
மோடியின் குஜராத்தில் மாட்டுத்தோல் வைத்திருந்ததாகச் சொல்லி தலித் இளைஞர்களை ஊரே வரிசை கட்டி நின்று காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதை சில நாட்களுக்கு முன்பு கண்டு பதைபதைத்தோம். அந்தக் கொடுமை பெரியாரின் தமிழகத்தில் நிகழாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
நத்தம் காலனி எரிப்பு, இளவரசன் உயிர்பறிப்பு, கோகுல்ராஜ் தலையெடுப்பு, உடுமலை சங்கர் படுகொலை என்று அடுத்தடுத்து சாதிவெறித் தாக்குதல்களின் தொடர்ச்சியாக கொங்கு மண்டலத்தில் கரூர் மாவட்டம், புலியூர் வெள்ளாளப்பட்டியில் 18.07.2016 அன்று நடந்த சாதிவெறித்தாக்குதல் நம்மை மேற்கூறிய கேள்விக்கு தள்ளி விடுகிறது.
பள்ளிப் பேருந்தில் வந்த தங்கள் ஊர் மாணவிகளைப் பார்த்து (6, 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள்) டாட்டா காட்டியதாகச் சொல்லி 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களைத் தாக்கியுள்ளனர், கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறியனர். அம்மாணவர்கள், தாங்கள் எதற்காக தாக்கப்பட்டோம் என்பது கூட தெரியாமல் தங்கள் பெற்றோரிடம் முறையிடவே, அவர்கள் தாக்கியவர்களிடம் சென்று எதற்காக தாக்கினீர்கள் என்று நியாயம் கேட்டுள்ளனர். “சக்கிலிய பசங்க எங்க புள்ளைங்களுக்கு டாட்டா காட்டுவதா” என்று இழிவு படுத்தியுள்ளனர். இதனால் மேலும் கோபமடைந்த ஒரு மாணவனின் தாய், கேட்டவனின் சட்டையைக் கோர்த்துப் பிடித்து தகராறு செய்துள்ளார். தள்ளுமுள்ளு நடந்ததில் அந்த தாயும் தாக்கப்பட்டார். 5 மணிக்கு நடந்த சம்பவம் இத்துடன் முடியவில்லை.

பள்ளி மாணவர்கள் டாட்டா காட்டியத்தைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத கொங்கு சாதி வெறியர்கள் இதை தங்கள் சாதிக்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டு உடனடியாக ஃபோன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் சுமார் 50-க்கு மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு கம்பி, கத்தி, உருட்டுக்கட்டையுடன் 7 மணியளவில் அருந்ததியர் தெருவிற்குள் தாக்குதல் தொடுக்க நுழைந்துள்ளனர். கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் இராசேந்திரன் என்பவர், தாக்க வருவதில் தன்னுடன் படித்த நபர்களும் இருக்கவே, “என்ன பிரச்சினை, எதுவாயிருந்தாலும் பேசிக்கொள்ளலாம்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவரை சுற்றி வளைத்து தாக்கி மண்டையைப் பிளந்தது சாதி வெறிக்கூட்டம். நீதான்டா எல்லாத்துக்கும் காரணம். உன்னை கவனிச்சா எல்லாம் சரியாகும் என்று சொல்லி தாக்கினர். இவர் ஊரின் நலனுக்காக தகவல் உரிமைச்சட்டத்தில் மனு போட்டு பல நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடங்கி கவுன்சிலரிடம் சென்று வாதாடுவது வரை பல விசயங்களில் ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளவர், இவர்.
