Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சென்னை அரசுக் கருவூலம் முற்றுகை ! செய்தி - படங்கள் !

சென்னை அரசுக் கருவூலம் முற்றுகை ! செய்தி – படங்கள் !

-

RSYF NDLF Protest (1)“பாசிச மோடியின் 50 – நாள் கெடு முடிந்தது! உழைக்கும் மக்களின் துயரம் தீரவில்லை!” என்ற முழக்கத்தை முன் வைத்து புரட்சிகர அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் 29 டிசம்பர் 2016 அன்று நண்பகல் 12:00 மணி அளவில் சென்னை அண்ணா சாலை ஜெமினி பாலத்தில் இருந்து முழக்கமிட்டபடி பாரத ஸ்டேட் வங்கியின் மத்தியக் கருவூலக் கிளையை முற்றுகையிட்டனர். போராட்டத்தை முன்பே அறிந்துக்கொண்ட SBI நிர்வாகம் வங்கி அலுவலகத்துக்கு விடுமுறை அளித்தது.

தோழர்கள் சாலையில் அமர்ந்து “மோடி கேட்ட 50 நாட்கள் அவகாசம் முடிந்தது ! 400 கோடி கள்ளப்பணத்தை ஒழிக்கப்போவதாக சொல்லி 127 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய கருப்புப்பண ஒழிப்பு நாடகம் முடிவுக்கு வந்தது!” என முழக்கங்களை எழுப்பினர். வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் முழக்கங்களை ஆர்வத்துடன் நின்று கவனித்து சென்றனர்.

பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது,

“கடந்த 8 நவம்பர் 2016 நள்ளிரவுமுதல் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி  அறிவித்துவிட்டு ஜப்பானுக்கு சென்று புல்லட் ரயிலில் வலம் வந்தார். பின்னர் அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர் எனக் கூறிவிட்டு இந்தியாவிற்கு விமானம் ஏறினார்.

RSYF NDLF Protest (17)இந்தியா வந்ததும் கோவாவில் பொதுக்கூட்ட மேடையிலேயே மக்கள் படும் துன்பத்திற்காக வருந்துகிறேன் என்றும் கருப்புப் பணமுதலைகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி கண்ணீர்விட்டுக் கதறினார். 50 நாட்கள் அவகாசம் கொடுங்கள், எல்லா பிரச்சினைகளும் சரியாகும் என்று கூறினார். அதன் பின்னரும் மக்கள் பாதிப்பு தீரவில்லை எனில் நடுரோட்டில் வைத்து என்னை தூக்கிலிடுங்கள் எனக் கூறினார்.

மேலும் இந்த அறிவிப்பு வெளியானது முதல், பா.ஜ.க தலைவர்களும் அவர்களது ஊடக கூஜாக்களும் மக்கள் எங்கும் பாதிக்கப்படவில்லை எனப் புளுகி வந்தனர். பா.ஜ.க-வின் தமிழிசைசெளந்திரராஜன் மக்கள் இதனை ‘சுகமான சுமையாகத்தான் பார்கின்றனர்’ என்றார். இல.கணேசன் ’50- நாள் கழித்து மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் சட்டையைப் பிடித்து கேள்வி கேளுங்கள்’ என்றார்.

இந்த நிலையில் மோடி சொன்ன 50 நாள் கெடு முடிவடைந்த பின்னரும் வங்கிகளில் மக்கள் கூட்டம் குறையவில்லை. தங்களின் சொந்தப் பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு பிச்சைக்காரர்கள் போல வீதிகளில் நிற்கின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவோம். வங்கிகளை மீண்டும் மீண்டும் முற்றுகையிடுவோம். மக்கள் வங்கியில் செலுத்திய அனைத்து பணத்தையும் எடுக்கும் வரை போராட்டம் தொடரும்” என பத்திரிக்கையாளர்கள் மூலமாக மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

போராட்டத்தையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு விடுமறை விடப்பட்டது. சாலை மறியல், வங்கியை முற்றுகையிடுவது என ஒரு மணிநேரம் போர்க்குணமாக போராட்டம் நடைப்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது போலீசு தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றியது. இப்போராட்டத்தால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. பின்னர் தோழர்களை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சமூக நலக் கூடத்தில் அடைத்து வைத்தது.

போராட்டத்தின் முதல் அணியினர் கைதான பிறகு அடுத்த அணியாக பல தோழர்கள் அதே இடத்தை மீண்டும் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் திகிலடைந்த போலீசு அவர்களை கைது செய்து சமூக நல கூடத்தில் அடைத்ததோடு மீண்டும் போராட்டக்காரர்கள் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் SBI கருவூல அலுவலகத்தைச் சுற்றி போலீசு வாகனங்களை அரணாக அமைத்து யாரும் இல்லாத கட்டிடத்தை மீண்டும் காவல் காக்க துவங்கியது.

அண்ணா சாலையின் மையத்தில் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் நடக்கும் போது மோடி கும்பல் தூக்கி எறியப்படும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.