Wednesday, April 23, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவர்களால் நிறைந்தது மதுரவாயல் - பொதுக்கூட்ட படங்கள்

மாணவர்களால் நிறைந்தது மதுரவாயல் – பொதுக்கூட்ட படங்கள்

-

மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக அலையலையாக திரண்ட மாணவர்களால் நிறைந்தது மதுரவாயல்!

செப்டம்பர் – 1, சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்!

பொதுக்கூட்ட ஏற்ப்பாடுகள் (15)தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நுழைவாயிலான மதுரவாயல் – கோயம்பேடு பகுதி அன்று மாணவர்களால் நிறைந்திருந்தது. திரும்பிய திசையெங்கும் பு.மா.இ.மு கொடிகளும், சுவரொட்டிகளும், பேனர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட அனைவரையும் அறைகூவி அழைத்துக்கொண்டிருந்தது.

மோடி அரசு நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றியமைப்பதற்காக டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் எனும் ஓய்வுபெற்ற முன்னாள் அமைச்சரவைச் செயலர் தலைமையில் 5 பேர் கொண்ட  குழுவை அமைத்தது. இக்குழு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்தது. மோடி அரசோ அதனை முழுமையாக வெளியிடாமல் “தேசிய கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள” என்ற ஒரு ஆவணத்தை மட்டும் அதுவும் ஆங்கிலத்தில் வெளியிட்டது. கூடவே மக்களிடம் கருத்து கேட்கும் நாடகத்தை நடத்திவிட்டு, புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த தயாராகி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் கல்வியாளர், அதிகார வர்க்கத்தினர் அடங்கிய குழுவால் ரகசியமாக தயாரிக்கப்பட்டு, சதித்தனமாக அமுல்படுத்த முயன்று வரும் இந்த புதிய கல்விக் கொள்கையானது பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை முற்றிலுமாக மறுக்கும் கொள்கை என புமாஇமு இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக அம்பலப்படுத்தியது.

செத்த மொழியான சமஸ்கிருதத்தை திணிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் தனது இந்து-இந்தி-இந்தியா எனும் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொள்வதையும் மறுபுறம், கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டதுதான் இந்த புதிய கல்விக்கொள்கை என்பதை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி(RSYF) கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை சுமார் 3 லட்சம் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சார இயக்கத்தை வீச்சாக நடத்தியது. ஆரிய – பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் வகையில் 6000 சிறு வெளியீட்டை வினியோகித்தது.  இப்படி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் வீச்சான பிரச்சாரம் மேற்கொண்டதன் தொடர்ச்சியாக சென்னை பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இப்பிரச்சாரத்திற்கு இடையில் கடந்த ஜூன் 28-ம் தேதி சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும், ஜூலை 24-ம் தேதி புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும் மாணவர்களைத் திரட்டி தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது மாணவர்கள் மத்தியிம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

மதுரவாயல் பொதுக்கூட்டத்தில் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து மாணவர்கள் மட்டும் சுமார் 1500-த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு பொது நோக்கத்திற்காக தமிழக மாணவர்கள் இப்படி அணிதிரள்வது அபூர்வமானது என்றார் ஒருவர். பல்வேறு மாவட்டப்பகுதிகளில் இருந்து மாணவர்கள் பள்ளிச் சீருடையுடனும், பு.மா.இ.முவின் சீருடையுடனும் சாரை சாரையாக அணிவகுத்து வந்தார்கள். புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பியவாறும், பறையிசை முழங்கியவாறும் கம்பீராமாக பேரணியாக வந்தது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

தி.மு.க வைச் சார்ந்த எழுத்தாளர் திரு.பழ. கருப்பையா அவர்கள் கூடியிருந்த மாணவர்கள் இளைஞர்கள் கூட்டத்தை பார்த்துவிட்டு ‘’இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் – சோசலிசத்தின் மீது பற்று கொண்ட கூட்டம் என்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கூட்டம் – கடைசி வரை கட்டுக்கோப்பாக இருப்பது வியப்பு. அதுவும் கூட்டம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னாடியே சினிமா டிக்கெட் வாங்க வந்த கூட்டம் போல் கூடியிருப்பதை இப்போது தான் பார்க்கிறேன். புரட்சிகர அமைப்பில் நடைபெறுகிற கூட்டத்தைக் கேட்பதற்கு 50, 100 பேர்கள் தான் இருப்பார்கள் என்று கருதினேன். ஆனால் இப்படி ஆயிரக்கணக்கில் இளைஞர் கூட்டம் காத்திருக்கும் என நான் எண்ணவே இல்லை’’ என்றார்.

மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் எதிரில் மாலை சுமார் 5.30 மணியளவில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய பொதுக்கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.த.கணேசன் தலைமை தாங்கினார். தி.மு.க வைச் சார்ந்த எழுத்தாளர் திரு.பழ.கருப்பையா, அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர். திரு. ரமேஷ்பட்நாயக், குடியாத்தம் அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர். திரு. ப.சிவக்குமார், சென்னை ஐ.ஐ.டி யில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு.ரமேஷ், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர்.சி.ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுத்தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடினர்.

கூட்டம் 6.45 மணியை நெருங்கிய போது மழைத்துளி விழத்தொடங்கியது. ஆனாலும் சலசலப்பின்றி தொடர்ந்து கூட்டம் நடந்தது. அடுத்து, மழை சற்று அதிகமாக பெய்தது அப்போதும் யாரும் கலைந்து செல்லவில்லை. கொட்டும் மழையிலும் கூட்டம் தொய்வின்றி நடந்தது. சுமார். 7.15 மணியளவில் மழை கனமாக பெய்தது. அப்போது தவிர்க்கமுடியாமல் கூட்டம் இடைக்காலமாக நிறுத்தப்பட்டது.

இயற்கை ஏற்படுத்திய இந்த தடையை உடைத்து மாற்று ஏற்பாடு செய்து கூட்டத்தை எப்படியாவது நடத்திமுடிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் பு.மா.இ.மு தோழர்கள் விரைந்து ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்தனர். மழை சற்று விட்டபின்பு அனைவரையும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று கூட்டத்தை முழுமையாக நடத்தி முடித்தனர். மழையில் நனைந்திருந்த மாணவர்களும், பொதுமக்களும், பெண்களும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

கல்லூரி, பள்ளிகளில் பாடம் நடக்கும் போதோ, வீட்டில் போரடிக்கும் போதோ சினிமா, கிரிக்கெட், உலா என்று அலைபாயும் மாணவர் சமூகம் இப்படி கட்டுக் கோப்பாக புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிவகுப்பதை உளவுத்துறை போலிசார் குறித்து வைத்திருப்பார்கள். குறிப்பை மோடி அரசிடம் கொடுக்கட்டும். முடிவை மாணவர்களும் மக்களும் எடுப்பார்கள்.

(பொதுக்கூட்டத்தின் உரைகளை அடுத்தடுத்து வெளியிடுகிறோம்.)

இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க