டிக் கொண்டு மெகா போன் மூலமாகவும் பிரச்சாரங்கள் கொண்டு செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் போது பரவலாக ஆதரித்தனர்.

march-23-bhagat-singh-2ஆர்ப்பாட்டத்தில் தலைமையுரையாற்றிய தோழர், “தோழர் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டு வீசியதால் தூக்கிலிடப்பட்டார் என்பது மட்டும் தான் பரவலாக சொல்லப்படுகிற விசயம். அவர் எதற்காக குண்டு வீசினார் என்பது பொதுவாக எந்த கட்சிகளும் சொல்வதில்லை. கேளாத செவிகள் கேட்கட்டும் என்று சொல்லி, எந்த உயிர்ச்சேதமும் நிகழாவண்ணம் குண்டு போட்டு, ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தைத் தனது பக்கம் இழுத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொண்டு வந்த சட்ட மசோதாவை எதிர்த்து, தொழிலாளர்களின் உரிமைகளையும், அதற்கெதிரான போராட்டங்களையும் நசுக்குவது தான் சட்ட மசோதாவின் உண்மையான நோக்கம் என்பதை அம்பலப்படுத்தி, அதற்கெதிராகத் தொழிலாளி வர்க்கம் போராட உணர்வூட்டினார். இந்திய விடுதலையில் காந்தி போன்ற தலைவர்கள் சொல்லும் சுயராச்சியம் என்பது நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலையாக இருக்காது. அது முதலாளிகளுக்கான விடுதலையாகத் தான் இருக்கும். முதலாளித்துவ சுரண்டலை ஒழிக்கும் வகையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை தூக்கியெறிந்து, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பையே மாற்றும் வகையில் புரட்சியின் மூலம் தான் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் விடுதலை சாத்தியம் என்று அன்று பகத்சிங் வார்த்தைகள் இன்றைய தொழிலாளர்களின் நிலைமைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்பதை நம்மால் அனுபவ பூர்வமாக உணர முடியும். எனவே, முதலாளித்துவத்தின் சுரண்டல் முறையை தகர்க்கும், புரட்சி ஒன்று தான் நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி. இதை உணர்த்திய பகத்சிங்கின் வாரிகளாய் களத்தில் இறங்குவோம்” என்றார்.

march-23-bhagat-singh-1திருபுவனை கிளைத் தலைவர் தோழர் சங்கர், பகுதியில் உள்ள தொழிலாளர்களின் நிலையை விளக்கியதுடன், “இன்று பெயரளவிலான சட்டங்கள் இருக்கும் போது, பல்வேறு போராட்டங்களுக்குமிடையே நமது உரிமைகளில் சிலவற்றை வென்றெடுக்கிறோம். ஆனால், தற்போது ஆலை வளாகம் முழுவதும் கேமிரா கொண்டு தொழிலாளர்களைக் கண்காணிக்கும் நிலையில், தொழிற்பேட்டைகளில் சிறப்பு போலிசு நிலையங்கள், தொழிலக உளவு போலிசு என மோடி அரசு கொண்டு வந்து ஆலைக்கு உள்ளேயும், ஆலைக்கு வெளியேயும் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களை மோப்பம் பிடித்து வேட்டையாடும் நிலை உருவாகும். இந்த அபாயகரமான சூழலை நாம் புரிந்து கொண்டு பகத்சிங் காட்டிய பாதையில் உரிமைகளை வென்றெடுக்க புரட்சிப் பாதையில் அணிதிரள வேண்டும் என்று அறைகூவினார்.

அடுத்து, மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன், தனது உரையைத் துவங்குவதற்கு முன்னே, தேர்தல் அதிகாரி, “அனுமதி வாங்கிய நேரம் கடந்து விட்ட்து. எனவே, கூட்டத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும்” என்று கூறினார். “ஆர்ப்பாட்டம் காலதாமதமாகத் தான் தொடங்கப்பட்ட்து. அதனால், சிறிது நேரத்தில் முடித்துவிடுகிறோம்” என்று சொன்னவுடன் பின்வாங்கிய அதிகாரி, அருகில் நின்றிருந்த போலிசிடம், கூட்டத்தை முடிக்கச் சொல்லி ஏவி விட்டார். அருகில் நின்றிருந்த உளவுப் பிரிவு போலிசோ, “இவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வர்களாச்சே, ஓட்டுப் போடாதேன்னு சொல்வாங்களே, இவங்களுக்கு எப்படி அனுமதி கொடுத்தனர்?” என்று தன்பங்குக்கு போலிசை கொம்பு சீவி விட்டார். இந்நிலைமைகளால், அவரது உரையை அரைகுறையாகவும், சுருக்கமாகவும் முடிக்க நேர்ந்தது.

