Tuesday, April 22, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்மாதாவைக் கொல் ! பாரத மாதாவுக்கு ஜே போடு !

மாதாவைக் கொல் ! பாரத மாதாவுக்கு ஜே போடு !

-

சதியும் சாதியும்

ம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் (பிகார்) முன்னாள் துணைவேந்தர், ஏ.கே. பிஸ்வாஸ் ”அவுட்லுக்” இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சமீப காலமாக ”பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கத்தைக் காட்டி ஜே.என்.யு. மாணவர்கள் முதல் இசுலாமியர்கள் வரை அனைவரையும் மிரட்டி வரும் சங்க பரிவாரத்தின் அசிங்கமான பார்ப்பன இந்து மரபை இக்கட்டுரையில் அவர் எடுத்துக் காட்டுகிறார்.பெண்ணையும் தாயையும் போற்றும் மரபு உலகத்தில் வேறெங்குமே இல்லையென்பது போலவும், இந்து பண்பாடு தாயின் மீது கொண்டிருக்கும் அளப்பரிய மதிப்பின் காரணமாகத்தான் பாரதத்தை பாரதமாதா என்று அழைப்பதாகவும் அளக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.

”நமது தேசியத்தின் அடிப்படையே பாரதமாதா தான். மாதா என்பதை நீக்கிவிட்டால் பாரதம் என்பது ஒரு துண்டு நிலம்தான் என்று ஆகிவிடும்” என்ற பா.ஜ.க. தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் மேற்கோளையும், அவர் படத்தையும் பாரதமாதா படத்தையும் பள்ளி நோட்டுப் புத்தகங்களில் அச்சிட்டு விநியோகிக்கிறது குஜராத் மாநிலத்தின் பரோடா மாநகராட்சி. ”பாரத் மாதா கி ஜெய்” என்று விண்ணப்பப் படிவத்தில் எழுதவில்லையென்றால் பள்ளியிலேயே சேர்க்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது குஜராத்தில் ஒரு பள்ளி.

பெற்ற தாயைப் படுகொலை செய்வதைத் தமது பண்பாடாக வைத்துக் கொண்டே, தேசத்தைத் தனது தாயாக மதிப்பதாகப் பித்தலாட்டம் செய்யும் நாட்டை உலகில் வேறு எங்காவது காண முடியுமா என்பது இக்கட்டுரையில் அவர் எழுப்பியிருக்கும் கேள்வி. வந்தே மாதரம் முழக்கமும், பாரதமாதா படமும் பிறந்த வங்காளத்தில்தான் பெண்களை உடன்கட்டையேற்றும் பார்ப்பனப் பண்பாடு உச்சத்தில் இருந்தது.

1829-இல் பென்டிங் பிரபுவால் தடை செய்யப்படும்வரை மதத்தின் பெயரால் பெண்களைக் கொலை செய்யும் ‘சதி’ என்ற ‘உடன்கட்டையேற்றுதல்’ புனிதமான மதப் பண்பாடாக இருந்தது. ஈவு இரக்கமில்லாமல் பெற்ற தாயையே உயிரோடு கொளுத்திய பிள்ளைகள், தமது நடவடிக்கையைப் பெருமையாகப் பறைசாற்றிக் கொண்டார்கள். தாயை உயிருடன் கொளுத்திய அந்த மைந்தர்களை அச்சமூகம் மதிப்புக்குரியவர்களாக கருதியது.

“தாய் நாடு சொர்க்கத்தைவிட உயர்ந்தது என்று இன்றைக்கு பீற்றுகிறார்களே, தாய், தாய்நாடு என்ற சொற்களை உச்சரிப்பதற்குக்கூட இவர்களுக்கு அருகதை உண்டா?” என்று கேட்கும் பிஸ்வாஸ், அன்று நடந்த அந்தக் கொடுமையை சில வரலாற்றுப் பதிவுகள் மூலம் எடுத்துக் காட்டுகிறார். இது அக்கட்டுரையின் சற்றே சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

1980-களின் இறுதியில் இந்து மதவெறி அமைப்புகளின் ஒத்துழைப்போடு உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட ரூப் கன்வரை தெய்வமாக்கும் சித்திரம்
1980-களின் இறுதியில் இந்து மதவெறி அமைப்புகளின் ஒத்துழைப்போடு உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட ரூப் கன்வரை தெய்வமாக்கும் சித்திரம்

“சுமார் 3000 முதல் 4000 ரூபாய் வரையிலான சொத்துக்கு வாரிசான ஒரு நடுத்தர வயது பார்ப்பன விதவையை அவளது கணவனின் உடலுடன் சேர்த்துக் கட்டி சிதையில் வைத்து எரித்தார்கள், அவளுடைய மைத்துனர்கள். பிறகு இது குறித்து புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றைய நீதிமன்றம், இந்தக் கொலை சட்டத்தால் தடை செய்யப்படவில்லை என்று கூறி அவர்களை விடுவித்தது. 1829-இல் பெண்டிங் பிரபு உடன்கட்டையேறுதலை குற்றமாக்கி சட்டம் இயற்றும் வரை வங்காளத்தில் இதுதான் நடந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்காவிட்டால், ‘தயாபாகா’ என்ற முறைப்படி கணவனின் பெரும் சொத்துகள் அவளைச் சேர்ந்திருக்கும். எனவே, அது முழுக்க முழுக்க சொத்தை அபகரிப்பதற்காக நடந்த கொலை.

