Thursday, April 17, 2025
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

-

1990-க்குப் பின் எண்ணற்ற ஊரடங்குகளை காஷ்மீர் கண்டிருக்கிறது. ஆனால், ஈத் பண்டிகை அன்றும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாதது இந்த ஆண்டில்தான். செல்பேசிகள், இணையம் ஆகிய தகவல் தொடர்புகள் அனைத்தும் ஈத் பண்டிகையையொட்டி 72 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டிருக்கின்றன. ஆளில்லா உளவுக்கருவிகளான டிரோன்கள் விண்ணிலிருந்து கண்காணிக்கின்றன. இதுதான் இன்றைய காஷ்மீர்.

kashmiri-struggle-against-indian-oppression-3
கோப்புப் படம்

காஷ்மீர் மீதான ஒடுக்குமுறை, பாலஸ்தீனத்தைப் பிரதிபலிக்கிறது. பண்டிட்டுகளுக்கான தனிக் காலனிகள், இராணுவத்தினருக்கான குடியிருப்புகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்துமயமாக்கும் பாரதிய ஜனதா அரசின் முயற்சி இஸ்ரேலின் அணுகுமுறையை அப்படியே ஒத்திருக்கிறது. போராட்டத்தை ஒடுக்கும் வழிமுறைகளை மட்டுமின்றி, இழிபுகழ் பெற்ற பெல்லட் ரவைகளையும் இந்திய அரசு இஸ்ரேலிடமிருந்துதான் இறக்குமதி செய்திருக்கிறது. புர்ஹான் வானியின் கொலையைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 10,000 பேர் காயம்பட்டிருக்கிறார்கள். 73 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 700 இளைஞர்களின் பார்வை பறிபோயிருக்கிறது.

“கடுகு அளவே உள்ள இந்த காரீய ரவை ஒன்றை உடலிலிருந்து அகற்றுவதற்கு 2 மணி நேரம் ஆகிறது. விழிகளில் பாய்ந்திருக்கும் இந்த ரவைகளை அகற்றுவது எப்படி என்று எங்களுக்கு எந்த மருத்துவப் பாடநூலிலும் சொல்லித் தரப்படவில்லை” என்று கூறிக் கண்ணீர் வடிக்கிறார்கள் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள். இந்தக் கொடூரமான அடக்குமுறை உலகெங்கும் அம்பலப்பட்டுப் போனதன் காரணமாக, பெல்லட் குண்டுகளின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, அதற்கு மாற்று உத்திகளை யோசிப்பதாகக் கூறினார் ராஜ்நாத் சிங். சொல்லி சில நாட்களிலேயே ஒவ்வொன்றிலும் 635 ரவைகள் கொண்ட ஒரு இலட்சம் தோட்டாக்கள் சி.ஆர்.பி.எப். படையினருக்கு வந்து சேர்ந்தன.

இருப்பினும், தோட்டாவால் துளைக்கப்பட்ட மக்கள் “ஆசாதி..ஆசாதி” என்று முழங்க, துப்பாக்கி ஏந்திய பா.ஜ.க. அரசின் இராணுவம் அவர்களின் முன்னே மண்டியிடும் காட்சியை நாம் காண்கிறோம். “முதல்வர் மெகபூபாவை உங்கள் மகளாக நினைத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்று ஹுரியத் தலைவர் கிலானிக்கு கடிதம் எழுதுகிறது ஆளும் பி.டி.பி. கட்சி. காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் 370-வது பிரிவை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்று பேசிவரும் பாரதிய ஜனதாவின் உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், “அரசியல் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு யாருடன் வேண்டுமானாலும் பேசத் தயாராக இருக்கிறோம்” என்று கூறி, 370-வது பிரிவை விழுந்து கும்பிடுகிறார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் ஆத்திரம் கொண்ட முதல்வர் மெகபூபாவை அடக்க முயன்று, அனைவர் முன்னிலையிலும் அசடு வழிகிறார் ராஜ்நாத் சிங். அவருடன் காஷ்மீர் சென்ற யெச்சூரி, ராஜா உள்ளிட்ட சர்வ கட்சி பிரமுகர்கள் ஹுரியத் தலைவர் கிலானியின் வீட்டு வாசலுடன் திருப்பி அனுப்பப்படும் காட்சி எல்லா ஊடகங்களிலும் சந்தி சிரிக்கிறது. “உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, எங்கள் போராட்டத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்று முகத்தில் அடித்தாற்போல அவர்கள் கூறிய பதில், ஒருமைப்பாட்டு புரோக்கர்களை நிலைகுலைய வைக்கிறது.

எனினும், நம் கண்முன்னே நடந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, அடிபணிய மறுக்கும் அம்மக்களின் வீரத்தை, பார்ப்பன பாசிசத்தை மண்டியிட வைத்து ஒரு முன்மாதிரியை உருவாக்கிக் காட்டியிருக்கும் அவர்களின் வரலாற்றுப் பங்களிப்பைப் புரிந்து கொள்ளும் அறிவோ, அங்கீகரிக்கும் பக்குவமோ, குற்றவுணர்வு கொள்ளும் இதயமோ இல்லாமல், இந்த அநீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள். இதுதான் நாட்டுப்பற்று என்றால், அதைக் காறி உமிழ்வோம்!
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________