Wednesday, April 23, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கநந்தினியைக் கொன்ற டாஸ்மாக்கை மூடு - மக்கள் போராட்டம்

நந்தினியைக் கொன்ற டாஸ்மாக்கை மூடு – மக்கள் போராட்டம்

-

பட்டினப்பாக்கம்-சீனிவாசபுரம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் போராட்டம்

டாஸ்மாக் – தமிழக மக்களின் வாழ்வில் பற்றியெரியும் பிரச்சனை. அம்மாவின் ஐந்நூறு கடைகள் மூடும் நிகழ்வு இதன் சீற்றத்தை சிறிதளவும் குறைக்கவில்லை என்பதையே பெருகி வரும் குற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டி வருகின்றன. அதற்கோர் எடுப்பான உதாரணம்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஆசிரியை நந்தினியின் மரணம் அல்லது அம்மா டாஸ்மாக்கின் மற்றுமோர் சாதனை.

pattinapakkam--tasmac-struggle-10அந்தி மறைந்து இருள் மெல்ல சூழத்துவங்கியிருந்தது, ஆசிரியை நந்தினி தன் சம்பள பணத்தை எடுத்து வர ஏடிஎம் சென்றிருந்தார் தன் சொந்த இருசக்கர வாகனத்தில்; துணைக்கு தோழி ஒருவரை அழைத்துக்கொண்டு. ஏ.டி.எம் செல்ல எதற்கு துணை? தமிழகத்தில் ஏ.டி.எம் மட்டுமல்ல பணமும், பள்ளி கல்லூரியும், குடி போதைக்கு அடிமையான ஆண்களும் அடங்கிய அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் இருப்பது விதி. அதுவும் கடல் சென்று மீன் பிடித்து கரை திரும்பும் உழைக்கும் மீனவர்கள் உழைப்பையும், அலுப்பையும், அவர்தம் இல்லக் களிப்பையும் அள்ளிச்செல்ல அமைந்திருந்தது அந்த டாஸ்மாக் கடை. இடம் பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம்.

பணம் எடுத்து திரும்புகையில் குடிவெறியால் கொள்ளையர்களாக்கப் பட்டவர்களின் கைகளில் பணமும், கால்களில் துரத்தி சென்ற ஆசிரியையின் வாகனமும் சிக்க ஆசிரியை நிலைகுலைந்து விழுந்ததில் அந்த இடத்திலேயே மரணமடைந்தார்; தோழி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பணத்துடன் தப்பியவர்கள் வழியில், குடிபோதை ஏறி இழந்துப்போன மதியில் முதியவர் ஒருவரையும் இடித்து உயிரைப் பறித்தனர்.

pattinappakkam-tasmac-struggle-01இந்த சம்பவங்களை கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொள்ள உழைக்கும் மக்கள் ஒன்றும் காக்கி உடை அணிந்திருக்கும் காவலர்கள் அல்ல. விரட்டி சென்று ஒரு திருடனைப் பிடித்து உடனடியாக தண்டனையும் கொடுக்கத்துவங்கினர். ஆனால் சட்டம்தான் தன் கடமையை செய்யவேண்டுமென்று காக்கி உடை அணிந்தவர்கள் அந்த திருடனை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். தப்பியவனை இன்னமும் தேடி வருகின்றனர்.

இம்மாதிரி குற்றங்கள் நடப்பது இது முதல் முறையுமல்ல; இந்த குற்றங்களுக்கு மூலகாரணம் ஓடிப்போனவனையொத்த திருடர்களும் அல்ல. கடந்த 2008-ம் ஆண்டு முதலே அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக்தான் என்கின்றனர் பகுதியை சார்ந்தவர்கள்.

pattinapakkam--tasmac-struggle-0721 வயதிலே டாஸ்மாக்கால் கணவனை பறிகொடுத்து, அடுத்தடுத்து அக்காமார்களின் கணவர்களையும் டாஸ்மாக்கிற்கு காவு கொடுத்து ஏராளமான இன்னல்களை அனுபவித்திருக்கும் ஆக்னஸ் என்ற பெண்மணிதான் 2008-லிருந்தே இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.

