Wednesday, April 23, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்போலீசின் கொலைவெறி : திருச்சி, மதுரை, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் !

போலீசின் கொலைவெறி : திருச்சி, மதுரை, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் !

-

போலீசின் கொலைவெறி : மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அமைதியாகப் போராடிய மாணவர்கள்-மக்கள் மீது திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டு தமிழகத்தில் அரசியல் சட்ட சீர்குலைவை ஏற்படுத்திய, சமூக விரோத காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  நேற்று (27.01.2017) காலை 11.30-க்கு மதுரை வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் வழக்கறிஞர்கள் கனகவேல், வில்லவன்கோதை, பொற்கொடி, நாகை.திருவள்ளுவன், நீதிபதிகளின் ஊழலை எதிர்த்து போராடியதால் வாழ்நாள்தடை விதிக்கப்பட்ட வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னாள் செயலர் திரு.ஏ.கே. இராமசாமி கலந்து கொண்டார். குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, பலருக்கு தகவல் சொல்ல முடியாத சூழலிலும் நிறைய வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பேசிய அனைவரும் “அமைதியாகப் போராடிய மாணவர்கள்-மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது காவல்துறைதான் என்றும், போலீசே தீவைப்பது, பஸ்சை, இருசக்கர வாகனங்களை உடைப்பது ஆகிய வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன” எனக் குறிப்பிட்டனர். அலங்காநல்லூர், மதுரை செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காவல்துறை சட்டவிரோதமாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தாக்குவதை, மிரட்டி பொய்வழக்குப் போடுவதை அம்பலப்படுத்தினர். குறிப்பாக அலங்காநல்லூர் ஆய்வாளர் அன்னராஜ், செல்லூர் ஆய்வாளர் ராஜேந்திரன், தல்லாகுளம் ஆய்வாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பலரையும் காவல்நிலையத்தில் பிடித்துவைத்து கொடூரமாகத் தாக்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதைக் கண்டித்தனர். மாணவர்கள்-இளைஞர்கள்-பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என்றும், வழக்கறிஞர்கள் நாங்கள் இருக்கிறோம் எனவும், இலவச சட்ட உதவி செய்வோம்-அதற்கான குழுவை அமைத்துள்ளோம், குற்றம் புரிந்த காவல்துறை அதிகாரிகளை நிச்சயம் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிப்போம்” என்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் குறிப்பாக இத்தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டு நடத்திய தமிழ்நாடு டி.ஜி.பி. இராஜேந்திரன், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகள் எனப் பீதியூட்டும் வேலையை உளவுத்துறை மேற்கொள்கிறது. இது எடுபடாது. மக்கள் தெளிவாக உள்ளனர். இதே போல் போராட்டத்தில் தமிழர்கள் என்ற முறையில் கலந்து கொண்ட இசுலாமிய சகோதரர்களை காவல்துறை குறிவைக்கிறது.

இதை நாம் அனுமதிக்கக் கூடாது. உண்மையில் மக்கள் விரோத, தேச விரோத சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-அ.தி.மு.க-காவல்துறை-உளவுத்துறைக் கூட்டம்தான்; இவர்கள்தான் “இனிமேல் தமிழ்நாட்டில் இப்படி ஒரு போராட்டம் வேறு கோரிக்கைகளுக்கு வரக்கூடாது, “போலீசு, அரசு என்றால் மக்களுக்கு பயம் இருக்க வேண்டும்” எனத் திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளனர்.” “இவ்வாறு சட்டத்தின் ஆட்சியை காக்கவேண்டிய அரசின் அமைப்புக்களே, திட்டமிட்டு வன்முறையில் ஈடுபடுவது அரசியல் சட்ட சீர்குலைவை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது, இதனால் நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிட வேண்டும்” என்றனர்.

 

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை.

____________________

போலீசின் கொலைவெறியைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடு!

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி ஜனவரி 16 முதல் 22 வரை சென்னை , மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும்  மாணவர்கள் – இளைஞர்கள் – பொது மக்கள்  ஆதரவோடு அனைவரும் அறவழிப் போராட்டத்தை நடத்தினர். போராட்டம் வெற்றிபெறும் தருவாயில் காவல் துறை முறையான நம்பகத்தன்மையுள்ள அறிவிப்பு ஏதும் வழங்காமல் அனைவரையும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து போக வற்புறுத்தியது.

போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதைக் கூட அறிய முடியாத சூழ்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை  பின் வாங்க மறுத்தனர். “காவல் துறை உங்கள் நண்பன், உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் ” என்று  பீற்றிக் கொண்டிருந்த  போலீசு  உடனே தனது காட்டு மிராண்டித்தனமான கொலை வெறித் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது.

