Wednesday, April 16, 2025
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்இந்திய அரசு பயங்கரவாதம் : பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை !

இந்திய அரசு பயங்கரவாதம் : பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை !

-

தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி கீழமை நீதிமன்றம். மாவோயிஸ்டு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனும் பயங்கரவாத “ஊபா” சட்டத்தின் கீழ் அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்ட சாய்பாபாவுக்கு எதிராக “அரசுக்கு எதிராக போர் தொடுத்தார்” என பொய்வழக்கு தொடுத்தது மகாராஷ்டிர அரசு.

பேராசிரியர் சாய்பாபாவுடன் கைது செய்யப்பட்ட ஹேம் மிஸ்ரா, பாண்டு நரோட்டே, மகேஷ் திர்கெ மற்றும் பிரஷாந்த் ராஹி ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபரான விஜய் திர்கெவுக்கு பத்தாண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போர் தொடுத்த முதல் குற்றவாளியான பேராசிரியர் சாய்பாபாவின் உடல் 90 சதவீதம் செயல்படாத நிலையில் சக்கர நாற்காலியின் துணையுடன் நடமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் . சாய்பாபா

கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் தண்டகாரண்ய வனப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்களின் கனிமக் கொள்யை எதிர்த்துப் போராடிய பழங்குடியின மக்களை ஒழித்துக் கட்ட பச்சை வேட்டை எனும் பெயரில் இராணுவம் களமிறக்கப்பட்டது. இதை நாடெங்கும் இருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகள் எதிர்த்துப் போராடினர். மனித உரிமைப் போராளியும், புரட்சிகர ஜனநாயக முன்னணி என்கிற அமைப்பின் இணைச்செயலாளராகவும் இருந்த பேராசிரியர் சாய்பாபா பச்சை வேட்டைக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக அறிவுத் துறையினரிடையே அறியப்பட்டவரும், மனிதவுரிமைப் போராளியுமான அவரை ஒழித்துக்கட்ட தருணம் பார்த்துக் கொண்டிருந்தது மத்திய அரசு.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டெம்பர் 12-ம் தேதி சுமார் 50 போலீசார் ‘திருட்டுப் போன பொருளைத் தேடுவதற்கான நீதிமன்ற ஆணை’ ஒன்றுடன் பேராசிரியர் சாய்பாபாவின் வீட்டைச் சோதனையிட்டுள்ளனர். சட்டவிரோதமான இந்த தேடுதலில் சாய்பாபாவுக்கு எதிராக ஏதும் கிடைக்காத நிலையில், அவரது மடிக்கணினி மற்றும் சில பென் டிரைவ்களைத் திருடிச் சென்றுள்ளனர் போலீசார். இரண்டு வாரங்கள் கழித்து பேராசிரியர் சாய்பாபாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மடிக்கணினியின் கடவுச் சொல்லைக் கேட்டுப் பெற்றுள்ளனர்.

2014-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி பேராசிரியர் சாய்பாபாவை விசாரிக்கும் போலீசார், அதே ஆண்டு மே 9-ம் தேதி நீதிமன்றப் பிடி வாரண்டு ஏதுமின்றி அவரது காரை வழிமறித்து கடத்திச் சென்றது. கைது செய்த போதும் சரி, அதற்குப் பின்னும் சரி பின்பற்றியிருக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தையும் மதிக்காத போலீசார், சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத, இன்னொருவரின் உதவியின்றிக் கழிவறைக்குக் கூட செல்ல முடியாத மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவைக் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளது.

சட்டவிரோதமாக பேராசிரியர் சாய்பாபாவைக் கடத்திய அரச பயங்கரவாதிகள், அவரை நாக்பூர் சிறையில் அடைக்கிறார்கள். அரசியல் கைதியான சாய்பாபாவை சாதாரண கிரிமினல்களுடன் அடைத்த போலீசார், பிறர் உதவியின்றி நகரக் கூட முடியாத அவரை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரையில் தர தரவென இழுத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே உடல் இயக்க குறைபாட்டுடன் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளோடு போராடி வந்த பேராசிரியர் சாய்பாபாவின் உடலின் மேல் போலீசார் கட்டவிழ்த்து விட்ட குரூரமான சித்திரவதையின் விளைவால் அவரது இடது கை முடமானது. இத்துடம் தமிழகத்தை கொள்ளையடித்த குற்றவாளி ஏ 2 சசிகலாவுக்கு பரப்பன அக்ரகார சிறையில் அளிக்கப்படும் ஆடம்பர வசதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்!

