Thursday, April 17, 2025
முகப்புஉலகம்அமெரிக்காசோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை !

சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை !

-

சோவியத் ஒன்றியத்தின் முக்கிய பிரச்சனையை நான் உணர்ந்து கொண்டேன்.   சோவியத் ஒன்றியத்தில், வாழ்க்கை சலிப்பூட்டுவதாக(bore) இருந்தது என்பதே அது. அங்கே அண்டை குடியரசுகளுடன் போர்கள் இல்லை, பிரிவினைவாதம் இல்லை, இன அழிப்பு இல்லை, இரவு நேர திடீர்ச் சோதனைகள் இல்லை, பொருளாதார நெருக்கடி இல்லை, கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம் இல்லை – சலிப்பு அதன் நேர்த்தியான வடிவில் இருந்தது.

ivanசோவியத் ஒன்றியத்தில், இன்று நாம் அறிந்துள்ள கலகத் தடுப்புப் போலீசு பிரிவு என்ற ஒன்று இருந்ததில்லை. சோவியத் ஒன்றிய வரலாற்றில் ஒரே ஒரு மக்கள் கலகம் நொவொசெர்காஸ்கில்(Novocherkassk) ஏற்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு சிறப்புப் படை பிரிவுகள் அங்கே இருந்திருக்கவில்லை. தண்ணீர் பீய்ச்சிகள், கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், குண்டாந்தடிகள் இல்லை; உண்மையில் இவை எதுவுமே இல்லை. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்குமாறு பணிக்கப்பபட்ட வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

ஜனநாயகத்தின் கோட்டையான அமெரிக்காவிலோ நிலைமை முற்றிலும் வேறுபட்டு இருந்தது. நியூ ஜெர்சியில் நடந்த கலகத்தில் சில நூறு பேர் கொல்லப்பட்டனர். 1992-ஆம் ஆண்டு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டனர். பால்டிமோரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் சடலமாயினர். நான் பாதிக்கப்பட்டவர்களின் துல்லியமான எண்ணிக்கையை குறிப்பிடாததற்கு உலகின் மிக உயர்ந்த ஜனநாயக அரசாங்கம் கலகங்கள் குறித்த தரவுகளை தணிக்கை செய்துள்ளது என்று பொருள். இவை போல டஜன் கணக்கில் மேலும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

நான் அமெரிக்காவில் தினசரி நிகழ்வாகிவிட்ட நிராயுதபாணியான மக்கள் போலீஸ் அதிகாரிகளால் படுகொலை செய்யப்படுவதைப் பற்றி பேசவில்லை. மேற்சொன்ன அனைத்தும் தண்ணீர் பீய்ச்சிகள், கவசம், குண்டாந்தடிகள், கண்ணீர்ப்புகை, கையெறி குண்டுகள், குருடாக்கும் லேசர் கதிர்கள், ரப்பர் தோட்டாக்கள் போன்ற பல ஜனநாயக கருவிகளின் ஆதரவுடன் நடந்துவருகின்றன.

சோவியத் ஒன்றியத்தில், வாழ்க்கை சலிப்பூட்டுவதாக இருந்தது. சோவியத் ஒன்றியம் உடைந்த உடனேயே கேளிக்கை (Fun) துவங்கிவிட்டது. ஆர்மேனியர்கள், அஜர்பைஜானியர்கள் மீது கரபாக்குக்காக (Karabakh) போர்தொடுத்தனர், டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் (Transnistria) போர் மூண்டது, ஜார்ஜியர்கள் மீதான இன அழிப்பு அப்காசியா(Abkhazia) மற்றும் தெற்கு ஒசெட்டியா(South Ossetia) முழுவதும் பரவியது. செசென்ய தீவிரவாதிகள் மத்திய ஆசியாவில் இருந்து மனித கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தலுடன் இணைந்து உருவாகினர், கிரிமினல் கும்பல்கள் அதிவேக விகிதத்தில் பெருகத் தொடங்கின, மற்றும் பல.. இவை உண்மையில் மிகவும் கேளிக்கையாக (கிளுகிளுப்பாக) இருந்தது.