march-23-puthuvai-bannerதோழர் தனது உரையில், “இன்று தொழிலாளர் சட்டங்கள் பல இருந்தும், தொழிலாளர்கள் உரிமைகளற்றவர்களாக ஒடுக்கப்படுகின்றனர். இந்த லட்சணத்தில் மோடி அரசு, தொழிலாளர் சட்டங்களை ஒழிப்பதோடு மட்டுமல்லாது, 24மணிநேர ஷாப்பிங் மால்கள் கொண்டு வருவதன் மூலம் சிறுவணிகர்களையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளது. இங்கு போத்தீஸ் போன்ற வணிக நிறுவனங்களில் அதிகபட்சமாக பெண்கள் தான் வேலை செய்கின்றனர். அவர்கள், தனது வேலை நிலைமை காரணமாக தொடர்ந்து நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது. 24 மணிநேர ஷாப்பிங் மால்கள் வந்தால், இரவு நேரங்களிலும் அதிக அளவில் பெண்கள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும், அவர்களின் வேலை நிலைமைகளால் கருப்பை இறக்கம் போன்ற உடல்ரீதியாக பிரச்சினைகளால் பாதிப்புகள் அதிகமாகும். இதன் மூலம் சமூகமே நோயுற்ற சமூகமாக மாறும் அபாயத்தில் தள்ளி வருகிறது மோடி அரசு.

march-23-puthuvai-demo-5தொழிலாளர்கள், சிறுவணிகர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். ஆனால், இந்த நிலைமைகளை எல்லாம் மறைத்து மக்களை தேர்தல் மயக்கத்தில் ஆழ்த்தி வருகிறார்கள் ஓட்டுக் கட்சிகள், ஊடகங்கள். தேர்தல் துறை அதிகாரிகளோ, நேற்றுவரை லஞ்ச, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு விட்டு, இன்று யோக்கியர்கள் போல வலம் வருவதும், ஜனநாயகம் என்ற பெயரில் பேச்சுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறித்து, ஆட்டம் போடுவதும் கேலிக்கூத்து. ஒருபுறம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வு சூறையாடப்படுவதும், மறுபுறம், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதும், இருக்கின்ற அரசு மக்களுக்கானது அல்ல என்பதும், நமக்கான உரிமைகளைப் பெற இந்த முதலாளித்துவ சுரண்டல் அமைப்பை ஒழித்து மக்களுக்கு உண்மையான ஜனநாயக உரிமைகளைப் பெறும், புதிய ஜனநாயக அரசை நிறுவ பகத்சிங் வழியில் போராடுவோம்.” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியில் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

தொடர்புக்கு, செல்: 9597789801

கோவை

march-23-kovai-10பேசுவது தேசபக்தி, செய்வது நாட்டை மறுகாலனியக்குவது !
பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!

என்கின்ற முழக்கத்தின் அடிப்படையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சி-2 காவல் நிலையத்திலும் தேர்தல் அலுவலர் அலுவலகத்திலும் அனுமதி கடிதம் 14-03-2016 தேதியன்று பு.ஜ.தொ.மு சார்பாக கொடுத்திருந்தோம்.

சி-2 காவல் நிலையத்தில் “எங்களிடம் மனு கொடுக்கவேண்டாம் தேர்தல் அலுவலகத்தில்தான் கொடுக்கவேண்டும்” என்று கூறினர். “தேர்தல் அலுவலகத்திலும் தருகிறோம் உங்களுக்கும் தருகிறோம்” என்று கூறி மனுவை கொடுத்துவிட்டு வந்தனர்.

march-23-kovai-09

march-23-kovai-07மார்ச் 21-ம் தேதி தேர்தல் அலுவலரை சந்தித்து கேட்டபோது, “தேர்தல் சம்மந்தம் இல்லாதவைகளுக்கு காவல் துறைதான் அனுமதி கொடுக்கணும்” என்று கூறிவிட்டனர். பின்னர் C-2 காவல் நிலைய அதிகாரியை தொடர்புகொண்டதுக்கு அரசையோ, அரசியல் தலைவர்களையோ விமர்சிக்காமல் நடத்திக் கொள்ளுங்கள் என்று நிபந்தனையோடு வாய் மொழி அனுமதி கொடுத்தனர்.

மார்ச் 23 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் திலீப், மாவட்ட செயலாளர் தலைமை தங்கினார்.

