Monday, April 21, 2025
முகப்புசெய்திஅமெரிக்க நலனுக்காக வேலை நீக்கம் செய்யப்படும் வங்கதேச தொழிலாளிகள்

அமெரிக்க நலனுக்காக வேலை நீக்கம் செய்யப்படும் வங்கதேச தொழிலாளிகள்

-

கூலி உயர்வுக் கேட்டு வங்கதேச ஆடைத்தொழிலாளர்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களால் அமெரிக்க – ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஆடைகளை ஏற்றுமதிச் செய்யும் வங்கதேச ஆயத்த ஆடை தொழிற்துறை முடங்கியது. இதன் காரணமாக 1500-க்கும் அதிகமான தொழிலாளர்களை வங்கதேச ஆடைத்தொழிற்சாலைகள் வேலைநீக்கம் செய்துள்ளன.

bangaladesh_unionவங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியான அஷுலியா வங்கதேசத்தின் ஆடைத்தயாரிப்பு மையமாகும். கூலியுயர்வை முன்னிறுத்தி அஷுலியாவின் தொழிற்சாலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக் கொண்டாட்டங்களுக்கான ஆடை விற்பனையில் இது பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கேப் (GAP), ஜாரா(Zara) மற்றும் எச்&எம்(H&M) போன்ற மேற்கத்திய வியாபார நிறுவனங்கள் கவலை தெரிவித்து இருந்தன.

இந்தப் போராட்டங்கள் சட்டத்திற்குப் புறம்பானது என்று அஷுலியா பகுதி காவல்துறை கூறியது மட்டுமல்லாமல் 7 தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்டு 30-க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தைப் பதிவு செய்ததாகக் கூறி தொலைக்காட்சி நிருபர் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளதாக ஏ.எப்.பி(AFP) செய்தி நிறுவனம் 2016, டிசம்பர் 28 அன்று கூறியிருந்தது.

“எல்லா நிறுவனங்களும் தங்களது பழைய வேலைகளுக்குத் திரும்பி விட்டன மற்றும் 90 விழுக்காட்டு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பி விட்டனர்” என்று காவல்துறை உதவி கண்காணிப்பாளரான நூர் நாபி கூறினார். “சற்றேரக்குறைய 1500 தொழிலாளர்கள் முதலாளிகளால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகத்திற்குக் கட்டுப்படாத தொழிலாளர்கள் மீது முதலாளிகள் 5 வழக்குகள் தொடுத்துள்ளனர்” என்கிறார் அவர்.

ஆனால் 3500 தொழிலாளர்கள் வரை வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச ஆடை மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் கூட்டமைப்பு(Bangladesh Garment and Industrial Workers Federation) கூறியிருக்கிறது. அதிகாரவர்க்கத்தின் கட்டாயத்தினால் பல பத்து போராட்டத் தலைவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

போராட்டங்களை ஒடுக்கவும், தொழிலாளர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் சிறையில் அடைக்கவும் அதிகாரிகள் சர்ச்சைக்குரிய சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் (The Special Powers Act) பயன்படுத்துவதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவரான பாபுல் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கதேச ஆடைத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாதக்கூலியாக 5300 டகா($67) பெறுகின்றனர். இந்திய மதிப்பில் அது 4,547 ரூபாய் ஆகும். கூலியை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதாவது 16,000 டகாவாக அதிகரிக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை வங்காள ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம்(The Bangladesh Garment Manufacturers and Exporters Association ) நிராகரித்து விட்டது. அதன் எதிர்வினையாகத் தான் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

Bangladesh_Factoryவங்கதேச ஏற்றுமதியில் ஆடை உற்பத்தித்துறையின் பங்கு மட்டுமே 80 விழுக்காடாகும். வங்கதேசத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 16 கோடி. 30 பில்லியன் டாலர்கள் (23.47 இலட்சம் கோடி டகா) மதிப்பிலான வங்கதேசத்தின் ஆடைத் தொழில்துறை பல இலட்சக்கணக்கான வங்கதேச மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறது. இருந்தபோதிலும் குறைந்த கூலி, மோசமான உள்கட்டமைப்பு, பணிப்பாதுகாப்பின்மை என வங்கதேசத்தில் உள்ள 4500 ஆடைத் தொழிற்சாலைகளின் வரலாறு என்பது தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் கொடுந்துயரமாகவே இருக்கிறது.

2013 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் ராணா பிளாசா கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1130 தொழிலாளர்கள் தங்களது இன்னுயிர்களை இழந்தனர். அந்தக் கோர விபத்திற்குப் பிறகு உலகெங்கும் எழுந்த கண்டன குரல்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆடை நிறுவனங்களை அவர்களுக்காக ஆடைகளைத் தயாரிக்கும் வங்கதேச ஆடைத் தொழிற்சாலைகளின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்த கட்டாயப்படுத்தின. இந்தக் கட்டாயப்படுத்தல் ஒரு நாடகம் என்பதை மேற்குலகமும் சரி, வங்கதேசமும் நன்கு அறியும். அது உண்மை என்பதை தற்போதைய வேலை நீக்கம் நிரூபித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, உயிர் பலியாகும் வங்கதேசத் தொழிலாளர்களின் துயரங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. 2015 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2016 செப்டம்பர் மாதத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் வெடித்துச் சிதறி ஏற்பட்ட ஒரு கோரத்தீவிபத்தில் 34 தொழிலாளர்கள் தங்களது உயிர்களை இழந்தனர்.

கண்டன குரல்கள் எழுந்தபிறகு பாதுகாப்பை உறுதி செய்யும் வரை ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக அந்நிறுவனங்கள் அதார் உதார் விடுகின்றன. வால்மார்ட் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள் சொற்பக்கூலிக்காகத் தான் வங்கதேசத்தைத் தேர்வு செய்கின்றன எனில் தொழிலாளர்களுக்காக அவர்கள் அழுவதை நம்ப முடியுமா?

மீண்டும் ஐரோப்பா – அமெரிக்காவில் விடுமுறை கொண்டாட்டங்கள் வருகின்றன. புதிய புதிய ஆடைகள் நுகரத் தேவைப்படுகின்றன. கொண்டாட்டங்களின் போது வாண வேடிக்கைகளிலும் காதைப் பிளக்கும் களியாட்டங்களிலும் மண்ணுள் புதைந்த ரானா பிளாசாவின் புழுதியும் தொழிலாளர்களின் துயரம் தோய்ந்த குரல்களும் அழுந்தி போகின்றன.

இலாபம் குறைந்து விடுமே என்ற ஏகாதிபத்திய ஆண்டைகளின் சிறு வருத்தம் கூட வங்கதேச அரசிற்குப் பேரிழப்பாகத் தெரிகிறது. அதனால் தான் சொந்த மக்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதைக் கூடக் காவல்துறை இராணுவம் கொண்டு ஒடுக்குகிறது. போராட்டங்களை தொழிலாளர்கள் தெரிவு செய்வது என்பது அது ஒடுக்குமுறைக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் எதிர்வினையாக மட்டுமே. வங்கதேசத் தொழிலாளர்களின் போராட்டங்களை ஆதரிப்பதும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதும் வேறு வேறல்ல.

செய்தி ஆதாரம்:
Garment factories dismiss ‘at least 1,500 workers’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க