Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாஜகவும் அதிமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு !

பாஜகவும் அதிமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு !

-

சுயமரியாதையை அழித்து…  பார்ப்பனப் பண்பாட்டைத் திணித்து…

‘‘டவுள் மீதும் தேசியத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட, திராவிட இயக்கத்தால் வெறுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண், அத்திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கட்சிக்குத் தலைவியாகி, அதனைத் தனது இரும்புப் பிடியில் வைத்திருந்தது வரலாற்று முரண், அதிசயம்’’ என்றெல்லாம் ஊடகங்கள் ஜெயா அ.தி.மு.க.விற்குத் தலைமை தாங்கியதை ஆச்சரியத்தோடு விவரிக்கின்றன.

42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)
42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)

கடந்த ஐம்பது, அறுபது ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாற்றிலிருந்து இருந்து பார்த்தால், அ.தி.மு.க.வின் தலைவியாக பார்ப்பன ஜெயா கோலோச்சியது, அதிசயமாகவோ, முரணாகவோ இருக்காது. பெரியாருக்குப் பிறகான திராவிடர் கழகம், பெரியாரின் கொள்கைகளைப் பூஜைக்குரியாதாக்கி, பெரியார் திடலுக்குள்ளேயே ஒடுங்கிப் போய்விட்டது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உருவான திராவிட முன்னேற்றக் கழகமோ, அதன் தொடக்கத்திலேயே பெரியாரின் கடவுள் மறுப்பு, நாத்திகப் பிரச்சாரம், பார்ப்பன எதிர்ப்புகளில் சமரசம் செய்துகொண்டு, பின்னோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் திராவிட இயக்கத்தின் அங்கமாகக் கருதுவதே கேலிக்குரியது. மீசை வைத்தவனெல்லாம் வீரன் எனப் பார்ப்பதைப் போன்று பாமரத்தனமானது. பெரியாரை இன்றுவரை இந்து மத விரோதியாக, தேச விரோதியாகப் பார்க்கிறது, ஆர்.எஸ்.எஸ். ஆனால், பெயரில் மட்டுமே திராவிடத்தைக் கொண்டுள்ள அ.தி.மு.க.வை, ‘‘நாத்திகத்தை நாகரிகமாக்கிய, தேசியத்தை எள்ளி நகையாடிய, நாட்டு ஒற்றுமையைக் குலைத்த, தேச விரோத திராவிட அரசியலைத் தகர்த்த கட்சி (அ.தி.மு.க.)’’ என மதிப்பிடுகிறார், ஆர்.எஸ்.எஸ்.−ஐச் சேர்ந்த குருமூர்த்தி (துக்ளக் தலையங்கம், 28.12.16).

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி இந்து முன்னணியின் விஜயபாரதத்தில் வந்த கட்டுரையின் தலைப்பு, ‘‘எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை.’’

ஒருவனுடைய கொள்கை உறுதியை எதிரிகள் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்ற அடிப்படையைக் கொண்டு பார்த்தால், அ.தி.மு.க. திராவிட இயக்கத்தில் தோன்றிய கோடாரிக்காம்பு, புல்லுருவி என்பதற்கு, குருமூர்த்தி, விஜயபாரதத்தின் மதிப்பீடுகளைத் தாண்டி வேறு சான்றுகள் தேவையில்லை.

நாத்திகம், கடவுள் மறுப்புக்கு விரோதமான கோவில், குளங்களைச் சுற்றி வருவது, சாதி ஒழிப்பைக் கைவிட்டு சாதி அரசியல் நடத்துவது, ஓட்டுப் பொறுக்குவதற்கும், அதிகாரத்தைப் பிடிப்பதற்கும் பெரியாரின் கொள்கைவிட, பார்ப்பன ஆதிக்க சக்திகளோடு சமாதான சகவாழ்வு வாழ்வது எனத் திராவிட ஓட்டுக்கட்சிகள் சீரழிந்தும், பார்ப்பன அடிமைத்தனத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கிப் போய்விட்ட நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கழிசடைக் கட்சிக்கு ஒரு பார்ப்பனத்தித் தலைவியாக வந்தது இயல்பான பரிணாம வளர்ச்சிதான்.

பா.ம.க. போன்ற சாதிக் கட்சிகளைத் தவிர, மற்றைய ஓட்டுக்கட்சித் தலைவர்கள் பொதுவெளியில் தம்மைக் குறிப்பிட்ட சாதியோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் பிற்போக்குத்தனத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனால், ஜெயாவோ தனது சாதி அடையாளத்தைக் காட்டிக் கொள்ள தயங்கியதேயில்லை. அவர் முதன் முறையாக முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்தவுடனேயே, தமிழகப் பிராமணாள் சங்கம், ‘‘நடப்பது நம்மவா ஆட்சி’’ எனப் புளகாங்கிதத்தோடு அறிவித்தது. அதற்கு அங்கீகாரம் கொடுப்பதைப் போல, ‘‘நான் பார்ப்பனத்திதான்’’ எனச் சட்டமன்றத்திலேயே சாதித் திமிரோடு அறிவித்தார், ஜெயா.

