Tuesday, April 22, 2025
முகப்புகலைகவிதைமேடை இருளில் அழுகிறாள் ஒரு சகுந்தலை !

மேடை இருளில் அழுகிறாள் ஒரு சகுந்தலை !

-

Dushyant_&_Shakuntalaதுர்வாசச் சாபம்
அரசன்கொடுத்த அடையாள மோதிரம்
சொர்க்கத்தில் காதலர் மீண்டும் கூடிய காட்சி
அத்தனையும் பொய்கள்
அத்தனையும் மோசடிகள்!

ஒர் அரசனின் காம பலிபீடத்தில்
வெட்டிக் கொல்லப்பட்டாள் ஒருபெண்
அவள் சோகக் கதைக்குக்
கவர்ச்சி தீட்டி
விதிபற்றிக் கதைபரப்பினான்
ஒரு கவியரசன்.

வீட்டில் பெண்ணைத் தவிர யாருமில்லை
வேட்டைக்கு வந்த மன்னன்
பெரிய விளையாட்டில் இறங்கினான்
நகரக் களியாட்டத்தில் களைத்துப்போன அவன்
காவலற்ற ஏழைக் குடிசைக்கு
சதைச் சுகத்துக்காக ஓடி வந்தான்.
அப்பாவிக் காட்டுப் பெண் அவனது ஆசை வார்த்தைகளின்
பொறியில் சிக்கினாள்.

சகுந்தலைக் காவியம் நடக்கிறது
இதோ இன்றைய மேடையில்
எங்கும் நிசப்தம்
உண்மையின் சாட்சியாய்ச் சூரியன்
கவிதை மூட்டத்தைக் கிழித்துப் புறப்பட்டான்
நாடகத்தின் உண்மைப் பொருளைக்
கண்ட மக்கள் திடுக்கிட்டனர் –
காட்டின் இளம்பெண்
காமுகனின் சேட்டைகளுக்குப் பலியானாள்
கற்பமானாள்.

அரசன் விட்டெறியும்
எச்சில் சோற்றில்
உடல் வளர்க்கும் கவியரசன்
காவியம் படைக்கிறான்
ஆனால்
அதோ
மேடை இருளில்
அலறி அழுகிறாள் ஒரு சகுந்தலை.

  • சரோஜ் தத்தா.

தமிழில்: வீ

_________________________

தோழர் சரோஜ் தத்தா நினைவாக

சரோஜ் தத்தா
சரோஜ் தத்தா

சரோஜ் தத்தா – ஓர் புரட்சியாளர், புரட்சிக் கவிஞர். அரசியல், கலை இரண்டிலும் புரட்சிகர உத்வேகத்தோடு செயல்பட்டவர். 1947-போலிச் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே அன்றைய கம்யூனிஸ்டு கட்சியில் கலைஞராகச் செயல்பட்டார். முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!’ என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”சில மோசமான அறிவு ஜீவிகளும் இருக்கிறார்கள். அவர்களது உறவு தகாதது என்று கம்யூனிஸ்டுகள் உடனே உணர வேண்டும். அந்த நேரம் வந்துவிட்டது” என்று கூறி மார்க்சிய இலக்கிய விவாதத்தினைக் கூர்மைப்படுத்தினார்.

கலைஞர் என்ற மமதை அவருக்குக் கிடையாது. காரணம் அவரது அரசியல் தெளிவு. புரட்சிக்கலை இலக்கியம் உழைக்கும் மக்களுக்காக ஊழியம் செய்யும் கருவி என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். ஒருபுறம் புரட்சிக் கலைஞராகச் செயல்பட்டபோதே, கூடவே ஓர் புரட்சியாளராக அவர் வளர்ந்தார். திரிபுவாத கம்யூனிஸ்டு கட்சியை உதறி எறிந்து 67-ல் நக்சல்பாரிப் பாதையை ஏற்றார். ஏற்றது மட்டுல்ல, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்டு – லெனினிஸ்டு) (சி.பி.ஐ – எம்.எல்) தோற்றத்துக்கு வித்திட்டவரில் அவரும் ஒருவர். வீரமரணமடையும் இறுதி வரை புரட்சிக்கட்சிக்குத் தலைமை கொடுத்தவர் அவர்.

நக்சல்பாரி உழவர் எழுச்சியை நசுக்கும் வகையறியாது திகைத்த போலி கம்யூனிஸ்டு மே. வங்க அரசு புரட்சியாளர்களைப் படுகொலை செய்தது; மே. வங்க கிராமப் புறங்களிலும், நகரங்களிலும் அரச பயங்கரத்தைக் கட்டவிழ்த்து வெறியாட்டம் ஆடியது. தோழர் சரோஜ் தத்தா 1971 ஆகஸ்டு (4 அல்லது 5 தேதிகளில்) போலீசால் கோழைத்தனமான முறையில் கொல்கத்தா மைதானம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். தோழர் சரோஜ்தத்தாவின் வீரநினைவுகள் என்றும் நிலைக்கட்டும்!

– புதிய கலாச்சாரம், ஆக, செப், அக், 1989.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க