ஆயினும் என்ன? ஒரு இந்துவை அவன் மூளைக்குள் திணிக்கப்பட்டிருக்கும் சாத்திரங்கள் கட்டுப்படுத்துகின்றன. சப்தரிஷிகளில் ஒருவரும், ரிக் வேதத்தைத் தொகுத்தவர் என்று கூறப்படுபவருமான அங்கிர முனிவர், சதியை போற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“மனித உடலில் மூன்று கோடியே ஐம்பது லட்சம் உரோமங்கள் உள்ளன. கணவனுடன் உடன்கட்டையேறும் பெண் அத்தனை ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள். கணவனுடன் சிதையில் மரிக்கும் பெண், அவளது தாயின் குடும்பத்தையும் தந்தையையும் கணவனையும் புனிதப்படுத்துகிறாள். அவளுடைய கணவன், ஒரு பிராமணனைக் கொன்ற கொலைகாரனாகவோ, நன்றி கொன்றவனாகவோ, நண்பனைக் கொன்றவனாகவோ இருந்தாலும் உடன்கட்டையேறும் மனைவி அவனுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கி விடுகிறாள்.”

பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணைக் கொலை செய்யும்பொருட்டு, கணவனின் குடும்பம் முதல் தாய், தந்தை உள்ளிட்ட அனைவருக்கும் சொர்க்கம் குறித்து ஆசை காட்டப்படுகிறது.

உறவினர்கள் மட்டுமல்ல, சுடுகாட்டுக்கு வந்த அத்தனை பேரும் இந்தப் படுகொலை நடவடிக்கையில் பங்கேற்கிறார்கள். சிதையைச் சுற்றி நிற்பவர்கள் அந்தப் பெண்ணின் மீது விறகுகளையும் வெண்ணையையும் வீசுகிறார்கள். ஏனென்றால் அவ்வாறு வீசுபவர்கள் ஒரு கோடி அசுவமேத யாகம் செய்த புண்ணியத்தைப் பெறுவார்கள் என்று ஆசை காட்டுகின்றன பார்ப்பன சாத்திரங்கள்.

இதன் காரணமாகத்தான் 1987-இல் ரூப் கன்வார் என்ற இளம் பெண் ராஜஸ்தானில் உடன்கட்டை ஏற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டு கணிமான இந்தியர்கள் வெட்கப்பட்டு தலை குனியவில்லை, கூனிக்குறுகவுமில்லை என்று கூறும் பிஸ்வாஸ், பிரம்ம புராணம் கூறும் சதி பற்றிய இன்னொரு வெறுக்கத்தக்க வழிகாட்டுதலை எடுத்துக்காட்டுகிறார்.

“ஒரு வேளை வெளிநாடு சென்ற கணவன் அங்கேயே இறக்க நேர்ந்தால், அவனுடைய மனைவி கணவனின் செருப்புகளையோ அல்லது அவனது உடைகளில் ஒன்றையோ தனது மார்புடன் சேர்த்துக் கட்டிக் கொண்டு தீப்புகுந்து விட வேண்டும்” என்கிறது பிரம்ம புராணம். இப்படி ஒரு பெண் உடன்கட்டை ஏறிய சம்பவத்தை வங்காளம் பெருமையானதொரு நிகழ்வாக கொண்டாடியும் இருக்கிறது.

sati1796-ஆம் ஆண்டு, கல்கத்தாவிலிருந்து சுமார் 20 மைல் தொலைவிலிருந்த மஜில்பூர் என்ற கிராமத்தில், தாய் ஒருத்திக்கு அவளது மகன் செய்த கொடுமை அழிக்க முடியாதவொரு அவமானம்.

வார்ட் என்ற ஆங்கில அதிகாரி தான் கண்ணால் கண்ட காட்சியை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

