திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், தளுகை பஞ்சாயத்துக்கு உட்பட்ட முருங்கப்பட்டி அருகில் வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. (VETRIVEL EXPLOSIVES PVT LTD) மொத்தம் 11 பிளாண்ட் (Unit) இயங்கி வருகிறது.
இங்கு சுமார் 250-லிருந்து 270 -பேர் தொழிலாளார்கள் வேலை செய்கிறார்கள். இந்த ஆலையிலிருந்து வெடிபொருட்கள் 27 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வெடிமருந்து – சுரங்கம் தோண்டுதல் – கிராணைட் உடைத்தல் – கல் உடைத்தல் போன்ற வேலைகளுக்கு பயன்படுகிறது. இந்த ஆலையில் ஒரு மாதத்திற்கு ரூ.20கோடி லாபம் வருகிறது. ஆனால் இந்த ஆலையில் நிரந்தர தொழிலாளார்கள் 13பேர் மட்டுமே உள்ளனர்.
மீதமுள்ள அனைவரும் ஒப்பந்த தொழிலாளார்கள். MLC, KLC என்ற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். நிரந்தர தொழிலாளார்களுக்கு ரூ.18000 சம்பளம், காண்ட்ராக்ட் ஊழியார்களுக்கு தினம் ரூ.200-லிருந்து 300- வரை கொடுக்கப்படுகிறது. தொழிலாளார்களுக்கு ESI வசதி இல்லை. PF இதுவரை ஒரு மட்டுமே முறை பிடித்தம் செய்துள்ளதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு அதுப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த ஆலையில் இதுவரை 10முறைக்கு மேல் ஆசிட் பாதிப்பு நடந்துள்ளது. பலமுறை தொழிலாளர்கள் தங்கள் குறைகளை அங்கு உள்ள ஒரே ஒரு தொழிற்ச்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்திடம் (அ.தி.மு.க சங்கம்) முறையிட்டுள்ளனர் ஒன்றும் நடக்கவில்லை. மேலும் காண்ட்ராக்ட் ஊழியர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது என முறையிட்டாலும் உடனே தகவல் நிர்வாகத்துக்கு வந்து, சம்பந்தப்பட்ட சங்க உறுப்பினர்களை கூப்பிட்டு மிரட்டுவது தான் நடக்கும்.
இந்த ஆலையில் வெடிப்பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் ஒரு அறையில் 200கிலோ வைத்துக்கொள்ளலாம் என்ற பாதுகாப்பு விதி இருந்தாலும் 2000கிலோ வரை சட்ட விரோதமாக வைத்திருக்கின்றனர். இந்த முறைகேடுகளை எந்த அதிகாரியும் கேள்வி கேட்டது இல்லை. தொழிற்சாலை ஆய்வாளர் இதுவரை பலமுறை வந்தாலும் இவற்றை கண்டுகொண்டதில்லை.
இந்நிலையில் தான் மிகப் பெரும் விபத்து இந்த ஆலையில் நடை பெற்றுள்ளது. இவ்வாறு நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் தான் டங்களது லாப வெறிக்காக பல உயிர்களை பலி வாங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் இந் நிறுவனத்தின் முதலாளி விஐயக்கண்ணன், மேலாளார் பிரகாசம், ராஐகோபால் பாதுகாப்பு பிரிவு மேலாளார் ஆனந்தன் ஆகிய 4பேர் மீது 304(2), இந்திய வெடிபொருள் சட்டம் த(1)ஏ, 9(பி), (1) (ஏ), வெடிபொருள் சட்டம் 3,4 (பி) 5 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்தவார்களிள் ஒருவரின் உடல்கூட முழுமையாக கிடைக்கவில்லை. ஒருதலை, ஒரு கை, கால்-என கோறமான வெடி விபத்தின் எச்சங்கள் மட்டும் தான் கிடைத்துள்ளது. முழுமையான உடல்கள் கிடைக்காததால் அந்த நிறுவன வளாகத்தில் இருந்து இரண்டு பிடி மண்ணை அள்ளிக் கொண்டு வந்து வைத்து வீட்டீல் இறுதி சடங்கு செய்துள்ளார்கள் மக்கள். 19-பேர் இறந்ததாக அரசு அறிவித்துள்ளது. மேலும் அடிப்பட்ட 16-பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் 26- பேர் இறந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலை துவங்கும் பொழுது (தோட்டக் கலைத் துறைக்கு) விவசாய மேம்பாட்டிற்க்காக, பழச்சாறு கம்பெனி வைப்பதாக, பழத்தோட்டம் வைப்பதாக கூறிதான் நிலம் கையகப்படுத்தியுள்ளனர். 150-லிருந்து 200-ஏக்கர் நிலம் இருக்கும். ஆரம்பத்தில் ஏக்கர் ரூ.10,000-ம் முதல் ரூ.30,000வரை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். தளுகை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மந்தைவெளியில் புறம்போக்கு நிலத்தை 5ஏக்கர் எடுத்துக் கொண்டனர்.
இந்த ஆலை வந்ததிலிருந்து இங்குள்ள நிலத்தடிநீர் கெட்டு போய்விட்டது, தண்ணீர் உப்பு படிதல் அதிகம் ஆகிவிட்டது. ஆலை வருவதற்கு முன்பு இந்த பகுதி விவசாயம் செழித்து இருந்தது. அருகில் உள்ள மக்கள் இங்கு வந்து விவசாய வேலையில் ஈடுபடுவார்கள். இப்பொழுது மழையில்லை. விவசாயம் நசிந்து போயுள்ளது என்றனர்.
இங்குள்ள மக்கள் பலமுறை இந்த ஆலைக்கு எதிராக மனுக்கொடுத்து போராடி வந்துள்ளனர். ஆனால் வழக்கு எதுவும் பதியவில்லை என்கின்றனர்.
விபத்திற்கு பிறகு தன்னெழுச்சியாகதான் ஊர் மக்கள் முருங்கப்பட்டி, நாகநல்லூர், கொப்பம்பட்டி, பாதரர்பேட்டை, மங்கப்பட்டி, போன்ற ஊர்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கை – இந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும். இறந்தவார்களுக்கு அந்த ஆலையின் அருகில் நினைவிடம் உருவாக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
காவல்துறை மக்களை அடக்குவதிலே குறியாக செயல்பட்டுள்ளது. உங்களால் என்ன செய்ய முடியும் எனக்கூறி காவல்துறை போராடிய மக்கள், பெண்கள் எல்லாரையும் விரட்டி அடித்து, ஒருவரின் மண்டையையும் பிளந்துள்ளது.
இரண்டு ஊர்களில் உள்ள மக்களிடம் நேரடியாக சந்தித்து பேசியதில் இருந்து அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அரசியல் முன்னணியாளர் சிலர் இதுவரை சுமார்- 7 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் சரியான தலைமையின்றி – அவரர்களின் போராட்டம் தொடரமுடியாமல் உள்ளது.
ஆனால் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டின் மீது அமர்ந்துள்ளோம் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை. ஆனால் பலமுறை ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட வடுவும் அவர்களிடம் உள்ளது. அதனை சரி செய்ய புரட்சிகர அரசியலைச் சொல்லி அவர்களை புரட்சிகர அமைப்புகளின் பின்னால் அணிதிரளச் செய்ய வேண்டியுள்ளது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,திருச்சி.