மும்பையின் தாதர் பகுதியில் அமைந்திருந்த அம்பேத்கர் பவன் ஜூன் 26-ம் தேதி இடித்துத் தகர்க்கப்பட்டது. அம்பேத்கர் பவன் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 19-ம் தேதி பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட போராட்டப் பேரணி ஒன்று நடந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாதாரண தலித் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி அம்பேத்கர் பவனை இடிக்க துரோகத்தனமாக துணை நின்ற மேட்டுக்குடி தலித்துகளுக்கு மக்கள் திரளின் ஆற்றலைக் குறித்து பாடம் புகட்டியுள்ளனர்.

பைகுல்லா – மும்பை சி.எஸ்.டி வழித்தடம் போராட்டத்திற்காக குவிந்த ஆயிரக்கணக்கான மக்களின் வெள்ளத்தால் திணறியது. கட்டிட இடிப்புக்கு துணை போன முன்னாள் மகாராஷ்டிர தலைமைச் செயலாளரும் தற்போதைய தலைமைத் தகவல் ஆணையருமான ரத்னாகர் கெய்க்வாட்டைக் கைது செய்யக் கோரி நடந்த இப்போராட்டத்தின் விளைவாக சுமார் 6 மணி நேரம் அந்தப்பகுதியே செயலிழந்து போனது.
கடந்த ஜூன் 25ம் தேதியன்று அதிகாலை அம்பேத்கர் பவனையும் அதையொட்டி அமைந்துள்ள அம்பேத்கர் அச்சகத்தையும் சூழ்ந்து கொண்ட கும்பல் ஒன்று தங்களை அம்பேத்கரியவாதிகளென்றும், தாம் ”மக்கள் முன்னேற்ற அறக்கட்டளையின்” சார்பாக செயல்படுவதாகவும் சொல்லிக் கொண்டது. வரும் போதே தம்மோடு ஜே.சி.பி எந்திரங்களையும் கொண்டு வந்திருந்த கும்பல், அதைக் கொண்டு அம்பேத்கர் பவனை தகர்த்ததாக பத்திரிகைகள் எழுதுகின்றன. எனினும், இந்தளவுக்குத் திமிர்த்தனமான ஒரு நடவடிக்கையை அரசின் ஒத்துழைப்பில்லாமல் எவராலும் செய்திருக்க முடியாது.
இடிக்கப்பட்ட கட்டிடங்கள் நேரடியாக அம்பேத்கருடன் தொடர்புடையவை. கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலத்தை 1940-களில் அம்பேத்கர் வாங்கினார். அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி நிலத்தை அதன் பொறுப்பில் விட்ட அம்பேத்கர், அதில் தான் நிறுவிய புத்த பூஷன் அச்சகத்திற்கு மாத வாடகையாக 50 ரூபாய் செலுத்தி வந்துள்ளார். பின்னர் 1990-ல், அதே நிலத்தில் அம்பேத்கர் பவனை நிர்மாணித்தது அறக்கட்டளை. 1970-ம் ஆண்டு வேறு சில சட்ட சிக்கலின் காரணமாக அச்சகம் மூடப்படும் வரை, அதற்கான மாத வாடகையை அம்பேத்கரும் அவரது காலத்திற்குப் பின் அவரது மகனும் செலுத்தி வந்துள்ளனர்.
இடிக்கப்பட்ட அம்பேத்கர் பவனுக்கு சில வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. அம்பேத்கர் நிறுவிய பத்திரிகைகளான ஜனதா மற்றும் பிரபுத்த பாரத் ஆகிய பத்திரிகைகள் அக்கட்டிடங்களில் இருந்து வெளியிடப்பட்டது என்பதைக் கடந்து, 1940-களில் அம்பேத்கர் வாழ்ந்த காலம் துவங்கி 1990-களில் அவரது இறப்புக்குப் பிந்தைய காலம் வரை புத்த பூஷன் அச்சகம் அம்பேத்கரிய இயக்கங்களின் குவிமையமாக இருந்தது.
