“ஊருக்கு ஊரு சாராயம்” பாடல் பாடியதற்காகத் தோழர் கோவன் 30-10-2015 அன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அதே நாளில் லாவணிப் பாடகர் தோழர் டேப் காதரின் உயிர் பிரிந்தது. ம.க.இ.க தோழர்கள் மீது காதர் கொண்டிருந்த பாசம் அளவிட முடியாதது. ‘தோழர் கோவன் கைது செய்யப்பட்டார். தோழர் காளியப்பன் தேடப்படுகிறார்’ என்ற செய்தி தோழர் காதரின் இறுதி நாட்களில் சிந்தையையும், இதயத்தையும் தாக்கியது. தோழர் காதர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது.
அவரை ஒரு லாவணிக் கலைஞராக எனது சிறு வயதிலிருந்தே அறிவேன். 2000-ம் ஆண்டு முதல் தோழராக டேப்காதர் எங்களது எல்லைக்குள் வந்துவிட்டார். அவர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாக அறிவித்தது ஒரு விவாதத்தையும் ஏற்படுத்தியது.
தோழர் காதரைப் பற்றிய வலைத்தள, பத்திரிகைச் செய்திகளைத் தொகுத்துக் கொடுத்தபோது படித்து முடித்து விட்டு “லாவணிப் பாடகரைப் பற்றியே லாவணியா?” சிரித்துக் கொண்டே கேட்டார். முதுமை எய்திய காதரைப் பராமரிப்பது என்று நான் முடிவெடுத்து செயல்பட்டு தஞ்சை ம.க.இ.கவின் வேலைச் சுமையைக் கூட்டிவிட்டேன் என்றாலும் அது ஒரு சுகமான வேதனை. அவருடன் பேசும் போதும்,நேரம் செலவழிக்கும் போதும் நமக்கு மிகப்பெரும் அனுபவங்களும், செய்திகளும் மழையெனக் கொட்டும். தென் மாநிலங்கள் மற்றும் இந்தி மாநிலங்களில் சுற்றியதன் மூலம் வளமான அனுபவ அறிவை அவர் பெற்றிருந்தார். அந்த வகையில் அவர் ஒரு தகவல் பெட்டகம்!
“காற்றைப் பிடித்து வைப்பதும், காதரைப் பிடித்து வைப்பதும் சிரமமான காரியம், இசை ஒன்றுதான் அவரை இயக்கும் சக்தி” என்றார் மறைந்த முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர், மூத்த தோழர் தஞ்சை ஏ.வி.ராமசாமி. தோழர் ஜோதிவேல் உதவியுடன் தஞ்சை நஞ்சை கலைக்குழு மூலம் காதரைக் கட்டிப் போட முடிந்தது. காதர் நடமாட்டம் நின்றவுடன் தஞ்சை நஞ்சை கலைக்குழு செயலின்றி முடங்கிப் போனது.
தியாகி சிவராமன் நாடக மன்றத்தை உருவாக்கி இயக்கிவந்த காதரின் நாடக – இசைஅறிவு பிரம்மிப்பிற்குரியது. மு.ராமசாமி தவிர வேறு எந்த நாடக ஜாம்பவான்களும் அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை பயன்படுத்தவில்லை என்பது தமிழ் நாடகத் துறையின் அவலம். காதரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி எங்களுக்கும் உண்டு.

தோழர் பி.எஸ்.சீனிவாசராவ் முதல் தஞ்சை மார்க்சிஸ்ட் தோழர் நீலமேகம் வரை பொதுஉடைமை இயக்கத் தோழர்களோடு பழகியவர், திருமூர்த்தியார் மற்றும் பொதுஉடைமை இயக்க நாடக இசைக் கலைஞர்களோடு பயணித்தவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.
“வீரன் சிவராமன் ஆறுமுகம் இன்றும்
இரணியன் கதை கேளீர் – வாரீர்
இரணியன் கதை கேளீர்”
என்ற திருமூர்த்தியாரின் பாடலை அவருடன் இருந்த நாட்களில் அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்போம். அது எங்களுக்கு சோர்வை நீக்கி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அவர் பாடிய திருமூர்த்தியாரின் பாடல்கள் காவிரிப் படுகை மக்களைத் தட்டி எழுப்பும் சக்தி படைத்தது என்றால் மிகையில்லை.
முதுமையின் காரணமாய் சமூக புறக்கணிப்பு, முதுமைக்கும் இளமைக்கும் உள்ள முரண்பாட்டால் கட்சித் தோழர்களிடம் புறக்கணிப்பு, பொதுஉடைமை இயக்கத் தொடர்பால் குடும்ப புறக்கணிப்பு என்ற சிரம்மான நிலையிலும் கலங்காத திடமான மனதைக் கொண்டிருந்தார். “சொர்க்கத்திலும் இல்லாமல், நரகத்திலும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்ந்தேன்” என்று நகைச்சுவையாக தனது வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி கூறுவார் தோழர் காதர்.
அவரது பாடற் கலைக்கு போட்டியாக அவரது சமையல் கலையும் இருந்தது. “சோறு கண்ட இடம் சொர்க்கம், திண்ணை கண்ட இடம் தூக்கம்” என்பதுதான் என் வாழ்க்கைச் சுருக்கம் என்று தனது உடைமை பற்றற்ற வாழ்க்கையைப் பற்றி வரையறுப்பார்.
அவரது மருத்துவச் செலவுக்காகக் தோழர்கள் கொடுக்கும் பணத்தினைத் தனது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட சுற்றுப் பகுதி மக்களின் உணவுத் தேவைக்காக உதவிவிடுவார். அவர் குடும்பத்திலும், கட்சியிலும் பொறுப்பானவராகவே செயல்பட்டு இருக்கிறார் என்று பல சம்பவங்கள் நமக்கு அறிவிக்கின்றன.
கடைசியாகச் சந்தித்த போது தோழர்கள் நலன் குறித்து விசாரித்துவிட்டு “நீங்கள் எல்லோரும் நீண்ட காலம் வாழ வேண்டும். இந்தச் சமூகத்தில் உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். போராட்டத்தில் சாகலாம், நோய்வாய்ப்பட்டுச் சாகக் கூடாது” என்றார்.
தோழர் காதர் இன்று இல்லை. ஆனால் அவரது பாடல்கள் தஞ்சை மண் முழுவதும் இன்றும் இரண்டறக் கலந்திருக்கிறது. அவரது நினைவுகளுடன் எங்களது அரசியல் பணி தொடரும்!
– தஞ்சை இராவணன்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.