அமெரிக்கா என்றதும் நமது நினைவுக்கு வருவது பூலோக சொர்க்கம் என்ற சித்திரம். மாறாக அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை நாம் நினைப்பதே இல்லை. மண்ணின் மைந்தர்களை வரலாற்றில் இருந்து அழிப்பது கொலம்பஸ் காலத்தில் மட்டுமல்ல இன்றும் தொடர்கிறது.

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியிலுள்ள வடக்கு டகோட்டா மாகாணத்தில் தொடங்கி 4 மாநிலங்கள் வழியாக இல்லினாய்ஸ் வரை மொத்தம் 1,800 கி.மீ தொலைவுக்கு எண்ணெய் குழாய்(84 செ.மீ சுற்றளவுக் குழாய்) பதிப்பதற்காக டகோட்டா ஆக்செஸ் பைப்லைன் (Dakota Access LLC, A subisidy of Energy Transfer Crude Oil Company, Dallas – ETCO) என்ற நிறுவனம் அமெரிக்க அரசு மற்றும் நீதிமன்றங்களின் ஆசியோடு வேலையைத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் மேற்கு மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கெயில் எண்ணெய் குழாய் திட்டம் போன்றது இது.
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 25,287,10,00,000/-). இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது ஒரு நாளைக்கு 5,70,000 பேரல்கள் அளவுக்கு எண்ணெயைக் கொண்டு செல்ல முடியும். மேலும் இந்தத் திட்டம் இரண்டு ஆறுகள், மலைகள், ஒரு ஏரி மற்றும் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் என ஒட்டுமொத்த இயற்கையையும் குடைந்து, நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட உள்ளது. 2016-க்குள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி விடுவோம் என்று மார்தட்டிக்கொண்டு அரசு ஆதரவோடு களமிறங்கியது டி.எ.பி நிறுவனம். இங்கேயும் கெயில் திட்டத்திற்கு மத்திய அரசு, நீதிமன்றங்கள் பாதுகாப்பு கொடுத்து நிறைவேற்றுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
சொந்த மண், வாழ்ந்த ஊர் சின்னாபின்னமாக்கப்படுவதை யார்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இத்திட்டத்தில் பாதிக்கப்படும் செவ்விந்தியர்களும் ஏனைய மக்களும் ஆரம்பம் முதலே இதை எதிர்க்க ஆரம்பித்தனர். சிறிய அளவில் ஆரம்பித்த போராட்டத்தைத் தொடக்க நிலையிலேயே அடக்க முயன்ற அரசு எந்திரம் 30-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்தது. மறுபுறம் இந்தத் திட்டம் இயற்கையை எந்த விதத்திலும் பாதிக்காது, அதி உயர் பாதுகாப்பு நிறைந்தது என்றும் எதிர்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டது, அரசு. நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாகி, இறுதியில் எண்ணெய் நிறுவனத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தபிறகு போராட்டம் மேலும் மேலும் செறிவுற்று முற்றுகைப் போராட்ட நிலைக்கு வந்தது.

பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஒட்டுமொத்த பழங்குடிகளும் ஒன்று திரண்டு வடக்கு டகோட்டா மாகாணத்தில் நடைபெற்று வந்த பணிகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்த முயன்றபோது, அமெரிக்க அரசு தனது முதலாளித்துவ ஒடுக்குமுறையை இறக்கியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, அதாவது தன் சொந்த மக்கள் மீது ஈவு இரக்கமின்றி நாயை ஏவி விட்டுக் கடிக்க வைத்தனர்; மிளகுச் சாறு அடைக்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே(Pepper Spray)வைப் பயன்படுத்தினர். இறுதியில் இந்த ஒடுக்குமுறைகள் மக்களை மேலும் கோபத்திற்குள்ளாக்கி அவர்களும் திருப்பித் தாக்க ஆரம்பித்தனர். இரும்பு வேலிகளை உடைத்து நொறுக்கிய மக்களைப் பார்த்து போலீசு மற்றும் நிறுவனத்தின் அடியாட்கள் பின்வாங்கினர்.
இறுதியில் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தைப் பார்த்து நிலைகுலைந்து விட்ட நீதிமன்றமும், வெள்ளை மாளிகையும் இப்போது இந்தத் திட்டத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளன. தடை தொடருமா, திட்டம் தொடருமா என்பதை மக்கள் போராட்டம் தீர்மானிக்கும். ஒரு வேளை திட்டத்தை அமல்படுத்த அமெரிக்க போலீசு முனைந்தால் அதற்கு வாழ்த்து தெரிவிக்க அங்கே மக்கள் தயாரில்லை.
மேலும் படிக்க…
- Dakota Access Pipeline protest camp on federal land to be left alone for now
- Iowa: 40 Arrested at Construction Site of Dakota Access Pipeline
- Protests Against This Fracked Oil Pipeline Just Keep Getting Bigger
- In Dramatic Reversal, White House Halts Dakota Access Pipeline Construction Under Missouri River