கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா சிறப்புத் தொடர் பாகம் 1
“ஒரு திருடன் உங்களை முத்தமிட்ட பிறகு பற்களை எண்ணிக் கொள்ளுங்கள்; ஒரு திருடனின் எழுத்தை படித்த பிறகு உங்களின் விழுமியங்களை சரி பாருங்கள்!”.
– புது மொழி
_____________________________________________________
-
2.0 முதல் பார்வை – கருப்பின் வெள்ளை அழகு

காலம் நவம்பர் 20, 2016. இடம் மும்பை புறநகரில் இருக்கும் யாஷ் ராஜ் ஸ்டூடியோ. அலைஅலையான விசில்கள், விளிப்புகளுடன் ரசிகர்கள். தமிழகத்திலிருந்தும், தாரவியிலிருந்தும் தர்ம சேவையாக அவர்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம். அலைக்கு அணை போட்டுக் கொண்டிருந்தார்கள் பவுன்சர்கள்.
மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பால் தேசமே அலைந்து திரிந்து கொண்டிருந்த போது அங்கே ஒரு பெரும் கூட்டம் எப்போது சொர்க்க வாசல் திறக்குமென்று அலை பாய்ந்து கொண்டிருந்தது. பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் கிடைத்தற்கரிய அந்த தருணத்தை தவறவிடாமல் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர். ஆம். அது 2.0 எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வு.
ஷங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரனின் இரண்டாவது பாகம் 2017 தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இது 2.0 என்ற பெயரில் அழைக்கப்படும் அத்திரைப்படத்தின் முதல் பார்வை விழா. எந்திரனுக்கு சன் குழுமத்தின் கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350 கோடி ரூபாயை செலவழிக்கிறார்.

எந்திரனில் எழுந்த ரோபாவான சிட்டி, இரண்டாவது பாகத்தில் இன்னும் அதிக வீரியத்துடன் செதுக்கப்பட்டு ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் 3 டி படமாக வெளிவருகிறது. முதல் பாகத்தின் இரு பரிமாணத்தை விட இரண்டாம் பாகத்தின் முப்பரிமாணம் தரத்திலும், செலவிலும், நுட்பத்திலும் பிரம்மாண்டமாகத்தான் இருந்தாக வேண்டும். அதிகம் குவிந்திருப்பதால் மட்டுமே பணம் தனது பளபளப்பை பராமரிக்க இயலாது. மேலும் மேலும் தன்னைப் பெருக்கிக் கொள்வதே நிதிக்கலையால் மிளிரும் பணத்தின் ஆகச்சிறந்த அழகு.
முதல் பாகத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சிரமம் இருந்தது என்றால் இரண்டாம் பாகத்தில் தோளில் எவரெஸ்ட் சிகரத்தை சுமந்து கொண்டு உச்சியில் ஏறும் மீப்பெரும் சிரமமும் பொறுப்பும் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் விழாவில் தெரிவித்தார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் பாமரருக்கு விருப்பப்பட்டு பாரம் சுமக்கும் திரைக்கலைஞனின் வலி தெரியாதாம்.
இந்தி எந்திரனான ரோபோவின் முன்னோட்ட விழாவும் இதே மும்பையில்தான் நடந்தது. இரண்டு பாகங்களும் இந்தியாவின் வணிக தலைநகரமான மும்பையில் மட்டுமே அறிமுகப்படுத்தும் அருகதை கொண்டவை.
விழா விருந்தினர்களை பாதுகாத்து அழைத்துச் செல்வதை விஸ்கிராப்ட் விழா மேலாண்மை நிறுவன ஊழியர்களும், பவுன்சர்களும் ஒய்யாரமான மிடுக்குடன் செய்கின்றனர். அரங்கினுள்ளே மூன்று பெரிய திரைகளில் கணினியின் பைனரி மொழி மினுமினுக்கிறது. 2.0 விழா ஏற்பாடுகளுக்கான செலவிலேயே ஒரு டஜன் படங்களை தயாரித்து விடலாம் என்கின்றார்கள், ஆங்கில ஊடக சினிமா பத்திரிகையாளர்கள்.
பாலிவுட்டின் இயக்குநர் – தயாரிப்பாளர் கரண் ஜோகர் அனைவரையும் அறிமுகப்படுத்துகிறார். இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத நாள் என்கிறார். இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ரஹ்மான், கலை இயக்குநர் முத்துராஜ், இந்தி உரையாடலை எழுதிய அப்பாஸ் டயர்வாலா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, புகைப்படக் கலைஞர் நீரவ் ஷா, கண்கட்டும் சிறப்புக் காட்சி மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாச மோகன், பாடலாசிரியர் மதன் கார்கி, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, நடிகர்கள் ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் அனைவரும் மேடை ஏறுகின்றனர். ஒருவர் மட்டும் கொஞ்சம் வெட்கத்துடன் இடது வரிசையில் நிற்கிறார். அவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவர்தான் 2.0-வின் தமிழ் வசனகர்த்தா. இன்னொருவரும் படக்குழுவின் ஓரத்தில் பணிவுடன் நிற்கிறார். குறுந்தாடியுடன் புன்னகை தவிர வேறு பாவனை அறியாத முகத்துக்குச் சொந்தக்காரரான அவர் லைக்கா மொபைல் அதிபர் சுபாஷ் கரண்.

