Friday, April 18, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்மெரினாவில் மீண்டும் எழுவோம் ! மகஇக புதிய பாடல்

மெரினாவில் மீண்டும் எழுவோம் ! மகஇக புதிய பாடல்

-

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வழங்கும்

வருவோம் மீண்டும் வருவோம் !
மெரினாவில் மீண்டும் எழுவோம் !
– பாடல்

மெரினாவில் சில நூறு பேருடன் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகத்தின் பல லட்சம் மக்களை இணைத்து மோடிக்கு எதிரான டெல்லிக்கட்டாக மாறியது. தமிழக மக்கள் மத்தியில் குமைந்து கொண்டிருந்த காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், மீனவர் பிரச்சினை, சமஸ்கிருதத் திணிப்பு, பணமதிப்பழிப்பு, நீட் தேர்வு, பொங்கலுக்கு விடுமுறை ரத்து என அனைத்துப் பிரச்சினைகளையும் ஜல்லிக்கட்டு போராட்டம் இணைத்தது. மக்களின் வலிமையை அவர்களுக்கே உணர்த்தியது.

ஒரு வாரம் பிரதமர், முதல்வர், கமிஷ்னர் என யாருடைய அதிகாரமும் இங்கு செல்லாது எனக் காட்டியது இந்தப் போராட்டம்.  இனியும் இதை அனுமதித்தால் மக்களின் அதிகாரமே நிரந்தரமாகி விடும் என அஞ்சிய அரசு தனது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. நேற்று வரை நண்பன் போல வேசமிட்ட காவல்துறை 23.01.2017 அன்று தனது அரிதாரத்தைக் கலைத்து, உண்மையான கொடூரமான முகத்தை வெளிப்படுத்தியது.

மாணவர்களை சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தது. தாக்குதலில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு அடைக்கலம் தந்த மீனவ மக்களை நொறுக்கியது. கண்ணில்பட்ட அனைவரையும், அனைத்தையும் வெறிநாய் போலக் குதற ஆரம்பித்தது. ஆனாலும் அவற்றைத் தாண்டி மீனவ மக்ககள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது போராடியவர்களைக் காத்து நின்றனர்.

இன்று மெரினாவில் போராட்டத்தைக் கலைத்து விட்டதாக அரசு கருதலாம். ஆனால் மக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டனர். அந்த மாணவர்கள் மீண்டும் வருவார்கள். மெரினா மீண்டும் உதயமாகும்.

வருவோம் மீண்டும் வருவோம் !
மெரினாவில் மீண்டும் எழுவோம் !

பாடல் வரிகள்

வருவோம் மீண்டும் வருவோம் !
மெரினாவில் மீண்டும் எழுவோம் !

எழுந்து நின்றது தமிழகம் – இது
இளமை ஈன்றதோர் புதுயுகம்
எங்கள் பெண்ணின் முகம் முழுதும் ரத்தம்
பணியாமல் நின்றதா குற்றம்
பார் கண்ணைப் பார் அதில் தெரிகிறதா துளி அச்சம்
கணக்கு இருக்கிறது இன்னும் மிச்சம்                  (வருவோம்)

எரித்தது நீ ! உடைத்தது நீ – தமிழ்ப்
பெண்ணின் கருவினை சிதைத்தது நீ!
எரிகிறது தமிழ் பூமி – சொல்
யாரடா தேசத் துரோகி?                               (வருவோம்)

எங்கள் உயிர் காக்க உங்களைத் தந்த
மீனவ உறவே வருவோம்
கடலின் விளிம்பிலே தவித்த எங்களைக் – கரை
சேர்த்த சொந்தமே வருவோம்                        (வருவோம்)

அடித்தாலும் அடங்காது இது வேற தமிழ்நாடு
அலங்கா நல்லூ…ரு இனி இல்லை.. உன்னோடு
நின்றது பார் சென்னை
ஓட விட்டது பார் உன்னை
பத்து பேர் நீங்கள் பத்து பேர் – எங்கள்
ஒற்றை மாணவன் உனக்கு நேர்.                        (வருவோம்)

பார் உன்னைப் பார்
குடிகள் இல்லாத குடியரசு – வெறும்
தடிகளே உனது அணிவகுப்பு
மின்னும் மீண்டும் மின்னும் மெரினாவின்
மின்மினிகள் மின்னும்                                  (வருவோம்)

வருவோம்…மீண்டும் வருவோம்
மெரினாவில் மீண்டும் எழுவோம்!  –    ம.க.இ.க பாடல்

தொடர்புக்கு :
மக்கள் அதிகாரம்

பாடல், இசை, தயாரிப்பு :
மக்கள் கலை இலக்கியக் கழகம், 
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க