“சமைக்கறது ஒரு கலைன்னா பந்தி பரிமார்றது – அதைவிடப் பெரிய கலை” என்ற நண்பரிடம் ”ஆமாம் இது அதைவிடப் பெரிய அரசியல்” என்றவுடன் ஆச்சரியமாகிப் போனார். ”என்னங்க சோறு திங்கறதுல கூடவா அரசியல்” என்று நான் காட்டிய புத்தகத்தை வாங்கிப் போய்ப் படித்துவிட்டு வந்த நண்பர் அதிர்ச்சியுடன் “என்னங்க இது மகா அயோக்கியத்தனமா இருக்கு உக்காந்து சோறு திங்கறதுல கூட இவ்வளவு உள் விளக்கம் பாத்துருக்கானுவ” என்று அசந்து போனார்.

இந்த மகா கேவலத்தைத்தான் பண்பாடு, பழக்க வழக்கம் என்று தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறது தமிழகம் என்பதை வேத காலம் தொடங்கி இன்றைய விஞ்ஞான யுகம் வரை பந்தியில் உட்கார்ந்து யார் யாருடன் சாப்பிடலாம், எந்தச் சாதி, தொழில் புரிவோருடன் சமமாக உட்கார்ந்து சாப்பிடக்கூடாது என்பதை ஒரு சட்டதிட்டமாகக் கடைப்பிடித்து வரும் தமிழகத்து இந்து மதப் பண்பாட்டுக் கேவலத்தை தொகுப்பான நடைமுறை ஆதாரங்களுடன் படம் பிடித்துக் காட்டுகிறது “சமபந்தி அரசியல்” என்ற சிறிய நூல்.
ஆ. சிவசுப்பிரமணியன் என்பவர் எழுதியிருக்கும் இச்சிறுநூல் தமிழக சமுதாயத்தில் உணவு விசயத்தில் சமைப்பது, அதை பரிமாறுவது, முக்கியமாக உடன் இருந்து உண்பது போன்றவற்றிலெல்லாம் ஆதிக்கச் சாதிகளின் அடக்குமுறை ‘ரச’வாதம் புரிவதையும், பந்தி எனும் வரிசையிலிருந்து உழைக்கும் மக்களை, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைக்கும் சமூகக் கொடுமையை காலவாரியாகப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
இந்த சமையல் கட்டுப் பெருச்சாளிகளுக்கு எதிராக “சமபந்தி” என்பது ஒரு எதிர்ப்பாக உருவாகி எப்படி இன்றைய அரசியல் நிலைமைகளில் கேலிக்கூத்தாகச் சீரழிந்துள்ளது என்ற வரம்பிற்குள் நின்று விவரங்களை நம் பார்வைக்கு வைப்பதே இந்நூலின் சாரம். தனிக்குவளை, தனிக்கிணறு, தனிச்சுடுகாடு என்று தாழ்த்தப்பட்ட் மக்களை இழிவுபடுத்தும் ஆதிக்க சாதிப் பண்பாட்டுக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுபவர்களைப் பார்த்து நூற்றாண்டுத் திமிருடன், “இப்ப என்னாங் குற?” என்று தனது ’மெனு தர்மங்களை’ எடுத்துக் காட்டுகிறது மனுதர்மம். பந்தியில் விலக்கப்பட வேண்டியவர்கள் என்ற தலைப்பில் மனுதர்மம் பட்டியலிடுகிறது இப்படி (நூல் பக். 4):
“சாதி விட்டுத் தாழ்ந்த குலத்தில் பெண் எடுத்தவன், விதவையை மணந்து பிறந்த பிள்ளை (3:155)”
“திருடன், ஐம்பெருங் குற்றங்களியற்றியவன், பேடி நாஸ்திகன் (3:150)”
‘யானை, குதிரை, ஒட்டகம், காளை இவற்றைப் பழக்குவோன், கூலிக்குப் பிணம் தூக்கி (3:166) இப்படி நீள்கிறது பட்டியல்.
”சோறு தின்ன உட்கார்ந்தாலும் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று நமது சோற்றிலும் கை வைக்கும் இந்த ‘இந்து தர்மத்தை’ சோறு தின்னும் யாரும் விட்டு வைக்க முடியுமா?

வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பதை வரித்துக் கொள்ளத் துடிக்கும் ’சூத்திர கனவான்களை’ச் சோற்றால் அடிக்கிறான் வசிட்டன், இப்படி ”சூத்திரன் வழங்கிய உணவு வயிற்றிலிருக்கும் நிலையில் இறந்து போனவன் (பிராமணன்) மறுபிறப்பில் பன்றியாகப் பிறப்பான் அல்லது சூத்திரக் குடும்பத்தில் பிறப்பான்” (நூல் பக்:4). அப்படியானால் இப்போது தெருவில் திரியும் பன்றிகள் எல்லாம் பார்ப்பனர்களா என்ற சந்தேகத்தை யாரிடம் கேட்டுத் தீர்ப்பது? இந்து மதத்தில் இருந்தால் தானே இந்த இழிவு என்று கிறித்துவத்துக்கு மாறினாலும், அரிசியிலிருந்து அப்பத்திற்கு மாறினாலும் ஆதிக்கச்சாதியின் நற்கருணை கிடைக்காது என்பதற்கு ஒரு சம்பவம்:
“திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார் உபதேசி ஒருவரும், வெள்ளாள உபதேசி ஒருவரும் ஒன்றாக மறைப் பணியாற்றச் சென்றனர். வெள்ளாள உபதேசியாரின் வீட்டிற்கு இருவரும் சென்றவுடன் நாடார் உபதேசிக்கு மாட்டுத் தொழுவத்தில் உணவு பரிமாறப்பட்டது.” (நூல் பக்17)
”சென்னை வேப்பேரி பகுதியிலுள்ள தேவாலயத்தில் ஆதிதிராவிட கிறித்தவர்க ளுக்கும், உயர்சாதிக் கிறித்தவர்களுக்கும் தனித்தனி நாட்களில் ’திவ்ய நற்கருணை’ வழங்கப்பட்டது” (நூல் பக். 16). சாதியப் படிநிலை பாரபட்சம் விசயத்தில் இந்துத்துவ மடப்பள்ளிகளோடு கிறித்துவ திருப்பலிகளும் “ஒன்றே தீண்டாமை வேறே மதம்” என்று ஒன்று கலந்த வரலாறு மதம் மாறுவதால் பிரச்சினை தீராது என்பதை ஆதாரங்களுடன் சொல்கிறது.
இதற்கு மாறாக, கேரளத்தில் நாராயண குரு, தமிழ் நாட்டில் இராமலிங்க அடிகள் போன்றோர் சமபந்தியை வலியுறுத்தி நடத்திக் காட்டியதையும், சமயங்கள் என்ற முறையில் சீக்கியமும், இசுலாமும் மத விழாக்களில் இதை அமுல்படுத்தியதையும் ஆசிரியர் அறியத் தருகிறார்.
விடுதலை இயக்க காலகட்டத்தில் காந்தி தீண்டப்படாத மக்களை உள் இழுக்க ‘ஹரிஜன சேவை’ ’சமபந்தி போஜனம்’ என்று வாய்ச்சவடால் அடித்தாலும் இதனால் காங்கிரசின் ஆதிக்க சாதியவாதிகளின் கடும் கண்டனம் எழவே, காந்தியின் சுயநலம் வெளிப்பட்டது. “ஒருவர் மற்றவருடன் சேர்ந்து சாப்பிட மறுப்பதை நான் ஒரு பாவமாகக் கருதவில்லை, அதுபோல சமபந்தி போஜனத்தை ஆதரிப்பதையும் பாவமாகக் கருதவில்லை” (நூல் பக் 21) என்று தடியைத் திருப்பிப் போட்டார்.

காங்கிரசுடன் இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வந்த ஈ.வே.ரா. பெரியார் தலைமையில் திரண்ட சுயமரியாதை இயக்கத்தார் சமபந்தி போராட்டங்களில் அக்கறை காட்டியதையும், குறிப்பாக அன்றைய பொதுவுடமைக் கட்சி தஞ்சை மாவட்டத்தில் திட்ட மிட்ட ரீதியில் கூலி உயர்வுப் போராட்டத்துடன் பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராக சமபந்தி உள்ளிட்ட பலவகைப் போராட்டத்துடன் கட்சி உறுப்பினர்கள் உணவு உண்ணும் விசயத்தில் தீண்டாமைக்கெதிராகத் தமது வாழ்க்கையிலேயே மேற்கொண்ட நடைமுறைகளையும் சுருக்கமாக அறியத் தருகிறது நூல்.
தென் மாவட்டச் சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான கலவரத்திற்குப் பிறகு கருணாநிதி அரசு சமத்துவபுரம் கட்டுவது போல அன்று மீனாட்சிபுரம் கலவரத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர். சமபந்தி போஜனம் என்பதைச் சடங்குத்தனமாக நடத்தியதையும், அதையும் கூட அஹோபில மடாதிபதி பூரீமத் அழகியசிங்கர் ”கோயில்களில் சமபந்தி போஜனம் சரியல்ல, இதனால் கோயில் களங்கப்படுத்தப்படுகிறது” (நூல்: பக் 28) என்று விமரிசித்த செய்தியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அன்றைய காஞ்சி மட ஜகத்குரு ”பேசாமல் அனைவரும் ஸ்வயம்பாகம் (தானாக சமைத்துச் சாப்பிடுவது) மேற்கொள்வது சரி” என்று பல்லிளித்தபடியே தனது பார்ப்பனச் சாதி வெறியைக் கக்கியதையும் இந்நூல் நம் நெஞ்சில் நெருப்பாய் விதைக்கிறது.
அரசு சமபந்தி போஜன சடங்கு நடத்தினாலும், அருள் உள்ளம் கொண்டோர் மேற்கொண்டாலும் ஆதிக்கச் சாதிகளின் ஆணிவேரான பொருளாதார, அரசியல் அதிகாரத்தைப் பறித்தெடுக்காமல் நிலைமை மாறாது என்பதேயே வரலாற்று விவரங்கள் உணர்த்துகின்றன. “ஒரே பண்பாடு ஒரே நாடு” என்று வெறிக் கூச்சலிடும் இந்து மத வெறியர்களைப் பார்த்து ”சாப்பிடுவதிலும் கூட சாதி பார்க்கும் போது எங்கடா ஒரே பண்பாடு?” என்று கேட்க வைக்கும் சிந்தனையைத் தூண்டுவதே இச்சிறிய நூலின் சிறப்பு.
– துரை. சண்முகம்
புதிய கலச்சாரம், செப்டம்பர் 2000
நூல் விலை: ரூ. 5.00
வெளியிட்டோர்: இளைஞர் வெளியீடு, தூத்துக்குடி – 8
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியாசாகிபு தெரு,
எல்லிசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி : 044 – 28412367