அரங்கின் வெளியே ஆஜானுபாக மும்பை மாடல் ரூபாலி சூரி படக்குழுவினரை அறிமுகம் செய்து பேசுகிறார். அவரை அண்ணாந்து பார்த்து பேசும் தமிழக படக்குழுவினரில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது ஆளுமையை தெரிவிப்பதற்கு சிரமப்படுகிறார். ஒய்யாரமான சூழலில் அவரது உடைந்த ஆங்கிலம் எதைப் பேசுவது, எதைத் தவிர்ப்பது என்று தடுமாறுகிறது. பெருந்தொகையே ஊதியமாக வழங்கப்பட்டிருந்தாலும் படைப்புக் களத்தின் வழி தனது ஆகிருதியை காட்டும் பூரண நிறைவு இங்கில்லை. அதே நேரம் உலகை விட்டும் போக இயலாது. ஜெயமோகன் முகத்தில் அந்த முரண்பாடு தத்தளிக்கிறது.
மும்பை பெண்ணிடம் சொதப்பினாலும் மும்பை இயக்குநரிடம் வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படத்தில் பங்கேற்பதை பெருமை அடைகிறேன் என்று தொண்டைக்குள் இருந்து வெளியேற்றிவிட்டார். கூடவே தான் எழுத்தாளர்தான், சிறந்த பேச்சாளர் இல்லை என்றார். தயாரிப்பாளர் சுபாஷ்கரண் பெருந்தொகையை இந்த படத்தில் கொட்டியிருந்தாலும் எப்படி அவரால் சிரிக்க முடிகிறது என்று கரண் ஜோகர் கேட்கிறார். கதை பிடித்திருந்தது, இயக்குநருக்கு ஓகே சொல்லிவிட்டேன், வெறொன்றுமில்லை என்கிறார் சுபாஷ்கரண். இப்படி ஒரு தயாரிப்பாளரா என்று வியக்கிறார் கரண் ஜோஹர்.

முதல் பாகமான எந்திரனின் அறிமுக விழா 2010-ம் ஆண்டில் நடந்த போது இருந்த நகைச்சுவையும், ஊடகங்களை அருகில் அனுமதித்த பாங்கும் இப்போது இல்லை என்று வருத்தப்படுகிறது scroll ஸ்க்ரால் எனும் ஆங்கில ஊடகம். படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் நிதியுலக மாந்தர்கள்தான் அருகில் அமர வைக்கப்பட்டனர் என்றும் அந்த ஊடகம் கூறுகிறது. என்ன இருந்தாதலும் பட்ஜெட் இரண்டு மடங்காகும் போது வர்த்தக பிதாமகர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை தவறென்று சொல்ல முடியாது. சொல்லப் போனால் ஊடகங்களின் வர்த்தகமே சினிமாக் கடவுளை நம்பித்தானே?
எந்திரனில் வில்லனாக வந்த ரோபோ சிட்டி அரங்கின் முன்னிருக்கையில் ஹோலோ கிராம் வடிவில் அமர்ந்து கொண்டு கரண் ஜோகருக்கு பதிலளிக்கிறது. அதிலொரு கேள்வி “பணமதிப்பிழக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?” உடனே சிட்டிக்கு குரல் கொடுத்த ரஜினி “சிவாஜி”யிலேயே கருப்புப் பணத்தை சூறையாடிவிட்டேன் என்கிறார்.
ஆம். கருப்புப் பணம். நஞ்சை முறியடிக்க நஞ்சிலிருந்துதான் மருந்து தயாரிக்க முடியும் என்றால் கருப்புப் பணத்தை விளக்கி படமெடுக்க கருப்புப் பணமும் தேவைப்படாதா?
-
கருப்பின் களிப்பில் கருப்புப் பண ஒழிப்பு எப்படி ? ஜெயமோகன் விளக்கம்
“ஆமாம், பணம் ஒரு போதும் மகிழ்ச்சியை சம்பாதிக்காதுதான். ஆனால் ஒரு மிதி வண்டியில் இருந்து கொண்டு அழுவதை விட ஒரு பி.எம்.டபிள்யூ காரில் அழுவது வசதியானது அல்லவா?” – புது மொழி
அதே நவம்பர் 20-ம் தேதி. மும்பையில் ஏதோ ஒரு நட்சத்திர விடுதியில் தங்கயிருக்கும் போது எழுத்தாளர் ஜெயமோகன் “மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்” என்ற கட்டுரையை அவரது தளத்தில் வெளியிடுகிறார்.
இந்தக் கட்டுரையில் அவர் கருப்புப் பணம் குறித்து பொருளாதார அறிஞர்களே திடுக்கிடும் வண்ணம் பல கருத்துக்களை தெரிவிக்கிறார். கருப்புப் பணம் பெருகாமல் நிலம், தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யப்படும். அதற்கும் வழியற்ற போது பதுங்கி விடும். கள்ளப்பணத்தை பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவில் இறக்கிவிடுவது குறித்தும் அவர் எச்சரிக்கிறார்.
சிறு வணிகர்களும், சிறு தொழிலதிபர்களும் வரி கட்டாமல் ஏய்ப்பது குறித்து கண்டிக்கும் ஜெயமோகன், இவர்களே இந்தியாவின் வரி வருமானத்தை சூறையாடும் கொள்ளையர்கள் என்கிறார். இவர்களே மோடியின் அறிவிப்பை எதிர்த்து பெருங்கூச்சிலிடுவதாகவும், இவர்களுக்காகவே ஊடகங்களும், அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் பேசுவதோடு நீலிக் கண்ணீரும் விடுகிறார்கள், இது ஆகப்பெரும் கேவலமில்லையா என்று அறம் பாடுகிறார்.
உள்ளூர் கருப்புப் பணத்தின் மிகச்சிறு பகுதியே வெளிநாட்டுக் கருப்புப் பணமாக சென்று அதுதான் ஹவாலாவாக இங்கு திரும்புகிறதாம். வெளிநாட்டு கருப்பு மீட்கும் வரை உள்நாட்டில் கருப்பை மீட்க கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? ஆவேசத்துடன் கேட்கிறார் ஜெயமோகன்.
வங்கி, ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க முடியவில்லை என்று ஊடகங்கள்தான் குழப்புகின்றன என்பவர் ஆதாரமாக மும்பையில் இரண்டு நாட்களில் அவரும், சென்னையில் அவர் மகனும் எந்த பிரச்சினையுமின்றி பணம் எடுத்த கதையை சொல்கிறார்.
ஸ்க்ரோல் எனும் இணைய மஞ்சள் பத்திரிகை மக்கள் கூட்டம் கூட்டமாய் சாவதாக எழுதுவதை சபிக்கிறார். வங்கி வரிசையில் மாரடைப்பால் இறந்து போனால் அது அரசின் படுகொலையாகுமா என்று கேட்கிறார். ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்தால் அந்த ஆஸ்பத்திரி மேல் நடவடிக்கை எடுக்காமல் மோடி கொலைகாரர் என்று பழிசுமத்துவது ஏன் என்கிறார்.
இன்னும் பல அவர் எழுதியிருக்கிறார். நுண்ணுணர்வு இல்லாதவர்களும் ஜெயமோகனது அகக்கிடக்கையை அறிந்து கொள்வதற்கு இதுவே போதுமானது. இவையெல்லாம் அவர் போகிற போக்கில் எழுதிவிடவில்லை.
இது குறித்து பல்வேறு தொழிலதிபர்களிடம் பேசிவிட்டே எழுதுகிறேன் என்கிறார். யார் அந்த தொழிலதிபர்கள்? விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வீற்றிருக்கும் கோவை திருத்தலத்தில் ஆட்சி செய்யும் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் குழுமம் முதலான அதிபர்களா? கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்யிக்கு அலைய வேண்டிய அவசியம் அவருக்கு ஒருபோதுமில்லை. அந்த அதிபர் சாட்சாத் லைக்கா மொபைலின் சுபாஷ்கரண் அல்லிராஜாவாகவே இருக்கலாம்.
மெதுவாக செயல்படும் குறைபாடுள்ள ஒரு பெண் வங்கி ஊழியரைப் பார்த்து கொதிக்கச் செய்த அவரது நுண்ணுணர்வு உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கார்ப்பரேட் அதிபரின் புன்னகையையும் அந்நகையை சம்பாதிப்பதற்கு அவர் கடந்து வந்த வலிகளையும் பார்த்த மாத்திரத்திலேயே தரிசித்திருக்கலாம். உலகமெங்கும் ஆட்சி செய்யும் மூலதனத்தின் மேன்மைகளை ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு புரியும் விதத்தில் விளக்குவது சுபாஷ்கரணுக்கு கடினமான ஒன்றல்ல. மேற்குலகில் அகதியாகச் சென்று குடியுரிமை பெற்று இங்கிலாந்தின் பணக்கார வரிசையில் இடம் பிடிப்பதும் எளிதான ஒன்றல்ல.
தொலைத்தொடர்புத் துறையிலே பெரும் ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேற்குலகில் ஒரு ஈழத்தமிழன் சாதித்திருக்கிறான். அந்த சாதனையின் வரலாறு என்ன?
-
சுபாஷ்கரன் அல்லிராஜா – ஒரு தொழிலதிபர் சினிமா எடுக்கிறார்!
சுபாஷ்கரன் அல்லிராஜா 1972-ம் ஆண்டில் பிறந்தார். பிரிட்டனின் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபராக அறியப்படும் இவர் 2006-ம் ஆண்டில் ஆரம்பித்த லைக்கா மொபைல் நிறுவனம் இன்று 21 நாடுகளில் சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களுடன் செயல்படுகிறது. வடக்கு இலங்கை முல்லைத்தீவில்தான் சுபாஷ்கரன் வளர்ந்தார்.
சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இவரது “லைக்கா தயாரிப்பு நிறுவனம்” திரைப்படங்களை தயாரிக்கிறது. கத்தி திரைப்படத்தை 2014-ல் வெளியிட்டவர்கள் தற்போது 2.0 படத்தை அதாவது இந்தியாவிலேயே அதிக செலவு பிடிக்கும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

லைக்கா நிறுவனத்தின் திரைப்பட சாதனையை வியந்து கூறும் தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கை அவரது சொத்து மதிப்பை ஒரு பில்லியன் யூரோ, கிட்டத்தட்ட 7,20,000 கோடி ரூபாய் என்று கூறுகிறது (ஐரோப்பிய ஊடகங்கள் 1.5 பில்லியன் யூரோ என்கின்றன). இது அவரது நிறுவனத்தின் மதிப்பு என்றால் அவரது தனிப்பட்ட “பாக்கெட் மணி” சொத்தின் மதிப்பு 1,500 கோடி ரூபாயாகும். ஒரு மாத வாழ்க்கைச் செலவுகளுக்காக இரண்டு வேலைகள் செய்யும் ஈழ அகதிகள் வாழும் இங்கிலாந்து மண்ணில் தனது துணைவியோடு சிக்வெல், எஸ்ஸெக்சில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான மாளிகையில் வசிக்கிறார். 2011 அக்டோபருக்குள் லைக்கா நிறுவனம் 250 இடைத்தர சந்தை நிறுவனங்களில் 35-ஆவது இடத்தை பிடித்திருப்பதாக தி சண்டே டைம்ஸ் தெரிவிக்கிறது.
இன்று 44 வயதாகும் அவர் லைக்கா மொபைல் நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் இருக்கிறார். பிரிட்டனில் அவர் 640-ஆவது பணக்காரராக பட்டியலிடப்பட்டு வாழ்கிறார். பிரிட்டனில் இருக்கும் ஆசிய தொழில் முனைவோர் சாதனையாளராக அவர் 2010-ல் கௌரவிக்கப்பட்டு தங்க விருதை பெற்றார். இதே போன்று வேறு சில விருதுகளையும் தொழில் கூறும் ஐக்கிய ராஜ்ஜியம் (united kingdom) எனப்படும் இங்கிலாந்தின் நல்லுலகம் அவருக்கு அளித்திருக்கின்றது.
இலங்கை நாட்களில் அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி பட ரசிகராக வளர்ந்ததை தி இந்துவின் நேர்காணலில் கூறுகிறார். தொலைத்தொடர்பு எமது தொழில், திரைப்படம் தயாரிப்பது எமது ஆசை என்கிறார். இலங்கை தமிழர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர்கள் என்கிறார். இது என்னமோ உண்மைதான். விடுதலைப் புலிகள் முதல் பாமர மக்கள் வரை ஈழம் முழவதும் தமிழ் சினிமாவைக் கொண்டாடுகிறது. புலிகள் செயல்பட்ட காலத்தில் அவர்களது ஆதரவாக ஐரோப்பாவில் இருந்து வெளிவந்த ஈழ முரசு பத்திரிகையில் தமிழ்ப்படங்கள் வெளியாகும் விளம்பரங்களை சாதராணமாகக் காணலாம். இந்த படங்களை புலிகளே விநியோகஸ்தராக வெளியிட்டிருக்கின்றனர். சீமானைப் போன்றவர்கள் கூட திரைப்படத்துறையில் இல்லாதிருந்தால் இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது.

தி இந்துவின் நேர்காணல் நடக்கும் போது அவர் எந்திரன் 2.0-வில் ரஜினி நடிப்பதால் அவரை சந்திக்க சென்னை வந்திருந்தார். ஒரு கார்ப்பரேட் முதலாளி என்பதைத் தாண்டி அவருக்கு ரஜினி சந்திப்பு நிச்சயம் ஒரு பக்தன் கடவுளைப் பார்த்த பரவசத்தை கொடுத்திருக்கும். ரஜினியோ இயக்குநர் ஷங்கர் போட்டிருக்கும் மீப்பெரும் பட்ஜெட்டின் தயாரிப்பாளரை காலைப்பிடித்து வணங்கும் மனநிலையில் இருந்திருப்பார். அவ்வகையில் இது இரு பெரும் கடவுளர்களின் சந்திப்பாக இருந்திருக்கும். பரபஸ்பர ஆதாயம்.
“இந்திய அரசாங்கம் தொலைத்தொடர்பில் தாராளமயாக்கத்தை முற்றிலும் கொண்டு வருவதற்காக காத்திருப்பதாகவும், செல்பேசி மெய்நிகர் வலைப்பின்னல் Mobile phone Virtual Network இன்னமும் இந்தியாவில் ஆரம்பிக்கப்படவில்லை என்பதால் நாங்கள் இந்திய சந்தையில் கண்டிப்பாக நுழைவோம்” என்கிறார் அவர். இந்தியச் சந்தை யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பெரியது என்பதால் போட்டியெல்லாம் பிரச்சினையில்லை என்கிறார்.
