காட்ஸ் ஒப்பந்தம்:அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி! பாகம் -2
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டுத் தலைநகர் தோகா-வில் நடந்த உ.வ.க.வின் நான்காவது அமைச்சர்கள் மாநாட்டில், ஏழை நாடுகளுக்கு வளர்ச்சியைக் கொண்டு வரப் போவதாகச் சொல்லிக் கொண்டு தோகா வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது. உண்மையில், இது ஏழை நாடுகளை ஏகாதிபத்தியங்கள் விரித்த வலையில் சிக்க வைக்கும் தந்திரமாகிப் போன நிலையில், உ.வ.க.வில் வர்த்தகத்தோடு சேவைத் துறைகளையும் சேர்க்கும் காட்ஸ் ஒப்பந்தம் இறுதியாக்கப்பட்டது. இதனையடுத்து, முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு இந்தியக் கல்வித் துறையை காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குத் திறந்துவிடும் முன்மொழிதல்களை உ.வ.க.விடம் அளித்து, அது குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தத் தொடங்கியது.
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் 19 வரை நடந்த உ.வ.க.வின் பத்தாவது அமைச்சர்கள் மாநாட்டில் கல்வி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அம்மாநாட்டில் கல்வி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்ற போதும், மோடி அரசு கல்வித் துறையை காட்ஸ் பேச்சு வார்த்தைகளிலிருந்து விலக்கிக் கொள்ளவுமில்லை.
பேராசிரியர் அனில் சடகோபால் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆற்றிய இவ்வுரை நைரோபி மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற ஒன்றாகும். இதனை மனதிற்கொண்டு வாசகர்கள் இக்கட்டுரையை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு
கடந்த 2005-ஆம் ஆண்டில், அன்று ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு உலக வர்த்தகக் கழகத்தில் கல்வித் துறை சார்பாக சில முன்மொழிதல்களை வழங்கியது. அவற்றை வருகின்ற டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி நைரோபியில் நடைபெறும் உலக வர்த்தகக் கழக மாநாட்டிற்கு முன்னதாக இந்தியா திரும்பப் பெறாவிட்டால், அவற்றை இந்தியா இனித் திரும்பப் பெறவே முடியாது; அவற்றை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என நிர்பந்திக்க உலக வர்த்தகக் கழகத்திற்கு உரிமை உண்டு.

விவசாயிகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் வழங்கி வரும் மானியங்களை இரத்து செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் முன்மொழிதல்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தோகா சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஆரம்பித்து இன்று வரை உலக வர்த்தகக் கழகத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் இழுபறியாக விவாதிக்கப்படுவதால், இதுவரை 2005 முன்மொழிதல்கள் குறித்து இறுதி முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. ஆனால், வரும் டிசம்பர் 15 கூட்டத்தில் தோகா சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தாலும், முடிவடையாவிட்டாலும் உலக வர்த்தகக் கழகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து முன்மொழிதல்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அறிவிக்கப்படும். அவற்றின் மீது அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்ஸ்-இல் கல்வித்துறையை ஒப்படைக்காமல் இருக்க முடியுமா என்று கேட்டால், நிச்சயமாக முடியும் என்று சொல்வேன். 2003-ஆம் ஆண்டிலேயே ஒட்டுமொத்த ஆப்பிரிக்க யூனியனும் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டன. காட்ஸிடம் கல்வித்துறையை ஒப்படைத்தால், அது ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளின் கல்வியையே சாகடிப் பதற்குச் சமம் எனக் கூறி நிராகரித்துவிட்டன. அது போல, இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் காட்ஸிடம் கல்வியை ஒப்படைக்க மறுத்துவிட்டன. ஆக, உலக வர்த்தகக் கழகத்தில் தமது நாட்டுக் கல்வித்துறையை ஒப்படைக்க 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மறுத்துவிட்ட நிலையில், இந்தியா ஒப்படைக்க முன்வந்தது. 2005-ஆம் ஆண்டு உலக வர்த்தகக் கழகத்தில் நமது நாட்டு கல்வியை அடகு வைத்தது, மிகவும் இரகசியமாக, நாடாளுமன்றத்துக்கே கூடத் தெரியாத வண்ணம் திட்டமிட்டு முடிக்கப்பட்டது.
