Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஊழல் முதலைகளை அம்பலப்படுத்திய கரூர் தோழர்களுக்கு சிறை !

ஊழல் முதலைகளை அம்பலப்படுத்திய கரூர் தோழர்களுக்கு சிறை !

-

மிழகத்தில் வருமான வரி அதிகாரிகளின் சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அ.தி.மு.க. அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு, அலுவலகம், தலைமைச் செயலகத்தில் சோதனை மற்றும் மணல் மாஃபியா சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகளின் அலுவலகங்களில் சோதனையின் போது பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் மக்களின் பணமும், கட்டிக்கட்டியாக தங்கமும், விதிமுறைகளுக்கு மீறலான பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது வருமான வரித்துறை. இந்த சோதனைகளில் புதிய ரூ 2000 நோட்டுக்கள் இலட்சக்கணக்கில் கைப்பற்றப்படிருக்கின்றன. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் தோல்வி என்பதையே கைப்பற்றப்பட்ட இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் தெரிவிக்கின்றன.

ஒருபக்கம் அரசு அதிகாரிகள் மணல் மாஃபியா கும்பல் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்படும் அதே நேரத்தில் சாதாரண ஏழை எளிய மக்கள் வங்கிகள், ஏ.டி.எம். முன்பாக ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டை எடுப்பதற்காக நாள்முழுவதும் மணிக்கணக்கில் நின்று வருகிறார்கள். அதுமட்டுமின்றி ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றவர்களில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோ(ச)டியின் கூட்டாளிகளான சகாரா, பெல்லாரிரெட்டி, அதானி, அம்பானி, பிர்லா, போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடமும் மற்றும் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசின் பினாமிகளான ஷீலாபாலகிருஷ்ணன், சபீதா, டி.ஜி.பி.ராமானுஜம் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் எப்போது ரெய்டு என்று கேள்வி எழுப்பும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக 26.12.2016 அன்று கரூர் பேருந்து நிலையத்தில் காலை 6.30 மணியளவில் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

Exif_JPEG_420
சுவரொட்டியை தேடித்தேடி கிழித்துள்ள கரூர் காவல்துறை

உடனே பொங்கி எழுந்த கரூர் நகர போலீசார் சுவரொட்டிகளைத் தேடித்தேடி கிழித்தது மட்டுமல்லாமல் சுவரொட்டி ஒட்டிய தோழர் ராஜு, விக்னேஷ்வரன் ஆகிய இருவரை விசாரணை என்ற பெயரில், கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் டி.எஸ்.பி கும்மராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் போஸ்டரில் குறிப்பிட்டுள்ள நபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா? ஆதாரம் இல்லாமல் எப்படி போஸ்டர் ஒட்டலாம் என்று கேட்க, தோழர்கள், அவர்கள் கொள்ளையடித்தற்கான முகாந்திரம் ஊரே அறியும் போது நேரில் சென்று ஆவணங்களைக் கைப்பற்றி ஆதாரத்தை திரட்ட வேண்டியது அரசு, வருமான வரித்துறை மற்றும் போலீசார் வேலை, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே போஸ்டர் ஒட்டப்பட்டது என்று கூறினர்.

அதன்பின் நமது வழக்கறிஞர் சென்று கேட்டதற்கு, மேற்சொன்ன காரணத்தையே போலீசார் திரும்ப கூறி, அதற்கு ஊடகங்களில் வந்த செய்திகளை கொண்டே மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்திய இவர்கள் மீது வழக்கு போட முடியாது என்று விளக்கி கூறியும், டி.எஸ்.பி கும்மராஜா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மேலிடத்து உத்தரவு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு மேற்படி தோழர்கள் மீது இ.த.ச.பிரிவு 153 (a) எழுத்துமூலமாக அரசின்மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், r/w.4(1)TNOPP Act பொது சுவற்றில் அரசாங்க அதிகாரிகளை அவதூறு செய்ததாக கூறி பொய் வழக்கு பதிவு செய்தனர்.

தோழர்கள் கைது செய்த தகவல் அறிந்து திரண்ட தோழர்கள்
தோழர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து திரண்ட தோழர்கள்

இதனை கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கரூர் நகர காவல்நிலையம் முன்பு திரண்டு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தோழர்களை விடுவித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவே, ஏ.டி.எஸ்.பி. இளங்கோவன்,  மற்றும் இதர அதிகாரிகள் தோழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  கைது செய்தவர்களை விடுவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று போலீசாரை எதிர்த்து முழக்கம் இட, அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரளவே,  போலீசாருக்கும்  தோழர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வலுக்கட்டாயமாக போலீசார் போராட்டத்தில்  ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 35-க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மண்டபத்திற்குள்ளேயும் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்தால் மட்டுமே மதிய உணவு சாப்பிடுவோம், இல்லையென்றால் எங்களையும் சேர்த்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்று விடாப்பிடியாக போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில்  கைது செய்யப்பட்ட ராஜு, விக்னேஷ்வரன் ஆகிய தோழர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்.1-ல் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இன்றளவில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் லஞ்ச லாவண்யம், ஊழலில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான அரசு மற்றும் அதிகாரிகள் என கூறிக் கொண்டு, கோடி கோடியாக மக்கள் பணத்தை கொள்ளையடித்து பதுக்கி வருவதை பார்த்துக்கொண்டே, மக்களுக்கு இந்த அரசின் மீதான நம்பிக்கை இழந்து ஆங்காங்கே வங்கிகளின் முன்பும் சாலைகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஊழலில் திளைக்கும் அதிகார வர்க்கத்தை கைது செய் என்ற பேசினால் மோடியின் ஆசி பெற்ற காவல்துறைக்கு கோபம் வருகிறது. மோடியின் நடவடிக்கை யாருக்காக என்று இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு: 98941 66350

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க