
குற்றவாளி ஜெயலலிதாவின் சமாதியை மெரினாவிலிருந்து அகற்ற வேண்டும், அவரது பெயரை பாட நூல்கள் மற்றும் இதர அரசு அறிவிப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என்று “மக்கள் அதிகாரம்” அமைப்பு தமிழகமெங்கும் போராடிக் கொண்டிருக்கிறது. பல ஊர்களில் பாட நூல்களில் ஜெயா படத்தை மறைத்து திருவள்ளுவர் படம் ஒட்டும் போராட்டம் மாணவர்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. சில ஊர்களில் அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயா பெயர் கருப்பு மையால் மறைக்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 2, 2017) வியாழக்கிழமை அன்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நூறடி சாலையில் இருக்கும் புறநகர் பேருந்து நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 300-க்கும் அதிகமானோர் திரண்டு மறியலை ஆரம்பித்தனர். புறநகர் நிலையத்திற்கு இரு வாயில் இருக்கிறது. ஒரு வாயிலில் மறியல் தொடங்கியதும் சில தோழர்கள் மற்றொரு வாயிலில் இருக்கும் குற்றவாளி ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டில் கருப்பு மை பூசினர்.
ஆர்ப்பட்டத்தால் கோயம்பேடு ஸ்தம்பித்தது. உடன் பெரும்படையுடன் வந்த போலீசு அனைவரையும் கைது செய்து அருகாமை மண்டபம் ஒன்றில் வைத்திருக்கிறது. குற்றவாளி ஜெயாவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக மக்களிடத்தில் இந்தப் போராட்டம் போர்க்குணமிக்க முறையில் கொண்டு சென்றிருக்கிறது. தொலைக்காட்சிகள் பல இந்தப் போராட்டத்தை நேரலையில் காண்பித்தன. மக்கள் அதிகாரம் சார்பில் ஊடகங்களுக்கு நேர்காணலும் வழங்கப்பட்டது.
தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை