Wednesday, April 30, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுகளவாணி ஜெயா படங்களை அகற்று ! தடையை மீறி தமிழகமெங்கும் போராட்டம் !!

களவாணி ஜெயா படங்களை அகற்று ! தடையை மீறி தமிழகமெங்கும் போராட்டம் !!

-

விழுப்புரம்

குற்றவாளி ஜெயாவின் படங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயாவின் சமாதியை அகற்று ! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் இன்று -20.02.2017 திங்கள் காலை 10.00 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை  அருகே குவிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர். மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழக்கங்கள் எழுப்பினர். பீதியடைந்த போலிசு வழக்கம் போல  குற்றவாளி ஜெயாவுக்கு ஆதரவாக களமிறங்கி போராடிய மக்கள் அதிகார அமைப்புதோழர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்ததனர்.

கைது செய்யும் போது அதைப் பார்த்த கூடி நின்ற மக்களில் பெண்கள் கோபமாக பேசிக்கொண்டார்கள்….
“ஆமாமாம் அவள உடக்கூடாது. அவ போட்டோ இருக்கக்கூடாது. மிக்சி, கிரைண்டர்ளல இருக்கறத எடுக்கனும். அத வேற ஊட்ல போய் சொரண்டனுமா. அவ இருக்கும்போதும் நமக்கு தொல்ல. போனபிறகும் தொல்ல. சே.. சனியன். அந்த இன்னொருத்தி இருக்கா பாரு சசிகலா அவள ஜெயில்ல போடக்கூடாது. தூக்குல போட்டு அவகதையும் முடிக்கணும். அப்பத்தான் நம்மள புடிச்ச தொல்லவுடும்.”


( படங்களைப்பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம். தொடர்புக்கு: 99441 17320.


மதுரை

க்கள்  அதிகாரம் மதுரை  மண்டலம் சார்பில் சொத்துகுவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட களவாணி ஜெயாவின் படத்தையும் பெயரையும் அரசின் அத்தனை திட்டங்களிலிருந்தும் பாடநூல்களிலிருந்தும் நீக்க வேண்டும். மேலும்
மாணவர்களின் மகத்தான போராட்டத்தால் அடையாளம் பெற்ற மெரினா கடற்கரையில் குற்றவாளி ஜெயாவின் கல்லறை அதுவும் அரசின் செலவிலேயே இருப்பது  வெட்கக்கேடு! ஆகவே குற்றவாளி ஜெயாவின் கல்லறையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்!

என்ற முழக்கத்தோடு 19.2.2017 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி காலை 11 மணிக்கு வாசக அட்டைகள், கொடிகள், மெகா ஃபோனுடன் தோழர்கள் அங்கே கூடினர். கூடியவுடனே  தோழர்களை விட அதிக எண்ணிக்கையில் காத்திருந்தது போலீஸ் படை. அனுமதி இல்லை கைது செய்வோம் என்று கூறினர் மிரட்டினர். கைது செய்தாலும் பரவாயில்லை நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று கூறி தோழர்கள் முழக்கம் போட ஆரம்பித்தனர். முழக்கம் முடித்தவுடன் பத்திரிக்கையாளர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி பேட்டி கொடுத்தார்.

அதன் பிறகு மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது உரையாற்றினார். அவர் பேசும் போது ஜெயா முதல் முறையாக முதல் அமைச்சராக இருந்த 1991- 96 வருடகாலகட்டமானது தமிழகத்தின் இருண்ட காலம். அந்த அளவுக்கு அது காட்டாட்சியாக இருந்தது. அரசு சொத்துக்கள் வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்பட்டது, அரசு நிலங்கள் ஜெயாவின் பெயரில் சர்வசாதாரணமாக மாறியது. இதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

21 வருடத்திற்கு பிறகு தற்போது உச்சநீதிமன்றம் தண்டணையை உறுதி செய்துள்ளது. அதற்குள் ஜெயா இறந்துவிட்டார். இவ்வளவு தாமதமான‌ தீர்ப்பு வருவதற்கு ஜெயாவின் இழுத்தடிப்பு ஒரு முக்கியமான காரணம். இதனால் வாய்தாராணி என்றே பெயர் பெற்றவர் ஜெயலலிதா. 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி குன்ஹா ஜெயாவின் களவானிதனத்தை 1500 பக்க அறிக்கையில் விவரித்து தண்டனை அளித்து தீர்ப்பு தந்தார். ஆனால் அதன் பிறகு அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தத்து உடனடியாக பினை வழங்கினார். களவானி ஜெயா நீதிமன்றத்தை 20 ஆண்டுகாலம் வாய்தா வாங்கி அலையவிட்டாலும் பரவாயில்லை ஜெயாவின் மேல்முறையீட்டை மட்டும் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத ஒரு சட்டமாக ஒரு குற்றவாளியின் மேல் முறையீட்டை உடனே ஏற்றுக்கொண்டு 2 மாதத்தில் பைசல் செய்யப்படும் என்று சொன்ன ஒரே நீதிபதி தத்துதான். அதன்படி குமாரசாமி ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டல் கணக்கை தீர்ப்பாக வழங்கினார். ஜெயாவை விடுதலை செய்தார்.

தற்போது உச்சநீதிமன்றம் குமாரசாமியின் தீர்ப்பை நீதிமன்ற தீர்ப்பின் வரலாற்றிலேயே இல்லாததாக முழுவதுமாக ரத்து செய்துள்ளது. ஜெயாவை முதல் குற்றவாளியாக அறிவித்துள்ளது. சட்டப்படியும் நியாயப்படியும் பார்த்தால் ஜெயாவின் படத்தையும் பெயரையும் அத்தனை அரசு கோப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும். ஆனால் ஓ.பி.எஸ். அம்மாவி ஆட்சி மீண்டும் வரும் என்கிறார், எடப்பாடி அம்மாவின் ஆசியோடு ஆட்சி தொடரும் என்கிறார்.

தங்கத்தாரகை, புரட்சித்தலைவி என்கின்றனர்.  ஒரு குற்றவாளியை போற்றும், அவரின் படங்களை  சட்டைப்பையில் வைத்துக் கொண்டு திரியும் எவரையும் கிரிமினல் போலத்தான் நாம் பார்க்க வேண்டும். ஒரு களவாணியின் ஆசியோடு ஆட்சி நடத்துவோம் என்று மந்திரிகள் தைரியமாக கூறுவார்கள் என்றால் அவர்கள் மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள். எனவே முதல் கட்டமாக களவானி ஜெயாவின் பெயரையும் படத்தையும் அரசின் பள்ளி பாடநூல்களிலிருந்து நீக்க வேண்டும். அங்கே திருவள்ளுவர் படத்தை ஒட்டவேண்டும்.

… என்று பேசிக்கொண்டிருக்கும் போதே  காவல் துறை  கைது செய்ய ஆரம்பித்துவிட்டது.

அதன்பிறகு கைது செய்யப்பட்ட தோழர்களை மண்டபத்தில் அடைத்து வைத்துவிட்டு ஒட்டு மொத்தமாக மண்டபத்தில் தோழர்கள் பேசிக்கொள்வதை வீடியோ ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தார்கள் காவல் துறையினர். தோழர்கள் தட்டிக் கேட்கவே எங்களை புதிதாக இப்படி வீடியோ எடுக்க சொல்லியுள்ளார்கள் என்றது போலீஸ். எந்த சட்டத்தில் இது உள்ளது சொல்லுங்கள் என்று கேட்டு நீங்கள் இதை நிறுத்த வில்லை என்றால் நாங்கள் அனைவரும் இங்கேயே உண்ணாவிரதம் இருப்போம், யாரும் பெயரை பதிவு செய்யமாட்டோம் என அறிவித்தவுடன் அதை கைவிட்டது காவல்துறை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.


கோவில்பட்டி

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 20.02.2017 அன்று கோவில்பட்டியில் குற்றவாளி ஜெயாவின் சின்னங்களை அகற்று ! எனும் தலைப்பின் கீழ் ஆர்ப்பாட்டமானது நடத்தப்பட்டது.

( படங்களைப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவில்பட்டி.


கோவை

கோவையில் 18.02.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் காந்திபுரம் பேருந்துநிலைம் எதிரில் குற்றவாளி ஜெயாவின் சமாதியை மெரினாவில் இருந்து அகற்று என்ற ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காந்திபுரம் பேருந்து நிலையத்தின் முன்பு கொடிகள், பதாகைகள், தட்டிகள் என விண்ணதிரும் முழக்கங்களுடன் அங்கு குவிந்திருந்த போலீசின் முன்னிலையிலேயே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இதில் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் உரையாற்றினார். சுமார் ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நீடித்தது இதில் கோத்தகிரி, உடுமலைப் பேட்டைத் தோழர்களும் பங்கேற்றனர். பெருந்திரளான மக்களும் நின்று ஆர்ப்பாட்டத்தை கவனிக்க ஆரம்பித்தனர். இதனால் காவல்துறை தோழர்களைக் அவசர அவசரமாகக் கைது செய்ய ஆரம்பித்தது. தோழர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது.

அங்கும் தோழர்கள் மதியம் 1:00 மணி முதல் 5:30 வரை விவாதம், பேச்சு, புரட்சிகரப் பாடல்,  என கருத்தரங்கம் போல நிகழ்சி நடத்தினர். பின்னர் மாலை 6:00 மணிக்கு பதாகைகளை போலீசு வழக்கு ஆதாரமாக வாங்கிக் கொண்டு அனைவரையும் விடுதலை செய்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவை. 95858 22157.

( படங்களைப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவை.