டெல்டா மாவட்டங்களில் இரு நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் சாவுகளுக்கு நீதி கேட்டு, நிவாரண உதவி கேட்டு அனைத்து விவசாயிகள் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, அரைவேக்காட்டு அமைச்சர்களை அனுப்பி ஒப்புக்கு ஆய்வுசெய்து, போனால் போகட்டும் என்று சில நிவாரண அறிவிப்புகளையும் வெளியிடிட்டிருந்தார், முன்னாள முதலமைச்சர் ஓ.பி.எஸ்.
“பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 5,465 ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்கப்படும். மேலும், காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் 25,000 ரூபாய் பெற்றுத் தரப்படும். தற்கொலை செய்துகொண்ட 17 பேருக்கு தலா மூன்று இலட்சம் வழங்கப்படும்” எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கண்முன்னே பயிர் கருகுவதைக் கண்டும், கடன் சுமையாலும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செத்துவிட்ட செய்தி வந்த பிறகும், வெறும் 17 பேருக்கு மட்டுமே நட்டஈடு வழங்கியிருப்பது அயோக்கியத்தனம் என்றால், நிவாரணத் தொகையும் அற்பத்தனமாகவே உள்ளது.
“ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 வரை விவசாயிகள் முதலீடு செய்திருக்கும்போது 5,465 ரூபாய் என்பது மிகவும் குறைவு. வறட்சி நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய்க்கு மேல் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இதனடிப்படையில்தான் மாநில அரசு இந்த இழப்பீடை முடிவு செய்துள்ளது. தனது விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது” என்று ஒட்டுமொத்த விவசாயிகளின் குரலை எதிரொலிக்கிறார், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொருளாளர் நாகை எஸ்.சிறீதர்.
“இந்த ரூபாயும் மொத்தமா கிடைக்காது. ரூ.4000 தான் எங்கள் கைக்கு வரும். மீதியெல்லாம் லஞ்சமாப் போயிரும். அந்த நாலாயிரமும் எப்போ வரும்னு தெரியலையே” என்று புலம்புகிறார்கள் விவசாயிகள். அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணத்தின் இலட்சணம் இதுவென்றால், அரசு வாங்கித் தருவதாகக் கூறும் காப்பீட்டுத் தொகையின் கதையோ பெரும் மோசடியாக இருக்கிறது.
1999 முதல் 2014 வரை நடைமுறையில் இருந்துவந்த பழைய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி, அரசு காப்பீடு நிறுவனங்கள் நேரடியாக இழப்பீடு வழங்கி வந்தன. ஆனால், மோடி அரசு அந்நிய மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய “தேசிய வேளாண் காப்பீட்டு”த் திட்டத்தை கடந்த 2015 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்த இடத்தில், தற்போது 16 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அனுமதித்துள்ளது மோடி அரசு. இதற்கு வசதியாக பழைய விதிமுறைகளை நீக்கப்பட்டு, தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் சாதகமான புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டுள்ளன.

சிறுவிவசாயிகளுக்கு 2.5%, பிற விவசாயிகளுக்கு 1.5% என்றிருந்த பிரிமியத் தொகை, தற்போது 16% என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 25,000 ரூபாய் காப்பீடு செய்ய 4,000 ரூபாய் பிரிமியமாகச் செலுத்த வேண்டும். இதற்கு எதிராக விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்திய பின், 2% பிரிமியத்தை மட்டும் விவசாயிகள் செலுத்துவது என்றும், மீதியை மத்திய-மாநில அரசுகள் மானியமாக வழங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, தற்போது விவசாயிகள் 800 ரூபாயும், மத்திய, மாநிலஅரசுகள் ரூ.3,200-ஐயும் செலுத்தி வருகின்றன. உர மானியம் ரத்தானது போல, இந்த மானியமும் நாளை பறிக்கப்படலாம்!
