வட நாட்டில் ஆண்டுதோறும் திராவிடர் மற்றும் இதர பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கில், அசுர குலத்தைச் சேர்ந்த இராவணனின் உருவத்தை ராம லீலா என்ற பெயரில் எரித்து வருகின்றனர். பார்ப்பனியத்தின் ஒடுக்குமுறையை குறிக்கும் இதை எதிர்க்கும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் “இராவண லீலா” நடத்தி ராமன் உருவ பொம்மையை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி முன்பு 12.10.2016 அன்று மாலை 5.05 – க்கு எரிப்போம் என அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டம் அறிவித்த நாள் முதல் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் காலிகள் மற்றும் இந்துமுன்னணி, பா.ஜ.க, மற்றும் இன்னும் இப் பரிவாரத்தின் துக்கடா கும்பல் பலரும் த.பெ.தி.க தோழர்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டலோடு தொலைபேசியில் பேசி வந்தனர். அவர்களிடம் சொன்ன நாளில் போராட்டம் நடக்கும் என த.பெ.தி.க தொழர்கள் பதில் சொல்லியுள்ளனர். அதைத் தொடர்ந்து 11.10.2016 அன்று நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது “இன்று காலைமுதலே நாங்கள் இப்போராட்டத்திற்கு தயாரிப்புகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டோம், சுவரொட்டிகள் சென்னை முழுக்க குறிப்பாக போராட்டம் நடைபெற இருக்கும் பேருந்து வழித்தடம் முழுக்க ஒட்டியுள்ளோம் என்ன நடந்தாலும் இப் போராட்டத்தை நடத்துவோம்” என தோழர் குமரன், சென்னை மாவட்ட செயலர் கூறினார்.

ஒருபுறம் மிரட்டி பார்த்து அது பலனிளிக்கவில்லை என்பதால் வானரக்கூட்டம் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 12.10.2016 அன்று மாலை போராட்டம் நடத்தவிருந்த சமஸ்கிருத கல்லூரி முன்பு தடிக்கொம்புகளில் கொடிகளைக் கட்டிவைத்துக் கொண்டு குண்டர் படையுடன் நின்றிருந்தனர். நாலுபேர் நின்றாலே என்ன கூட்டம் என மிரட்டும் போலீசு இவர்களுடன் சமரசம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் கலைவதாக இல்லை என்பதாலும் கோவையில் அம்பலப்பட்டது போல் சந்தி சிரிக்கக் கூடாது என்றும் வேறு வழியின்றி வானரக் குண்டர்களை பேலீசு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இங்கு கோவை போல பெருங்கூட்டம் இல்லாததால் வாலைச் சுருட்டிக் கொண்டு வெறிக்கூச்சலிட்டவாறு சென்றுவிட்டது, வானரப்படை.
மறுபுறம் த.பெ.தி.க – விடம் நாங்களே உங்களுக்கு போராட இடம் ஒதுக்கித்தருகிறோம், ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு சென்றுவிடுங்கள் என நைச்சியமாக காய் நகற்த்தியது போலீசு. உருவப் பொம்மை எரித்தே தீருவோம் என அவர்கள் சொன்னதால் சரி தீ வைத்ததும் எங்களிடம் கொடுங்கள், நாங்கள் அணைத்து விடுகிறோம் எனப் பேசியுள்ளனர். இருப்பினும் போலிசின் வாக்குறுதியை மட்டும் தோழர்கள் நம்பிவிடவில்லை. அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரும் ராயப்பேட்டை அண்ணா சிலையருகில் மாலை 4.45 மணி வாக்கில் ஒன்றுகூடி புறப்படத் தயார் ஆனதும் அவர்கள் அனைவரையும் தடுப்பரண் அமைத்து நிறுத்திவிட்டது போலீசு.

அந்த இடத்திலேயே சென்னை மாவட்ட செயலர் தோழர் திருக்குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அதனால் பல த.பெ.தி.க –வினர் மற்றும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மற்ற கட்சியினர் சமஸ்கிருத கல்லூரி அருகே காத்திருந்து திரும்பச் சென்றனர். ஆனால் எப்படியும் இராமனை எரிப்பது என உறுதியுடன் நின்ற தோழர்கள், அண்ணா சிலை அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பில் வெவ்வேறு வழியாக வந்து இராமன் உருவ பொம்மைகளை வெற்றிகரமாக எரித்துள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள் என 50 – பேரையும் கைது செய்து இராயப்பேட்டை நல்வாழ்வு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க முயன்றனர். அவர்களை மண்டபத்திற்க்குள் செல்லவிடாமல் தடுத்து அனுப்பியது போலீசு. மேலும் உருவ பொம்மை எரித்த தோழர்கள் அனைவரையும் கட்டாயம் சிறையில் அடைப்போம் என கொக்கரித்து வந்தது போலீசு. அதன்படி 11 தோழர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமன் படத்தை எரிப்பது என்று இந்தியாவில் எங்கேயாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? தமிழகத்தின் இது ஏன் முடிந்தது என்றால் இது பார்ப்பனிய எதிர்ப்பு மரபில் உருவான வரலாறு இருக்கிறது. தந்தை பெரியார் அந்த மரபை வரித்துக் கொண்டு மக்களிடையே பரப்பிய மண் இது. அந்த வகையில் பார்ப்பன இந்துமதவெறியர்களுக்கு தமிழகம் ஒரு கல்லறையாக இருக்கும் என்பது உறுதி.





– வினவு செய்தியாளர்
படங்கள்: த.பெ.தி.க, சென்னை.