Wednesday, April 23, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கா : பூர்வகுடி மக்கள் மீது போலீஸ் தாக்குதல் தொடர்கிறது !

அமெரிக்கா : பூர்வகுடி மக்கள் மீது போலீஸ் தாக்குதல் தொடர்கிறது !

-

north dakota police shoot
முன்பு நாய்களை அனுப்பினார்கள். இன்று போலீஸ் நாய்களை பாய விட்டிருக்கிறார்கள்.

மெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் சுமார் 18,000 கோடி ரூபாயில் டகோட்டா ஆக்சஸ் பைப்லைன் எண்ணெய் திட்டம் வர இருக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தங்களது நீர் வளம், நில வளம் அழிக்கப்படும் என அங்குள்ள பூர்வகுடி மக்கள் போராடி வருகிறார்கள். இதன் பொருட்டு அங்கே ஒரு தங்குமிடம் அமைத்து போராடி வருகிறார்கள்.

அந்த முகாமை குறிவைத்து ஆயுதந்தாங்கிய போலிசார் புகுந்து தாக்கியிருக்கின்றனர். கடந்த 28.10.2016 வியாழனன்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள் தானியங்கி துப்பாக்கிகள் பொருத்திய வாகனங்களில் சென்றிருக்கின்றனர். கண்ணீர் புகை குண்டு, மிளகு கலவை, ரப்பர் குண்டுகள், குதிரைப்படை என அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் போலீசால் கையாளப்பட்டன.

மனித உயிர்களின் மேல் எண்ணெய் குழாய் நிறுவனத்தின் இலாபத்தை உத்திரவாதப்படுத்தும் வேலையை போலீசார் செய்வதாக போராடும் மக்கள் குமுறலுடன் தெரிவிக்கின்றனர். எனினும் போலீசை எதிர்ப்பதில் அந்த மக்கள் துவண்டு போய்விடவில்லை.

போலீஸ் அணிவகுப்பை தடுக்கும் வண்ணம் வடக்கு டகோட்டா தேசியநெடுஞ்சாலையில் கார்களை நிறுத்தினர். பழம்பொருட்களை போட்டு எரித்து மறித்தனர். துப்பாக்கியால் சுட்டதாக இரண்டு பேர்களையும், நடுவழியில் தங்களை பூட்டிக் கொண்டு ஒரு கனரக வாகனத்தை நிறுத்தியதாக நால்வரையும் என மொத்தத்தில் 141 மக்கள், போலீசால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

போலீசின் இந்த தாக்குதல் அணிவகுப்பின் பின்னே டகோட்டா எண்ணெய் நிறுவனத்தின் கிரேன்களும், புல்டோசர்களும் இயங்கிக் கொண்டிருந்தன. பழங்குடி மக்களின் இடுகாடான இந்த இடத்தில்தான் கடந்த செப்டம்பர் 3, 2016 அன்று இந்த நிறுவனம் தனது பாதுகாவலர்களை நாய்களுடன் அனுப்பி மக்களை தாக்கியது.

அடக்கமுறைக்கு அஞ்சாமல் போராடும் பூர்வகுடி அமெரிக்க மக்கள்.
அடக்கமுறைக்கு அஞ்சாமல் போராடும் பூர்வகுடி அமெரிக்க மக்கள்.

இப்படி பெரும் எண்ணிக்கையில் மக்கள் கைது செய்யப்பட்டவுடன், அமெரிக்காவின் பழங்குடி மக்கள் புரூக்ளினில் இருக்கும் ஹிலாரி கிளிண்டனின் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் கிளிண்டன் தரப்பு அவர்களை சந்திக்க மறுத்து விட்டது. போலீசும் அங்கிருந்து அகலாவிடில் கைது செய்வோமென அச்சுறுத்தியது. ஹிலாரி கிளிண்டனது தேர்தல் பிரச்சாரத்தில் இத்திட்டம் பற்றிய கூறப்பட்ட வாக்குறுதிகளில் எதுவுமில்லை என்று விமரிசிக்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான பில் மிகெய்பின்.

தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்குவதற்கென்றே வடக்கு டகோட்டா அதிகாரிகள் இதுவரை எழுபது கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றனர். பூர்வக்குடி அமெரிக்கர்களின் போராட்டத்தை அடுத்து அதிபர் ஒபாமா இத்திட்டத்திற்கான மாற்று வழியை அமெரிக்க இராணுவம் ஆய்வு செய்து வருகிறது என்று கூறியிருக்கிறார். இது போராடும் மக்களின் போராட்டத்தை தணிப்பதற்கான உத்தி என்றே மக்கள் கருதுகின்றனர். இல்லையெனில் இத்தகைய பெருந்திரள் கைது எதற்கு என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் ஒபாமாவின் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனோ இதுகுறித்து குறிப்பாக பேச மறுக்கிறார்.

நாளைக் கடத்தி எண்ணெய் திட்டத்தை நிறைவேற்றுவதே இவர்களின் திட்டம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முன்பு நாய்களை அனுப்பினார்கள். இன்று போலீஸ் நாய்களை பாய விட்டிருக்கிறார்கள். ஆனால் பூர்வகுடி அமெரிக்கர்களின் இந்த போராட்டம் அமெரிக்க அரசின் நோக்கத்தை நிறைவேற்ற விடாது. அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள்!

மேலும் படிக்க :