முதலில் அரசு பள்ளிக்கூடத்திற்கு மிக அருகாமையில் இருந்தது இந்த டாஸ்மாக் கடை. பொதுமக்கள் இந்தக்காரணத்தைக் அதிகமாக போராடி வரவே பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிட்டு டாஸ்மாக்கை அங்கேயே நடத்தி வருகிறது அரசு. மாணவர்களின் கல்வியை விட முக்கியமானது டாஸ்மாக் என்ற போதிலே மக்கள் உணர்ந்துக் கொண்டனர் இந்த அரசு யாருக்கானது என்று. அதே போதில் மக்களின் போராட்டம் முன்னைவிட பன்மடங்கு பெருக போலீசை நிரந்தரமாக டாஸ்மாக் வாசலில் குடியமர்த்தியது.

pattinappakkam-tasmac-struggle-02தினமும் காலையில் வேலைக்கு கிளம்பி வரும் போலீசு குடிகாரர்களை ஒழுங்குபடுத்தி கூட்டத்தை முறைப்படுத்தி அனைவருக்கும் சண்டை சச்சரவு இல்லாமல் சரக்கு கிடைப்பதையே தனது முழுநேரத்தொழிலாக கொண்டிருந்ததை பகுதி மக்கள் வெறுப்புடன் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டனர். நாள் ஆக, ஆக போலீசின் முறைப்படுத்துதலில் டாஸ்மாக் விற்பனையில் சென்னைப்பகுதியில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது அந்த டாஸ்மாக்.

அதன் வீறுநடையின் வேகத்தில் கொல்லப்பட்ட ஆசிரியை நந்தினியின் மரணம் பொதுமக்களை கிளர்ந்தெழ செய்துவிட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு இன்னபிற குற்றங்களுக்கு காரணமான இந்த டாஸ்மாக் கடையை உடனே இழுத்து மூடவேண்டுமென களத்தில் குதித்து விட்டனர் பகுதிவாழ் உழைக்கும் மக்கள்.

நேற்றைய முன்தினம் (07-07-2016) இருவர் தீக்குளிக்கவும் முயன்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 08-08-2016 அன்று டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராடியுள்ளனர். இம்முறை இவர்களுடன் களத்தில் மக்கள் அதிகாரமும், பெண்கள் விடுதலை முன்னணியும் கரம் கோர்த்துள்ளன. ஆசிரியை நந்தினியின் மறைவுக்கு மறுநாளிலிருந்து பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இன்று வரை கடை திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் நேற்றைய தினம் கடைக்கு பத்தடி தொலைவிலே நாற்காலி போட்டு அமர்ந்துக் கொண்டு, “முடிந்தால் கடையை திறந்து பார்” என கூறி பொதுமக்களுடன் ஆக்னஸ் அம்மா போராடியுள்ளார்.

pattinappakkam-tasmac-struggle-05அதே நேரத்தில் நான்கு அடுக்கு போலீசு பாதுகாப்பும், நான்கு அடுக்கு பேரிகாடு பாதுகாப்பும் கொடுத்து பொதுமக்களிடமிருந்து தன் பொக்கிசத்தை காத்துக்கொண்டுள்ளது ஜெயா அரசு. “கண்ணுக்கெதிரே கொலை நடந்திருப்பினும் கடையை மூடமாட்டோம் கடையை மூடவும் விடமாட்டோம்” என போலீசு மல்லுக் கட்டிக்கொண்டு நிற்க அவர்களை வீழ்த்தி எப்படியும் கடையை மூடியேக் காட்டுவோம் என்றவாறு மக்கள் எதிர்த்து நின்றுக் கொண்டுள்ளனர்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதரவளிக்காத நிலையில் மக்கள் அதிகாரமும், பெண்கள் விடுதலை முன்னணியும் இவர்களுடன் கரம் கோர்த்திருப்பதில் பெரிதும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர் இப்பகுதி மக்கள். ஆனால் மக்கள் அதிகாரம் இணைந்ததன் விளைவாக கூடுதலாக நான்கு பேருந்து போலீசை கொண்டு வந்து நிரப்பியுள்ளது போலீசு. அதோடு மக்கள் அதிகாரத்தின் போராட்ட பாணியை பற்றி போராடுவர்களிடையே கூறி பயமுறுத்த முனைந்துள்ளது. ஆனால் அதில் பயப்படாமல் உற்சாகமாகிப் போன உழைக்கும் மக்களோ மக்கள் அதிகாரத்துடன் இறுக பிணைந்துக்கொண்டுள்ளனர். இம்முறை எப்படியேனும் மூடியேத்தீருவோம் என்பதோடு மட்டுமல்லாமல் இல்லை என்றால் மூடியேக்காட்டுவோம் என்று அதிகாரத்தை கையிலெடுக்கவும் ஆயத்தமாகி வருகின்றனர்.

