Wednesday, April 23, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஓசூர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு : மக்கள் அதிகாரம் நேரடி நடவடிக்கை

ஓசூர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு : மக்கள் அதிகாரம் நேரடி நடவடிக்கை

-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், பட்டவாரப்பள்ளி ஊராட்சி, மல்லசந்திரம் கிராமத்தில் பொதுப்பாதையை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார் அவ்வூரில் வசிக்கும் முரளி என்பவர். ஆனால், தான் அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று அடாவடித்தனம் செய்து வந்தார். இந்நிலையில், 26-11-2013-ம் தேதி நிலத்தை அளக்க வந்த நில அளவையாளரை அளக்க விடாமல் தடுத்து அராஜகம் செய்தார். இதனால், நிலத்தை அளப்பதும், ஆக்கிரமிப்பை உறுதி செய்வதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

water-from-encroached-waterway-overflowing-into-road
ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஓடை நீர் சாலையை நிரப்பிக்கொண்டு செல்கிறது.

இதனை அடுத்து 28-11-2013–ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் அதனைத் தொடர்ந்து 23-02-2014, 08-07-2014 ஆகிய தேதிகளில் கடிதங்கள் கொடுத்தும் அதிகாரிகள் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. மீண்டும் 06-03-2015-ம் தேதி மல்லசந்திரம் அருகில் உள்ள ஒட்டப்பள்ளியில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றபோது, தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதன் மீது விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டதன் பேரில், ஆர்.ஐ., வி.ஏ.ஓ. ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். ஆனால், உண்மையான ஆவணங்களைப் பார்க்காமல், பொதுப்பாதை இல்லை என்று கூறிவிட்டனர்.

ஆனால், சர்வே எண் 61C, 1–B ஆகிய இரு எண்களில் 8 அடி வண்டி பாதை, 100 மீட்டர் நீyத்திற்கு உள்ளது. அதன் அருகில் நீரோடை 100 மீட்டர் நீளத்திற்கு உள்ளது. இவற்றை எல்லாம் ஆக்கிரமித்து, சமன் செய்து அராஜகமான முறையில் முரளி முள்வேலியிட்டுள்ளார். மேற்கண்ட அனைத்து ஆதாரங்களும் FMB ஆவணத்திலும் உள்ளன. ஆனால், அந்த அதிகாரிகளோ இவற்றை எல்லாம் பார்க்காமல் முரளியிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்பட்டனர்.

public-path-encroachment-posterமீண்டும் மாவட்ட ஆட்சியர், சாராட்சியர் ஆகியோருக்கு கொடுத்த மனுக்களை முறையாக விசாரணை செய்ய ஏற்றனர். இந்த விசாரணையினைத் தொடர்ந்து கடந்த 28-09-2015 அன்று தாசில்தார் நில ஆக்கிரமிப்பு நடந்துள்ளதை உறுதி செய்தார். மேலும், இதனை ஆக்கிரமித்து முரளி என்பவர் செங்கல் சூளை அமைத்துள்ளதையும் உறுதி செய்தார். மேற்படி நில ஆக்கிரமிப்பாளர் முரளியை இந்திய குற்றவியல்நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 133–ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சாராட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

தாசில்தாரின் பரிந்துரையின் அடிப்படையில் சாராட்சியர் 08-02-2016 அன்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133–ன் படி பொது ஒழுங்கீனத்தை (Public Nuisances) அகற்ற உத்தரவிட்டார். இந்த பொது ஒழுங்கீனத்தை அகற்ற வேண்டிய வி.ஏ.ஓ., ஆர்.ஐ., பகலூர் போலீசு ஆகியோர், சாராட்சியரின் உத்தரவை மயிரளவுக்குக்கூட மதிக்காமல், முரளியை அழைத்துப் பேசி இலஞ்சம் வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

encroached-public-pathway
ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவழி

ஆக மொத்தத்தில், அதிகாரிகளிடம் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றி வந்தும் பல ஆயிரங்களை செலவழித்தும் மீண்டும் பிரச்சனை ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டது. நில ஆக்கிரமிப்பாளன் முரளியோ திமிராக சுற்றித் திரிந்தார். இது ஏதோ ஒரு ஊரில் நடக்கும் பிரச்சனை அல்ல, ஒருசில அதிகாரிகள் செய்யும் தவறுகளும் அல்ல, எல்லா ஊர்களிலும் எல்லா இடங்களிலும் நில ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. போலீசும் அதிகாரிகளும் சட்டத்தை அமுல்படுத்தாமல் விட்ட நிலையில் இந்த அரசிடம் மனு போடுவது வீண் வேலை என்பதை மக்கள் உணர்ந்தனர். மக்கள் அதிகாரம் மூலம் இப்பிரச்சனைக்கு முறையிட்டனர்.

ஆக்கிரமிப்பை விடுத்து, வேறொரு இடத்தில் முள்வேலியை அதிகாரிகள் அகற்றியிருக்கின்றனர்

இதனால், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலம் மக்களைத் திரட்டி பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டும், மக்களை அணிதிரட்டும் பொருட்டும் சுவரொட்டி பிரசுரங்கள் கொண்டு மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இதனை ஒட்டி ஜூலை 29, தேதி காலை 11 மணிக்கு அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், போலீசும் அதிகாரிகளும் முன்னின்று செயல்பட்ட விவசாயி ராமசாமியை அழைத்தது. இனிமேல், “பேசுவதற்கு எதுவும் இல்லை” என்பதை அவர் தெளிவாக அறிவித்த பின்னர், “முரளி சில ஆவணங்களைக் கொடுத்துள்ளார், இவற்றை பரிசீலிக்கிறோம். 28-ம் தேதி பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து, “இயன்றால் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொடுங்கள், இல்லையேல் ஒன்றும் பிரச்சனை இல்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

RI, VAO அறிவிப்பு
RI, VAO அறிவிப்பு

28-ம் தேதிகாலை பாகலூர் இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ., ஆர்.ஐ. ஆகியோர் நேரில் வந்தனர். வந்தவர்கள், முரளி கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்ததாகவும், ஆக்கிரமிப்பு அகற்றுவதாகவும் சொல்லி, பொதுவழிப்பாதையை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் இருக்கும் முள்வேலியை அகற்றிவிட்டு, “ஆக்கிரமிப்பு அகற்றிவிட்டோம்” என்று கூறி சென்றுவிட்டனர். இதனை ஏற்க முடியாது, திட்டமிட்ட படி மறு நாள் காலை ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என மீண்டும் மக்கள் அதிகாரம் உறுதியாக தெரிவித்தது.

29-ம் தேதி காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும், மேற்படி அதிகாரிகள் காலை 8 மணிக்கே வந்தனர். FMB வரைப்படத்தில் உள்ளது போல அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல், அவர்கள் ஏற்கனவே அகற்றியிருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி இருக்கும் முள்வேலியை அகற்றிவிட்டு சென்றுவிட்டனர். இருப்பினும், தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், அடுத்தக் கட்டமாக “திட்டமிட்டபடி 11 மணிக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்படும், கைது செய்ய முயற்சித்தால் சாலைமறியல் செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டது.

மீண்டும் அதிகாரிகள் திரும்பி வந்தனர். FMB வரைப்படத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றித் தந்தனர். இந்தப் பிரச்சனையில் இரண்டு ஊர் வி.ஏ.ஒ.கள், ஆர்.ஐ., எஸ்.ஐ. ஆகியோர், சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்றி தந்துவிட்டதாக எழுதியும் கொடுத்துவிட்டு சென்றனர். அந்த வகையில் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் தற்காலிகமாக வெற்றியடைந்தது. போலீசைக் கண்டாலே அஞ்சி நடுங்கும் பின் தங்கிய கிராம மக்களிடம், மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டம் ஒரு புது உத்வேகத்தை ஊட்டியது.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை அறிவிக்கும் சுவரொட்டி
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை அறிவிக்கும் சுவரொட்டி

மல்லசந்திரம் எனும் கிராமம், ஒசூர் வட்டத்திற்கு கர்நாடகாவின் மாலூரு வட்டத்திற்கு எல்லையில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். மொழியால் அனைவரும் தெலுங்கு பேசுபவர்கள். பல காலங்களாக ரெட்டிகளின் ஆதிக்கத்தில் இருந்த பின் தங்கிய கிராமம். 1992களில் தனியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட பின்னர் பலரும் விவசாயத்தைக் கைவிட்டு, வேறு தொழில்களுக்கு இடம் பெயர்ந்தன. இன்று விவசாயத்தை ஒருசில வயதான விவசாயிகளே தொடர்கின்றனர். மற்ற நிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

“ஆ பொத்து நிந்த ஈ பொத்து வரைக்கு மா ஜனாலுக்கி பிரஜாஸ்வாம்யமே ரா லேது. போலீசு சுசே மா ஜனாலு திகுலுபடுத்தாரு. மீரு மாத்திரமே ஈ பொத்து போலீசுனு எதிரிஞ்ஜி போராட்டம் சேஸ்தாரு. மீ போராட்டம் மஞ்சி போராட்டம்” என்று கூறி சந்தோசப்படுகின்றனர் விவசாயிகள்.

ஆம், அந்த விவசாயி சொல்வது உண்மைதான். அன்று முதல் இன்றுவரை மக்களிடம் செல்போன், தொழில் நுட்பம் போன்ற அம்சங்களில் மாற்றங்கள் வந்திருந்தாலும், ஜனநாயகம் என்பது வரவே இல்லை. போலீசு என்றால் குலைநடுக்கம்தான். ஆதிக்கம் செய்பவர்கள் கூட, போலீசைக் கைக்குள் போட்டுக்கொள்ளத்தான் நினைப்பார்கள். இத்தனை ஆண்டுகளில் போலீசையும் அதிகாரிகளையும் எதிர்த்து இந்தப் பகுதியில் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது, எனில் அது மக்கள் அதிகாரத்தின் போராட்டம்தான்.

[நோட்டிஸ்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

மக்களைத் திரட்டுவதும் அதிகார வர்க்கம்-போலீசு மீதான மக்களின் அச்சத்தைக் கலைப்பதும் மக்கள் சுதந்திரமாக சிந்திப்பதற்கான ஒரு தொடக்கமல்லவா?

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
தொடர்புக்கு: 80152 69381