Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.ககருப்புப் பண நபர்களிடம் உண்டியலோடு கெஞ்சும் மோடி !

கருப்புப் பண நபர்களிடம் உண்டியலோடு கெஞ்சும் மோடி !

-

சுயவிளம்பர மோகத்தில் திளைக்கும் மோடிஅரசு, தனது புதிய சாதனையாக பல்லாயிரம் கோடிகளுக்குக் கருப்புப் பணத்தை மீட்டு விட்டதாக இப்போது ஆரவாரமாக விளம்பரப்படுத்தி வருகிறது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள ”ஐ.டி.எஸ். எனும் வருமானம் அறிவிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.65 ஆயிரம் கோடிக்கும் மேலாக கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு எந்த அரசும் இந்த அளவுக்கு அதிகமான கருப்புப் பணத்தை மீட்டதில்லை” என்று பெருமிதம் கொள்கிறார் பா.ஜ.க. தலைவர்அமித் ஷா.

Hunter_Modibharosa-post”இதற்குமுன் காங்கிரசு அரசாங்கம் 1997-ஆம் ஆண்டில் கொண்டுவந்த வீ.டி.ஐ.எஸ். எனும் திட்டத்தின்கீழ் ரூ.30,000 கோடி அளவுக்குத்தான் கருப்புப் பணம் வெளியே வந்தது. ஆனால் முந்தைய ஆட்சியாளர்களின் சாதனைகளை விஞ்சும் வகையில், எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவில் கருப்புப் பணம் வெளியே வந்து மோடி அரசின் திட்டம் மிகப் பெரிய வெற்றியைச் சாதித்துள்ளது” என்று பூரிக்கிறார் அருண் ஜெட்லி.

முன்பு இந்திராகாந்தி ஆட்சியின்போதும், பின்னர் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதும் தானாக முன்வந்து கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக்கொள்ளும் திட்டங்கள்அறிவிக்கப்பட்டன. முந்தைய திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றிவிட்டு, அதே வழியில்தான் இந்த சூரப்புலிகளும் இப்போது கருப்புப்பண மீட்பு நாடகத்தை நடத்தியுள்ளனர்.

மோடி அரசு அறிவித்துள்ள ஐ.டி.எஸ். திட்டத்தின்படி, 2016 செப்.30-ஆம் தேதிக்குள் வருமான வரி 30%, அபராதம் 15%  – ஆக மொத்தம்  45% தொகையைக் கட்டிவிட்டு இதுவரை கணக்கில் காட்டாத சொத்துக்களைக் கருப்புப்பணப் பேர்வழிகள் சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம்;  அபராதத் தொகையை அடுத்த ஆண்டுக்குள் மூன்று தவணைகளில் செலுத்த சலுகை தரப்படும்; அவர்களைப் பற்றிய எந்தத் தகவலையும் அரசு வெளியிடாது; எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

இதன்படி, இப்போது 64,275 பேரிடமிருந்து ரூ.65,200 கோடி தொகை வசூலிக்கப்பட்டதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக ஒரு கருப்புப்பணப் பேர்வழியிடமிருந்து ஒரு கோடி ரூபாய்தான் வசூலாகியிருக்கிறது. இதிலே, ஒரு தனிநபரிடமிருந்து மட்டும் 10,000 கோடி ரூபாய் கிடைத்ததாம். அந்த நபர் யார் என்று தெரியவில்லை.

தனியார்மய – தாராளமயமாக்கத்துக்குப் பிறகு, கடந்த 20 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே கருப்புப் பணம் பூதாகரமானதாக வளர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ பாதியளவுக்குக் கருப்புப் பணத்தால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே கூறுகின்றனர். இந்நிலையில், ஒரு பெரு நகரத்திலேயே கருப்புப்பணப் பேர்வழிகளிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் இத்தனை கோடிகளுக்கும் மேலாகக் கைப்பற்ற முடியும். ஆனால், நாடு தழுவிய அளவில் வேட்டை நடத்தி சராசரியாக ஒரு கருப்புப்பணப் பேர்வழியிடமிருந்து ஒரு கோடியைத்தான் மோடி அரசு வெளியே கொண்டுவந்திருக்கிறது.

மாதத்துக்கு 2 கேசு கொடுங்கண்ணே என்று கள்ளச்சாராய வியாபாரிடம் மாமூல் வாங்கும் போலீசுக்காரன் பேரம் பேசுவதைப்போலத்தான், மோடி கும்பலின் கருப்புப்பண மீட்பு நாடகமும் நடந்துள்ளது. வருமானவரி அதிகாரிகள் கருப்புப்பண முதலாளிகளைப் பார்த்துப்பேசி, உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது, கொஞ்சம் பெரிய மனது வைத்து ஒத்துழையுங்கள், பிரதமரின் லட்சியக் கனவை நிறைவேற்றுங்கள் என்று கெஞ்சி உண்டியல் வசூலைப்போல கேட்க, அவர்களும் தருமம் போடுவதுபோல கொஞ்சம் கருப்புப் பணத்தை கணக்கில் காட்டியிருக்கிறார்கள். இதற்குத்தான் இத்தனைஆரவாரக் கூச்சல்கள்!

உள்நாட்டில் கருப்புப்பண வேட்டையின் யோக்கியதை இப்படி சந்தி சிரிக்கும்போது, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கப் போவதாக மோடி அரசு அடித்த சவடால்களோ இன்னுமொரு கேலிக்கூத்து.

”வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்; அப்படி கொண்டுவரப்படும் கருப்புப் பணத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணத்தைப் போடுவோம்” என்று அண்டப்புளுகை அள்ளி வீசியது பா.ஜ.க. மோடியின் நூறுநாள் ஆட்சியில் ஒரு சல்லிக்காசு கருப்புப் பணத்தைக்கூட மீட்க முடியாமல் போனதோடு, கருப்புப்பண பேர்வழிகள் வெளிநாட்டில் பதுக்கியுள்ள சொத்துகளுக்கு வரி மற்றும் அபராதமாக 60% செலுத்தி இந்தியாவிற்குள் கொண்டுவரலாம் என்று மோடி கும்பல் சலுகை காட்டியபோதிலும், அதுவும் தோற்றுப்போய், அந்தத் திட்டமும் புஸ்வாணமாகிப் போய்விட்டது.

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டள்ள கருப்புப் பணத்தைப் பிடிப்பதுதான் எங்கள் கொள்கை. ஆனால், பாருங்கள் அதிலே சிக்கல் வந்துவிட்டது. இருந்தாலும், உள்நாட்டு கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டங்களை அறிவித்து அதிலே சாதனை படைத்துவிட்டோம் என்று இப்போது கூச்சமின்றி மார்தட்டிக் கொள்கிறது மோடி அரசு.

ஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப் பண மீட்பு – என்ற இரு முக்கிய வாக்குறுதிகளை வைத்துத்தான் மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவையும் அம்பலப்பட்டுப் தோற்றுப்போய்விட்டன.

மோடி என்றால் மோசடிப் பேர்வழி என்பதற்கு இவற்றைவிட வேறென்ன சான்று வேண்டும்?

– குமார்

___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க