Thursday, April 24, 2025
முகப்புசெய்திஅகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

-

ன்று செப்டம்பர் 02, 2016-ல் நாடு முழுவதும் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்ததில் எமது தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கலந்து கொள்கிறது.

கடந்த ஆண்டு இதே தேதியில் மோடி அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை நீக்கவும், மாற்ற கொண்டு வர முடிவு செய்த போது, மோடியின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து நாடெங்கும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் தங்கள் பலத்தை நிருபித்து காட்டினர். ஆயினும், மோடி அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை நீக்குவதில் இருந்து பின்வாங்கவில்லை.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவன சட்டம், PF சட்டம், ESI சட்டம், பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகள் சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம் ஆகியவை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமான வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஏகாதிபத்திய நாடுகளின் உத்தரவு பேரிலும், உலக வர்த்தக கழகம் மற்றும் உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்த நாட்டை தாரை வார்க்கின்ற தேசவிரோத நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. உள்நாட்டு தொழில்களை அழித்தும் உழைக்கும் மக்களை தற்கொலைக்கு தள்ளும் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தொழில் நிறுவனங்களில் நிரந்தர தொழிலாளர் முறையை ஒழிப்பதும் காண்டிராக்ட் முறை தீவிரமாக்கப்படுவதும் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.குறைவான கூலி உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கூலியை ஏற்றிக் கொடுப்பதற்கு கூட முதலாளிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தொழிற்சங்கம் அமைத்து கொள்கின்ற உரிமை முதலாளிகளின் நலத்திற்காக பறிக்கப்படுகிறது.

பொதுத் துறை நிறுவனங்களை விற்பது, சாலை பாதுகாப்பு மசோதோ என்கிற பெயரில் போக்குவரத்து துறையில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் உரிமையை பறிப்பது, அமைப்பு சாரா தொழிலாளர் களின் சமூக பாதுகாப்பை ஒழித்து கட்டுவது என ஏகாதிபத்திய முதலாளிகளின் நலனுக்காக செயல்படும் மோடி அரசை கண்டித்து  செப்டம்பர் 2-ம் தேதி வேலை நிறுத்ததில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை / இணைப்பு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துக் கொள்வார்கள்.

தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டங்களை நீக்குகின்ற மோடி அரசு, மறுபுறம் உள்நாட்டில் இந்து மதவெறி பாசிசத்தின் மூலமாக மதவெறியை தூண்டி உழைக்கும் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த சங்பரிவார் அமைப்புகள் மூலம் சதி திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

உழைக்கும் மக்களின் எதிரியாக உள்ள மோடி அரசை தூக்கியெறிவதும், அதற்காக தொழிலாளர்களை அரசியல் உணர்வை பெற வைப்பது அவசியமாகவும், முக்கியக் கடமையாகவும் உள்ளது உணர்ந்து என்பதை இந்த செப்டம்பர் 02 ஆர்ப்பாட்ட நாளில் வீதியில் இறங்குவோம்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க