Tuesday, April 22, 2025
முகப்புசெய்திவழக்கறிஞர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி தொழிலாளர்கள் போராட்டம்

வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி தொழிலாளர்கள் போராட்டம்

-

கருப்புச் சட்டங்களை வீழ்த்துவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

ndlf-py-judges-poster-3 வழக்குரைஞர்கள் சட்டத்தின் பிரிவு 34-ல் திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பூட்டு போடுகின்ற தீய உள்நோக்கத்துடன் இந்த சட்டத்திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. வழக்குரைஞர்களது ஒழுங்கீனத்தில் காரணமாக அவர்களது வாடிக்கையாளர்களான வழக்காடிகளது நம்பகத்தன்மையை இழந்து வருவதால் வழக்குரைஞர் சமூகத்தை நல்வழிப்படுத்த இத்தகைய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக வியாக்கியானம் செய்யப்படுகிறது.

வழக்குரைஞர்களை முறைப்படுத்தும் சட்டப்படியான அதிகார அமைப்பான பார்கவுன்சிலை செல்லாக்காசாக்கி விட்டு மொத்த அதிகாரத்தையும் நீதிபதிகள் கையில் குவிக்கின்ற அக்கிரமத்தை பார் கவுன்சில்களது ஒப்புதலைப் பெற்ற பின்னரே அறிவித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். பார் கவுன்சில் நிர்வாகிகளது ஒப்புதல் வாக்குமூலம் இதனை உறுதிப்படுத்துகிறது. இந்த கருப்புச் சட்டத்தை எதிர்த்து சூன் 6-ல் சென்னையில் மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தி முடித்திருக்கின்ற நிலையில், அடுத்த கட்டப் போராட்டங்களை அறிவித்திருக்கின்றன, தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கங்களது கூட்டமைப்பு. மேற்படி கருப்புச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்ற நிலையில், இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய பார் கவுன்சில் நிர்வாகி மனன்குமார் அறிவித்துள்ளார்.

தமிழக வழக்குரைஞர்கள் மீதான அடக்குமுறை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ஊழல் நீதிபதிகளை அம்பலப்படுத்தியது, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கப் போராடியது, கைக்கூலி சங்கங்களை அங்கீகரிப்பதை எதிர்த்தது, உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அராஜகத்தை கண்டித்தது ஆகியவற்றுக்காக 41 வழக்குரைஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுடன் 3 குடிகார வழக்குரைஞர்களையும் சேர்த்து இடைநீக்கம் செய்து, சமூகத்தின் நலனுக்காகப் போராடியவர்களையும், ஒழுக்கக் கேடர்களையும் சமப்படுத்தி அவமானப்படுத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வழக்குரைஞர்களைப் பாதுகாக்க வேண்டிய பார்கவுன்சிலே ஆள்காட்டி வேலை செய்கிறது. குறிப்பாக அகில இந்திய பார்கவுன்சில் தமிழக வழக்குரைஞர்களை வன்மத்துடன் நடத்துகிறது. ஜே.என்.யூ. மாணவர் கன்னையா குமார் மீது பொய்யான தேச துரோக வழகு போடப்பட்ட போது, டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சிலரே கன்னையாகுமாரை தாக்கினர். பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் வழக்குரைஞர்கள் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இவர்களில் யார் மீதும் அகில இந்திய பார்கவுன்சில் நேரடியாகவோ, அந்தந்த மாநில பார்கவுன்சில்கள் மூலமாகவோ நடவடிக்கை எடுத்ததில்லை. இங்கெல்லாம் கெட்டுப் போகாத நீதிமன்ற ‘மாண்பு’கள் தமிழகத்தில் மட்டும் கெட்டுபோவதாக மாண்புமிகு ‘நீதியரசர்’கள் அலறுவது ஏன்?

ndlf-py-judges-poster-1தமிழக வழக்குரைஞர்களது போராட்டப் பாரம்பரியம்தான் நீதியரசர்களை கனவிலும் அச்சுறுத்துகின்ற அம்சமாகும். இந்துமதவெறி பாசிசமும், மறுகாலனியாக்க நடவடிக்கைகளும் கைகோர்த்துக் கொண்டு உழைக்கும் மகளை அடக்கி வருகின்ற தருணத்தில் நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. ஒருபுறத்தில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசம் பல்வேறு தளங்களில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. சமஸ்கிருதத்திற்கென தனி பள்ளிகள் துவங்குவதென சமீபத்தில் மற்றுமொரு தாக்குதலை நடத்தியுள்ளது. மற்றொரு புறத்தில் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் தங்குதடையற்ற சுரண்டலுக்கும், லாபவெறிக்கும் தொழிலாளி வர்க்கத்தையும் இயற்கை வளங்களையும் பலியிடுகின்ற தொழிற்கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆளும் வர்க்கத்தின் கூட்டாளியான நீதிமன்றத்தின் பங்களிப்பு இதில் கணிசமாக இருக்கிறது.