மேலும், காட்ஸிடம் கல்வியை ஒப்படைக்கும் விதிகளின் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து முதல் ஆறு அம்சங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் குறைந்தபட்ச வசதியும் இருந்தது. ஆனால், அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் முழு சரணடைவையே இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், கல்வியை காட்ஸ் உடன் இணைக்கச் சம்மதித்துள்ள சீனா, இதில் பல விதிவிலக்குகளைத் திறமையுடன் பயன்படுத்திக் கொண்டது. இதன்படி, சீனா இந்தியாவில் முதலீடு செய்யலாம்; ஆனால், இந்தியா சீனாவில் முதலீடு செய்ய இயலாது.
தந்திரமாக எழுதப்பட்டுள்ள காட்ஸ் ஆவணத்தின் புதிரை விடுவிப்பது சிரமமாயினும், அதன் இரண்டு விதி களைப் பற்றிக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். அதில் தேசியத் தன்மையோடு நடத்துதல்” எனும் (National Treatment) பிரிவு முக்கியமானது.
புதிய தாராளவாதத்தின்” மொழிப்படி இது அந்தந்த நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட இருக்கும் பிரிவு என நினைத்தால், அது தவறானதாகும். மாறாக, இப்பிரிவு அதற்கு நேரெதிரான அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தேசியத் தன்மையோடு நடத்துதல் என்பதன்படி, கல்வி உட்பட அனைத்து சேவைத் துறைகளிலும் அதன் உறுப்பு நாடுகள் புதிதாகத்திட்டம், கொள்கைகளை வகுக்கும் போதோ அல்லது நிதி ஒதுக்கீடு செய்யும் போதோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமமான ஆடுகளத்தை” (level playing field) வழங்க வேண்டும். நமது அரசியலமைப்பு அனைத்து மக்களையும் சமத்துவத்தோடு அணுக வேண்டும் என்கிறது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதேசமயம், கார்ப்பரேட் துறைகளுக்கு இச்சமத்துவத்தை வழங்க நமது அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நமது அரசியலமைப்பின் மதிப்பீடுகள் எப்படித் தலைகீழாய் மாறியுள்ளன என்பதை இதன்மூலம் கண்கூடாகப் பார்க்கலாம்.
உதாரணமாக, தங்களது நூலகத்தை அனைத்து மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த அல்லது நவீனப்படுத்த சென்னைப் பல்கலை கழகத்திற்கோ அல்லது சென்னை ஐ.ஐ.டி.க்கோ மத்திய அரசு 50 கோடி ரூபாய் கொடுத்ததென்றால், சமமான ஆடுகளத்தை வழங்குதலின்படி அதே தொகையை வெஸ்டிங் ஹவுஸ், மைக்ரோசாஃப்ட், சுசூக்கி போன்ற கார்ப்பரேட்டுகளின் கல்விநிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும். அதைமீறிச் சமமான ஆடுகளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கவில்லையென்றால், மத்திய மற்றும் மாநில அரசின் எந்த கல்வி நிறுவனங்களுக்கும் நிதி உதவியோ அல்லது மானியமோ வழங்கக் கூடாது. இப்படி அனைத்து அரசு கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த வளர்ச்சி நிதியோ அல்லது பல்கலைக் கழக மானிய நிதியோ நிறுத்தப்பட்டால், அவையனைத்தும் வணிகமயமாக்கலை, இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையைப் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். ஆக, கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாவதோடு மட்டுமல்லாமல், அனைத்துப் படிப்புகளும் இலாபத்தை முன்வைக்கும் சுயநிதிப் படிப்பாக மாற்றப்படும்.

