புதிய கல்விக் கொள்கை 2016! கார்ப்பரேட் மூளை! பார்ப்பனிய யுக்தி!
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் பொதுக்கூட்டம் செப்டம்பர் 25, 2016 ஞாயிறு மாலை 5 மணிக்கு சிதம்பரம் நகரின் போல்நாராயணன் பிள்ளை தெருவில் நடைபெற்றது.
சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டபோது, “நீங்க எதாவது நாலு செவுத்துக்குள்ள வச்சி பேசுங்க, உங்களுக்கு பொது இடத்துல பேச அனுமதி கொடுத்தா, மக்கள எல்லாரையும் நீங்க, மூளைசலவை செய்து, தீவிரவாதிகளா மாத்திடுவீங்க” எனக் கூறி கருத்தரங்கம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தரவில்லை. எனவே நீதிமன்றத்திற்கு சென்றது பு.மா.இ.மு. ஆனால், நீதிமன்றம், நாம் பேசும் கருத்து மக்களை பற்றிக் கொள்ளும் என பயந்து, கருத்தரங்கிற்கு அனுமதி மறுத்துவிட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளித்தது, அதிலும் 5 மணியிலிருந்து 9 வரைதான் கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
பொதுக்கூட்டத்திற்காக பல்வேறு இடங்களில் தோழர்கள் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டனர். பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தோழர் கோவன் படம் இருந்ததை பார்த்து, “கோவன் பாடல் பாடுவார்னு போட்டிருக்கு, அவர் வருவாரா” என க்யூ பிரிவு போலீசு, தோழர்களுக்கு போன் செய்து கேட்டது.
24-09-2016 அன்று இரவு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த போது, நான்கு, ஐந்து போலீசுகள் தோழர்களை அழைத்து, “ஏய் இங்க வாடா, என்ன ஒட்டுற” என்றது. ‘போலீசு கூப்பிட்டா பயப்பட நாங்க கோழைகள் அல்ல, மக்களுகாக போராடுபவர்கள், போஸ்டர் ஒட்டுரோம்” என கூறிவிட்டு தொடர்ந்து போஸ்டர் ஒட்டினார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பொதுக்கூட்டத்தை விருதை பகுதி செயலர் தோழர் மணிவாசகன் தலைமை ஏற்று நடத்தினார். வழக்கறிஞர் சி.செந்தில் (இணைச்செயலாளர், மக்கள் அதிகாரம். கடலூர் மாவட்டம்) தன் எதிர்ப்பை பதிவு செய்தார். திரு.ரமேஷ் (அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம், சென்னை) பேசுகையில், இந்த புதிய கல்விக்கொள்கை எப்படிப்பட்ட அபாயம் என்பதை பல உதாரணங்களுடன் விளக்கினார்.
வழக்கறிஞர். சி.ராஜூ (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு) பேசுகையில், “இந்த அரசு தோற்றுபோய் விட்டது, ஒருபோதும் இது உழைக்கும் மக்களுக்காக எதையும் செய்யப்போவதில்லை. IAS, IPS என எந்த அதிகாரிகளிடம் சென்றாலும் நம் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. கல்விக்கொள்ளை, மணல் கொள்ளை, காவிரி பிரச்சினை எதுவாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகள் தீரவேண்டும் என்றால் மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதே ஒரே மாற்று” என மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

தோழர். கணேசன், (மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு தமிழ்நாடு) பேசுகையில், “வரலாற்றில் பார்க்கும் போது, இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர், போலீசு அதிகாரியின் மகன். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்வி மறுப்புக்கொள்கையை எதிர்த்து, இந்தித் திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டம் நடத்திய நாம், மீண்டும் களமிறங்குவோம்.” என மாணவர்கள், பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
தோழர்கள், பொதுமக்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர், இந்த பொதுக்கூட்டத்தை கேட்டனர். பொதுக்கூட்டத்தின் முடிவிலேயே, 20-க்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள், பு.மா.இ.மு-வில் தாமாகவே முன்வந்து உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
88703 81056