Tuesday, April 22, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்புதுவை பல்கலை : நூல் வெளியீட்டுக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !

புதுவை பல்கலை : நூல் வெளியீட்டுக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !

-

வறுமையில் இருந்து விடுதலை, மனுவாதிகளிடமிருந்து விடுதலை, பிராமணியத்திடம் இருந்து விடுதலை” என்னும் பாசிசத்திற்கு எதிராக டெல்லி பல்கலைகழகத்தில் மாணவர்களின் ஒரே குரலாக ஓங்கி ஒலித்த முழக்கத்தில் இருந்து இந்நூல் தொடங்குகிறது.

இந்நூலிற்கு “WIDERSTAND” – வைடர்ஸ்டாண்ட் (விரிந்த பார்வை) என்று பெயரிட்டுள்ளனர். “வைடர்ஸ்டாண்ட்” என்னும் இந்நூல் ஜெர்மனியின், பெர்லினில் 1926-ம் ஆண்டு வெளியானது. ஜெர்மனில் ஹிட்லர் நடத்திய கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக எர்னஸ்ட் நீகிஷ் (“Ernst Nieskisch”) என்பவர் எழுதியுள்ளார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தற்பொழுது இந்தியாவெங்கும் இந்து மதவெறியர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள், தலித்கள் மீதான அடக்குமுறை வெறியாட்டங்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் படுகொலைகள் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாசிச கொடுங்கோன்மைக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் “வைடர் ஸ்டாண்ட்” என்று தங்கள் நூலுக்கும் பெயரிட்டுள்ளனர் புதுவை பல்கலைக்கழக மாணவர் பேரவையை (PUSC) சார்ந்த மாணவர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்நூல் வெளியீட்டு விழா கடந்த 28-07-2016 வியாழன் அன்று புதுவை பல்கலையில் நடந்துள்ளது. இவ்விழாவிற்கு புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தனர் மாணவர்கள். குறிப்பிட்ட தேதியில் வரமுடியாததால் ஹைதராபாத் பல்கலைகழக பேராசிரியர் பிரகாஷ் பாபு நூலை வெளியிட்டுள்ளார். புதுவை பல்கலைகழகத்தின் துணை வேந்தர் அனீஷா பஷீர்கான் உடனிருந்துள்ளார்.

மொத்தமாக ஏழாயிரம் பிரதிகள் அச்சிட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூவாயிரம் பிரதிகள் மாணவர்களிடம் விநியோகிக்கப்பட்டது. மேலும் நான்காயிரம் பிரதிகள் புதுவை பல்கலைகழக நிர்வாகத்தால் சிறை வைக்கப்பட்டுள்ளது.

சிறை வைக்கப்பட்டுள்ள நூல்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்நூலை வெளியிடக்கூடாது என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 01-08-2016 திங்கட்கிழமை நேற்று பல்கலைகழகத்தின் முன்பு பா.ஜ.கவை சார்ந்த காவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்காக சாலைகளின் நடுவே உள்ள “குரோட்டன்ஸ்” செடிகளுக்கு நடுவே தங்கள் கொடிகளை நட்டு அதன் அழகையே அசிங்கப்படுத்தி வைத்திருந்தனர் காவிகள். அந்த அசிங்கத்தை காண சகிக்காமல் வேகமாக சென்றுகொண்டிருந்தனர் மக்கள்.

ஏ.பி.வி.பி காலிகளின் நச்சுப் பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பல்கலைகழகத்தில் மைனாரிட்டியாக உள்ள காவி வெறியேறிய “குட்டி குரங்குகளான” ஏ.பி.வி.பி-யும் இந்நூலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். குரங்கு கையில் பூமாலை கிடைத்த கதையாக, கையில் ஸ்கெட்ச் பென்னும், பேப்பரும் உள்ளதால் “ Don’t Impose Communist Ideology Through Studend’s council Magazine” என்று கிறுக்கி கேண்டினில் ஒட்டியுள்ளனர். இந்நூல் வெளியீட்டுக்கு முன்னரே, இவை பிராமணியத்துக்கு எதிராக உள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பேராசிரியை ராஜேஸ்வரி சேஷாத்ரி.

முடக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகப் பிரதிகள்
முடக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகப் பிரதிகள்

தற்பொழுது இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கியிருக்கும் துணைவேந்தர் அனீஷா பஷீர்கான் மீதும், நூலின் முதன்மை எடிட்டர் பேராசிரியர் மூர்த்தி மீதும் வழக்கு தொடரப்போவதாகவும் மிரட்டியுள்ளனர் பா.ஜ.க காலிகள்.

நெருக்கடிக்குள்ளான நிர்வாகம் மாணவர் பேரவை தலைவர் இலங்கேஸ்வரன், மற்றும் அஞ்சலி கங்காவிடம் “இந்நூல் வெளியீட்டிற்கும், நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறி எழுதி தருமாறு மிரட்டியுள்ளது நிர்வாகம். அவ்வாறு எழுதி தரமுடியாது என்று கூறி மறுத்துள்ளனர்.

