Wednesday, April 23, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கநீதிக்கு எதிராக வாளேந்தும் நீதிமன்றம் !

நீதிக்கு எதிராக வாளேந்தும் நீதிமன்றம் !

-

குற்றம் சாட்டுபவர்களையே குற்றவாளிகளாக்குவதன் மூலமும், குற்றம் சாட்டுபவர்களைக் கொடூரமாகத் தண்டிப்பதன் மூலமும் தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நகைக்கத்தக்க முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம். வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவு 34-க்கு சென்னை உயர்நீதி மன்றம் கொண்டு வந்திருக்கும் திருத்தங்கள், பார் கவுன்சிலின் அதிகாரத்தை முற்றாகப் பறிப்பதோடு, வழக்கறிஞர்களை நீதிபதிகளின் அடிமைகள் என்ற நிலைக்குத் தாழ்த்தியிருக்கின்றன.

“நீதிபதியின் பெயரைச் சொல்லிப் பணம் வாங்குவது, நீதிபதியை மிரட்டுவது, அவதூறு செய்வது, நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற புகார்களை அவரது உயரதிகாரிக்கு அனுப்புவது, நீதிமன்ற ஆவணங்களைத் திருத்துவது, நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலம் நடத்துவது, நீதிபதியை கெரோ செய்வது, நீதிமன்ற அறைக்குள் முழக்க அட்டைகளைப் பிடிப்பது, குடிபோதையில் நீதிமன்றத்துக்கு வருவது” – என்பன போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்களைத் தற்காலிக நீக்கம் செய்வதற்கும் நிரந்தரமாகத் தொழிலிலிருந்து வெளியேற்றுவதற்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமின்றி, மாவட்ட நீதிபதிகளுக்கும் அதிகாரம் அளிக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்.

நீதிபதிகள் எனப்படுவோர் பரிதாபத்துக்குரிய நல்லொழுக்க சீலர்கள் போலவும், கொடிய கிரிமினல்களான வழக்கறிஞர்களிடம் அவர்கள் சிக்கித் தவிப்பதைப் போலவுமான ஒரு தோற்றத்தை இது அளித்த போதிலும், அந்தத் தோற்றம் பொய் என்பதை அதே நாளில் நிரூபிக்கும் வண்ணம் கவித்துவ நீதியாய் நிகழ்ந்தது ஒரு சம்பவம். அடையாள அட்டையைக் காட்டுமாறு கோரிய ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகரின் கையிலிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்த ஒரு மாவட்ட நீதிபதி, அந்த ரயில்வே ஊழியரைக் கொலை செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிடும் காட்சியின் வீடியோ பதிவை நாடே கண்டது. அந்த மாவட்ட நீதிபதிதான் பானைச் சோறுக்கு ஒரு சோறு. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது உயர்நீதி மன்றத்தின் யோக்கியதைக்குச் சான்று.

உச்ச நீதிமன்ற ஊழல் தலைமை நீதிபதிகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்கில் தொடங்கி, அமித் ஷாவைக் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்து கைம்மாறாக கவர்னர் பதவியைப் பெற்ற சதாசிவம்; மற்றும் தத்து, குமாரசாமி போன்றோரில் தொடங்கி பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகள் வரை குற்றவாளிகளால் நிரம்பி வழிகிறது நீதித்துறை. இவர்களைத் தண்டிப்பதற்கு சாத்தியமான வழி எதுவும் சட்டத்தில் இல்லை. இத்தகைய நீதிபதிகள் கிரானைட், தாதுமணல் கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் வழங்கிய முறைகேடான ஊழல் தீர்ப்புகளை அம்பலப்படுத்தியதற்குப் பதிலடியாகத்தான் தமிழக வழக்கறிஞர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கியது. நீதிபதிகளுக்கு இலஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களான வழக்கறிஞர்கள், ரவுடிகளுடன் இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் போன்றோர் யாரையும் உயர்நீதிமன்றம் இடைநீக்கம் செய்யவில்லை. மாறாக, அத்தகையோர்தான் நீதிபதிகளின் ஆசியுடன் பார் கவுன்சில் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுநலனுக்காகப் போராடியவர்கள்தான் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் உள்ளிட்ட அரசமைப்பு முழுவதும் குற்றக்கும்பல்களால் நிரம்பி வழியும் இன்றைய சூழலில், இந்த அரசமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்குப் பயன்பட்டு வந்த நீதித்துறையின் யோக்கியதையும் சந்தி சிரிக்கிறது. “இலஞ்சம் வாங்கிய ஒரு அரசு ஊழியர் மீது தமிழக அரசின் அனுமதியின்றி யாரும் வழக்கு தொடர முடியாது” என்று சட்டமியற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தமக்கெதிராக குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டும் வழக்கறிஞர்களின் “தொழில் செய்யும் உரிமையை ரத்து செய்வோம்” என்று மிரட்டுகிறது உயர் நீதிமன்றம். தீர்ப்பை எடை போட்டு விற்க தராசு! எதிர்ப்போரின் தலையைக் கொய்ய வாள்

தலையங்கம்
புதிய ஜனநாயகம், ஜூன் 2016