மற்றொரு பிரிவு, உள்நாட்டுக் கட்டுப்பாடு” (Domestic Regulation). இச்சொற்றொடரை உள்நாட்டில் தொழில் செய்வதற்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான சுதந்திரம் என மேம்போக்காகப் புரிந்துகொண்டால், அது தவறு. மாறாக, உள்நாட்டில் உருவாக்கப்படும் சட்டம் அல்லது கொள்கைகள் எவ்விதத்திலும் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தில் மூக்கை நுழைத்து தொந்தரவு செய்வதாக இருக்கக் கூடாது என்கிறது. காட்ஸின் “வர்த்தகக் கொள்கை பரிசீலனை இயங்குமுறை’’யானது (TPRM- Trade Policy Review Mechanism)டிவுகளை எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் எச்சரிக்கும். இவர்கள் நாடாளுமன்றத்தின் வாயிலில் உட்கார்ந்து, அவையின் விவாதங்களை உற்று நோக்கி காட்ஸிற்கு எதிரான கொள்கைகளை நாடாளுமன்றம் வகுக்காதவாறு பார்த்துக்கொள்வார்கள். காட்ஸிற்கு எதிராகச் செயல்படமாட்டோம் என உறுதியளித்திருப்பதால், அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை; மீறி நடந்தால், அதை ஒழுங்குபடுத்த ஐ.ஆர்.ஏ. என்கிற தன்னாட்சி கொண்ட ஒழுங்குமுறை ஆணையம் கடிவாளத்தைப் பிடித்துக்கொள்ளும். இவ்வமைப்பு இந்திய நாடாளுமன்றம் அல்லது அதன் உறுப்பினர்கள் என யாருக்கும் கட்டுபட்டதல்ல. மாறாக, உலக மூலதனம் அல்லது அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கு மட்டுமே கட்டுபட்டது.
இதன்படி, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய மருத்துவக் கவுன்சில், ஏ.ஐ.சி.டி.இ., இந்திய பார் கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்விக் குழு போன்றஉயர் கல்விக்கான ஒழுங்குமுறை மற்றும் மானியக்குழு உறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டு, தேசிய உயர்கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அமைக்கப்படும்.
தற்போது பா.ஜ.க அரசு கொண்டுவர இருக்கும் ஆறு மசோதாக்களும் காட்ஸிற்கு சேவை செய்யும் இலக்குடன் இருப்பவை. இதில் ஐ.ஆர்.ஏ.வை நிறுவுவதும் அடங்கும். இந்திய அரசியலைப்புச் சட்டத்திற்கு வெளியே சட்ட அங்கீகாரத்துடன் செயல்பட இருக்கும் இந்த ஐ.ஆர்.ஏ. மிகவும் அபாயகரமானது.
இப்படி அறிவின் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் மோசமானதாகும். ஏனெனில், நாம் உலக மூலதனம் உருவாக்கிய காட்ஸிற்கு எதிராக அவர்களின் போர் மண்டலத்திற்குள் இருந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே பொறியில் வசமாக மாட்டிக்கொண்டதால், அங்கிருந்து கொண்டு இது பிரச்சினை அல்லது அது பிரச்சினை என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆனால், தொடர்ச்சியாகப் போரட வேண்டியிருக்கிறது.
தற்போது வரவிருக்கிற புதிய கல்விக்கொள்கை மேற்கூறிய பின்னணியில் இருந்துதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய உதாரணம் போதும், அதுதான் திறன்மிகு இந்தியா” திட்டம். திறமைக்குப் பஞ்சமில்லாத நாட்டில் கொண்டுவரப்படும் திட்டங்களுக்கு இதுபோன்ற பெயரின் தேவை என்ன?