அம்பேத்கர் பவன் இடிப்பை எதிர்த்து ஒருபக்கம் ஏழை தலித் மக்கள் நாடு முழுவதும் பெருந்திரளாக போராடி வரும் அதே வேளையில், தலித் அரசியல்வாதிகளும், அரசு உயர் பதவிகளில் உள்ள தலித்துகளும், தலித் தொழிலதிபர்களும் உள்ளடக்கிய மேட்டுக்குடி வர்க்க தலித்துகளோ அம்பேத்கர் பவனை இடிக்க துரோகத்தனமாக துணைநின்ற கெய்க்வாட்டை ஆதரிக்கின்றனர். அம்பேத்கர் பவனை இடித்துத் தள்ளிவிட்டு அதே இடத்தில் ஐந்தடுக்கு கார் பார்க்கிங் வசதியுடன் 17 அடுக்கு வணிக வளாகம் ஒன்றைக் கட்டுவதும், அதில் விபாசனா தியான மையம் ஒன்றை அமைப்பதும் கெயிக்வாட்டின் திட்டம்.
இடிக்கப்பட்ட அம்பேத்கர் பவன் தலித்திய மற்றும் முற்போக்கு சக்திகளின் இணைப்பு மையமாகவும், மக்கள் இயல்பாக சென்றுவரும் ஒரு இடமாகவும் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் எளிமையான தோற்றத்தை வெறுத்த மேட்டுக்குடி தலித்துகளோ, அதனிடத்தில் தங்கள் கார்களை வசதியாக நிறுத்தி சக மேட்டுக்குடி தலித்துகளோடும் இன்னபிற “நாகரீக” மனிதர்களோடும் கூடிக் களிக்கும் கேளிக்கை விடுதி ஒன்றை நிர்மாணிக்க விரும்புகின்றனர். இவர்களுக்கு அம்பேத்கர் என்பது சூட்சுமமான குறியீடு – மேன்மையான விசயங்களைச் சுமந்து கொண்டு பெருமிதத்தை வாரி வழங்கும் குறியீடு.
இவர்கள் வேறு எந்த அம்பேத்கரையும் நினைத்துப் பார்க்கக் கூட விரும்புவதில்லை. குறிப்பாக, படித்தவர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்ற அம்பேத்கரையோ, நகரங்களில் வாழும் படித்த தலித்துகளில் ஒரு பிரிவினரே தனது போராட்டங்களால் நன்மை அடைந்துள்ளனர் என்பதை உணர்ந்து தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கண்ணீர் வடித்த அம்பேத்கரையோ, தன்னால் கிராமப்புறங்களில் வாழும் தலித்துகளுக்கு ஏதும் செய்ய முடியாமல் போனதே என்று வருந்திய அம்பேத்கரையோ அவர்கள் மறக்கவே விரும்புகின்றனர்.
அம்பேத்கரியவாதிகளிடம் உண்டான வர்க்கப் பிளவு அம்பேத்கரின் மரணத்தைத் தொடர்ந்து உடனடியாகவே வெளிப்பட்டு அப்போதே குடியரசுக் கட்சியிலும் எதிரொலித்தது. தலித் அரசியலை நிறுவனமயமாக்கும் முயற்சிக்கும் அதையே மக்கள் திரள் போராட்டங்களாக முன்னெடுக்க வேண்டும் என முன்வைத்தவர்களுக்கும் இடையேயான முரண்பாட்டில் கட்சியே பிளவுபட்டது. நிறுவனமயமாக்கலை முன்வைத்தவர்கள் அது தான் அம்பேத்கரிய பாதை என்றனர் – மக்கள் திரள் போராட்டங்களோ கம்யூனிச பாதை எனக் கருதப்பட்டது. நிறுவனமயமாக்கலைத் தூக்கிப் பிடித்த பி.சி.காம்ப்ளேவுக்கும் மக்கள் திரள் போராட்டங்களை முன்வைத்த பி.டி.கெய்க்வாடுக்கும் இடையே நடந்த மோதல்கள் இந்த முரண்பாட்டை பிரதிபலித்தது.
