“’சுதந்திரம்’ அடைந்து 69 ஆண்டுகள் ஆகி விட்டன. உலகின் தகவல் தொழில்நுட்ப வல்லரசாக இந்தியா தன்னை சொல்லிக் கொள்கிறது. நாம் மிகப் பெரும் செலவில் சக்தி வாய்ந்த இராணுவம் ஒன்றைப் பராமரிக்கிறோம். நமது பிரதமருக்கு 56 ‘இன்ச்’ மார்பு உள்ளதால், அண்டை நாடுகள் நம்மைக் கண்டு அஞ்சுகின்றன. மெல்ல மெல்ல ஒரு பொருளாதார வல்லரசாக நாம் உயர்ந்து வருகின்றோம். எல்லா இந்தியர்களுடைய கைகளிலும் செல்பேசிகள்! விதம் விதமான ஆடை அணிகலன்கள் நமது அலமாரிகளை அலங்கரிக்கின்றன. வெளிநாட்டவர்கள் கூட அதி நவீன மருத்துவ சிகிச்சைகளுக்காக நமது நாட்டிற்குப் படையெடுக்கின்றனர். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் ஒன்றை அனுப்பியுள்ளோம். விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கிறோம். சுருங்கச் சொன்னால் நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.”
– இவையெல்லாம் மும்மய (தனியார் மயம், தாராளமயம், உலகமயம்) ஆதரவாளர்கள் அடாது ஓதும் மந்திரங்கள்.
உண்மை என்ன? அன்மையச் செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.

செய்தி 1: ஒடிசாவின் காலகந்தியைச் சேர்ந்தவர் மாஜி. காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாஜியின் மனைவி கடந்த ஆகஸ்டு 24, 2016 அன்று மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் இறந்தார். மாஜி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். வறுமையின் காரணமாக காசநோயிடம் தனது மனைவியைப் பறிகொடுத்தவருக்கு இறந்த உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூட காசில்லை.
சடலத்தை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனையின் பிண வண்டியைக் கேட்டு அணுகுகிறார். ஏழை மாஜியின் குரல் அங்கிருந்த அலுவலர்கள் காதில் விழாத நிலையில் தனது மனைவியின் பிணத்தை ஒரு துணியில் சுற்றி தோளில் சுமந்தவாரே கிளம்பினார். மாஜியின் கிராமம் மருத்துவமனையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தோளில் துணி மூடிய பிணத்துடனும், பக்கத்திலேயே கண்களில் கண்ணீரோடு அவரது பன்னிரண்டு வயதான மகளும் நடந்து செல்வதை பத்திரிகையாளர்கள் சிலர் எதேச்சையாக கண்ட போது மாஜி ஏற்கனவே 12 கிலோமீட்டர்களைக் கடந்திருந்தார்.
செய்தி உடனடியாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகின்றது. பின்னர் தாமதமாக விழித்துக் கொண்ட அரசு இயந்திரம் பிண வண்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தால் தான் மிகவும் மனம் வருந்தியதாகத் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மாஜிக்கு நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாயை ‘பெருந்தன்மையுடன்’ அறிவித்துள்ளார்.
செய்தி 2: முதல் சம்பவம் குறித்த செய்திகள் வெளியான ஓரிரு நாளில் அதே ஒடிசா மாநிலத்திலிருந்து காணொளிக் காட்சி ஒன்று வெளியானது. சோரோ என்கிற சிறு நகரத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனையின் கடை நிலை ஊழியர்கள் பிணமொன்றின் மீது ஏறுகின்றனர். அவர்கள் கையில் இருந்த கத்தியைக் கொண்டு அந்தப் பிரேதத்தின் இடுப்பை வெட்டி உடலை இரண்டாகப் பிளக்கின்றனர். துண்டுகளாக்கப்பட்ட உடலை இரண்டு பெரிய பாலித்தீன் உரைகளில் மடித்துக் கட்டுகின்றனர். அதன் பின் அந்தப் பாலித்தீன் பைகளை மூங்கில் கம்புகளில் கோர்த்து இருவருமாக தோளில் சுமந்து நடக்கின்றனர்.
துண்டாக்கப்பட்ட பிணம் சாராமணி பாரிக் என்கிற 76 வயது மூதாட்டியுடையது. இரயில் விபத்தில் இறந்த அவரது உடல் சவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் சோரோவில் அதற்கான வசதிகள் இல்லை என்பதால், அவரது அங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலாசோருக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்ப சோரோ மருத்துவமனையிடம் பண வசதியோ, வாகன வசதியோ இல்லை. எனவே உடலைப் பார்சலாக்கி இரயிலின் மூலம் அனுப்ப முடிவு செய்துள்ளனர். விரைத்துப் போன உடலை பார்சல் செய்வது கடினம் என்பதால் ஊழியர்கள் அதை இரண்டாகப் பிளந்ததாக பின்னர் செய்திகள் வெளியானது.