மேற்கண்ட சம்பவங்கள் குறித்து அப்பல்கலையில் இயங்கும் அம்பேத்கர் மாணவர் கழகத்தின் தலைவரும், “வைடர் ஸ்டாண்ட்” இதழ் குழு ( Magazine Committee) உறுப்பினருமான சிவசந்திரனிடம் கேட்டபோது, “எங்கள் கருத்துரிமையை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். இந்திய இறையாண்மைக்கு எதிராக நாங்கள் எதுவும் எழுதவில்லை. தொடர்ந்து அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். தற்பொழுது பா.ஜ.க-ஏ.பி.வி.பி யின் செயல்பாடு தான் கருத்துரிமைக்கு எதிராக உள்ளது. இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக போராடுவோம்” என்றார்.

நிறுவனக் கொலைக்கு பலியான மாணவர்களுக்கு அஞ்சலி
நிறுவனக் கொலைக்கு பலியான மாணவர்களுக்கு அஞ்சலி

மேலும், பல்கலைகழக மாணவர் பேரவை தலைவர் லங்கேஸ்வரனிடம் கேட்டபோது, ” ஏ.எஸ்.சி (ASC) மற்றும் எஸ்.எஃப்.ஐ (SFI)-ன் ஆதரவோடு தான் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். புதுவை பல்கலையில் ஒரு தலித் மாணவர்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. இதனை ஏ.பி.வி.பி மாணவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. புதுவையில் உள்ள எஸ்.எஃப்.ஐ-ன் ஆதிக்க சாதி மாணவர்களும் விரும்பவில்லை. இந்த இதழை “ தலித் ஆதரவு” இதழ் என்று தான் கூறி வருகின்றனர். இந்த பொய் பிரச்சாரங்கள் எல்லாம் வரும் செப்டம்பர் மாதம் மாணவர் பேரவை தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதால் உயர்சாதியை சேர்ந்த மாணவர்களை சந்தித்து இந்நூலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர், ஏ.பி.வி.பி அமைப்பின் மாணவர்கள். தங்களுக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அவர்களை நசக்குவது தான் இவர்களின் அன்றாட நடவடிக்கையாக உள்ளது. இதன் வெளிப்பாடு தான் 01-08-2016 அன்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டமும், பேராசிரியர்கள் மீதான அச்சுறுத்தலும்” என்று கூறினார்.

ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா, அஜித்குமார், எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் ஆகியோரின் மரணங்கள் “நிர்வாகக் கொலை” (Institutional Murders) என்பதை இந்நூல் அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், மராட்டியத்தில் இந்து மதவெறியர்களுக்கு எதிராக போராடிய “ மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி” என்ற அமைப்பை நடத்திய நரேந்திர தபோல்கர், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டியத்தில் இந்து மத வெறியர்களுக்கு எதிராக போராடியவருமான கோவிந்த் பன்சாரே, மற்றும் கர்நாடகா மாநிலத்தின் முற்போக்கு எழுத்தாளரும், மொழி ஆய்வாளருமான கல்பர்க்கி போன்றவர்கள் இந்து மதவெறியர்களால் அநியாயமாக கொல்லப்பட்டதையும் அம்பலப்படுத்தி எழுதியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்கும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கைப்பற்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-ன் சதித்திட்டத்தையும், காட்ஸ் ஒப்பந்தத்தையும் தோலுரித்து எழுதியுள்ளனர். அதனால்தான் வால் வெட்டப்பட்ட குரங்காக துடித்து வருகின்றனர் இந்து மதவெறி பார்ப்பன கும்பல்.

ஒருபுறம் தலித் வீட்டில் உணவருந்துவோம் என்று கூறிக்கொண்டு, தலித் மக்களுக்கு எதிரான வன்முறையை நடத்துவதும், திருவள்ளுவர் சிலையை தலித் என்று குப்பையில் வீசுவதும், பி.எஸ்.பி-ன் தலைவர் மாயாவதி தலித் தலைவர் என்பதால் அவரை விலைமாதாக இழிவுபடுத்துவதுமாய் இந்துமதவெறியர்களின் பார்ப்பனியத் திமிர் அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் சுட்டு கொன்றுவிட்டு, மகாஸ்வேதா தேவி போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மரணங்களுக்கு இரங்கல் தெரிவிப்பது என்று நாடகமாடி வருகிறது மோடி கும்பல்.

இவர்களின் நோக்கம், இந்தியாவை மற்றுமொரு ஹிட்லரின் தேசமாக மாற்ற வேண்டும் என்று வெறியோடு அலைந்து திரிந்து கொண்டு வருகிறார்கள். “ இந்துத்துவம்” என்ற கொடிய நோயை இந்த சமூகத்தின் மீது தீவிரமாக பரப்பி வருகிறார்கள். இந்நோயை அழித்தொழிக்கப்படா விட்டால், சமூகத்தின் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் காவி வெறியேறிய குரங்குகளாக, மிருகங்களாக மாற்றப்படுவோம்..இல்லையெனில் கொல்லப்படுவோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

– வினவு செய்தியாளர்கள்