அமெரிக்காவை யாருமே உடைக்க முயலாத போது, அமெரிக்கர்கள் நிலைமையை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். மற்றொரு நாட்டை – யூகோஸ்லாவியா – உடைத்து சிதறச் செய்தனர். அவர்கள், செர்பியாவின் மீது குண்டு வீசினர். கொசோவாவில் ஒரு ஜிகாதிய உறைவிடத்தை  உருவாக்கினர். வேறு சில நாடுகளில் படையெடுத்து, பல லட்சம் மக்களை படுகொலை செய்தனர். மற்ற பல நாடுகளில் சதித்திட்டமிட்ட ஆட்சி கவிழ்ப்புகளை நடத்தினர். மேலும் உலகம் முழுவதும் கூடுமான வரை பற்பல இராணுவ தளங்களை கட்டினர். அமெரிக்கா அடுத்ததாக எந்த நாட்டின் மீது படையெடுக்கும் என்பதில் கூட ஒருவர் துணிந்து தனது பணத்தை பந்தயம் கட்டலாம். எல்லாம் மிகக் கேளிக்கையாக இருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த இலவச அடுக்கு மாடிக் குடியிருப்பு, இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் மற்றும் உடல்நல பராமரிப்பு இல்லங்களுக்கான இலவச நுழைவுச்சீட்டு போன்ற சலிப்பூட்டுபவைகளுடன் இம்மொத்த கேளிக்கைகளையும் ஒருவர் ஒப்பிட்டுவிட முடியுமா? இப்போதெல்லாம், மக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் கடன்களை உயர்த்தியும், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு அடமானம் வைத்தும், சுகாதாரக் காப்பீடு செலுத்தியும் கேளிக்கையடைகிறார்கள். மேலும் இந்த அனைத்து கேளிக்கைகளுக்கும் ஈடுகொடுக்க இரண்டு அல்லது மூன்று பணியிடங்களில் வேலையும் செய்கின்றனர்.

உக்ரைனிலும் கூட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் நீண்ட காலமாக  வாழ்க்கை மிக சலிப்பாக இருந்தது. அங்கு குற்றக் கும்பல்களிடையே மோதல்கள், மிரட்டி பணம் பறிப்பது போன்றவை இருந்திருந்தாலும், அவை சலிப்படைய வைத்தன. உக்ரேனியர்களிடம் உள்நாட்டுப் போர்களோ, இன அழிப்போ எதுவும் இல்லை.  மக்களுக்கு இரவில் தங்கள் சமையலறைகளில் வைத்துப் பேசிக்கொள்ள எதுவும் இல்லை.

மைதான் கலவரத்தினூடாக(Maidan Riots) கேளிக்கை வந்து சேர்ந்தது. உள்நாட்டுப் போர் வந்தது. உக்ரைனியர்கள் ஒவ்வொரு மூலையிலும் புடினின்(Putin) ஒற்றர்களை தேடியலைவது தொடங்கியது. பொறோஷென்கோ(Poroshenko) “எனக்கு நிறையப் பணம் கொடுங்கள்” என்ற தனது மிகப்பெரிய உலகச் சுற்றுப்பயணதிற்கு சென்றார் (சுற்றுப்பயணம் மிக வெற்றிகரமானதாக இருந்தது; பொறோஷென்கோ அதை நீட்டிக்க திட்டமிட்டுள்ளார்). இறுதியாக உக்ரைன் குடிமக்கள் பேசிக்கொள்வதற்கு ஏதோ சிலவிசயங்கள் கிட்டின. உதாரணமாக, ரஷ்ய எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுமான பணியின் மூலமாக யாட்சென்யுக்(Yatsenyuk) எத்தனை மில்லியன்களைத் திருடுவார்.

இப்போது, மத்திய கிழக்கின் முரண்பாடுகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்று மற்றொரு உலகப் போருக்கு கட்டியம் கூறுகின்றன. மில்லியன் கணக்கான அரபு அகதிகள் ஐரோப்பாவையே மூழ்கடிக்கின்றனர். சோவியத் யூனியன் இல்லாமல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக மாறிவிட்டது என்று ஒருவர் உணராமல் இருக்கவே முடியாது.

நன்றி: பிராவ்தா- இவான் சோலோவ்யோவ் (Ivan Solovyov)
தமிழாக்கம்: நாசர்