எந்திரன் 2.0-வில் அவர் 350 கோடி ரூபாயை எப்படி துணிந்து முதலீடு செய்கிறார்? இயக்குநரால் வழிநடத்தப்படும் படங்களையே எடுக்க விரும்புவதாக கூறும் சுபாஷ்கரன், ஒருசரியான திட்டத்தை கொண்டிருக்கும் ஒரு படத்திற்கு தங்களது ஆண்டு ஒதுக்கீடான 1000 கோடி ரூபாயையும் தேவைப்பட்டால் ஒதுக்குவொம் என்று சாதாரணமாகக் கூறுகிறார். இந்த முதலீடு தமிழ் – இந்திய சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்லுமாம். எனில் அடுத்த படம் கமலா? தமிழத் திரைப்படத்துறையில் ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது என்றால் இந்நேரம் நமது சினிமா மாந்தர்களின் ஃபேஸ்புக் – டவிட்டர் வலைப்பக்கத்தில் நாளுக்கொரு லைக்கா சுபாஷ்கரண் செய்தி வருவது உறுதி. அவ்விதம் லைக்காக்காவிற்கு இலட்சக்கணக்கான ரசிகர் லைக்கும் நிச்சயம்.
கத்தி திரைப்படத்திறகு வந்த எதிர்ப்புகள் பிழையான தகவல்களால் உருவானவையாம். அதனால்தான் லைக்கா வெளியிட்ட “நானும் ரவுடிதான்” “விசாரணை” படங்களுக்கு எதிர்ப்பில்லை என்று அவர் பதிவு செய்கிறார். பாரம்பரிய ஊடக நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டம் உண்டா என்று கேட்டதற்கு தான் அடிப்படையில் ஒரு தொழிலதிபர், மீடியாவில் நுழைவது அரசியல் ரீதியாக தவறு, அரசியலில் தான் எப்போதும் நடுநிலை வகிக்கவே விரும்புவதாகவும் கூறுகிறார். என்ன ஒரு ஜனநாயக உணர்வு பாருங்கள்!
ஒரு வேளை சாதாரண மசாலா படங்களுக்கே இப்படி காசைக் கொட்டுபவர் பல்வேறு முதலாளிகளே நேரடியாக ஊடகங்களை கையிலெடுத்திருக்கும் காலத்தில் தனது நிறுவன நலனிற்காக ஏன் ஒரு ஊடகத்தை ஆரம்பிக்க கூடாது? அப்படிப்பட்ட பின்னணித் தகவல்கள் ஏதுமின்றி இந்து பத்திரிகையின் செய்தியாளர் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார். எதிர்பாருங்கள்..விரைவில் லைக்கா தமிழ் தொலைக்காட்சியை பார்ப்பதற்கு…
இருப்பினும் லைக்கா மொபைல் குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் ஒரு கார்ப்பரேட் கிரைம் தில்லருக்கு உரியவை. இங்கிலாந்து உள்ளிட்டு இந்த ஊடகங்கள் அனைத்தும் சுபாஷ்கரண் நிறுவனத்தை சர்ச்சைக்குரிய லைக்கா மொபைல் என்றே அழைக்கின்றன.
-
லைக்கா மொபைல் – ஒரு சர்வதேச திருட்டுக் கம்பெனி!

சர்ச்சையின்றி ஏது ஒரு முதலாளி? என்று மட்டும் எளிமைப்படுத்தி விடாதீர்கள். பத்தாண்டுகளில் ஒரு பில்லியன் யூரோவை நிறுவன மதிப்பாக கொண்டிருப்பது எப்படிப் பார்த்தாலும் சாத்தியமில்லை. அது நிச்சயம் இருண்ட பக்கத்தைக் கொண்டிருக்கும்.
நவம்பர் 2015-ல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவிடும் பொருட்டு 6.6 மில்லியன் பவுண்ட் நிதியை – கிட்டத்தட்ட 56 கோடி இந்திய ரூபாயை அளிப்பதாக அறிவிக்கிறார்.
கன்சர்வ்வேட்டிவ் கட்சிக்கு இலங்கை மீதான இந்த திடீர் பாசத்தின் பின்னணி என்ன? இந்த அறிவிப்புக்கு முந்தைய வருடத்தில் அக்கட்சிக்கு அங்கே வாழும் தொழிலதிபரான சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு மில்லியன் பவுண்டை அதாவது 8.5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கிறார். அவர் பிறந்து வாழ்ந்த வடக்கு இலங்கைக்குத்தான் இங்கிலாந்து உதவி செய்வதாக அறிவித்தது.
காமரூன் கட்சிக்கு அவர் கொடுத்த நன்கொடையும் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்த உதவியும் இப்படி பிரச்சினைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுவதற்கு காரணம், சுபாஷ்கரன் நிறுவனத்தின் வரி ஏய்ப்பும், சட்ட விரோத வருமானமும் ஆகும். இலங்கை அரசின் போருக்கு பிறகு 2009-ம் ஆண்டில் பிரிட்டன் அரசு மனிதாபிமான உதவிகளை செய்வதாக அறிவித்தது. லைக்கா மொபைல் நன்கொடை விவகாரத்திற்கு பிறகு இந்த உதவி சூடு பிடித்தது ஏன்?