செய்தி 3: சுனில் குமார் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். அவரது 12 வயதே ஆன மகன் அன்ஷ் குமாருக்கு திடீரென கடுமையான காய்ச்சல். சோர்ந்து போன மகனை அழைத்துக் கொண்டு அரசு நடத்தும் லாலா லஜபதிராய் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் சுனில் குமார். அரை மணி நேரத்திற்கு பிறகு, சிறுவன் அன்ஷ் குமாருக்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாதென்றும், அருகில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்லுங்களென அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காய்ச்சல் கடுமையான நிலையில் நினைவிழந்து போயிருக்கிறான் அன்ஷ் குமார். மருத்துவமனை ஊழியர்களோ, அந்தச் சிறுவனை அங்கிருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஸ்ட்ரெட்சர் – கையிழுவை வண்டி வசதியை மறுத்துள்ளனர். வேறு வழியின்றி தனது மகனைத் தோளில் சுமந்து சென்றுள்ளார் சுனில் குமார். குழந்தைகள் மருத்துவரோ அன்ஷ் குமார் அழைத்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அறிவித்து விட்டார்.
செய்தி 4: மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஷாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நன்னேபாய். பழங்குடி இனத்தவரான நன்னேபாயின் மகள் பார்வதி நிறை மாத கர்ப்பிணி. கடந்த 28-ம் தேதி பார்வதிக்கு கடுமையான பிரசவ வலி வந்தது. பதறிய நன்னேபாய், உடனடியாக அரசு ஆம்புலன்ஸ் சேவை தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார்.
பல மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராத நிலையில் பார்வதியின் உயிருக்கே ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மகளை சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்த்தி சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் நன்னேபாய். நல்லவிதமாக தாய்க்கும் குழந்தைக்கும் உயிராபத்தின்றி பிரசவம் முடிந்துள்ளது. பின்னர் தாயையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் மீண்டும் தனது மகளையும் பச்சைக் குழந்தையையும் சைக்கிளில் அமர்த்தி வீட்டுக்குச் சென்றார்.

இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் அதிசயமான நிகழ்வுகள் அல்ல. மும்மயப் பொருளாதார கொள்கைகளைப் பின்பற்றும் இந்திய அரசு, காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் காசுக்கு விற்கப்படும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. சென்னை மருத்துவச் சுற்றுலாவுக்கு உகந்த நகரமாகியுள்ளது அடித்தட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியல்ல – மருத்துவம், உயிர் காத்தல் என்பவையெல்லாம் பண்டமாகி உலகெங்கும் உள்ள வசதிபடைத்தவர்களுக்கானதாக மட்டும் அவை மாற்றப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் சிகிச்சை பெற்றுச் செல்லும் இந்தியாவில் தான் 22 லட்சம் மக்கள் காசநோயால் பீடிக்கப்பட்டுள்ளனர் (இது உலகின் மொத்த காசநோயாளிகளான 64 லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு). எளிதாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய மலேரியா காய்ச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 இந்தியர்கள் பலியாகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அடிப்படை மருந்துகளின் விலைகள் அனைத்தும் விண்ணை முட்டிக் கொண்டிருக்க, அரசு மருத்துவமனைகளோ அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மறுக்கப்பட்டு மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.

இந்தியர்களின் உயிருக்கே மதிப்பில்லாத நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கும்பலோ பார்ப்பனிய இந்துமதவெறி அரசியலுக்கும், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கு வழங்க மறுக்கிறது. பா.ஜ.க மட்டுமல்ல, காங்கிரஸ் இன்னபிற மாநில சமூகநீதிக் கட்சிகள் அனைத்தும் அரசியல் ரீதியில் ஏகாதிபத்திய சேவையையே மனதாரவும், ஆட்சி அமலிலும் ஏற்றுக் கொண்டுவிட்டன.
நாட்டின் நிலை இதுவென்றால், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.கே அகர்வால் என்பவர் மாடுகளுக்காக பத்து ஆம்புலன்சுகளை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். ஜார்கண்ட் பிரதேச கோசாலா சங்கம் என்கிற அமைப்பைச் சேர்ந்த ஆர்.கே அகர்வால், மாடுகளுக்கு சேவை செய்வது தாய்க்கு சேவை செய்வதற்கு சமம் என்று தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு மருத்துவமனை கொண்ட ஜார்கண்ட் மாநிலம் தான் மருத்துவர் – நோயாளி சமன்பாட்டில் மிகவும் பின் தங்கியுள்ளது.
மக்களின் உயிர்களை மலிந்து போகச் செய்ததே உலகமயமாக்கம் நமக்கு வழங்கியிருக்கும் பரிசு. உண்மை இவ்வாறிருக்க, இதற்கு மேலும் இந்தியாவை ‘வல்லரசு’ என்று சொல்லிக் கொள்ள நமக்கு கூச வேண்டாமா?
மாட்டுக்கு ஆம்புலன்ஸை வழங்கி, மக்களை பாடை தூக்கி நடக்கச் சொல்லும் இந்த அரசமைப்புக்கு நாம் பாடை கட்டும் நாள் எப்போது?
- தமிழரசன்.