pattinappakkam-tasmac-struggle-04டாஸ்மாக் கடைக்குப்  பக்கத்தில் பத்தடி தள்ளி வட்டமாக நாற்காலிகளை போட்டு மக்கள் அதிகாரம் மருது, பகுதி போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்னஸ் அம்மா இன்னும் சில மக்கள் அதிகார, பகுதி வாழ் மக்கள் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். ஐந்தாம் நாளாக தொடரும் பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி உழைக்கும் மக்களின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் காலை நேரக்காட்சி இது.

அதே வேளையில் கருவாடு விற்க சென்றுக் கொண்டிருப்பவர்களையும் கறாராக சோதித்து, டாஸ்மாக் கடையை சுற்றி ஐந்தடுக்கு பேரிகார்டு பாதுகாப்பு போட்டு, அதிரடிப்படையின் அணிவகுப்பை ஒழுங்குப்படுத்தி பொதுமக்களுக்கு எதிராக போர் தொடுக்க தொந்தி வயிற்றுக்கு தொடர்பில்லாத வேலைகளை செய்து கொண்டிருந்தது போலீசு.

pattinappakkam-tasmac-struggle-03மணி 9 ஐ கடந்தது. அறிவித்திருந்தபடி போராட்டம் துவங்கியது. சாவகாசமாக எழுந்து தங்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு அப்படியே போஸ்டர், முழக்கம் சகிதமாக டாஸ்மாக்கை நோக்கி நகர்ந்தனர் போராட்டக்குழுவினர். ஊரில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் அவர்கள் பின் அணிதிரள மிரண்டு போன போலீசு தங்கள் கைகளையே சங்கிலியாக்கி போராடுபவர்களை தடுத்தி நிறுத்தியது.

இருப்பினும் தங்கள் கோரிக்கைகளை முழக்கமாக்கி அதை காற்றிலும், பல ஊடக நேரலை காணொளியிலும் பரப்பியவாறு இருந்தனர் போராடிய பொதுமக்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆக்னஸ் அம்மா, “இரண்டு உயிர் போன பிறகும், நான்கு நாட்களாக போராட்டம் நடத்திய போதும்கூட கடையைமூட அரசு தயாராக இல்லை. எத்தனை உயிர் போனாலும் அதைப் பற்றி துளி கூட கவலைப்படவில்லை. கடையை மூடும் வரை நாங்களும் விடப்போவதில்லை, மக்களுக்காக இருப்பதாகச் சொன்ன எந்த கட்சியும் எங்களுக்காக வரவில்லை. பெண்கள் நாங்கள் தொடர்ந்து உயிரைக் கொடுத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். துணிச்சல் இருந்தால் இங்கு வந்து போராட்டம் நடத்தி கடையை மூடுங்கள்” என்றார்.

pattinapakkam--tasmac-struggle-11மேலும், “மக்கள் உயிருக்கு, இந்த ஊரில் எந்த பாதுகாப்பும் இல்லை, ஆனால் ஊரை அழிக்கிற மதுக்கடைக்கு இத்தனை பாதுகாப்பு, நாங்கள் போராட்டம் நடத்தும் போது எங்களை கைது செய்தாலும் கூட நாங்கள் போராட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை. இந்த தொடர்போராட்டம் தொடரும்” என்று முழங்கினார்.

ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க அனுமதித்ததையே தான் வழங்கும் அதிகபட்ச ஜனநாயகம் என்பதை உணர்த்தும் வகையில் காவல்துறை தன் கைவரிசையை காட்டத்துவங்கியது. போராடுபவர்களின் மன உறுதியை உரமாக்கி உறுதி படுத்தும் வண்ணம் தரதர வென இழுத்துச் சென்று கைது செய்யத் துவங்கியது போலீசு. ஓயமாட்டோம், அஞ்சமாட்டோம், இழுத்து மூடு டாஸ்மாக்கை போன்ற முழக்கங்கள் போராட்டக்காரர்களின் குரல்வளையிலிருந்து இடைவிடாது வெளிப்பட உடலோ கொடூரமாக தாக்கும் போலீசின் பிடிக்கெதிராக போராடி கொண்டிருந்தது. அடிதடி, தள்ளுமுள்ளு என்ற போலீசின் தாக்குதலின் முடிவில் ஆக்னஸ் அம்மாவை தவிர மற்ற அனைவரும் கைதாக்கப் பட்டனர்.

pattinappakkam-tasmac-wlf-struggle-1தாங்கள் எந்த தவறும் செய்யாதபோதும், தாங்கள் எந்த பொதுச்சொத்தையும் சேதப்படுத்தாதபோதும், தாங்கள் எந்த வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக நடந்துக் கொள்ளாதபோதும் போலீசு தங்களை கைது செய்வதை வன்மையாக கண்டித்து வண்டியில் ஏற மறுத்து சாலையிலே அமர்ந்து விட்டார். “எத்தன உசிரு போனாலும் அந்த அம்மாவுக்கு டாஸ்மாக் வருமானம்தான் முக்கியமா?” என்று கேள்வி எழுப்பி தன் எதிர்ப்பை தொடர்ந்து காட்டியவாறு சாலையில் அமர்ந்துவிட்டார்.

நெற்றியில் வியர்வையை வழித்துக்கொண்டு சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட போலீசு இம்முறை மூர்க்கத்தனமாக ஆக்னஸ் அம்மாவை அப்புறப்படுத்த முயன்றனர். பத்து பெண் போலீசார் பிடித்து இழுத்து தூக்கியதில் அந்த அம்மா அங்கேயே மயங்கி விழுந்தார். மயங்கியதை வெளியில் காட்டாமல் வாகனத்தில் கிடத்தி போராட்டக்களத்தை விட்டு விரைந்து வெளியேறி வெற்றிக்கொடி நாட்டிவிட்டோம் என நினைத்துக் கொண்டது போலீசு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆனால் ஆக்னஸ் அம்மா கைதான செய்தியறிந்த பொதுமக்களோ போராட்ட இடத்தை விட்டு வெளியேறாமல் நீண்ட நேரம் ஊடகங்கள் முன்னிலையில் போலீசாரின் இல்லாத தன்மானத்தை தட்டியெழுப்பி வெளிக்கொண்டு வரும் வகையில் அர்ச்சித்துக் கொண்டிருந்தனர். ஆக்னஸ் அம்மாவை விடுதலை செய்யவேண்டுமென்ற வேட்கை இருந்தாலும் முறையான ஒருங்கிணைப்போ, முறைப்படுத்தும் தலைமையோ இல்லாத காரணத்தால் அங்கேயே நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருந்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் வந்தது செல்ஃபி கூட்டம். கடைக்கு பத்தடி தூரத்திலேயே நின்று கொண்டு ஊடகங்களையும், போலீசையும் ஆள்விட்டு அழைத்தனர் பா.ஜ.கவினர். போராட்டத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத உடைகளை அணிந்துக்கொண்டு செயற்கை கொண்டை, முகப்பூச்சு, அலங்காரங்களுடன் அவாள்கள் சிலரும் அடுத்தடுத்த வர்ணங்களை சார்ந்த சிலரும் நின்றுக் கொண்டிருந்தனர்.

பா.ஜ.க-வின் செல்ஃபி போராட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கூடவே அழைத்து வந்திருப்பர் போல தினமலர் போன்ற பத்திரிகைகள் புதிதாக மைக்குடன் வந்து தள்ளுமுள்ளுவை ஏற்படுத்தியது. நமக்காக போராட வந்துள்ளனர் என நம்பி பகுதி மக்கள் அவர்களிடம் செல்ல சனாதன தர்மத்தினர் சத்தம் போட்டனர். “எதுவும் பேசக்கூடாது, பின்னாடி நில்லு, போய் உங்க ஆளுங்களை கூட்டிட்டு வந்து எங்க பின்னாடி நில்லுங்க” என அதட்ட துவங்கினர்.

