Wednesday, April 16, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதைமுகாம்கள் !

அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதைமுகாம்கள் !

-

சென்னை புரசைவாக்கத்திலுள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த 33 சிறுவர்கள் ஜூலை 11,2016 அன்று மொத்தமாகத் தப்பியோடிய நிகழ்வானது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தபோது, அவர்களில் 4 பேர் உடைந்த டியூப்லைட் மற்றும் பிளேடால் தங்களைத் தாங்களே அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையும், சுவற்றில் முட்டிக் கொண்டும் கதறியதையும் தொலைக்காட்சிகளில் பார்த்து பலரும் விக்கித்துப் போயுள்ளனர். செத்தாலும் பரவாயில்லை, இவர்களிடம் சிக்கி மீண்டும் கூர்நோக்கு இல்லத்தில் அடைபடக் கூடாது என்ற நிலைக்கு அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றால், அந்த இல்லம் எத்தகையதொரு கொடூரமான சித்திரவதைக் கூடமாக இருந்திருக்க வேண்டும்?

18 வயதுக்கும் குறைவான இந்தச் சிறுவர்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய சூழலிலிருந்து வருபவர்கள். அவர்களில் பெரும்பாலோர், தகப்பன் குடிகாரனாகவும் தாயோ கூலி வேலை செய்பவராகவும் உள்ள அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளிகளிலிருந்து இடைநின்று, பெற்றோர்களின் அன்பும் ஆதரவுமற்ற சூழலில் மன அழுத்தத்துக்கு ஆளாகி வழிதவறிப்போய் பதின் பருவத்தில் போதைக்கு அடிமையாகி, அதன் காரணமாக சிறு திருட்டுகளில் ஈடுபட்டவர்கள், அல்லது குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என பலதரப்பட்டவர்கள் இத்தகைய கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்படுகின்றனர். இவர்கள் குற்றவாளிகள் அல்ல. இச்சிறுவர்களை அரவணைத்து, மனிதாபிமான அணுகுமுறையுடன் உளவியல் ஆலோசனையையும் கல்வியையும் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களுக்குத் திறன்மிக்க எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கப்பதற்காகவே இத்தகைய கூர்நோக்கு இல்லங்கள் இயக்கப்படுகின்றன.

government-observation-home-1எப்படியாவது அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டும் இன்றைய நுகர்வு வெறி கலாச்சார சூழலானது, பெற்றோர்களின் அன்பும் ஆதரவுமற்ற அடித்தட்டு வர்க்கச் சிறுவர்களைக் குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது. மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த சிறுவர்களும் இத்தகைய குற்றங்களைச் செய்கிறார்கள் என்றாலும், அவர்களைப் போலீசு பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து விட்டுச் செல்கிறது. அதையும் மீறி ஒரு சிலர் இத்தகைய இல்லங்களுக்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் பணம் கொடுத்து தப்பிவிடுகிறார்கள். அண்மையில், புதுச்சேரி அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் காவலர்கள், அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறுவர்களிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தப்பவிட்டுள்ள விவகாரம் அம்பலமாகியது. அதேசமயம் நலிந்த பிரிவினர் என்றால், அவர்கள் குற்றவாளிகளாக பார்க்கப்பட்டு இத்தகைய இல்லங்களில் வதைபடுகிறார்கள்.

அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டதாகவும் சிறுவர்களை நல் வழிப்படுத்துவதற்கான பயிற்சி கூடமாகவும் கூர்நோக்கு இல்லங்கள் அமைய வேண்டும்; காவலர்களுக்கும் காப்பாளர்களுக்கும் சிறுவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி நடத்த வேண்டுமென கற்றுக் கொடுத்திருக்கவும் வேண்டும்; இச்சிறுவர்களுக்கு முறையான உணவு, படிப்பு வசதி, விளையாட்டுத் திடல், நீதி நெறிகளைத் தரும் நூலகம் முதலானவை இருக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் சேர்த்து 8 இடங்களில் மட்டுமே உள்ள இத்தகைய சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் இவை எதுவுமே முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை. ஏதோ ஆடு மாடுகளைப் பட்டியில் அடைத்து பாதுகாப்பதைப் போலத்தான் கூர்நோக்கு இல்லங்கள் உள்ளன. பள்ளிக்கூடங்களே சிறைச்சாலைகள் போல இயக்கப்படும் இன்றைய நிலையில், கூர்நோக்கு இல்லங்களான இத்தகைய சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் முறையாக இயக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியுமா? இச்சிறுவர்களை ஏதோ உலக மகா கிரிமினல்களைப் போலச் சித்தரிப்பதும், இவர்களை வெளியில் விட்டால் ஏதோ விபரீதங்கள் ஏற்பட்டு விடுவதைப் போலவும் பீதியூட்டி இத்தகைய இல்லங்களைச் சிறைச்சாலையைப் போல மாற்றியுள்ளனர். இச்சிறுவர்களை “வாடா, பிக்பாக்கெட்டு” என்று அழைத்து இழிவுபடுத்தி காவலர்கள் தாக்குவதும், சமையல் வேலை முதல் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது வரையிலான கடுமையான வேலைகளை செய்யவைத்து கொடுமைப்படுத்துவதுமாகவே இத்தகைய கூர்நோக்கு இல்லங்கள் உள்ளன. இதனால் இச்சிறுவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி எப்படியாவது தப்பித்துவிடத் துடிக்கின்றனர்.