இடஒதுக்கீட்டின் பலன்கள் தலித் சமூகத்தின் ஒரு சிறு பிரிவினரிடம் மட்டுமே குவிந்து கொண்டே வந்த போது குடியரசுக் கட்சியில் தோன்றிய முரண்பாடு மேலும் மேலும் விரிவாகிக் கொண்டே சென்றது. தலித் இயக்கங்களின் துவக்கத்தில் நகர்புற தலித்துகளில் வளமானவர்களைக் கொண்ட ஒரு பிரிவினர் மிகச் சொற்பமானவர்களாக இருந்தனர். இந்தப் பிரிவினர் தொடர்ந்து வந்த வருடங்களில் எண்ணிக்கையில் கூடிய போது, வசதியான தலித்துகளுக்கும் வறிய தலித்துகளுக்குமான இடைவெளி அதிகரித்தது. என்றாலும் பொது சமூகத்தில் இன்னமும் தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்த தலித்துகளின் உயர் வர்க்கப் பிரிவினர், தமது சாதி அடையாளத்தை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொண்டனர்.
பரந்துபட்ட தலித் சமூகத்திலிருந்து தங்களை துண்டித்துக் கொண்ட உயர் வர்க்க தலித்துகள், அந்த உலகில் தாங்களும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக தலித் சமூகத்தின் நலன்களுக்கே கூட விரோதமாக செயல்பட முனைந்தனர். ஆனால், பரந்துபட்ட தலித் சமூகமோ இப்படிப் பட்டவர்களையே தமது லட்சிய புருஷர்களாக வைத்துப் பார்க்கின்றனர். உயர் வர்க்க தலித்துகள் பிரபலமாக இருப்பதாலும், அவர்களது கோரிக்கைகள் கேட்கப்படுவதாலும் அவர்களது வர்க்க நலனே ஒட்டுமொத்த தலித்துகளின் நலன்களாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் அவர்களோ பரந்துபட்ட தலித்துகளின் துன்ப துயரங்கள் குறித்து ஏதுமறியாதவர்களாகவே இருக்கின்றனர்.
மேட்டுக்குடி தலித்துகள் சாதாரண தலித்துகளின் மேல் ஏவப்படும் வன்முறைகள் குறித்து எப்போதும் பேசுவதில்லை. பரந்துபட்ட தலித்துகள் தொடர்ந்து ஓட்டாண்டிகளாக்கப்பட்டு வருவதை உணர்வதுமில்லை அவர்களின் துன்பத்தில் பங்கெடுப்பதுமில்லை. அவர்கள் தனிநபர்வாத விபாசனா தியானத்தை முன்னிறுத்துவார்களே தவிற அம்பேத்கர் பௌத்தத்தின் மூலம் போதித்த முற்போக்கான சமூக நடவடிக்கைகள் குறித்து பேசுவதில்லை. புரட்சிகர உள்ளடக்கங்கள் அனைத்தும் உருவியெறியப்பட்டு விட்ட ஒரு அம்பேத்கரையே அவர்கள் முன்னிலைப்படுத்திக் காட்டுகிறார்கள்.
(ஜூலை 19ம் தேதி நடந்த ஆர்பாட்ட பேரணி இந்த வர்க்க விழிப்புணர்வை சாதாரண தலித்துகளிடையே விதைத்திருக்கும் என்று நம்புவோமாக. – இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஆனந்த் டெல்டும்ப்டே எழுதி வெளியான “The Battle within” என்ற கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.)
மூல கட்டுரையின் இணைப்பு – The Battle Within
தமிழாக்கம்: தமிழரசன்
தொடர்புடைய செய்திகள்: