Monday, April 21, 2025
முகப்புகலைகவிதைகழுத்துக்கள் எங்களுக்குரியன - தூக்குமரம் அவர்களுக்குரியது !

கழுத்துக்கள் எங்களுக்குரியன – தூக்குமரம் அவர்களுக்குரியது !

-

நண்பகற்சூரியனும் நிழலும்

லகின் வயல்கள் யாவும்
சிறிய உதடுகள் இரண்டுடன் முரண்படுகின்றன
வரலாற்றின் வீதிகள் யாவும்
வெறுங்கால்கள் இரண்டுடன் முரண்படுகின்றன.

srilanka_peopleஅவர்கள் பயணஞ் செய்கின்றனர்
நாங்கள் தங்கி நிற்கிறோம்
தூக்குமரம் அவர்களுக்குரியது
கழுத்துக்கள் எங்களுக்குரியன
முத்துக்கள் அவர்களுக்குரியன
பாலுண்ணிகளும் தோற் பொட்டுக்களும் எங்களுடையன.
இரவும் விடியலும் பிற்பகலும் பகல் வெளிச்சமும்
அவர்களுக்குரியன
தோலும் எலும்பும் எங்களுடையன.

பகற்பொழுதின் சூரிய வெப்பத்தில் நாம் பயிரிடுகிறோம்
நிழலிலிருந்து அவர்கள் உண்கிறார்கள்
அவர்களது பற்கள் அரிசி போல் வெண்மை
எம்முடையவை காடு போற் கருமை
அவர்களது நெஞ்சுகள் பட்டுப்போல் மென்மையானவை
எம்முடையவை தூக்குமரச் சதுக்கங்கள் போல் அழகற்றவை.
எனினும் நாமே உலகின் மன்னர்கள்.

அவர்களுடைய வீடுகளில் வகைப்படுத்தப்பட்ட
கோப்புக்களின் அடுக்குக்கள்
எம்முடையவற்றில் இலையுதிர் காலத்தின் இலைகள்
அவர்களது சட்டைப் பைகளில் திருடர்களதும்
துரோகிகளதும் முகவரிகள் உள்ளன
எம்முடையவற்றில் ஆறுகளும் இடியும் உள்ளன.

சன்னல்கள் அவர்களுக்குரியன
காற்றுக்கள் எங்களுக்குரியன
கப்பல்கள் அவர்களுக்குரியன
அலைகள் எங்களுக்குரியன
பதக்கங்கள் அவர்களுக்குரியன
அழுக்கு எங்களுக்குரியது
கவர்களும் மாடிமுகப்புக்களும் அவர்களுக்குரியன
கழுத்துத்துணியும் கட்டாரியும் எங்களுக்குரியன.

ஆனாலும் என் அன்பே
இப்போது நாம் நடைபாதையிலேதான் உறங்க வேண்டும்.

– முஹம்மது அல் மஜீத் (சிரியா)
நன்றி: தாயகம் (செப் ’2003)
(யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலாண்டிதழ்)

– புதிய கலாச்சாரம், மார்ச் 2004.