Wednesday, April 23, 2025
முகப்புசெய்திதிண்டிவனம் : தேர்தல் காலத்தில் மாணவர்கள் போராடக் கூடாதாம் !

திண்டிவனம் : தேர்தல் காலத்தில் மாணவர்கள் போராடக் கூடாதாம் !

-

அன்றாட வாழும் உரிமைகளை பறிக்கும் தேர்தல் ஆணையமும் ஆணையத்தின் வழிகாட்டுதல் என்று அராஜகம் செய்யும் திண்டிவனம் போலிசும்.

கல்லூரி அராஜகம்

திண்டிவனம் திரு.அ.கோவிந்தசாமி கலை & அறிவியல் கல்லூரியில் இரண்டாம் மற்றும் நான்காம் பருவ படிப்பு முடித்த மாணவர்கள் தேர்வுக்கான பணத்தை செலுத்தி, தேர்வுக்கான அனுமதி சீட்டும் கிடைக்கப்பெற்று, இரண்டு தேர்வுத்தாள் எழுதி முடித்துவிட்டு, மூன்றாம் தாள் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் கல்லூரி வரலாற்றுத்துறை பொறுப்பு ஆசிரியையும், தேர்வுக்கு பொறுப்பாளருமான திருமதி உஷா அவர்கள் இரண்டாம், மற்றும் நான்காம் பருவத்திற்கான தேர்வு எழுதிக்கொண்டிருந்த சுமார் 35 மாணவர்களை தடுத்து “நீங்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது” என்கிறார்.

காரணம் சில மாணவர்கள் முதல் மற்றும் சில மாணவர்கள் மூன்றாம் பருவதேர்வுக்கான பணம் கட்டாமல் தேர்வு எழுதவில்லை. ஆகவே பழைய பாடங்களுக்கான வகுப்பிற்கு சென்று மீண்டும் படித்து தேர்வு எழுதவேண்டும் என அறிவித்திருக்கிறார்..

23-ம் புலிகேசியை தோற்கடித்த இந்த நடைமுறை பற்றி கேள்விப்பட்டதும் திண்டிவனம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியினர் மாணவர்களின் படிப்பை, எதிர் காலத்தை சீரழித்தது மட்டுமின்றி கோமாளித்தனமான உத்திரவு பற்றி தேர்வுப் பொருப்பாளர் திருமதி உஷாவிடம் கேட்டபோது “இந்த உத்திரவு மேலிருந்து வந்துள்ளது (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்) நான் ஒன்றும் செய்ய முடியாது” என முடித்துக்கொண்டார்.

முதல் பருவத்தேர்வு எழுதவில்லை என்றால் இரண்டாம் பருவப் படிப்புக்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? தேர்வுக்கு பணம் ஏன் பெற்றனர்? தேர்வுத்தாள்கள் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் பல்கலை கழகம் அனுப்பியது. இந்த ஆறுமாதத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தது, செலவு செய்தது எப்படி சரி செய்வது? என்ற கேள்விகளை மாணவர்கள் எழுப்புகின்றனர்.

அதுமட்டுமல்ல “கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் பணம் கட்டாததற்கு காரணம் தேர்வுக்கான கட்டணம் பற்றியோ, அபராதத்துடன் கட்ட வேண்டிய இறுதி நாளையோ கல்லூரி நிர்வாகம் அறிவிப்புப்பலகையில் குறிப்பிடுவது கிடையாது. மாறாக அபராதத்தொகையுடன் கட்ட வேண்டிய நாளை வாயால் அறிவிப்பார்கள். ஒரு நாள் தாமதமாக பணம் கட்ட சென்றால் இறுதிநாள் முடிந்துவிட்டது இனி பணம் பெற முடியாது என மாணவர்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள்” என்றனர்.

இப்படிப்பட்ட கல்லூரி அராஜகப்போக்கை கண்டித்து மக்களிடம் அம்பலப்படுத்த கல்லூரி அருகில் மற்றும் திண்டிவனம் நகரில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.

மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதை சரி செய்ய வக்கற்ற நிர்வாகம் மக்களிடம், மாணவர்களிடம் செய்தி பரவாமல் தடுக்க கல்லூரிக்கு அருகில் உள்ள சுவரொட்டிகளை கிழித்தெறிகிறது. மேலும் போலீசிடம் புகார் கொடுக்கிறது.

