Saturday, April 19, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கடெல்லிக்கட்டுக்காக விழுப்புரத்தில் திரண்ட மாணவர் படை !

டெல்லிக்கட்டுக்காக விழுப்புரத்தில் திரண்ட மாணவர் படை !

-

மிழகம் முழுவதும் “ஜல்லிக்கட்டு வேண்டும்” என்று ஆரம்பித்த மாணவர்களின் போராட்டம் தமிழக மக்களின் போராட்டமாக எப்படி மாறியதோ, அதேபோல் தான்   “ ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு” என்ற முழக்கமாக மாறி, சென்னை மெரினாவில் ஆரம்பித்த  இந்த போராட்டம் தமிழகமெங்கும் பற்றிப் பரவியது.

 

villupuram_jallikattu-protestகடந்த ஜனவரி 19-ம் தேதி விழுப்புரத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த போராட்டம் நடைபெற்றது. மாணவர்களில் ஒரு பகுதியினர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்தவர்கள் திரட்டினர்.

இந்த போராட்டத்தை  மாணவர்களும், இளைஞர்களும் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். புரட்சிகர சக்திகள் அதிக அளவில் இருப்பதை மோப்பம் பிடித்த காவல்துறை, ஒருங்கிணைப்பில் உள்ளவர்களை அழைத்து  பு.மா.இ.மு மற்றும்  மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்தவர்கள் அதிக அளவில்  வந்துள்ளார்கள் அவர்களை பேச விடாதீர்கள் என்று எச்சரித்தது.  தோழர்கள் பேசிவிடக்கூடாது என்பதிலேயே இந்த ஏவல்துறை குறியாக இருந்தது.

மாணவர்களின் இந்த தன்னெழுச்சியை பார்த்து விட்டு வெகுஜன மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து  கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் தங்களால் முடிந்த உதவிகளையும் இந்த போராட்டத்திற்கு செய்து வந்தார்கள்.

புமாஇமு விழுப்புரம் அமைப்பாளர் தோழர் ஞானவேல் மற்றும் உறுப்பினர்கள்
புமாஇமு விழுப்புரம் அமைப்பாளர் தோழர் ஞானவேல் மற்றும் உறுப்பினர்கள்

திருவிழாவை போன்று மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். தொடர்ந்து போராடக்கூடிய மாணவர்களுக்கு ஓர் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது  என்றே கூறலாம். மாணவ – இளைஞர்களின் இந்த போராட்டம் தமிழகத்தின் விடிவெள்ளி என்றே பலரும் கருதினார்கள்.

பெண்கள் ஆயிரக்கணக்கில்  வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர். சிலர் கைக்குழந்தைகளோடு பங்கேற்றனர். வெயில், மழை, பனி, குளிர் என்று எதையும் பார்க்காமல் மாணவர்கள், இளைஞர்கள் அங்கே சங்கமித்தனர். சாதி, மதம் கடந்து அனைவரும் ஓர் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டதோ ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதோ அனைத்தும் மறக்க முடியாத நினைவுகளோடு நீடித்திருக்கும்.

போராட்டத்தின் இரண்டாவது நாள், மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்தவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இளைஞர்களையும், மக்களையும் வெகுவாக அணிதிரட்டி மோடியை அம்பலப்படுத்தி ஊர்வலமாக வந்தனர். எக்காரணம் கொண்டும் மக்கள் அதிகாரம் அமைப்பின் பெயர் மாணவர்களிடம்  தெரிந்து விடக்கூடாது என்று கியூ, மற்றும் பல்வேறு உளவு அமைப்புகள் தீவிரமாக இருந்ததன. ஆனால் அரசியல் கருத்து என்ற வகையில் மக்கள் அதிகாரத்தின் முழக்கங்களை மாணவர்கள் வரித்துக் கொண்டனர். அதை போலீசு தடுக்க முடியவில்லை.

villupuram_jallikattu-protest2இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்ற இந்த போராட்டம் மூன்றாவது  நாள் காவல்துறை போராட்டத்தை முடித்துக்கொள்ள தொடர்ந்து நிர்பந்தித்து மாணவர்களையும், ஒருங்கிணைப்பில் இருந்தவர்களையும் மிரட்டிக்கொண்டே இருந்தனர். இதனால் போராட்டத்தை ஒருங்கிணைத்த இளைஞர்களும் முடித்துக்கொள்வதென முடிவெடுத்து இரவு எட்டு மணிக்கு கிளம்ப ஆயத்தமானார்கள்.

எனினும் இந்த போராட்டத்திற்கு உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்ட இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கினார்கள். இதனை பார்த்த காவல்துறை தடியடி நடத்தப்போவதாக அறிவித்து கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தது. இதனை அறிந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் இரவு அந்த மாணவர்களுடன் தங்கி அடுத்த நாள் போராட்டத்தை தொடருவதற்கு ஆதரவாக நின்றனர். நான்காவது நாள் தொடர்ந்த இந்த போராட்டத்தில் மாணவர்களை மட்டுமே தலைமை ஏற்று  நடத்த வழிகாட்டுதல் கொடுத்து காவல்துறையின் மிரட்டலுக்கு எதிராக அஞ்சவேண்டாம் என்று மாணவர்களும் நம்பிக்கை பெற்றனர்.

மூன்றாவது நாள் இளைஞர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்கள்
மூன்றாவது நாள் இளைஞர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்கள்

இதனை மோப்பம் பிடித்த காவல்துறை RSS – BJP, இந்து முன்னணி காலிகளை களத்தில் இறக்கி விட்டு ஒவ்வொருவராக சந்தித்து  மோடிக்கு எதிராக முஸ்லீம்கள் பேசுகிறார்கள் என்று கூறி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். மோடிக்கு எதிராக பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என்று மிரட்டினார்கள். மீறி பேசினால் அவர்களிடம் இருந்து மைக்கை பிடுங்கி கொள்வது என்று தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தினார்கள். மற்றொரு புறம் கியூ மற்றும் உளவுப்பிரிவு அமைப்புகள் மாணவர்களை சந்தித்து “ஜல்லிக்கட்டுக்கு தான் அனுமதி கொடுத்து விட்டார்கள் பிறகு ஏன் போராட்டம் செய்கிறீர்கள்” என்று கூறி மாணவர்களை கலைத்தது.

தொடர்ந்து மாணவர்களை மிரட்டி தனது நோக்கத்தை நிறைவேற்றியது காவல்துறை. பிஜேபியும் – காவல்துறையும் கூட்டு சேர்ந்து இந்த போராட்டத்தை சதித்தனமாக முறியடித்து விட்டது என்பது தான் உண்மை. காவல்துறை காவிமயமாகிவிட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன இருக்க முடியும்? எனினும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் அரசியல் மற்றும் போராட்டத்தின் பாடங்களை உற்சாகத்துடன் கற்றுக் கொண்டு சென்றிருக்கின்றனர். மாணவர்கள் அரசியல்படுத்தப்பட்ட நிகழ்வை காவிகளோ இல்லை காவல் துறையோ என்ன செய்து விட முடியும்?

(படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும்)

– வினவு செய்தியாளர், விழுப்புரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க