இவர் மீதான தாக்குதலைத் தடுக்க வந்த இவரது தம்பி இராமலிங்கத்தையும் சுற்றி வளைத்து தாக்கி காலை உடைத்தனர். ஏற்கெனவே அவரது கால் உடைந்து பிளேட் வைக்கப்பட்டு மெல்ல நடக்க ஆரம்பித்த அந்த காலை மீண்டும் உடைத்துள்ளனர். குறிப்பாக, கும்பலில் ஒருவன் இதுதானடா உடைந்த கால், என்று கேட்டே தாக்கி உடைத்துள்ளான். மக்கள் திரளத் தொடங்கவே, இருவரின் இரத்தத்தையும் கண்டு சற்று வெறியடங்கிய கும்பல் திரும்பிச்சென்றது. ஆம்புலன்ஸ் 108-ல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காவல் துறையிடம் புகார் தரப்பட்டது. தாக்குதல் பற்றிய செய்தி சமூக வலைதளத்தில் பரப்பப் பட்டது. மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் சாதி வெறியர்களை கண்டித்து சுவரொட்டி போட்டு ஒட்டப்பட்டது. இவற்றின் அழுத்தம் காரணமாக தாக்கிய ஆதிக்க சாதிவெறி கும்பல் மீது SC/ST வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் 19, 20 வயதேயான சாதி வெறியூட்டப்பட்ட விடலைகளாவர்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் சுவரொட்டியை வாட்ஸ்-அப் மூலம் பரப்பியதுடன் தொலை பேசி மூலம் வசைமாரி பொழிந்து கொலைமிரட்டலும் விடுத்தனர். 12 வயது சிறுமியை கேலி செய்ததாக, நாம் தமிழர் கட்சியின் பகுதி பொருப்பாளர் பொன்னரசு ( இவருக்கு +2 படிக்கும் பையன் இருக்கிறான்.) மற்றும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் இருவரையும் உள்ளிட்டு 5 பேர் மீது பொய் வழக்கு தொடுத்து ஒருவரைக் கைது செய்யவும் வைத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதள பிரச்சாரம், மக்கள் அதிகாரம் அமைப்பின் சுவரொட்டி பிரச்சாரம் போன்றவற்றால் இதை சாதி வெறித் தாக்குதாலாக மாற்ற முடியாமல் பம்முகின்றனர். மறுபுறம் தங்கள் சாதி இளைஞர்கள் சிலர் கடும் வழக்கில் சிக்கியுள்ளதால் அவர்களது குடும்ப நிர்ப்பந்தத்தால் நெருக்கடிக்கு ஆளாகி அடக்கி வாசிக்கின்றனர்.
அதே சாதியில் உள்ள ஜனநாயக சக்திகள் சிலர் சின்ன பையன்களின் பிரச்சினையை பெரும் சாதி மோதலாக மாற்ற முயற்சிக்கும் சில சாதி வெறியர்களை கண்டிக்கவும் செய்கின்றனர். தற்போதைய இளைஞர்களிடம் வளர்ந்து வரும் சாதி வெறி பற்றி கவலை தெரிவிக்கின்றனர். மற்ற பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் வளர்ந்து வரும் கொங்கு வெள்ளாள சாதி வெறிப் போக்கைக் கண்டு அச்சமடைந்துள்ளனர்.

எனினும் பக்கத்து ஊர்களிலிருந்து கொங்கு இளைஞர்களை பெருமளவில் திரட்டி பெரும் தாக்குதலை நடத்த வேண்டும் என்று சிலர் ஊளையிட்டுத் திரியவும் செய்கின்றனர். வட தமிழகத்தில் பா.ம.க வன்னிய சாதிவெறியர்களாலும் தென் தமிழகத்தில் தேவர்சாதி வெறி சங்கங்களாலும் விசிறி விடப்பட்ட சாதி வெறி தற்போது மேற்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாள சாதி வெறியர் சங்கங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் போன்ற காலிகளால் அமைப்பாக்கப்படும் சாதி வெறியை எதிர்க்காமல் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதி வெறிக்கலவரத்தை தடுக்க முடியாது. வட இந்தியாவில் ஜாட், பட்டேல் சாதி வெறியர்களைப் போல இந்து மதவெறியர்களுடன் கைகோர்த்து வரும் இத்தகைய ஆதிக்க சாதி வெறியர்களைத் தடுத்து நிறுத்துவது இன்றைய உடனடி கடமையாகும். தமிழராய் ஒன்றிணைவோம் என்று வெற்று சவடலால் என்ன பயன்? தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படும் போது ஆதிக்க சாதிவெறியை கண்டிக்காமல், சட்ட பூர்வமாக தண்டிக்காமல் இவர்கள் சொல்லும் அந்த ஒற்றுமை வரவே வராது.
மேலும், சாதி வெறி என்பது அந்தந்த சாதியில் உள்ள ஆதிக்க சக்திகளுக்கே பலனளிக்கும் என்பதை ஒவ்வொரு ஆதிக்க சாதியிலும் உள்ள உழைக்கும் மக்கள் உணர்வதுடன் அத்தகைய சாதி வெறியை வளர்க்கும் சக்திகளுக்கெதிராக பிற சாதி உழைக்கும் வர்க்கத்துடன் ஒன்றிணைந்து சொந்த சாதியின் ஆதிக்கவாதிகளை-வெறியர்களை தனிமைப்படுத்துவது அவசியம் என்பதை உணர வேண்டும். அப்போதுதான் பெரியார் பிறந்த மண் என்ற பெருமையை தக்க வைக்க முடியும்.