ஆட்சிக்கு வந்த நான்காவது மாதத்திலேயே (செப்.91) கும்பகோணம் மகாமகம் திருவிழாவைப் பிரம்மாண்டமாக நடத்தி 48 தமிழர்களைப் பலியிட்டார். தனது தோழி சசியோடு குளத்தில் நீராட வந்த ஜெயாவிற்குத் தரப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், கெடுபிடிகளால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, அரசின் கணக்குப்படி 48 தமிழர்கள் உடல் நசுங்கி, மூச்சுத் திணறிச் செத்துப் போனார்கள். இவ்வளவு பேர் இறந்து போனதை, பலர் படுகாயமடைந்ததை அறிந்தும்கூட, பார்ப்பன ஜெயா நேரில் வந்து பார்வையிடவில்லை, ஆறுதல் தெரிவிக்கவில்லை. மாறாக, நீராடி முடித்த கையோடு, விருந்து சாப்பிட்டுவிட்டு சென்னை திரும்பினார். பார்பனியமும் அதிகாரமும் சேர்ந்த கலவை எப்படியிருக்கும் இந்தச் சம்பவம் ஒரு சான்று.

உடல் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிடும் வளர்மதி, சரசுவதி, பாத்திமா பாபு உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்: பார்ப்பன மூடத்தனம்.
உடல் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிடும் வளர்மதி, சரசுவதி, பாத்திமா பாபு உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்: பார்ப்பன மூடத்தனம்.

நரசிம்ம ராவ் அரசில் அமைச்சராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த அருணாசலம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதாலேயே, அவரைத் தனது தனி விமானத்தில் ஏற்றிச் செல்ல மறுத்து, விமானத்திலிருந்து இறக்கிவிட்டு அவமதித்தார். ‘‘அம்முவுக்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும்’’ என எம்.ஜி.ஆர். சொன்னதாக நக்கீரன் இதழ் கட்டுரை வெளியிட்டவுடன், அவ்விதழ் அலுவலகத்தின் மீது அ.தி.மு.க. குண்டர் படையை ஏவிவிட்டுத் தாக்குதல் தொடுத்தார். முதல்வர் ஜெயாவைக் கேவலப்படுத்திவிட்டதாகக் குற்றஞ்சுமத்தி நக்கீரன் இதழ் ஆசிரியர் மீது தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. மாட்டுக் கறி தாழ்த்தப்பட்டோருடனும் தீண்டாமையோடும் தொடர்புடையது என்ற பார்ப்பன சாதிவெறிதான் நக்கீரன் இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வழக்குகளுக்கும் காரணம். தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தி, வளர்மதி சட்டமன்றத்தில் பேசியதை பெயருக்குக்கூடத் தடுக்காமல், ரசித்தார்.

நடிகர் சிவக்குமார், தனது மூத்த மகன் சூர்யா−நடிகை ஜோதிகா திருமணப் பத்திரிகையை  ஜெயாவிடம் கொடுக்கச் சென்றபொழுது, கூட வந்திருந்த சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தியிடம், ‘‘நீயாவது உங்க அப்பா, அம்மா விருப்பப்படி சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்’’ என ஜெயா புத்திமதி சொன்னதாக நினைவுகூர்ந்திருக்கிறார், சிவக்குமார். இது ஏதோ கவுண்டர் சாதிவெறியர் சிவக்குமாரை அந்தச் சமயத்தில் திருப்திபடுத்தச் சொல்லப்பட்ட அறிவுரை மட்டுமல்ல; சனாதன சாதிக் கட்டுமானத்தின் மீது ஜெயாவிற்கு இருக்கும் பிடிப்பு, வெறியின் வெளிப்பாடும்கூட.

இவையெல்லாம், ஜெயா, தன்னளவிலேயே பார்ப்பன சாதிவெறி பிடித்தவர், தீண்டாமை பாராட்டுபவர் என்பதைப் பொதுவெளியில் அம்பலப்படுத்திய நிகழ்வுகள். அவரது அரசோ, பார்ப்பனத்தி தலைமையின் கீழ் தேவர், கவுண்டர் சாதிவெறிக் கும்பல் குத்தகைக்கு எடுத்த ஆட்சியாக இருந்தது.

சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான இந்து முன்னணி தமிழகத்தில் காலூன்ற எம்.ஜி.ஆர்., அரசு ஆதரவாக இருந்தது என்றால், எம்.ஜி.ஆரின் தோழியான ஜெயா ஜி, காக்கி டவுசர் போடாத ஆர்.எஸ்.எஸ். பேர்வழியாகவே நடந்துகொண்டார். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பாக, மைய அரசு நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், ‘‘ராமனுக்கு அயோத்தியில் கோவில் கட்டாமல், பாகிஸ்தானிலா கட்ட முடியும்?’’ எனக் கூச்சமின்றி ஆர்.எஸ்.எஸ். திட்டத்திற்கு ஆதரவளித்துப் பேசினார். வருமானமில்லாத கோவில்களில் பூஜை, புனஸ்காரங்களை நடத்துவதற்கு வைப்பு நிதித் திட்டம், திருக்கோவில்களில் அன்னதானத் திட்டம் − என அரசு நிதியை மானியமாக பார்ப்பனக் கோவில்களுக்கு அள்ளிக் கொடுத்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின், தமது மீட்பரைச் சந்திக்கும் தில்லைவாழ் தீட்சிதர்கள். (கோப்புப் படம்)
சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின், தமது மீட்பரைச் சந்திக்கும் தில்லைவாழ் தீட்சிதர்கள். (கோப்புப் படம்)