தோழர் கோபிநாத் தனது கண்டன உரையில் தொழிலாளி வர்க்கத்துக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திவிட்டு காலனி ஆதிக்கத்திக்கு எதிராக போராடிய  தியாகிகளின் நினைவு நாளில் அவர்களுடைய செயலை நாமும் பின்பற்ற வேண்டும் என்று சபதம் ஏற்போம் என்று பேசினார்.

தோழர் சித்தாத்தர் (மக்கள் கலை இலக்கியக் கழகச் செயலாளர்) தனது உரையில், “பார்ப்பன பாசிசத்தை அடியோடு அழிக்கும் வரை உழைக்கும் மக்களுக்கு விடிவு பிறக்காது” என்று பேசினார்.

march-23-kovai-01நீலகிரி மாவட்டம் செயலாளர் தோழர் பலன் பேசுகையில் நாட்டை மறுகாலனியாக்கதுடிக்கும் மோடியரசை கண்டித்து பேசினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் உமா பார்ப்பனிய மோடி அரசு மாணவர்களை எப்படி ஒடுக்குகிறது என்பதையும் JNU மாணவர் போராட்டத்தையும் விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர் விளவை இராமசாமி உரை:

தொழிலாளர் விரோத சட்டங்கள் நிறைவேற்றுவதை கண்டித்து வெள்ளையர்கள் காலத்தில் பாராளுமன்றத்தில் குண்டு வீசினார் பகத்சிங். குண்டு விழுந்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் உள்பட அனைவரும் நாற்காலிகளுக்குள் பதுங்கினார். கையில் துண்டுப் பிரசுரங்களோடு தோழர்கள் நிற்கிறார்கள். வெள்ளைக்கார போலீசு இவர்களைக் கைது செய்ய அஞ்சுகிறது. நம்மீது குண்டுகளை வீசினால் என்ன செய்வது என பம்மினார்கள். உடனே பகத்சிங் “பயப்படாமல் வந்து எங்களைக் கைது செய்யுங்கள், துண்டுப்பிரசுரங்கள் மட்டும் உள்ளது” எனக் கூறி கைதாகினார்.

march-23-kovai-0623 வயது இளைஞன் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாய் களத்தில் நின்றார். தனது தந்தை வெள்ளைத் துரைமார்களிடம் பேசி சமரசம் செய்கிறேன் என தந்தைப்பாசம் காட்ட உடனே ஒரு கணமும் யோசிக்காமல் அதனைக் கடுமையாக மறுத்து தந்தையே எனது நேசம் நாட்டின் மீது உள்ளது. அதற்கு ஊறு விளைவிக்கும் எதனையும் நான் ஏற்க மாட்டேன் எனக் கம்பீரமாக முழங்கினார்.

நாடு முழுவதும் பகத்சிங், ராஜகுரு சுகதேவ் தூக்கிலிடப்படுவதை எதிர்த்துப் போராட்டங்கள் வீறு கொண்டு எழுந்தன. நம் தமிழகத்திலும் தந்தை பெரியார் பகத்சிங் விடுதலைக்கு குரல் கொடுத்தார். மக்கள் எழுச்சியை கண்டு மிரண்ட வெள்ளை அரசு ஒரு நாள் முன்னதாகவே தூக்கிலிட ஆயத்தம் செய்கிறது. அப்பொழுதும் பகத்சிங், “நான் தூக்கு மேடை ஏறத் தயார். தோழர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் எனும் நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனோடு பேசிக் கொண்டிருக்கிறான். சற்றுப் பொறுங்கள்” என்றார். தனது வாழ்வின் இறுதி நிமிடங்களில் கம்யூனிஸ்டு நெஞ்சுறுதியை நிலை நாட்டினார்.

“இதோ இந்தியப் புரட்சியாளன் தூக்கு மேடை ஏறும் இறுதி நிமிடங்களை காணும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்து உள்ளது. எனது கால்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். கால்கள் துவண்டு போகாது. எனது கண்களை பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணீர் சிந்தாது. இன்குலாப் ஜிந்தாபாத்” என வீர முழக்கமிட்டு தனது தியாகத்தால் சாவை வென்றார்.