இந்தியா உலகின் மிகப்பெரிய திறன்மிகு உழைப்புச் சக்தியாக மாறும்” எனக் கூறி வரும் மோடி, இதை எப்படிச் சாத்தியப்படுத்தப் போகிறார்?

பெரும்பான்மையான இந்தியக் குழந்தைகளைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் பொருட்டு இது சாத்தியமாகிறது. திறமை என்பது கல்வியின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும், ஆனால், கல்வியிலிருந்து திறனைப் பிரிக்கும் பொழுது அது திறன்மிகு உழைப்புச் சக்தி’’யாக, மோடியின் புதிய திட்டமாக உருவாகிறது. சாதி மற்றும் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வரும் குழந்தைகளை ஐந்தாம் வகுப்பிற்கு மேல் செல்லவிடாமல், கல்வியை அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவர்களைப் பட்டறை வேலை, மின் பழுது பார்க்கும் வேலை அல்லது குறைந்த சம்பளம் கொண்ட தூய்மை இந்தியா” பணிக்குத் தேவைப்படும் திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்கும் முயற்சியே இத்திட்டம்.
மோடி குறிப்பிடுகிற இது போன்ற திறன்மிகு உழைப்புச் சக்திகள்” மிகவும் அபாயகரமானவை. ஏனெனில், திறன் படைத்த உழைப்பாளிகளுக்குச் சிந்திக்க, வினவ, மறுக்க அல்லது வாதிடக் கூடிய வழிமுறை குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அறிவியல்பூர்வமற்ற, கேள்வி கேட்க வழிவகையற்ற கல்வியை மட்டுமே இவர்கள் பெறப்போவதால், எக்கேள்விக்கும் இடம் கொடுக்காத, கூழைக் கும்பிடு போடும் ஏகாதிபத்தியத்திற்குத் தேவையான திறனை மட்டுமே இவர்கள் பெற்றிருப்பார்கள். அதேபோல, உங்களைப் போன்ற பலதுறைகளில் சிறந்து விளங்கும் அறிவாளிகளும் அவர்களுக்குத் தேவை. ஆனால்,சிலிகான் வேலி” போன்ற அவர்களின் ராஜாங்கத்தில் கேள்வியே கேட்காத, எல்லாவற்றிற்கும் வளைந்து போகக் கூடிய அவர்களின் கலாச்சார நெளிவு சுளிவு” தெரிந்த அடிமைகள் மட்டுமே பல இலட்சம் ரூபாய் சம்பளத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மிகப்பெரிய காங்கிரசைக் கண்டுகூட பயப்படாத பிரிட்டிஷ் அரசாங்கம் பகத் சிங் உள்ளிட்ட 12 பேரைப் பார்த்துதான் பயந்தது. அதேபோல, சிறிய அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் செயல்பாடுகள் ஒட்டு மொத்த ஐ.ஐ.டி. நிர்வாகம் மற்றும் மத்திய மனித வளத் துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியது. ஆகையால், நபர்களின் எண்ணிக்கை ஒன்றும் பெரிதில்லை; மாறாக, மக்களின் விடுதலைக்குப் போராடத் தேவையான விருப்பமும் துணிவும் முக்கியமானது.
வகுப்புவாதம் ஏகாதிபத்தியத்தின் ஓர் அங்கம். இந்த சமூகத்தைப் பிளவுபடுத்துவதன் மூலம் உலக மூலதனம் தனக்கு எதிராகப் போராடவிடாமல் உழைக்கும் மக்களைத் தடுக்கிறது. சாதி, மத வகுப்பு வாதக் கலவரங்களின் மூலம் பன்முகத் தாக்குதல்களை நடத்தி இந்தியாவைப் பிரிப்பதால், அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய போராட்டத்தில் மக் களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்கிறது. ஆகையால், சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் உலக மூலதனத்தின் அடியாள் என்பதை எளிதில் அறியலாம்.
