‘‘ஜெயலலிதாவோ மாநிலத்தின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் முன்னுரிமை அளித்து, அதன் அடிப்படையிலேயே மத்திய−மாநில உறவின் தன்மையை வகுத்துக் கொண்டார்.’’ (துக்ளக், 21.12.16)
‘‘நமது அரசியல் விமர்சன உலகம் அவரைப் பற்றி எதிர்மறையாகவே அதிகம் பேசியிருக்கிறது. ஆனால், அவரது மிக முக்கியமான சில பங்களிப்புகளையும் நாம் பேச வேண்டும். …. 2009 ஈழ இனப் படுகொலைக்குப் பிறகு ஈழம் தொடர்பான விவகாரங்களில் ஜெயலலிதா வழக்கத்துக்கு மாறான நிலைப்பாடுகளை எடுத்து ஆச்சரியப்படுத்தினார்….. டெல்லியை நோக்கிச் சவாலான ஒரு பார்வையை வீசியதிலும், நீ மகாராஜா என்றால், நான் மகாராணி என்று அட்டகாசமாகச் சிரிப்பதிலும், பல மாநில முதல்வர்களிடையே, மற்ற பல தமிழக முதல்வர்கள் உட்பட, அவர் வித்தியாசப்பட்டுதான் இருந்தார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்’’ எனக் குறிப்பிடுகிறார், இடதுசாரி எழுத்தாளர் ஆழி.செந்தில்நாதன்.

ஜெயாவைப் படிப்பாளி, தைரியசாலி, சிறந்த நிர்வாகி எனப் புகழுவதைவிட அருவருப்பு நிறைந்தது அவரை ஈழத் தாயாக, மாநில உரிமைப் போராளியாகத் துதிப்பது. ஜெயாவை, அ.தி.மு.க. அடிமைக் கூட்டம் தமிழகத்தின் அம்மாவாக முன்னிறுத்தியது என்றால், பழ.நெடுமாறன், தமிழருவி மணியன், சீமான், வை.கோ., உள்ளிட்ட தமிழின பிழைப்புவாதக் கூட்டம்தான் ஜெயாவை, ஈழத் தாயாகத் தூக்கி நிறுத்தியது.
ஜெயாவின் கடந்த கால ஈழ எதிர்ப்பு, புலி எதிர்ப்பு அரசியல் பற்றியோ, ‘‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’’ என ஈவு இரக்கமின்றி சிங்கள இராணுவத்தின் போர்க் குற்றங்களை ஜெயா நியாயப்படுத்தியதையோ தமிழினவாதிகள் சட்டை செய்யவில்லை. தி.மு.க.−காங்கிரசு கூட்டணியைத் தோற்கடிக்கும் அரசியல் நோக்கத்திற்காக, ‘‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’’ என நாக்கூசாத புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தினார்கள், அவர்கள்.
மூவர் தூக்கு தண்டனை மற்றும் எழுவர் விடுதலை விவகாரங்களில் ஜெயா தமிழின உணர்வோ அல்லது கருணை உணர்வோ உந்தப்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சினைகளில் தமிழகம் தழுவிய எழுந்த ஆதரவைத் தனது அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு நெருங்கி வந்த நேரத்தில் தமிழகத்தின் மாணவர்களும், வழக்குரைஞர்களும் அவர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய அளவில் கிளர்ச்சியில் இறங்கினர். தமிழக மக்களின் அரசியல் உணர்வே அக்கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பதை இந்திய ஆளும் வர்க்கமும் உணர்ந்து கொண்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை அளித்துவிடும் என உறுதியானவுடன்தான், அம்மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரும் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார், ஜெயா.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இச்சமயத்தில் வெளிவந்தது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட ஜெயா, அம்மூவர் உள்ளிட்டு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய இருப்பதாகவும், மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவிக்கத் தவறினால், அவர்களைத் தமிழக அரசு விடுவித்துவிடும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்தான், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது, ஈழத்தில் பொது வாக்கெடுப்பது நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
ஒரு காகிதம் என்பதற்கு மேல் வேறு எந்த மதிப்பையும் இத்தீர்மானத்திற்கு மைய அரசு தரப் போவதில்லை எனத் தெரிந்தும், அத்தீர்மானத்தை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு விடப்பட்ட சவாலைப் போல முறுக்கேற்றினார்கள் தமிழினவாதிகள். இந்த பில்ட்−அப் அவர்களின் நேர்மையின்மையை மட்டும் காட்டவில்லை. தமது சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டி, செயலூக்கமிக்க போராட்டங்களை நடத்த முடியாமல், ஜெயாவின் முந்தானைக்குப் பின்னே மறைந்து கொள்ளும் அவர்களின் அரசியல் ஓட்டாண்டித்தனத்தையும் எடுத்துக் காட்டியது.
ஜெயாவின் திடீர் ஈழ ஆதரவை இந்தப் பின்னணியிலிருந்துதான் மதிப்பிட வேண்டும். சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது எப்படிப்பட்ட மோசடியோ, அதற்கு இணையானது ஜெயாவின் ஈழத் தாய் அவதாரம். ஈழ ஆதரவு, ஈழ எதிர்ப்பு இரண்டையுமே தனது சுயநல அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தத் தயங்காதவர்தான் ஜெயா.