ndlf-py-judges-poster-2இந்தத் தருணத்தில் உழைக்கும் மக்கள் அமைப்பாகத் திரளுவது, தங்களது உரிமைகளுக்காகப் போராடுவது ஆகிய இரண்டையும் ஆளும் வர்க்கம் வெறுக்கிறது. இந்த வகையில் போராடும் குணம் கொண்ட வழக்குரைஞர் சமூகத்தை பொதுவிலும், தமிழக வழக்கறிஞர்களை குறிப்பாகவும் அடக்கி வைக்க வேண்டி இந்த கருப்புச் சட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். இதுபோன்ற தருணங்களில் போராடும் பிரிவுக்கு துணை நிற்பது தொழிலாளி வர்க்கத்தின் கடமை. எனவே, நீதிமன்ற பாசிசத்திற்கெதிரான வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்.

  • நீதிபதிகளை ஆண்டைகளாகவும், வழக்குரைஞர்களை அடிமைகளாகவும் ஆக்குவதே வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தின் நோக்கம்!
  • இனி நீதிபதிகள் 18 பட்டி நாட்டமைகளே! இனி நீதிமன்றங்கள் அநீதிமன்றங்களே!
  • நீதிபதிகள் அத்தனை பேரும் உத்தமர்களா? புனிதர்களா? ஊழல் – கிரிமினல்களை தண்டிக்க என்ன வழி?
  • நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், திருப்பி அழைக்கப்படுவதுமான தன்மை கொண்ட மக்கள் நீதிமன்றங்களைக் கட்டியமைப்போம்!

ndlf-py-judges-demo-1ஆகிய முழக்கங்களை முன் வைத்து வழக்குரைஞர் சட்டத்திருத்தத்தின் நோக்கத்தையும் பாதிப்பையும் விளக்கி புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், திண்டிவனம் நீதிமன்ற வழக்கறிஞர் சக்திவேல் அவர்களும், பு.ஜ.தொ.மு புதுச்சேரி மாநில இணைச்செயலாளர் தோழர் லோகநாதன் அவர்களும் உரையாற்றினார்கள்.

தோழர் சரவணன் தனது தலைமையுரையில், “இந்தப் பிரச்சினை வழக்கறிஞர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களுக்கான பிரச்சினை. மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வைப் பெறுவதற்கு நம்பி, நாடும் இடம் நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தில் நமது சார்பாக நீதியை தங்களது வாதத்தின் மூலம் எடுத்து வைப்பவர்கள் வழக்கறிஞர்கள் தான். எனவே, வழக்கறிஞர்களின் உரிமைகள் நசுக்கப்படுவது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் உரிமைகளும் நசுக்கப்படுவதாகும் எனவே, மக்கள் அனைவருக்குமான பிரச்சினை என உணர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை ஆதரிப்பதும், அவர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை” என்று விளக்கினார்.

ndlf-py-judges-demo-5வழக்கறிஞர் சக்திவேல், “நீதிபதிகள் யோக்கியர்களோ, புனிதர்களோ இல்லை. நீதிபதிகள் தங்களுடன் பணிபுரியும் நீதிமன்ற பெண் ஊழியர்களிடமும், பெண் நீதிபதிகளிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் வக்கிரம் படைத்தவர்கள்” என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார். இப்படிப்பட்ட ‘யோக்கியர்களிடம்’ அதிகாரத்தைக் கொடுத்தால் எப்படிப்பட்ட நிலைமைகள் ஏற்படும்? என கேள்வி எழுப்பினார். உழைக்கும் மக்களுக்கான சமூக மாற்றத்தை உருவாக்கும் திறன் படைத்தவர்கள் வழக்கறிஞர்கள். எனவே, வழக்கறிஞர்கள் உரிமைகள் பறிக்கப்படுவது, உழைக்கும் மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவதாகும்” என விளக்கினார்.

ndlf-py-judges-demo-7தோழர் லோகநாதன், ஈழப்பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிர்ச்சினை போன்ற பிரச்சினைகளில் வழக்கறிஞர்களின் போராட்டத்தைப் பற்றியும், தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் தொழிலாளர் வழக்குகளிலும், தாது மணல் கொள்ளை, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற மக்கள் சொத்துக்களின் கொள்ளையிலும் நீதிமன்றங்களின் யோக்கியதையை விளக்கி, இது போன்ற பொதுச் சொத்துக்கள் காப்பாற்றப்படுவது, சமூகமே காப்பாற்றப்படுவதாகும் என்பதையும் விளக்கினார். வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரிப்பது மட்டுமல்லாது, மக்களுக்கு பயன்படாததாகவும், எதிராகவும் மாறியுள்ள நீதித்துறைக் கட்டமைப்பு உள்ளிட்ட அரசுக் கட்டமைப்பை தகர்ப்பதும் நமது கடமையாகும் என விளக்கினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 9597789801

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க