Sunday, April 20, 2025
முகப்புசமூகம்சினிமாசினிமா ஒரு வரிச் செய்திகள் – 27/07/2016

சினிமா ஒரு வரிச் செய்திகள் – 27/07/2016

-

செய்தி: தனது நண்பரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமிக்கு தான் நடித்த கபாலி படத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தியேட்டரில் சிறப்பு காட்சியாக திரையிட்டுக் காட்டினார் ரஜினி. இவர்களுடன் தாணு, சோ குடும்பத்தார், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட சிலர் மட்டும் காட்சியில் பங்கேற்றனர். “படம் நல்லாயிருக்கு, நல்லா எடுத்திருக்கீங்க,” என்பதோடு ரஜினியை வேறு கோணத்தில் பார்த்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார் சோ.

நீதி: மிடாசின் முன்னாள் இயக்குநர், மிடாசின் சகோதரத்துவ நிறுவனமான ஜாசின் கபாலி பகற்கொள்ளையை பாராட்டுவது செஞ்சோற்றுக் கடனா? சோழியன் குடுமி சும்மா ஆடுமாவா?

_________________

செய்தி: கபாலி படம் உலகம் முழுவதும் வெளியாகி இந்திய சினிமாவில் அவருக்கு உரிய அந்தஸ்தை பறைசாற்றுகிறது. ஆகையால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி மராட்டிய சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மாரட்டிய சட்டசபையில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. அனில் கோடே வலியுறுத்தினார்.

நீதி: ரஜினி வீட்டை தேடி மோடி வரும்போது கபாலியைத் தேடி பா.ரத்னா வராமலா போய்விடும்?

____________________

செய்தி: “நான் 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். பணம் சம்பாதிக்க செலவு செய்ய பிடிக்கும். ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பிடிக்கும்” – தேசிய விருது பெற்ற இந்தி நடிகை கங்கனா ரனாவத்.

நீதி: சினிமாவில் அள்ளியதை விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, நெசவு போன்ற ஆடம்பர தொழில்களில் விரயமாக்காமல் தங்கம் – பங்குச் சந்தை – மனையென்று முதலீடு செய்வதற்கு நிச்சயம் ஒரு தியாக மனப்பான்மை வேண்டும்!

_______________

செய்தி: வெளியிடப்பட்ட முதல் மூன்று நாட்களில் கபாலி திரைப்படம் தமிழகத்தில் 47 கோடி ரூபாயை வசூல் செய்தது.

நீதி: படம் ரிலீசாகுதுன்னு டிக்கெட்டு, ஆன்லைன் புக்கிங்குன்னு லீகலா போயி ஐஞ்சோ பத்தோ சுருட்டறதுக்கு நாங்க நம்பியார் காலத்து தேவர் பிலிம்ஸ் இல்லடா! ஒரு ஃபோனிலேயே மேட்டர முடிச்சுட்டு, ஐ.டி கம்பெனிகளை அமுக்குன போயஸ் தோட்டத்து ஜாஸ் சினிமாடா! வசூலில் சாதித்துக் காட்டிய தமிழகத்தை ஆள்வது அம்மாடா!

________________

செய்தி: பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998–ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்ற போது அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2006–ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10–ந் தேதி தீர்ப்பு அளித்தது. ஜாமீனில் விடுதலையான நடிகர் சல்மான்கான் பிறகு ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டு நடிகர் சல்மான்கானை விடுதலை செய்வதாக ராஜஸ்தான் ஐகோர்ட்டு அறிவித்தது.

நீதி: மேட்டுக்குடியினருக்கு தண்டனை அபூர்வம் என்பது காரோட்டிக் கொன்ற வழக்கிலேயே சல்மானுக்கு தெரியுமென்பதால் இந்த அபூர்வ மானைக் கொன்ற வழக்கில் விடுதலையானது கானுக்கு அபூர்வமாக இருந்திருக்காது.

_____________

செய்தி: நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடியாக உயர்ந்துள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதி: நான்கு கோடி தெரிந்ததால் ஏற்படும் இந்த பரபரப்பு ரஜினிக்கு எத்தனை கோடி ஊதியம் என்பது தெரியாமலேயே ஏற்படுகிறது! பரபரப்பும் அதன் ஈர்ப்பும் வெறுக்கப்படுவதற்கு பதில் ரசிக்கப்படுவதுதான் அவர்களுக்கு களிப்பு! நமக்கு சலிப்பு!

____________

செய்தி: ‘‘ ‘பசி’ நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நாராயணனின் மனைவி வள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.”- ஜெயலலிதா.

நீதி: பசித்தவர்களின் அவலத்தை பேசிய ‘பசி’ படத்தில் நடித்தவருக்கும் வறுமை; படத்தை பார்த்தவர்களுக்கும் வறுமை. பசித்தவர்களை ஆள்பவர்கள் படங்களை விநியோகிக்கிறார்கள், தொலைக்காட்சியில் காட்டுவதற்கு வாங்குகிறார்கள். இடையில் பத்து இலட்சத்தையும் வழங்குகிறார்கள். இது நிவாரணமா, நோயா?

____________

செய்தி: விஜய் டி.வியிலிருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்தைத் தொடர்ந்து ஈரோடு மகேசும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

நீதி:  சின்னத்திரையில் கடி ஜோக்குகளால்நம்மைக் கடித்தாலும் பிரபலம்.பெரிய திரையில் வேலை வெட்டி இல்லாத மைனர்களாக நின்று நம்மை கொன்றாலும் புகழ்.

__________

செய்தி: மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள கபாலி படத்தின் இறுதி காட்சியில் கபாலி போலீசிடம் சரண்டைந்தார் என்ற வாசகம் படத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ளது.   இது குறித்து மலேசியா தணிக்கை வாரிய தலைவர் அப்துல் குற்றம் ஒரு போதும் பலன் தராது என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக வாசகத்தை சேர்க்குமாறு கூறியிருந்தார். அவரின் வேண்டுகோளை ஏற்ற படத்தின் தயாரிப்பாளர் மலேசியாவில் மட்டும் கபாலி படத்தில் இறுதி காட்சி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீதி: மலேசியாவில் சரணடைந்த கபாலி தமிழகத்தில் பகிரங்கமாக சுற்றுவது குற்றம் நிறைய பலன் தருவதால்தானே?