march-23-kovai-04

கடந்த 50 ஆண்டு காலமாக வழிகாட்டிய முன்னோடிகள் பிழைப்புவாதிகளாக மாறியதால்தான் தொழிலாளி வர்க்கம் உணர்வில் பின்தங்கி உள்ளது. இதே கோவையில் இப்போது எட்டு தொழிலாளர்கள் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்கள். பிரிக்கால் எச்‌.ஆர் ராய் ஜே. ஜார்ஜ் தொழிலாளர்களை கம்பெனியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளார்கள். தொழிலாளி வர்க்கம் அதன் இயல்பிலேயே அதன் இருப்பிலேயே புரட்சிகரமானதாக உள்ளது. வழிகாட்டிகள் தான் புரட்சிகரமானவர்களாக இல்லை

march-23-kovai-08பிரிக்கால் வனிதா மோகன் சிறுதுளி அமைப்பை வைத்து கோவை மக்களை ஏமாற்றி வருகிறார். கோவை முதலாளிகள் நம்மை முட்டாளாக்கிக் கொண்டுள்ளார்கள். நொய்யல் நதி என்பது நம் பெருமை. கோவையின் அழகு நொய்யல் நதி. நொய்யல் நதியின் வருகையை எதிர்பார்த்து காவிரித்தாய் காத்திருப்பாளாம். என்னவென்று, எனது பெரியமகள் ஏன் இன்னும் வரவில்லை என்று ஏங்கியிருப்பாளாம். அந்த நொய்யலை நாசம் செய்தது யார் ? கோவை முதலாளிகள் தான். இப்போது நாசம் செய்துவிட்டு நாடகமாடுகிறார்கள். வருகின்ற மார்ச் 26-ம் தேதி நொய்யல் என் உயிர் மூச்சு என்ற பெயரில் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்ற உள்ளார்கள். அதனை கோவைத் தொழிலாளி வர்க்கம் அம்பலப்படுத்த வேண்டும். ஏனென்றால் பிரிக்கால் வனிதா மோகன் நொய்யலுக்கு நூறு ரூபாய் எனும் பெயரில் பொது மக்களிடமும் வெளி நாட்டிலும் சிறுதுளி அமைப்பின் சார்பில் நன்கொடை திரட்டி முண்டந்துறை ஆற்றில் தடுப்பனை நீர்த் தேக்கத்தின் கரையில் தாமிரா ரிசார்ட் எனும் பெயரில் உலகத் தரம் வாய்ந்த சொகுசு விடுதி கட்டி உள்ளார். வனிதா மோகன் வாங்கியுள்ள பண்ணை நிலங்களுக்கு நொய்யல் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளவும் நதி நீர்ப்பாதுகாப்பு எனும் பெயரில் நாடகமாடுகிறார்.

march-23-kovai-02வனிதா மோகனால் வாங்கப்பட்ட தீர்ப்பினால் பாதிக்கப்பட்டு கோவைச் சிறையில் ஆயுள் தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வரும் எட்டு தொழிலாளர்கள் நமது வர்க்கம். நமது வர்க்கத்தை பழிவாங்கிய கோவை முதலாளிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எதிர்க்க வேண்டும்.

கோவை முதலாளிகளின் கூட்டாளிகள்தான் ஈஸா யோகா மையம். இன்று வரை ஈஸா யோக மையத்துக்கு இருபத்தி நாலு மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தை யார் ஆண்டாலும் சரி, ஜெயாவோ கருணாவோ ஈஸா யோகா மையத்துக்கு போகும் மின்சாரத்தை நிறுத்த முடியவில்லை. நொய்யல் நதியில் நீராதாரப் பகுதிகளில் ஒன்றான நீலியாற்றையே ஜக்கி வாசுதேவ் தனது மடத்துக்கு திருப்பி விட்டுள்ளான். இதனைக் கேட்பதற்கு எவனும் தயார் இல்லை. ஈஸா யோகா மையத்தின் சீடர்களாக கோவையின் எழுத்தாளர்கள் மரபின் மைந்தன் முத்தையா, நாஞ்சில் நாதன் போன்றவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அதே போல் காருண்யா பல்கலைக் கழகம், சின்மயா வித்யாலயம் போன்றவைகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஆக்கிரமித்து நொய்யல் நதியை அதன் நீராதாரத்தை நாசமாக்கி வருகிறார்கள்.