போலிசு அராஜகம்

சட்டம் தன் கடமையை செய்ய புறப்பட்டது.

புரட்சிகர மாணவர்-இளஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த தோழர் பிராங்லினை திண்டிவனம் நகர போலிசு தொடர்பு கொண்டு “யாரைக்கேட்டு போஸ்டர் ஒட்டினாய்” என்றபோது, “இது எங்கள் மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனை. உங்களிடம் ஏன் கேட்க வேண்டும்” என்றபோது, “தேர்தல் நடத்தைவிதி வழிகாட்டுதலில் எங்களை கேட்காமல் எந்த சுவரொட்டியும் ஒட்டக் கூடாது. உடனே ஸ்டேசனுக்கு வா” என்றார்.

தோழர் தன்னுடன் திண்டிவனம் வழக்கறிஞர் தோழர் சக்திவேல் அவர்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திண்டிவனம் வழக்கறிஞர் தோழர் ஏழுமலை அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளர் திரு.தனஞ்செழியனை சந்தித்தபோது, “தேர்தல் ஆணையம் போலிசு அனுமதியின்றி எந்த சுவரொட்டியும் ஒட்டக்கூடாது என வழிகாட்டியிருக்கிறது எனவே இந்த சுவரொட்டி எங்களை கேட்காமல் ஒட்டியதால் சட்டப்படி குற்றம்” என வழக்குபதிவு செய்து (The Tamil Nadu Open Plac es Prevention of Disfigurement Act-1959, 4(a)(i)(a) Cr.No.307/16 ) காவல் நிலைய பிணையில் தோழர் பிராங்லினை விடுவித்தார்.

தேர்தல் ஆணையம் என பூச்சாண்டி காட்டிய போலிசு நகரின் அழகை கெடுத்ததாக வழக்கு பதிவு செய்தது.

நகரின் அழகை கூடவா தேர்தல் ஆணையம் குத்தகை எடுத்துக்கொண்டது ஒன்றும் புரியவில்லை. கோர்ட்டில் சந்திக்கிறோம் என கூறி வெளியே வந்தவுடன் ரோசனை போலிசு (கல்லூரி உள்ள பகுதி) வண்டியுடன் வெளியே காத்துக்கொண்டிருக்கிறது. என்னவென்று கேட்டால் டவுன் போலிசு சொன்ன காரணத்தையே கூறினார்கள். ஆனால் இங்கு தோழர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒன்று கல்லூரியை கண்டித்ததற்காம் இன்னொன்று என்னவென்று கேட்டால் டாஸ்மாக்கடையை மூட விழுப்புரத்தில் நடத்தும் முற்றுகை போராட்டம் பற்றியதாம்..

tvnm-college-pressஅருகருகே சுவரொட்டி ஒட்டியதால் கண்டுபிடித்தார்களாம். நல்லவேளை மூல பவுத்திரம் சுவரொட்டி இல்லாமல் போயிற்று?

இதுமட்டுமின்றி S.P.CID. சுகுமார் என்பவர் பிணைக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரபலமான வழக்கறிஞர் தோழர் ஏழுமலை அவர்களிடம் “நீங்கள் வழக்கறிஞர் படிப்பு முடித்தவரா?” என்றும் வழக்கறிஞர் தோழர் சக்திவேல் அவர்களிடம் “உங்களிடம் எத்தனை வழக்குகள் உள்ளன” என்றும் அத்துமீறி பேசியதற்கு தோழர்கள் பதிலடி கொடுத்ததும் நாய் வாலை சுருட்டிக்கொண்டது போல வாயை மூடிக்கொண்டார்

(ஒருவேலை தேர்தல் ஆணையத்தின் நடத்தைவிதியில்இந்த கேள்விகள் இருக்கிறதோ என்னவோ?)

இறுதியாக பிணை எடுத்தபின் சுவரொட்டி ஒட்டியது குற்றம் என்றால் இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருப்போம் என எச்சரித்து விட்டு தோழர்கள் வந்துள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக நிர்வாகம், போலிசை, தேர்தல் ஆணையத்தை எதிர் கொள்ள தயாராகி வருகின்றனர் மாணவர்கள்.

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திண்டிவனம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க