டிசம்பர் மாதம், நைரோபியில் தோகா சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவதற்குள் நாம் உயர்கல்வியை காட்ஸிலிருந்து விடுவிக்க வேண்டும். தோகா சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்தாலும், தோல்வியுற்றாலும் உலக மூலதனம் மேலுமொரு புதிய உத்தியைத் தயாரித்துள்ளது. நைரோபி கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்கள் காட்ஸின் மூலம் நிறைவேற்றப்படும், ஏற்றுக்கொள்ளாத அம்சங்கள் டிசா’’ (TiSA – Trade in Services Agreement) என்கிற பொறியின் மூலம் நிறைவேறும். டிசா-வின்படி தோகா சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தடங்கல் ஏற்பட்டால், உலகம் முழுதும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு மூலதனம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனின் பரிந்துரைப்படி விசுவாச நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் மூலம் காட்ஸை விடக் கடுமையான டிசா அமல்படுத்தப்படும்.
பாகிஸ்தான் மற்றும் தைவானை உள்ளடக்கிய 45-க்கும் மேற்பட்ட நாடுகள் டிசா என்ற புதிய அடிமை சாசனத்தில் கையொப்பமிட இருக்கின்றன. சமீபத்தில் இதன் அபாயங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதால்தான், இதைப் பற்றி ஓரளவிற்கேனும் அறிந்து கொள்ள முடிகிறது. டிசா அமல்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகள் முடியும்வரை இதன் அம்சங்களை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தக் கூடாது என்கிற முன்நிபந்தனையுடன்தான் இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. டிசா-வைப் பற்றி நாடாளுமன்றம், அதன் உறுப்பினர்கள், எதிர்க் கட்சியினர், நீதித் துறையினர், ஊடகங்கள் யாரும் பேச முடியாது; அந்த அளவிற்கு முற்றிலும் இரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும், மக்களுக்கு அபாயகரமானதாகவும் டிசா விளங்கும். பிறகு டிசா-வில் கைச்சாத்திட்ட நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அதை உலக வர்த்தகக் கழகத்திடம் ஒப்படைக்க முன்வருவார்கள். இதற்கு முன்னுதாரணமாக டி.டி.ஐ.பி.யில் (TTIP- Transatalantic Trade and Investment Partnership) முன்மொழிந்துள்ள அம்சங்கள் பலவற்றை உலக வர்த்தகக் கழகம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் சூழல் உள்ளது.
இறுதியாகச் சொல்வதென்றால், இன்றைக்கு இந்தியாவில் குறைந்த பட்சம் 400 அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன; அரசின் நிதி உதவியால் இயங்கும் கல்லூரிகள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன; தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஐ.ஐ.ஐ.டி., போன்றவை உள்ளன. இவையனைத்தும் இந்தியக் குடிமக்களுக்கு உரியதாகும். இக்கல்விப் புலங்களில் பணியாற்றுபவர்கள் அனைவரும் மௌனம் சாதிக்கிறார்கள்.
இவர்களின் மௌனம் கலைக்கப்பட்டு, குறைந்தபட்சம் 10 சதவீதத்தினராவது நமக்கு இழைக்கப்பட்ட அல்லது இழைக்கப்படவிருக்கும் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பினால் போதும், சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இந்தியாவின் வல்லமை படைத்த எஜமானர்கள் தங்களது நிகழ்ச்சி நிரலை மீள்பார்வை செய்ய முன்வருவார்கள்; அதன்பிறகு இச்செய்தி வாஷிங்டன் டி.சி. மற்றும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கியின் தலைமையகமான நியூயார்க்கிற்குத் தெரியவரும். ஆப்பிரிக்க யூனியன் காட்ஸை நிராகரிக்க முடியுமென்றால், இந்தியாவால் ஏன் முடியாது? கண்டிப்பாக முடியும். நமது ஒட்டுமொத்த உயர்கல்வியும் விலைபோவதை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவோம்.
(முற்றும்)