பஞ்சா ராம் என்ற பார்ப்பனன் இறந்து விட்டான். மனைவி உடன்கட்டையேறத் தயாராகிவிட்டாள். மந்திரச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர் சிதையுடன் சேர்த்து அவளைக் கட்டி வைத்துத் தீ மூட்டினார்கள். அப்போது இரவு நேரம். மழை பெய்யத் தொடங்கியது. தீ எரியத் தொடங்கியவுடன், பிணத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெல்ல ஊர்ந்து வெளியேறி புதர்களுக்குள் ஒளிந்து கொண்டாள் அந்தப் பெண். சுற்றி நின்றவர்கள் சிதையில் ஒரு உடல்தான் இருக்கிறது என்பதை சிறிது நேரத்தில் கண்டுபிடித்துவிட்டார்கள். உறவினர்கள் கத்தினார்கள். அந்தப் பெண்ணைத் தேடினார்கள். மகன் அவளைக் கண்டுபிடித்து தரதரவென்று இழுத்தான். உடன்கட்டை ஏறிவிடு; அல்லது தண்ணீரில் முக்கிக் கொல்வோம், அல்லது தூக்கில் தொங்கவிடுவோம் என்றான் மகன். அவளோ பெற்ற மகனிடம் தன்னை விட்டுவிடுமாறு மன்றாடினாள். கொடூரமான முறையில் என்னை சாகடிக்காதே என்று கெஞ்சினாள். பயனில்லை. நீ சாகவில்லை என்றால் என்னை சாதியிலிருந்து விலக்கி விடுவார்கள். எனவே நான் சாக வேண்டும். அல்லது நீ சாகவேண்டும் என்றான் மகன். அவள் உடன்கட்டையேற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவளுடைய மகனும் உடன் இருந்தவர்களும் சேர்ந்து அவளுடைய கையையும் காலையும் கட்டி நெருப்பில் தூக்கி வீசினார்கள்.

கருணை காட்டும்படி தனது மகனிடம் கெஞ்சும் தாயை எண்ணிப்பாருங்கள். கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காத, இரக்கமே இல்லாத மகன், அந்த தாயின் மன்றாட்டை நிராகரிக்கிறான். இதயமே வெடிப்பது போல அவள் கதறுகிறாள். மகனோ, அவளை உயிருடன் விட்டால் தன்னுடைய சாதி போய்விடும் என்று அஞ்சுகிறான். தாயினும் உயர்ந்ததாக சாதி! சாதியைக் காட்டிலும் தாய் உயர்ந்தவளாக இல்லை.

“சொர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்தவள் தாய்” என்றா இந்தியர்கள் நம்புகிறார்கள்? சாதியை விடத் தாழ்ந்தவள்தான் தாய் என்றால், சொர்க்கமும் கூட சாதியைவிடத் தாழ்ந்ததுதான். என்ன சுவையான சமன்பாடு!

caption-1தாயும் தாய்நாடும் சொர்க்கத்தைக் காட்டிலும் மேலானவை என்பது காலம் காலமாக இந்தியாவெங்கும் ஓதப்படும் ஒருவகை மந்திரம். அதனைச் சிறிது மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. சாதியும் சாதிநாடும் சொர்க்கத்தினும் மேலானவை. தனது தாயைவிட சாதி பெரிது என்று கருதி, தாயையே உயிர் வாழ அனுமதிக்காத ஒரு ஒரு மனிதனுக்கு, தாய்நாடு என ஒன்று இருக்க இயலுமா?

அத்தகைய மகன்களுக்கு கற்பனையாக கூட ஒரு தாய்நாடு இருக்க முடியாது. உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தமது நாட்டை மிக உயர்வாக மதித்து அதனைத் தாய்நாடு என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் யாரும் தம்மைப் பெற்றெடுத்த தாயைப் படுகொலை செய்து கொண்டே, எங்கள் தாய்நாடு சொர்க்கத்தினும் மேலானது என்று பித்தலாட்டம் செய்வதில்லை” என்று தனது கட்டுரையை முடிக்கிறார் பிஸ்வாஸ்.

சதி வேறு சாதி வேறு அல்ல. சதி என்பது சாதியத்துடன் இணைந்த பெண் அடிமைத்தனம். பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம். அதனால்தான், “உன்னைக் கொல்லாவிட்டால், என்னை சாதியிலிருந்து நீக்கி விடுவார்கள்” என்கிறான் மகன். அதனால்தான், பெற்ற தாயைக் கொலை செய்த மகன், அன்றைய சமூகத்தால் கொண்டாடப்படுகிறான்.

அன்று மட்டுமா, இன்று?

நடந்த பழங்கதை அல்ல. கண்ணகி – முருகேசன், இளவரசன், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் … — என இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு என்ன பொருள்? அன்று ஊரே கூடி நின்று ஒரு பெண்ணை உடன்கட்டை ஏற்றியது போல, இன்று ஊரே கூடி நின்று கண்ணகி- முருகேசனைக் கொலை செய்யவில்லையா? சங்கரைக் கொலை செய்து, தன் மகளையும் சாவுக்குத் தள்ளிய பெற்றோர், கம்பீரமாக சிறை செல்லவில்லையா? கோகுல்ராஜ் கொலையின் குற்றவாளி யுவராஜ், செயற்கரிய செய்த நாயகனாக கொண்டாடப்படவில்லையா?

சதி மாதாவும், சாதி மாதாவும், பாரத மாதாவும் வேறல்ல. எனவே, சதியும் சாதியும் தொடரவேண்டுமென்று விரும்பும் பாரத தேசத்தின் தவப்புதல்வர்களே, இரண்டு முஷ்டிகளையும் உயர்த்தி உரக்கச் சொல்லுங்கள், “பா..ரேத் மாதா கி.. ஜெய்ய்ய்!”

– அஜித்

________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________