1989−இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசை, அப்பொழுது நடந்த பத்மநாபா கொலையைக் காரணமாக வைத்து, புலி பீதியூட்டி, மைய அரசைப் பயன்படுத்திக் கலைக்கச் செய்தவர்தான் ஜெயா.
1991, மே மாதத்தில் ராஜீவ் கொலைக்குப் பிறகு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்பொழுது, அக்கொலையில் தி.மு.க.விற்கும் பங்குண்டு என அபாண்டமாகப் பழிபோட்டும், ஈழ எதிர்ப்பு அரசியலை முன்னிலைப்படுத்தியும், ராஜீவ் கொலை அனுதாப அலையைப் பயன்படுத்தியும் ஆட்சியைப் பிடித்தார், ஜெயா. அதன் பிறகு, ஈழ ஆதரவு, தமிழின ஆதரவு கருத்துக்களைக்கூடப் பேச முடியாதபடி தடா சட்டத்தை ஏவி, பயங்கரவாத ஆட்சியை நடத்தினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டதற்கு இரங்கற்பா எழுதிய கருணாநிதியைச் சாடியும், நளினிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த தி.மு.க. அரசை எதிர்த்தும், நோய்வாய்ப்பட்டிருந்த தனது தந்தையைப் பார்க்க தனக்கு பரோல் வழங்குமாறு நளினி கோரியதை ஏற்க மறுத்தும் ஈழ எதிர்ப்பு, புலி எதிர்ப்பு அரசியலை நடத்திவந்த ஜெயாவை ஈழத் தாய் எனத் துதிப்பது, அவரது ஊழல், கிரிமினல் குற்றங்களை மறைப்பதைவிட ஆபத்தானது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல நடித்த ஜெயா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு, போராடிய மக்கள் மீது போலீசு அடக்குமுறையை ஏவிவிட்டதோடு, தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடுத்தார்.
விளைநிலங்களில் கெயில் குழாய் பதிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய மேற்கு மாவட்ட விவசாயிகள் மீது போலீசை ஏவிவிட்ட ஜெயாதான், 2014 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அக்குழாய் பதிப்பிற்குத் தடை போட்டார். அந்தத் தடையை உச்சநீதி மன்றம் ரத்து செய்துவிடும் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாத விசயமல்ல. இப்பொழுது அதுதான் நடந்திருக்கிறது.

69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவந்த ஜெயாதான், அரசுப் பணிகளுக்கு ஆளெடுப்புத் தடைச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இட ஒதுக்கீடின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை, தி.மு.க. அரசு நியமித்தது என்ற ஒரே காரணத்திற்காக, ஒரேயொரு கையெழுத்து மூலம் வேலையை விட்டுத் தூக்கியடித்தார்.
தனது சுயநல அரசியல் இலாபத்திற்காக, எந்த எல்லை வரையும் செல்லக் கூடியவர்தான் ஜெயா. அவரது திடீர் ஈழ ஆதரவு, ஜி.எஸ்.டி. எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாடுகளின் பின்னே மறைந்துள்ள இந்தக் கபடத்தனத்தை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, ‘‘அவரது இந்த நிலைப்பாடுகளில் சந்தர்ப்பவாதம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனாலும், செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறியவர்களுக்கு மத்தியில், தன் எல்லைக்குட்பட்ட அளவிலேனும் தைரியமாகச் செய்ய முன்வந்த ஒருவரை நாம் எப்படிக் குறைத்து மதிப்பிடுவது’’ என வலிந்து எழுதி ஜெயாவிற்கு முட்டுக் கொடுக்கிறார், ஆழி.செந்தில்நாதன்.
இந்த வாதம் நரகலில் நல்லரிசி தேடச் சொல்லும் மோசடி. மேலும், செத்துப் போன பிறகும்கூட, ஜெயாவை விமர்சித்து எழுதாமல் பூசி மெழுகும் தமிழகத்து அறிவுஜீவிகளின் ‘‘துணிவையும்’’ பறைசாற்றுகிறது.