Monday, April 21, 2025
முகப்புகலைகவிதைஅண்ணலும் நோக்கினான் அதானியும் நோக்கினான்

அண்ணலும் நோக்கினான் அதானியும் நோக்கினான்

-

ராம ராஜ்ஜியம் !

வால்மீகி ராமாயணம்
கம்ப ராமாயணம்
வரிசையில்…
கார்ப்பரேட் ராமாயணம்,

‘அண்ணலும் நோக்கினான்
அதானியும் நோக்கினான்’
வில்லை வளைப்பான்
என
வேடிக்கைப் பார்த்தவர்களின்
விலா எலும்பு
முறிக்கப்பட்டது.

modiகாட்டுக்கு போக வேண்டியவர்கள்
பங்குச் சந்தையில் ஜாலியாக
வீட்டுக்கு போக வேண்டியவ‍ர்கள்
வங்கி வரிசையில் மூளியாக!

வோடா போனின் செருப்பு
நாடாளும் நிலையில்
ஓடாத ஆயிரம், அய்நூறால்
மக்கள்
சந்தேக மையில்.

அன்னிய மூலதனத்துக்கு
யாகம்
அண்ணாச்சி முதலுக்கு
சாபம்!
விசுவாமித்திர கட்டளைக்கு
வில் பிடித்து
அய்ம்பத்தாறு அங்குல மார்பொடு
அடியாள் ராமன்.

டிஜிட்டல் வர்ணாஸ்ரமம்
துல்லியமாக
வேலை செய்கிறது,…

வாதமே தேவையில்லை
வங்கி கல்விக் கடனுக்காக
மாணவ அசுரர்களை
சாகடி!

வங்கியே முன்வந்து
வாராக் கடனாக
மல்லையா தேவர்களுக்கு
தள்ளுபடி!

ஆயிரம் தான்
தவமிருந்தாலும்
சம்புகனுக்கு செல்லாது,
ஒரே ஒரு செல்லில்
அம்பானிக்கு செல்லும்!

மறைந்திருந்து
அம்பு விட்டதால்
பாவப்பட்ட
வாலி மட்டும் காலி.

முன்னரே
அருளப்பட்டதால்
பா.ஜ.க. சுக்ரீவர்களுக்கு
ஜாலி!

காவி ஜடாயுக்கள் கையில்
கட்டுக் கட்டாக
புது இரண்டாயிரம்

ஆவியிழந்து துடிக்கும்
சிறுதொழில்களை
கொத்துக் கொத்தாக
பறிக்கும் பயங்கரம்.

சீதை
சுவிஸ் வங்கியில்

அனுமன் கையில்
பார்ட்டிசிபேட்டரி
கணையாழி

ராமன்
அம்பை விடுவதோ
பாரத வங்கியில்

என்னடா இது
இராமாயணம் என்றால்

“கார்ப்பரேட் யுகத்தில்
இதுதான் கதை
காவலுக்கு நானிருப்பேன்
இனத்தையே வதை”- என
முன்னிற்கும்  வைகோ.வைப் பார்த்து
மூர்ச்சையாகிறான் வீடணன்.

சீதையை மீட்க
சிறிது காலம்
சிரமப்படத்தான் வேண்டும் – என
சிரமமே இல்லாமல்
நிதி மூலதன ரிஷிகள்
பட்டாபிஷேக கொண்டாட்டத்தில்…

சீதையை மீட்க
ஊரையே கொளுத்துகிறான் அனுமன்…
அவர்களுக்கு
‍அள்ள அள்ளக் குறையாத  அயோத்தி
அகப்பட்டவர்களுக்கு
‘அய்யோ… தீ’!

துரை. சண்முகம்