2

பெண்களை மானபங்கப்படுத்தி அடித்து உதைத்துள்ளது. குழந்தைகள் என்றும் பாராமல் மண்டைய உடைத்து பிளந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் காவல் துறையே கலவரத்தை ஏற்படுத்தி, குடிசைகளை கொளுத்தி, வாகனங்களை நொறுக்கி சேதப்படுத்தியுள்ளது. இவை ஆதாரங்களுடன் ஊடகங்களில் அம்பலப்பட்டுள்ள போதும் போலிசின் இந்த காட்டு மிராண்டி நடவடிக்கைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகவே கலவரத்திற்கு காரணமான  காவல்துறையினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி ஜனவரி 26, 2017 அன்று திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் மாலை 6.00 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகம். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி  ஆகிய அமைப்புகள் இணைந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த அமைப்புகளின் முன்னணி தோழர்கள் போலீசுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்தனர். குறிப்பாக தங்களது உரிமைகளுக்காக போராடிய குடிமக்களை, குற்றவாளிகளை போல் நடத்தி அடித்து துன்புறுத்திய பிறகு குடியரசு தின விழா ஒரு கேடா? என கேள்வி எழுப்பினர்.3

மேலும் ஜல்லிக்கட்டு முழக்கம், ஆளும் வர்க்கத்துக்கு எதிரான அரசியல் முழக்கமாக மாறியது தான் இந்த ஒடுக்குமுறைக்கு காரணம் என்பதை ஆணித்தரமாக நிறுவினர். அதை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக வழக்கறிஞர் ஆதி நாராயண மூர்த்தி அவர்கள் ,  “போலிசு அரசாங்கத்தின் வளர்ப்பு நாய். அது அரசாங்கத்துக்கு தேவைப்படும் போது  மக்களிடம் நண்பரைப்போல் வாலைக் குழைத்து ஆட்டும், பின்னர் அதுவே மக்களை பாரபட்சம் பார்க்காமல் கடித்து குதறும் என” காவல் துறையின் அயோக்கியதனத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

விவசாயிகள் சங்கத்தலைவர் ம.பா. சின்னத்துரை அவர்கள், ஜெயலலலிதா இறந்த பிறகு அதிர்ச்சியில் இறந்த தொண்டர்கள் என இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு அரசு, விவசாயிகள் தற்கொலைக்கு இன்னும் உரிய நிவாரணம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும் மாணவர்கள் விவசாயிகளுக்காகவும் களம் இறங்கி போராடுவது தங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்றார். இடையிடையே ம.க.இ.க தோழர்கள், போலிசின் அடக்குமுறையையும், கையாலாகாத்தனத்தையும் பாடல்கள் வாயிலாக அம்பலப்படுத்தினர்.

திருச்சியை தவிர அனைத்து இடங்களிலும் காவல் துறையினரால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் திருச்சியில் தான் அடக்குமுறை நடக்கவில்லையே  என காவல்துறையிடமே போய் செல்பி எடுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கான வெற்றியை கொண்டாடுவது வக்கிரமானது. ஏனெனில் பிற இடங்களில் அடி வாங்கியதும் தமிழர்கள் தானே !

உரிமைக்காக  ஒன்றாக போராடிய நாம் , மாணவர்கள் மீதான காவல் துறையின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போரடவேண்டும் என இப்போராட்டம் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

செய்தி:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி. தொடர்புக்கு:99431 76246

____________________

போலீஸ் கொலை வெறி தாக்குதலை கண்டித்து புதுச்சேரி ஆர்ப்பாட்டம் !

​ஜல்லிக்கட்டு வேண்டும் என போராடிய மாணவர்கள் – மக்கள்  மீது போலீஸ் கொலை வெறி தாக்குதல் செய்ததை கண்டித்து ஜனவரி  24-ஆம் தேதி புதுவை அண்ணாசலை, அண்ணா சிலை அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது . இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசின் வன்முறை வெறியாட்டங்களை  அம்பலப்படுத்தி பேசினர்.

Pudhucery (8)
இதில் மக்கள் அதிகாரம் தோழர் பிரகாஷ் தலைமையேற்றார் அதைத் தொடர்ந்து பெரியார் திராவிட விடுதலை கழக தோழர் கோகுல் காந்தி நாத், பு.மா.இ .மு அமைப்பாளர் தோழர் பரத்,  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணை செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
புதுச்சேரி ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க