தங்களுக்கே புரியாத வண்ணம் ‘போராட்டம் இது போராட்டம், பா.ஜ.கவின் போராட்டம்’ என முழக்கம் போட்டனர். வாய்தான் இதை சொல்லிக்கொண்டிருந்ததே தவிர உடலும், உள்ளமும் சுற்றி வளைத்து படம் பிடிக்கும் கேமிராவில் தங்கள் முகம் பதியவேண்டுமென்பதற்காக முன்னோக்கி, பின்னோக்கி, எட்டிப்பார்த்து, வளைந்து நெளிந்துக் கொண்டிருந்தது. பின்னர் போலீசு செல்லமாக கண்டிக்க அடுத்த ஓர் அடி கூட எடுத்து வைக்காமல் யூ டர்ன் அடித்து நிழலுக்கு ஒதுங்கினர்.

போராட்டம் நடத்தப்பட வேண்டிய டாஸ்மாக் பின்புறம் இருக்க புகைப்படம் எடுக்கும் ஊடகங்களை முன்புறம் வைத்துக்கொண்டு யாரும் எதிர்க்காமலேயே புறமுதுகிட்டு ஓடத்துவங்கினர். இப்போதுதான் பகுதி மக்களுக்கு புரிந்தது இவர்கள் போட்டோ எடுக்க வந்த குரூப் என்று. சற்றும் தாமதியாமல் இவர்களுடன் இருக்கையிலே சாலையில் அமர்ந்துவிட்டனர்.

இது ஏதடா வம்பாகிவிட்டது என சாலையில் அமர்ந்தவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை எழுப்பி – போலீசு கத்துவதற்கு முன்பாகவே – சமாதானம் செய்து கடையை விட்டு ஐம்பதடி தள்ளி சென்று அடுத்தகட்ட அறிவிப்பான சாகும் வரை உண்ணாவிரதத்தை அறிவித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர் அரைக்காக்கியின் காவி வேட்டி பிரிவினர்.

அதற்கு பிறகும் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்தது மகளிர் அணியினருடன் செல்ஃபி, போராடும் மக்களுடன் செல்ஃபி என மோடியின் மானத்தை காப்பாற்றிவிட்டனர் காவிகள். அப்போது பரிதாபமாக, “அந்த அம்மாவ (ஆக்னஸ் அம்மா) விடச்சொல்லி சொல்லுங்கமா” என கேட்ட பகுதி மக்களிடம், “அதெல்லாம் சொல்லிட்டோம், சாயந்திரம் ஆறு மணிக்கு வந்துருவாங்க” என ஏறெடுத்தும் பார்க்காமல் எகத்தாளமாக சொல்லிவிட்டு தங்கள் கட்சிப்பணியில் கையில் ஆண்ட்ராய்டு கேமராவுடன் மூழ்கினர் பகுதி பா.ஜ.கவினர்.

ஆனால் உணமையில் ஆக்னஸ் அம்மாவை தவிர மற்றவர்களை மயிலாப்பூர் சமூக நலக்கூடத்திலும், ஆக்னஸ் அம்மாவை தனியாக E1 காவல் நிலையத்திலும் வைத்துள்ளது போலீசு. மக்கள் அதிகாரத்தை சார்ந்த ஒரு தோழருக்கு கைமூட்டு விலகிவிட்டிருந்தது. அவருக்கு மருத்துவம் பார்க்க கூட அனுமதி மறுத்துக்கொண்டிருந்தது போலீசு. ஆக்னஸ் அம்மாவை ரிமாண்ட் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

வெட்ட வெட்ட வீரியமாக வளர்வதில் பொதுமக்களின் போர்க்குணமும், போராட்டத்தன்மையும் முதன்மையானது. அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அணிதிரள்கிறது பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி. அவர்களின் குரல் சொல்வது இதையே, மீண்டும் தொடருவோம், மூடப்பட்ட கடை திறக்கப்பட்டால்! மீளாமல் தொடருவோம் பாதுகாப்பு அளிக்கப்பட்ட கடை நிரந்தரமாக மூடும் வரை!

வினவு செய்தியாளர்கள்,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க