
புதிய தாராளமய கொள்கையின் பலன்கள் மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது என்றும் இக்கொள்கைகளினால் பாதகமான விளைவுகளே அதிகம் ஏற்பட்டிருக்கின்றன என்று இக்கொள்கைக்கு கந்து வட்டிக்காரனாக இருக்கும் ஐ.எம்.எஃப் – சர்வதேச நாணய நிதியம் ஒத்துக்கொண்டிருக்கிறது.
புதிய தாராளமய கொள்கைககள் உலக மக்களுக்கும் ஏழை நாடுகளுக்கும் விரோதமானவை என்பதை பலரும் கூறிவந்த போதிலும் தாராளமய ஆதரவு பூசாரிகள் அதற்கு எதிராக சாமியாடி வந்தனர். புதிய தாராளமய கொள்கைகளை அமல்படுத்தும்படி கட்டளையிடும் நாட்டாமையான ஐ.எம்.எஃப்பே இனியும் இதை மறைக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
ஐ.எம்.எஃப்பின் துணை இயக்குனரான ஜோனாதன் ஒஸ்ட்ரி உள்ளடக்கிய மூன்று பொருளாதார நிபுணர்களின் “Neoliberalism: Oversold” என்ற ஒரு அறிக்கையை ஐ.எம்.எஃப் வெளியிட்டுள்ளது.
இவ்வாய்வில் நாடுகளுக்கிடையே மூலதனத்தின் தடையில்லா பாய்ச்சல் மற்றும் அரசின் செலவுகளை குறைக்கும் சிக்கன நடவடிக்கைகள் ஆகிய தாராளமயத்தின் இரண்டு முக்கிய கொள்கைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு பரிசீலிக்கிறார்களாம்.
- பல நாடுகளை ஆய்வு செய்கையில் தாராளமயத்தால் அந்நாடுகள் வளர்ச்சி அடைந்திருப்பதாக எங்களால் கண்டறிய முடியவில்லை.
- அதே சமயத்தில் இக்கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்ட விலையாக ஏற்றத்தாழ்வு அதிகமாகியுள்ளதை மிகத் தெளிவாக அறியமுடிகிறது.
- ஏற்றத்தாழ்வு அதிகமாகியிருப்பதன் பின்விளைவாக வளர்ச்சியை மேலும் குறைந்திருக்கிறது.
தடையற்ற மூலதன பரிமாற்றம் குறித்த ஆய்வு முடிவு
ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மறைத்து, மூலதன பற்றாக்குறையால் அவதிப்படும் வளரும் நாடுகளுக்கு அதை தடையில்லாமல் கிடைக்கச்செய்வதன் மூலம் உலக பொருளாதாரம் வலுப்பெறும் என்று கூறிவந்தனர் முதலாளித்துவ அறிஞர்கள். ஆனால் இம்மூலதன பாய்ச்சலால் பொருளாதார நெருக்கடிகள் அதிகமாகுவதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (FII) மூலம் பங்குச் சந்தைக்குள் நுழையும் மூலதனம் எந்நேரம் வேண்டுமானும் வேறு நாடுகளுக்கு மாற்றப்படும்.இப்படிபட்ட குறுகியகால மூலதத்தினால் மிக பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதாக கூறுகிறது இவ்வாய்வுக் கட்டுரை.

வளரும் நாடுகளின் மூலதன வரவை ஆய்வு செய்கையில் மூலதன வரத்து திடீரென அதிகரிப்பது 150 முறை நடந்துள்ளது. இந்த திடீர் அதிகரிப்புகளில் 20% பொருளாதார நெருக்கடியில் முடிந்துள்ளது என இவ்வாய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிகள் மேலும் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கிறதாம்.மேலும் குறுகிய கால மூலதன பரிமாற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று வாதிடுகிறது இவ்வறிக்கை.
சிக்கன நடவடிக்கைகள் குறித்த ஆய்வு முடிவு
அரசின் பங்களிப்பை குறைப்பது என்ற வகையில் அரசுத்துறைகளை தனியார்மயமாக்குவது; நிதி பற்றாக்குறையை குறைப்பது என்ற பெயரில் சமூக நலத்திட்டங்களை வெட்டி குறைப்பது போன்ற நடவடிக்கைகள் உலகெங்கும் அமல்படுத்தப்படுகின்றன. கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளிலும் கூட அரசுகள் ‘சிக்கன’ நடவடிக்கையில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அந்நாடுகளில் நடந்து வருகின்றன.
