மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையை அம்பலப்படுத்தி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரச்சாரம் செய்து, நாடகம் போட்டனர். மறுநாள் இப்போராட்டத்தை மாணவிகள் குத்தாட்டம் என வக்கிர புத்தியுடன் எழுதியது தினமலர்.

தினமலரின் இந்த பொறுக்கித்தனத்தை அறிந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரண்ட மாணவர்கள் தினமலரை தீயிட்டு கொளுத்தி அந்த தீயில் பறையை காய்ச்சி எடுத்துக் கொண்டு தினமலருக்கு எதிரான போராட்டத்தை துவங்கினர். தினமலரோ மூன்றாவது நாள் சிறிதும் தயக்கமின்றி அதே பல்கலைக்கழக வளாகத்திற்குள் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ என்கிற பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சியை நடத்தியது.
இது மாணவர்களுக்கு மேலும் கோபமூட்டியது. நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு முன்பு திரண்ட மாணவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பள்ளி மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தினமலரை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்தனர். தனது விழாவுக்கு வந்திருந்தவர்களிடமே தான் அம்பலப்பட்டுக் கொண்டிருந்ததால், யாரும் வெளியே செல்ல முடியாதபடி அரங்கின் வாயிலை மூடினர். நிகழ்ச்சி முடியும் வரை மாணவர்கள் தினமலரை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்துகொண்டிருந்தனர்.
இந்த போராட்டங்களுக்கு பிறகும் மறுப்பு செய்தி வெளியிடாத தினமலருக்கு பாடம் புகட்டும் வகையில் 24-11-16 அன்று அதிரடியாக தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட மாணவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்தனர். அதன்படி சரியாக காலை பதினோரு மணியளவில் மாணவர்கள் தினமலரின் திமிரை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசுக்கு தகவல் பறந்தது. போலீசார் வந்தனர். அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் மறுத்ததையடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கைது செய்ய முயன்றதை அடுத்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களை தரதரவென இழுத்துச் சென்று வாகனங்களில் ஏற்றினர். இப்போராட்டத்தில் ஒரு மாணவியும் கலந்துகொண்டார். அவரையும் ஆண் காவலர்களே இழுத்துச் சென்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் மாணவர்களிடம் ஆய்வாளர் சமாதானம் பேசினார். ஆர்ப்பாட்டம் பண்றதுன்னா வள்ளுவர் கோட்டம், கலெக்டர் ஆபீஸ் எல்லாம் இருக்கு, பர்மிசன் வாங்கிட்டு அங்கே போய் பண்ணுங்க என்றார். அங்கே பண்ணினா தினமலருக்கு கேட்குமா சார் என்றார் ஒரு மாணவர். இங்கே எல்லாம் பண்ணக்கூடாது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்றார்.

மதியத்திற்கு மேல் மாணவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
தமிழ், திராவிடம், பகுத்தறிவு போன்ற வார்த்தைகளை கேட்டாலே தினமலருக்கு பற்றி எரிகிறது. தமிழகத்தின் பெரும்பாலான கட்சி, அமைப்புகளிடம் இந்த குப்பை பத்திரிக்கை செருப்படி வாங்கியிருக்கிறது. இப்போது மாணவர்களும் சாத்துகிறார்கள். சமூக அக்கறை, ஜனநாயக பண்பு, தமிழ் உணர்வு கொண்ட அனைவரும் மாணவர்களின் இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.
தினமலர் என்கிற இந்த குப்பை, மாணவர்கள் விசயத்தில் மட்டும் இவ்வாறு நடந்துகொள்ளவில்லை. பல்வேறு தரப்பு மக்களையும் கேலி, கிண்டல் செய்வது, உழைக்கும் மக்களின் போராட்டங்களை சிறுமைப்படுத்துவது, சமூகத்தில் பல்வேறு கட்சி அமைப்புகள் நடத்தும் முக்கிய போராட்டங்களை எல்லாம் திசைதிருப்புவது அல்லது அவதூறு செய்வது, ஆளும் வர்க்கத்திற்கெதிரான மக்களின் கோபங்களை திசைதிருப்புவது மற்றும் பொய், புரளிகளை உண்மை போலவும், பா.ஜ.க, மோடி கும்பலின் மக்கள் விரோத கொள்கைகளை மக்கள் நலனுக்கானவை என்றும் கூசாமல் பொய்களை செய்தியாக்கி வருகிறது. எனவே தமிழ் மக்கள் தினமலர் என்கிற இந்த ஆபாச குப்பையை புறக்கணிக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
– சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்.