2011-ம் ஆண்டில் டோரிக் கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) லைக்கா மொபைலிடமிருந்து பெற்ற தொகை 1,76,000 பவுண்ட் – கிட்டத்தட்ட ஒன்றரை கோடி இந்திய ரூபாய். இதே நன்கொடை 2012-ம் ஆண்டில் இரண்டு கோடியே 13 லட்சம் இந்திய ரூபாயாகவும் உயர்ந்தது. இதே ஆண்டில் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்திருக்கும் தொகை 47 கோடி இந்திய ரூபாயாக உயர்ந்தது. 2013-ம் ஆண்டு வரை இங்கிலாந்தின் உதவி 87 கோடி இந்திய ரூபாயை தொட்டது. இதே உதவி ஈராக்கைப் பொருத்த வரை மூன்றில் ஒரு பங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஈராக்கின் அதிபர்கள் யாரும் இலண்டனில் தொழில் செய்து டோரிக் கட்சிக்கு நன்கொடை கொடுக்குமளவு இல்லை.

நவம்பர் 2013-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த காமரூன், 1948 இலங்கை சுதந்திரத்திற்கு பிறகு வடக்கு இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவராக பேசப்பட்டார். அப்போது இலங்கை அரசு சுயேச்சையான நீதி விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு மீதான போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றார். அப்போதே கண்ணிவெடி நீக்கத்திற்காக முல்லைத் தீவு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு 18 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார். அவரது அறிவிப்புக்களைப் பார்த்து ராஜபக்சே பயந்து நடுங்குவதாகவும், ஐ.நா சபை அவரைப் பிடித்து கூண்டிலேற்றி தண்டிக்கப் போவதாகவம் ஈழ ஆர்வலர்கள் இங்கேயும், புலத்திலும் பேசினர்.
மார்ச் 2014-ல் பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹூகோ ஸ்வைர், இலங்கையில் கைது செய்யப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் குறித்து கவலை தெரிவித்தார். அதற்கு 13 நாட்கள் கழித்து காமரூன் இலங்கைக்கு 56 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவிக்கிறார். இதே காலத்தில்தான் டோரிக் கட்சியினர் லைக்கா மொபைல் நிறுவனத்திடமிருந்து எட்டரை கோடி ரூபாயையும், சுபாஷ்கரனிடமிருந்து தனிப்பட்ட முறையில் 85 இலட்சம் ரூபாயையும் பெறுகின்றனர். கம்பெனி சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் இரு நன்கொடைகள்!
இதற்கு பிறகு 2015 இலங்கை பொதுத் தேர்தலுக்கு முந்தை இரண்டு மாதத்தில் காமரூன் இலங்கையின் அதிபர் மைத்ரிபால் சிரிசேனாவை சந்தித்து தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய நிலம் குறித்து வாக்குறுதியைப் பெறுகிறார். இதற்கு ஆறு நாட்கள் கழித்து டோரிகள் லைக்கா மொபைலிடமிருந்து 3 கோடியே 17 இலட்சம் ரூபாயை பெறுகின்றனர்.
மார்ச் 2015-ல் சுபாஷ்கரன் டோரிகளின் கட்சி நிதி சேகரிப்பு “பிளாக் அண்ட் ஒயிட்” நிகழ்வில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் டோரிக் கட்சி தலைவர்களோடு இரவு விருந்தில் சிக்கன் சாப்பிடுவது, காலையில் ஓடுவது, என்று தலைக்கேற்ற முறையில் நன்கொடை வைத்திருக்கிறார்கள். அதில் 1990-களில் நாடாண்ட மார்க்கரெட் தாட்சரின் வெண்கலச் சிலையை ஒரு கோடியே என்பது இலட்ச ரூபாய் கொடுத்து வாங்குவோருக்கு அனைவரும் கைதட்டி ஆரவரிப்பார்கள். சுபாஷ்கரனும் அந்த ஆரவாரத்தைப் பெறுகிறார்.
சரி, இலங்கைக்கு உதவி அளிப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்ததே அதில் இதுவரை எவ்வளவு பணம் இலங்கையில் எங்கே என்னவாக சென்றடைந்திருக்கிறது என்று மெயில் பத்திரிக்கை இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்ட போது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டார்கள். ஏன் பதிலளிக்கவில்லை? மனிதாபிமானத்திற்கு கணக்கு கேட்காதீர்கள் என்றா? இல்லை அந்த அறிவிப்பில்லாம் வந்த நன்கொடைகளுக்கான வெறும் மொய்யா?
லைக்கா மொபைல் நிறுவனம் 2011-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 18 கோடி ரூபாயை டோரி கட்சிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இதில் நான்கில் ஒரு பங்கு நன்கொடைப் பணம் 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது எந்திரனின் 2.0 பாகத்தின் முதல் பார்வை நடந்த காலத்தில்.
போரிஸ் ஜான்சன் என்பவர் 2012-ம் ஆண்டில் இலண்டன் மேயராக போட்டியிட்ட போது லைக்கா மொபைல் தனது கால் சென்டரை அவருக்கு இலவசமாக பயன்படுத்த அளித்தது. இப்படி உள்ளூர் கவுன்சிலர், மேயர் முதல் நாடாளும் பிரதமர் வரை லைக்காவின் ‘விருந்தோம்பல்’ கொடிகட்டிப் பறந்திருக்கிறது.
-
லைக்கா மொபைல் கம்பெனியின் நிழல் வருமானம்
இதே காலத்தில்தான் லைக்கா மொபைலின் மூன்று ஊழியர்கள் பை நிறைய பணத்தை வைத்துக் கொண்டு இலண்டன் தபால் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது போலீஸ் விசாரணைக்கு வந்தது.
BuzzFeed எனும் செய்தி ஊடகத்தின் வீடியோ பதிவு விசாரணைப்படி லைக்கா மொபைல் நிறுவனம் மூன்று ரொக்க கூரியர்களின் மூலம் பை நிறைய பல்லாயிரம் மதிப்பிலான பணத்தை அன்றாடம் கடத்தியிருக்கிறது.
இதே காலத்தில் அதாவது ஜூன், 19, 2016 இல் லைக்கா மொபைலின் 19 ஊழியர்கள் பிரான்சில் ஒரு சோதனையின் போது கைது செய்யப்பட்டனர். வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணம் சேர்ப்பிற்காக இந்த கைது நடந்தது. பாரிசில் கைது செய்யப்பட்ட 19 பேர்களில் லைக்கா மொபைல் இயக்குநர் அலைன் ஜோகிமெக், அங்கே உள்ள யூத சமூகத்தின் முன்னணியான தலைவரும் கூட. அங்கே இஸ்ரேலுக்கு ஆதவாக ஒரு சேவை நிறுவனத்தை B’nai B’rith நடத்தி வருகிறார். இந்த புகாரில் லைக்காவின் மோசடி 13 மில்லியன் பவுண்ட் அதாவது 111 கோடி ரூபாயாகும். இந்தியாவில் சங்க பரிவாரங்களுக்கு பிரியத்திற்குரிய இஸ்ரேல் ஈழத்தமிழ் தொழிலதிபரான சுபாஷ்கரணின் கிச்சன் கேபினெட்டிலும் இருக்கிறது.

இதைத் தொடர்ந்து லைக்கா மொபைலின் பாரிஸ் தலைமையகத்தில் நடந்த சோதனையில் பண மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடவே நகரின் பல்வேறு குடியிருப்பு மற்றும் வணிக முகவரிகளில் சோதனை நடத்தப்பட்டு பண மூட்டைகள் பிடிபட்டன. லைக்கா மொபைலின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.
இந்த பணமூட்டைகளெல்லாம் வழக்கமான வங்கி இருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது என்று லைக்கா மொபைல் கூறியது. ஆனால் Buzzfeed செய்தி தளத்தின் விசாரணை உதவிப்படி பிரெஞ்சு அதிகாரிகள் மூலம் சட்டவிரோத பணம் பல்வேறு நிழலான நிறுவனங்களிடமிருந்து பிரான்சின் லைக்கா கம்பெனி கணக்கிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை குற்ற நடவடிக்கைகள் மூலம் திரட்டப்பட்ட பணமாகும். Buzzfeed புலனாய்வின் படி 19-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல பத்து மில்லியன் யூரோக்களை லைக்கா வங்கிக் கணக்கில் கொட்டியிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் சுபாஷ்கரணது முன்னால் அம்பானி கூட போட்டி போட முடியாது.
லைக்கா இப்படி திருட்டுத்தனம் செய்யும் போதுதான் அதற்கு ஆதரவளித்த டேவிட் காமரூன் சட்டவிரோத மற்றும் குற்ற நடவடிக்கை பணத்தை முறியடிப்போம் என்று உலகளாவிய ஊழல் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் முழங்கினார்.
Buzzfeed புலனாய்வின் படி லைக்கா மொபைல் பிரிபெய்டு அட்டைகளை கள்ள சந்தையில் விற்று அந்த பணத்தை பினாமி நிறுவனங்களின் ரசீதுகளாக மாற்றி பல சட்ட விரோத ரொக்க பரிவர்த்தனைகளை செய்துள்ளது. Buzzfeed தகவல்களின் படி லைக்கா மொபைல் நிறுவனத்தின் சொந்த ஆடிட்டர்களே கடந்த இரண்டு வருடங்களாக சுமார் 646 மில்லியன் பவுண்ட் அதாவது 55 ஆயிரம் கோடி ரூபாய் லைக்கா மொபைல் கணக்கில் வராமல் பத்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். லைக்காவினுடைய வர்த்தக வலைப்பின்னல் சிக்கலானதும், குழப்பமானதும் கூட என்கிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விர்ச்சுவல் மொபைல் நிறுவனமான லைக்கா, சர்வதேச வான்வெளி அலைக்கற்றைகளை மொத்தமாக வாங்கி இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒப்பீட்டளவில் மலிவான பிரீபெய்டு கார்டுகளாக விற்கிறது. அதனுடைய வருடாந்திர வர்த்தகம் உலக அளவில் 1.5 பில்லியன் பவுண்டாகும் – ஒரு இலட்சத்தி 28 ஆயிரம் கோடி ரூபாய். ஐக்கிய அரசனா பிரிட்டனில் சட்டபூர்வமான கார்ப்பரேட் வரியை தவிர்ப்பதற்காக அதனுடைய பணத்தை வரியில்லா சொர்க்கமான போர்ச்சுகீஸ் அருகில் இருக்கும் மதீரா தீவுகளுக்கு கொண்டு செல்கிறது.