இதை ஆய்வு செய்துள்ள இவ்வாய்வாளர்கள் நிதி பற்றாக்குறை குறைப்பு நடவடிக்கைகளினால் உற்பத்தி விரிவடைவதற்கு மாறாக குறைவதாக தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% அளவிற்கு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது 0.6% அளவிற்கு வேலை இழப்பு அதிகரிப்பதாக கூறுகிறது இவ்வாய்வு. ஐந்தாண்டுகளில் இது 1.5% ஆக உயருகிறது. சிக்கன நடவடிக்கைகளினால் உற்பத்தி குறைவது, நலத்திட்ட வெட்டுகள், அதிக வேலை இழப்புகள் முதலியவை ஏற்படுவதாக கூறுகிறது இவ்வறிக்கை.
தடையற்ற மூலதன பாய்ச்சல் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் ஏற்படுத்தும் ஏற்றாத்தாழ்வு பாதகமான ஒரு நச்சு சுழலை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறது இவ்வாய்வறிக்கை. இதனால் கொள்கை வடிவமைப்பாளர்கள் மறுபங்கீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகிறது. கல்விக்கும், பயிற்சிகளுக்கும் அதிகம் செலவழிக்க வேண்டும் என்றும், சிக்கன நடவடிக்கைகள் ஏழைகளை பாதிப்பதாக இருக்க கூடாது எனவும் கோருகிறது. அப்போது தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும் என வாதிடுகிறது.
மூலதன பாய்ச்சலுக்கு கட்டுப்பாடு, சிக்கன நடவடிக்கைகளுக்கு தடை என தான் இதுவரை கூறிவந்த கட்டுபாடில்லாத தாராளமய கொள்கைகளுக்கு நேர் எதிராக ஐ.எம்.எஃப் ஆய்வறிக்கை வெளியிடவேண்டிய தேவை என்ன?
உலகலாவிய நிதி நெருக்கடி, அதை தீர்க்க பரிந்துரைப்பட்ட சிக்கன நடவடிக்கைகளினால் (அதாவது சமூகநலத்திட்டங்களை ரத்து செய்வது, அதற்கான நிதியை வெட்டுவது) உண்டான எதிர்விளைவுகள், இதன் விளைவுகளாக மேற்குலகில் பரவும் மக்கள் போராட்டம் என முதலாளித்துவ அமைப்பு ஒரு நச்சு சுழலில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. அந்த போராட்டங்களின் விளைவாக வெளிப்படையாக முதலாளித்துவம் ஒழிக என்றோ இல்லை முதலாளித்துவத்தைக் கொல்வோம் என்றோ முழக்கங்கள் இக்கனவான்களின் காதை கிழிக்கின்றன. இன்று காதைக் கிழிக்கும் குரல் நாளை அவர்களின் அடிமடியிலேயே ஆப்பு வைக்கும் கிளர்ச்சியாக வளர்ந்து விட்டால்?
இனி அதை தடுத்து நிறுத்துவது எப்படி என்று உலகமயத்தை அமல்படுத்தும் அயோக்கியர்கள் ஆய்வு செய்கிறார்கள். எளிமையாகச் சொன்னால் தமிழகத்தில் ஜெயா அமல்படுத்துவது போல இலவசத் திட்டங்களை காட்டி விட்டு, கல்வி, தண்ணீர், மருத்துவம், தொழிற்துறை அனைத்திலும் தனியார் மயத்தை முன்னிலும் அதிகமாய் பரப்புகிறார்கள். நீர் ஒரு விற்பனைச் சரக்கு என்று நிலைநாட்டி விட்டு ஏழைகளுக்கு இரண்டு குடம் தண்ணீர் கொடுத்துவிட்டால் முடிந்து போயிற்று.
உலகமெங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு முதலாளித்துவம் அனைத்து துறைகளிலும் அசுர வேகத்துடன் – பலத்துடன் இலாபத்தை உறிஞ்சி எடுக்கிறது. இந்த வேகம்தான் நெருக்கடி எனும் விளைவை பேரழிவுத் தாக்குதலாக கொண்டு வருகிறது. இந்த சுரண்டலை ஆய்வு செய்யாமல் சுரண்டலினால் வரும் ஏற்றத்தாழ்வு, போராட்டத்தை மட்டும் கண்கட்டு வித்தை மூலம் மறைக்க நினைக்கிறது ஐ.எம்.எஃப் அறிக்கை.
முதலாளித்துவத்தின் கொடூரங்களை சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ள மக்களிடம் கண்கட்டு வித்தைகள் செல்லுபடியாகாது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. பாரிஸிலோ, நியூயார்க்கிலோ ஐ.எம்.எஃப் அலுவலகத்தின் வாயிலிலேயே அன்றாடம் இந்த செய்தி மக்களின் போராட்டத்தால் சொல்லப்பட்டு வருகிறது. இனி அந்த செய்தியைக் கேட்பது அவர்களது தெரிவோ விருப்பமோ அல்ல!
– ரவி
மேலும் படிக்க
Neoliberalism: Oversold?
Even the IMF Now Admits Neoliberalism Has Failed
You’re witnessing the death of neoliberalism – from within