யுவராஜ் முதலான கொங்கு வேளாள சாதிவெறியர்களின் சலசலப்புக்கு “மக்கள் அதிகாரம்” அஞ்சாது. எல்லா சாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களை திரட்டி இந்த அதிக்கசாதி வெறியர்களை வீழ்த்தும் போராட்டத்தை தொடர்வோம். ஆதரியுங்கள்! பத்திரிகை நண்பர்கள் இச்செய்தினை பரவலாக கொண்டு செல்லுமாறும் கோருகிறோம்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்:
மக்கள் அதிகாரம், கரூர்.
தொலை பேசி- 9791301097.
———————————————
புலியூர் வெள்ளாளப்பட்டி தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் பத்திரிக்கை செய்தி
அருகதை இழந்தது அரசக்கட்டமைப்பு !
இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம் !!
மக்கள் அதிகாரம்
நெ.29, வ.ஊ.சி. நகர், முதல் தெரு, தாந்தோணிமலை, கரூர் – 5
——————————————————————————–
23.07.2016
இரா.சக்திவேல்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கரூர்
செல்: 97913 01097
கண்டன அறிக்கை
அன்பார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு வணக்கம்,
தமிழ்நாட்டில் தற்பொழுது சாதி கலவரங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தருமபுரி, நத்தம் காலனியில் நடைபெற்ற சாதி கலவரம் மாதிரி பல இடங்களில் ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், புலியூர், P.வெள்ளாளப்பட்டியில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் மீது அதே பகுதியைச் சேர்ந்த கொங்கு வெள்ளாளர் கவுண்டர் ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். தலித் இனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மண்டையை உடைத்ததோடு, ராமலிங்கம் என்பவரின் காலை உடைத்து எலும்பு முறிவு ஏற்படுத்தியதால் மேற்படி இருவரையும் கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து தற்பொழுது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள 10 கிராமத்தில் உள்ள அவர்கள் சாதியை சேர்ந்தவர்களை கூட்டம் சேர்த்துக்கொண்டு மீண்டும் தெருவில் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் இப்பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடி விசாரணை நடத்த வேண்டும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கி எவ்வித சாதி கலவரமும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த கண்டன அறிக்கையை தங்கள் பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
(சக்திவேல்) ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம், கரூர்
————————————————————–
கொங்கு வெள்ளாளர் கொலைவெறி தாக்குதலிருந்து எங்கள் பகுதி மக்களை காப்பாற்ற ஊர்மக்கள் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கொடுத்த கடிதம்
அனுப்புதல்
P.ராஜேந்திரன் மற்றும்
ஊர் பொதுமக்கள்,
P.வெள்ளாளப்பட்டி
அhpசன காலனி தெரு,
புலியூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம்.
பெறுநர்
உயர்திரு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்,
தாந்தோணிமலை,
கரூர்.
பொருள்: கொங்கு வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி கலவரம் செய்து மீண்டும் நடத்த உள்ள கொலைவெறி தாக்குதலிருந்து எங்கள் பகுதி மக்களை காப்பாற்ற வேண்டியும், உரிய பாதுபாதுகாப்பு வழங்க வேண்டுதல் – தொடர்பாக.
அம்மா,
நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். நாங்கள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த 18.07.2016 அன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர்
உருட்டுக்கட்டை, கம்பு, குச்சி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களுடன் எங்கள் தெருவிற்குள் நுழைந்து எங்கள் சாதியை இழிவாக பேசி திட்டி, எங்கள் வீடுகளுக்குள் புகுந்து அப்பாவி இளைஞர்கள் மீது திட்டமிட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், எங்கள் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மண்டையை உடைத்ததோடு, ராமலிங்கம் என்பவரின் காலை உடைத்து எலும்பு முறிவு ஏற்படுத்தியதால் மேற்படி இருவரையும் கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து தற்பொழுது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சம்மந்தமாக பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள 10 கிராமத்தில் உள்ள அவர்கள் சாதியை சேர்ந்தவர்களை கூட்டம் சேர்த்துக்கொண்டு மீண்டும் எங்கள் தெருவில் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் எங்கள் தெருவில் உள்ள மக்களுக்கும், மேற்படி சிகிச்சை பெற்றுவரும் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே சமூகம் அவர்கள், மேற்கண்ட கொங்கு வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்களிடமிருந்து எங்கள் பகுதி மக்களை காப்பாற்றுவதுடன், எங்கள் பகுதி மக்களுக்கும் மருத்துமனையில் சிகிச்சைபெற்று வரும் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோருக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு வழங்கி, கொங்கு வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்களால் நடக்கவிருக்கும் சாதி கலவரத்தை
தடுத்து நிறுத்த வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
(ராஜேந்திரன்) மற்றும்
ஊர் பொதுமக்கள்