பழைய காப்பீட்டுத் திட்டப்படி, 100% இழப்புக்கு 5%-ஐக் கழித்து 95% இழப்பீடு பெறமுடியும். விவசாயிகள் காப்பீடு செய்துள்ள தொகைக்கு மேல் இழப்பானாலும், அதை மத்திய, மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ளும் விதிமுறைகள் இருந்தன. ஆனால், புதிய திட்டப்படி 100 இழப்பீட்டிற்கு நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு 70%, பிற மாவட்டங்களுக்கு 60% மட்டுமே இழப்பீடு பெறமுடியும். மேலும் 150%க்குமேல் இழப்பு ஏற்பட்டால், (அதாவது ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் என விவசாயிகள் காப்பீடு செய்திருக்கும்போது, இழப்பு 37,500 ரூபாய்க்கு மேல் இருந்தால்) முழு இழப்பீட்டையும் மத்திய-மாநில அரசுகளே ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில்தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இறங்கியுள்ளன.
இதன்படி, “ தற்போது 25,000 ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ள நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ரூ.17,500-ம், பிற மாவட்ட விவசாயிகள் ரூ.16,000-ம் தான் இழப்பீடாக பெறமுடியும். அரசு கூறுவதுபோல 25,000 ரூபாய் பெறுவதற்கு புதிய திட்டத்தில் இடமில்லை. தமிழக அரசு நாடகமாடுகிறது” என்று சாடுகிறார் திருவாரூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் திரு.காவிரி தனவேல்.
இழப்பீட்டைக் கணக்கிடுவதிலும் புதிய திட்டம் விவசாயிகள் நலனுக்கு எதிராகவே உள்ளது. பழைய திட்டத்தில், 5 வருட சராசரி மகசூலில் குறைந்த மகசூல் உள்ள 2 வருடத்தை நீக்கி விட்டு, மீதமுள்ள 3 வருட மகசூலில் இருந்து உத்தேச மகசூல் தீர்மானிக்கப்படும். ஆனால், புதிய திட்டத்தில், 7 வருட சராசரியில், அதிக மகசூல் உள்ள 2 வருடத்தைக் கழித்து மீதியுள்ள 5 வருட சராசரியிலிருந்து உத்தேச மகசூல் கணக்கிடப்படுகிறது. எனவே, பழைய திட்டத்தைவிட புதிய திட்டத்தில் இழப்பீடு குறைவாகவே இருக்கும்.
இவ்வாறு எல்லாவகையிலும் விவசாயிகளை விட, ஐ.சி.ஐ.சி.ஐ.,லாம்போர்டு, ஹெச்.டி.எஃப்.சி., இஃப்கோ-டோக்கியோ போன்ற 16 தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் இலாபத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டதுதான் மோடியின் தேசிய வேளாண் காப்பீட்டுக் கொள்கை.
கடந்த வருடம் தமிழக அரசு செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை ரூ.19 கோடி, மற்றும் பங்குத் தொகையான ரூ.198 கோடியையும் இன்றுவரை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 2015-ஆம் ஆண்டிற்கான இழப்பீடே கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கும் நிலையில், நடப்பு வறட்சி நிவாரணமும், காப்பீட்டுத் தொகையும் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்ட டோல்கேட் கட்டண வசூலை, ஒரே வாரத்தில் அந்த நிறுவனங்களுக்கு இழப்பீடாக வழங்கிய மோடி, தமிழக வறட்சிக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்து வருகிறார்.
பழைய காப்பீடு திட்டப்படி, அடுத்த பருவம் தொடங்குவதற்கு முன் இழப்பீடு தரவேண்டும். புதிய திட்டப்படி, இழப்பு ஏற்பட்ட 30 நாட்களில் இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்று அரசு விதி இருக்கிறது. தான் இயற்றிய விதிமுறைகளுக்கு தானே கட்டுப்படாத தான்தோன்றி அரசு, தனது குடிமக்களை காப்பாற்றும் என நம்புவது ஏமாளித்தனமல்லவா!
– கதிர்