Buzzfeed Labour MP Tom Blenkinsop told the Huffington Post UK: “The Prime Minister knows his party has received over £420k from a company closely associated with the Sri Lankan regime. He was obviously so concerned that his own MPs were recently prevented from visiting there.
The MP, who has written directly to the Prime Minister, added: “So in the interests of transparency I want to know if the Prime Minister is going to investigate why his party has received over £420k from this company so closely associated with the Sri Lankan government.”
விசாரணையைத் தொடர்ந்து இங்கிலாந்தின் லேபர் கட்சி எம்.பியான டாம் பிளென்கின்சாப் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் லைக்கா மொபைலிடம் வாங்கிய நன்கொடைகளை முடக்க வேண்டும், அந்த நிறுவனத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரினாலும் கன்சர்வேடிவ் கட்சி அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
இடையில் பிரான்சில் கைது செய்யப்பட்ட 19 பேரில் 9 பேர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதிதல் எட்டு பேருக்கு பிணை கிடைத்து, ஒருவர் நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார். லைக்கா மொபைல் சோதனையில் 1,30,000 யூரோ ரொக்கமாகவும், 8,50,000 யூரோ வங்கிக் கணக்கிலும் கைப்பற்றப்பட்டது. இது போக வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணம் பல மில்லியன் யூரோ இருக்கும் என இப்பத்திரிகை தெரிவிக்கிறது.
சரி, இத்தனை ஆதாரங்கள் இருந்தென்ன? லைக்கா எனும் திருட்டுக் கம்பெனியின் கருப்புப் பணத்தையே தனது ஊதியமாக பெற்றோமென அறம் ஸ்பெஷலிஸ்ட்டான ஜெயமோகன் ஒத்துக் கொள்வாரா? மனப்பால் குடிக்காதீர்கள்!

மோடியை ஆதரித்து அவர் எழுதிய கருப்புப் பணக் கட்டுரையிலேயே தெளிவாக சொல்லியிருக்கிறார்.
மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் – ஜெயமோகன் கட்டுரை இணைப்பு
மல்லையாவின் கிங்பிஷர் நஷ்டம் அடைவதற்கு காரணம் அவர் பெங்களூரு பெரிதும் வளரும் என்று நம்பி ஏமாந்தார், அதற்கு காரணம் அரசியல்வாதிகளே அவரல்ல என்கிறார். வங்கிப் பணம் கொடுத்து நடந்த பிழைக்கு அனைவரும் கூட்டுப் பொறுப்பு என்பதால் மல்லையாவை தப்பி ஓடிய அயோக்கியன் என்று சொல்வது மூடத்தனம் என்கிறார். அதாவது இது திருட்டு அல்ல தோல்வியடைந்த தொழில் என்கிறார். ஆகவே சுபாஷ்கரனது சபையிலே ஆஸ்தான புலவராக இருந்து அவர் லைக்காவின் குற்றச் செயல்களுக்கு அறம் போட்ட சட்டை போட்டு அழகு பார்ப்பார், எழுதுவார்.
ஆனால் உண்மை அவரது கணினி விசைப்பலகையில் இல்லை. லைக்காவின் குற்றங்கள் கார்ப்பரேட் ஊடகங்களாலும், பல அரசுகளாலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதலாளித்துவம் வழங்கியிருக்கும் “அபராதம் கட்டி விட்டால் எந்த திருட்டுப் பணமும் முறையான பணமாகிவிடும்” என்ற ஒழுக்கப்படி லைக்கா இன்னும் பீடு நிடை போடுகிறது. ஆனால் அது பீடை நடை என்பதையே மேற்கண்ட விவரங்கள் காட்டுகின்றன.
இதன்படி பார்த்தால் லைக்காவின் தொழிலில் பல்வேறு குற்றச் செயல்கள் இருக்குமென்று தெரிகிறது. அது ஹவாலாவா, மற்ற நிறுவனங்களின் வரி ஏய்ப்பிற்கான உதவியா, போதை பொருள் விற்பனையா, ஆயுத விற்பனையா, புலிகள் உள்ளிட்ட கைவிடப்பட்ட பெருந்தலைகளின் சொத்தா என்று நமக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் செய்யும் அரசியல் நன்கொடைகளும், தைரியமாக பிடிபடும் மோசடிகளும் நிச்சயம் இவர்களது பின்னே பெரும் நிழலான நடவடிக்கைகள் இருப்பதை காட்டுகின்றது.
சரி, இந்த நிழல் உலகைத் தவிர்த்து இவர்களது மொபைல் கம்பெனி எப்படி நடத்தப்படுகிறது?
அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்….
- தொடரும்.
– இளநம்பி
(வினவு புலனாய்வு குழு உதவியுடன்)
ஆதாரங்கள்:
- At ‘2.0’ teaser launch, displays of ambition, Rajinikanth raves and plenty of superlatives
- Tamil businessman gave the Tories more than £1m in donations in the year before David Cameron announced £6.6m in aid to Sri Lanka
- ‘Telecom our primary business, making movies my passion’
- Offices of Conservative Party’s biggest donor Lycamobile are raided by French police and nine people are charged on suspicion of money laundering and tax fraud
- Subaskaran Allirajah