government-observation-home-2இச்சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர் அல்லது காப்பாளர்களுக்கும் இலவச சட்ட உதவிகள் கிடைக்காததால், பல சிறுவர்கள் பிணையில்கூட வெளிவர முடிவதில்லை. போக்குவரத்து செலவு செய்து தமது மகனைப் பார்க்கக்கூட வரமுடியாத நிலையில் பல பெற்றோர்கள் ஏழ்மையில் உள்ளனர். கடந்த 2011 நவம்பரில் கோவை கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பியோடி, பின்னர் பிடிபட்ட சிறுவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, தாங்கள் இந்த இல்லத்துக்கு வந்து ஆண்டுக்கணக்கில் ஆவதால், பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர். இப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 100 மாணவர்களுக்கு மேல் கூர்நோக்கு இல்லங்களிலிருந்து தப்பியோடியுள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறை அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில்தான் அரசு கூர்நோக்கு இல்லம் அமைந்துள்ளது. எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி பாழடைந்த நிலையில் உள்ள அந்த இல்லமானது, குறைந்த அளவிலான சிறுவர்கள் தங்கும் அளவுக்கே பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் அங்கே அளவுக்கு அதிகமான சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். தனது வளாகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தைக்கூட கவனிக்க முடியாத அவமானகரமான நிலையில் அரசின் சமூகப் பாதுகாப்புத் துறை உள்ளதையே சிறுவர்கள் தப்பியோடிய விவகாரம் மெய்ப்பித்துக் காட்டுகிறது. தமிழகத்தின் இதர இல்லங்களிலும் காப்பகங்களிலும் கண்காணிப்பாளர், தொழிற்பயிற்சி அளிப்பவர், மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்படாத நிலை தொடர்கிறது. போதைக்கு அடிமையான சிறுவர்களுக்கான போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என 2013 இளம் சிறார் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், இதுவரை மறுவாழ்வு மையங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.

இத்தனைக்கும் பிறகும், கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பியோடும் விபரீத நிலைமைக்கு யார் காரணம் என்று பரிசீலிக்கக் கூட முன்வராமல், எவ்வித குற்ற உணர்வுமின்றி தனது பொறுப்பையும் கடமையையும் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது அரசு. கூர்நோக்கு இல்லத்திலுள்ள சிறுவர்களை கிரிமினல்கள் போலக் கையாள்வதன் விளைவாக அவர்கள் அங்கிருந்து தப்பியோடினால், அதை பரபரப்புச் செய்தியாக்கி, இச்சிறுவர்களைச் சமூகவிரோதிகளைப் போலச் சித்தரித்து, அவர்கள் மீது பழிபோட்டு தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது, அரசு. இனியும் இதுபோல சிறுவர்கள் தப்பியோட முடியாதபடி, சிறைச்சாலை போல இத்தகைய கூர்நோக்கு இல்லங்களின் சுற்றுசுவரின் உயரத்தை அதிகரிப்பது, கண்காணிப்பு கேமரா பொருத்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதாகத்தான் அரசும் போலீசும் அதிகார வர்க்கமும் ஆலோசனைகளை முன்வைத்து, கூர்நோக்கு இல்லங்களின் நோக்கத்தையே சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

மறுபுறம், இத்தகைய கூர்நோக்கு இல்லங்களுக்கு வாரம் ஒருமுறை வருகைதந்து, சிறுவர்களிடம் நேரில் சந்தித்துப் பேசி, குறைகளைக் கேட்டறிந்து களைய வேண்டிய நீதிபதிகளும் உயர் அதிகாரிகளும் மனநல ஆலோசகர்களும் தெரிந்தே இக்கடமையைத் தட்டிக்கழிக்கின்றனர். காவலர்களோ இச்சிறுவர்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதோடு, அவர்களைச் சீரழிக்கவும் செய்கின்றனர். கூர்நோக்கு இல்லங்களை முறையாக இயக்குவதற்கும், இங்குள்ள சிறுவர்களைச் சீர்திருத்தவும் பொறுப்பேற்றுள்ள இத்தகைய அயோக்கியர்கள் திசைதவறிய சிறுவர்களை நல்வழிப்படுத்துவார்கள் என்று இனிமேலும் நம்பிக்கை வைக்க முடியுமா?

– தனபால்
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________