march-23-kovai-03கோவை முதலாளிகள் தங்கள் சமூக விரோத சட்ட விரோத காரியங்களை மறைக்க மக்கள் முன்னாள் வேறு ஒரு நாடகமும் போடுகிறார்கள். இரட்டை ஆயுள் தண்டனை போன்றவைகளையும் கண்டு கோவைத் தொழிலாளி வர்க்கம் கோபம் அடையாமல் சாந்தப்படுத்த, தொழிலாளி வர்க்கம் தன் உணர்வில்லாமல் ஒன்று திரளாமல் தடுக்க இன்னொரு காரியமும் மாதாமாதம் செய்து வருகிறார்கள். பாபநாசம் சினிமா வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகனை அழைத்து வந்து கீதை வகுப்பும் நடத்துகிறார்கள். கோவையின் எல்லா அரசியல் கட்சிகளையும், எல்லா ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்களையும் மேற்படி கொள்ளையர் கூட்டம் ஜீரணித்து விட்டது. இவர்களுக்கு கட்டுப்படாமல் போராடிக் கொண்டிருப்பது பு.ஜ.தொ.மு மட்டும் தான். எனவேதான் நமக்கு எதிராக பொய் வழக்குகள் போட்டு, சிறையில் தள்ளி மிரட்டுகிறார்கள். இது ஒரு வகையில் நம்மைக் கண்டு மிரண்டு போய் உள்ளார்கள் என்பதற்கு சாட்சி. நாம் மேலும் மேலும் போராடினால் கோவைத் தொழிலாளி வர்க்கம் நம் பின்னால் வரும்.

march-23-kovai-05கொடைக்கானலில் இயங்கி வந்த இந்துஸ்தான் யூனி லீவர் கம்பெனி மிகப் பிரம்மாண்டமானது. இந்துஸ்தான் லீவர் கம்பெனியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம் எதிரிகளான கோவை முதலாளிகள் தூசு போலத்தான். அப்படிப்பட்ட இந்துஸ்தான் லீவர் கம்பெனியை தொழிலாளர்கள் போராடி வென்றுள்ளார்கள் ஆண்டுக்கு 30,000 கோடி பிஸினஸ் செய்கிறவன், விளம்பரத்துக்கு மட்டும் ஐயாயிரம் கோடி செலவு செய்பவன் இந்துஸ்தான் லீவர்.

இந்துஸ்தான் லீவர் தேர்மா மீட்டர் ஆலை 1983-ல் தொடங்கப்பட்டது. இதன் பிரதான இடுபொருள் (மெர்குரி) பாதரசம். இது விஷம் காற்றில் கலக்கும் பொது மக்களுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் தலைமுறை தாண்டியும் அதன் பாதிப்புகள் தொடரும்.

march-23-kovai-04பாதரச கழிவையும், கண்ணாடி கழிவையும் வளாகத்தில் கொட்டி வைத்து பாம்பாறு வழியாக வெளியேற்றி அது வைகை நதியில் சேர்ந்து மீன்கள் வழியாக மனிதர்களை பாதித்தது பாதரச நச்சு. தொழிலாளர்களும் மக்களும் போராடவே பிரச்சினை வெளியில் வந்தது. 1300 கிலோ பாதரசத்தை ஆற்றில் விட்டதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டது. 400 கிலோ மண்ணில் கலந்திருப்பதாக சொன்னது. இந்தப் போராட்டம் பல்வேறு வகைகளில் நடக்க கடைசியில் இந்துஸ்தான் லீவர் கம்பெனியை இறங்கி வந்து தொழிலாளர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது எதை காட்டுகிறது என்றால் தொழிலாளர்கள் போராடினால் வெல்ல முடியும் என்பதை தெளிவாக்குகிறது.

மோடி சர்க்கார் வீழ்த்த முடியாததல்ல. மறுகாலனியாக்கம் ஒன்றும் பலமானதல்ல என்பதை டெல்லி ஜே.என்‌.யு மாணவர்கள் நிரூபித்துக் காட்டி வருகிறார்கள். ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தரை எதிர்த்து மாணவர்கள் அவனது அறையை சூறையாடி நாட்டுக்கு முன்மாதிரியாக உள்ளார்கள். ரோஹித் வேமுலாவுக்காக தொழிலாளர் வர்க்கமும் குரல் கொடுக்க வேண்டும்.

சமூகத்தின் அனைத்து வர்க்கங்களுக்கும் தலைமை தாங்கும் ஆற்றல் உடையது தொழிலாளி வர்க்கம். நவீன உற்பத்தியில் அது வகிக்கும் இடத்தில் வரலாறு இந்த வாய்ப்பை தொழிலாளி வர்க்கத்துக்கு வழங்கியுள்ளது. வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற பகத்சிங் நினைவு நாளில் சபதமேற்போம்”

மக்கள் அதிகாரம் தோழர் சூர்யா தோழர் பகத்சிங் நினைவுநாளில் மறுகாலனியாக்கத்துக்கு எதிராக நாம் போராடவேண்டியத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க