சூத்திர சாதி மக்களின் வழிபாட்டு முறைகளை மறுக்கும் விதமாக, கிடா வெட்டும் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தைப் பார்ப்பன செல்வாக்கு மண்டலமாக மாற்ற முயன்றார். இந்த இரண்டு சட்டங்களைத் தமிழகத்தில் ஆதரித்தவர்கள் இரண்டு பிரிவினர்தான். ஒன்று, ஆர்.எஸ்.எஸ். கும்பல், மற்றொன்று பார்ப்பன சாதிவெறியர்கள். இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்ட பிறகு நடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மண்ணைக் கவ்வியதையடுத்து, இந்த இரண்டு சட்டங்களை ஜெயா திரும்பப் பெற்றதைத் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் கசப்பு மாத்திரையைப் போல விழுங்கி நின்றது.

தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டமும், தீட்சிதர்கள் என்ற கொள்ளைக்கூட்டத்தின் பரம்பரைச் சொத்தாகக் கருதப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் நிர்வாகம், கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சென்னை உயர்நீதி மன்ற உத்தரவும் பார்ப்பன ஜெயா ஆட்சியில்தான் உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டன என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. பார்ப்பன ஜெயா அரசு தீட்சிதர்களோடும் சிவாச்சாரியர்களோடும் கள்ள உறவு வைத்துக் கொண்டு இந்த இரண்டு வழக்குகளைத் தோற்கடிக்கும் விதத்திலேயே உச்சநீதி மன்றத்தில் நடத்தியது.

இப்படி ஒருபுறம் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலிருந்து பார்ப்பனப் பண்பாட்டை, பார்ப்பன ஆதிக்கத்தைத் திணித்த ஜெயா, மறுபுறம் கீழே தனது கட்சி அணிகள், தன்னை ஆதரித்த உதிரி வர்க்கங்களிடம் பார்ப்பன மூடத்தனங்களை வளர்த்துவிட்டார். சசிகலாவிற்கு அடுத்து, ஜெயாவைச் சுதந்திரமாகச் சந்தித்தவர்கள் மலையாள ஜோதிடர்களும், வாஸ்து நிபுணர்களும்தான். அ.தி.மு.க. அமைச்சர்களும், நிர்வாகிகளும் தமிழகத்தை மொட்டையடித்தற்கு அப்பால் செய்த வேலை அம்மாவுக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கியதுதான்.

ஜெயாவின் பிறந்த நாட்களின்பொழுது தங்கத் தேர் இழுத்த, பால் காவடி எடுத்த, உடம்பில் வேப்பிலையைச் சுற்றிக் கொண்டு தீச்சட்டி ஏந்திய உடன்பிறப்புகள், அவர் ஊழல் குற்றத்திற்காகச் சிறையில் தள்ளப்பட்டபொழுதும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையிலும் யாகம் வளர்த்தார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள், மொட்டையடித்துக் கொண்டார்கள், அலகு குத்திக் கொண்டார்கள். இதற்கெல்லாம் ஆட்களைப் பிடிப்பதற்கு ரேட் வேறு நிர்ணயிக்கப்பட்டது. பக்தி என்ற பெயரில் பார்ப்பனக் கும்பல் திணித்திருந்த மூடப்பழக்கங்களுக்கு எதிராக இயக்கம் கண்டு இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகம், ஜெயாவால், அவரது விசுவாசக் கூட்டத்தால் அவமானப்பட்டு, கேவலப்பட்டு நிற்கிறது.

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோவிலுக்குத் தங்க வாளைக் காணிக்கை செலுத்தித் தொடங்கி வைத்த இந்த அருவருக்கத்தக்க பார்ப்பன மூடப் பண்பாட்டை, இழிந்த, உச்சநிலைக்கு எடுத்துச் சென்றார் ஜெயா. சுயமரியாதை அரசியலைப் பேசிவந்த தமிழகத்தில், அதற்கு எதிரான அடிமைத்தனமும், மூடத்தனமும் மீண்டும் கோலோச்ச தொடங்கியதைத்தான், தமிழகத்தில் மீண்டும் ஆன்மீகம் தழைக்கத் தொடங்கிவிட்டது எனவும், தமிழகம் தேசிய நீரோட்டத்தோடு கலக்கத் தொடங்கி விட்டது எனவும் குறிப்பிட்டுக் கொண்டாடுகிறது, ஆர்.எஸ்.எஸ்.

– ரஹிம்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க