ஒருபுறம் நீதிமன்றத்தில் போலீசார் தொடுத்த பொய் வழக்கை எதிர்த்துப் போராடி வந்த பேராசிரியர் சாய்பாபா, இன்னொரு புறம் தனது நோய்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச மருத்துவ வசதிகளுக்காகவும் போராடி வந்தார். நியாயமாக அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய மருத்து சிகிச்சைகளைத் தடுத்து சிறையிலேயே கொன்று விடும் நோக்கத்தில் அரசு செயல்பட்டு வந்த நிலையில் தான் தற்போதைய தீர்ப்பு வந்துள்ளது.

சட்டவிரோதமாக போலீசார் திருடிச் சென்ற கணினி மற்றும் பென் டிரைவ்களை ஆதாரமாக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பேராசிரியர் சாய்பாபாவின் தரப்பில் போலீசாரால் திருடிச் செல்லப்பட்ட கணினியில் எந்த வகையான ‘ஆதாரத்தையும்’ சொருகி வைக்க முடியும் என முன்வைத்த வாதங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்துள்ளது. பென் டிரைவ் ஒன்றில் அபாயகரமான மின் ஆவணங்களை சேமித்து அதை கட்சிரோலி காட்டுப்பகுதியில் உள்ள நர்மதாக்கா எனும் மாவோயிஸ்டு பெண் தளபதியிடம் தனது தோழர்கள் மூலம் பேராசிரியர் சாய்பாபா கொடுத்து அனுப்பினார் என அரசு தரப்பு வைத்த குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு ஆதாரமாக பென் டிரைவ்களை ஏற்றுக் கொண்டுள்ளது நீதிமன்றம்.

அரசு தரப்பால் பேராசிரியர் சாய்பாபாவுக்கு எதிராக சோடிக்கப்பட்ட எந்த ‘ஆதாரங்களையும்’ சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவ முடியாத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கு எதிராகவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இயற்கை வளங்களை கூறு போட்டு விற்கும் அரசின் ‘கொள்கைகளை’ எதிர்க்கும் எவருக்கு எதிராகவும் இது போல் ஆயிரக்கணக்கான பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனையும் ஆற்றல் போலீசாருக்கு உள்ள நிலையில், எந்த தர்க்க நியாயமும் சட்டவாத அதனடிப்படையும் இன்றி தண்டனை வழங்க நீதிமன்றங்கள் தயாராக உள்ளன என்பதை இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

பேரா. சாய்பாபா மற்றும் அருந்ததி ராய் மட்டுமல்ல நாளை நெடுவாசல் கிராமத்தினர் மீதும் இந்த அரச பயங்கரவாதம் பாயும்.

சாய்பாபா 90 சதவீதம் முடமானவர் என்பதைக் கணக்கில் கொண்டு அவருக்கு கருணை காட்ட முடியாது எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், அவர் உடல் ரீதியாக ஊனமுற்றவராக இருந்தாலும் சிந்தனை ரீதியாக உறுதியானவரெனவும் எனவே தண்டனை பெற்றாக வேண்டுமெனவும் எனத் தெரிவித்துள்ளனர். அதாவது, ஒருவர் அரசுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த வேண்டுமென்பதில்லை – சிந்தித்தாலே சிறை தான் என கொக்கரிக்கிறது இத்தீர்ப்பு. ஒருவரின் மூளைக்குள் இன்னது தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க போலீசார் அளிக்கும் “பென் டிரைவுகளும்” அதில் அவர்களே நிரப்பிக் கொடுக்கும் “ஆதாரங்களுமே” போதுமானவை என்கிற கேலிக்கூத்தான முன்னுதாரணத்தை துவங்கி வைத்துள்ளது இத்தீர்ப்பு.

இது எங்கோ கட்சிரோலியில் நடந்த அநீதியாகவோ, பேராசிரியர் சாய்பாபாவுக்கு நேர்ந்த ‘துரதிர்ஷ்டமாகவோ’ கடந்து செல்ல முடியாது. நாடெங்கும் பன்னாட்டு கம்பெனிகளுடனும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுடனும் கைகோர்த்துக் கொண்டு இயற்கை வளங்களைச் சூரையாடும் அரசின் சட்டப்பூர்வ கொள்ளைகளுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், இத்தீர்ப்பை ஜனநாயக சக்திகளுக்கு அரசு விடுக்கும் மிரட்டலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மெரினாவில் துவங்கி, நெடுவாசல், தாமிரபரணி, சேலம் உருக்காலை என தமிழகத்தின் வீதிகளில் அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடி வரும் மக்களும் ஜனநாயக சக்திகளும் இத்தீர்ப்பு தங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடியான சவால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் – நீதிமன்றங்கள் அநீதிமன்றங்களாக உருவெடுத்திருப்பதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடாவிட்டால் இன்று பேராசிரியர் சாய்பாபாவின் மேல் பாய்ந்தது நாளை மக்களின் மீதும் பாயும்.

  1. கொள்ளையடிக்கும் உரிமை கோலோச்சும் காலத்தில்
    அநீதியைத் தட்டிக் கேட்கும் கருத்துரிமை
    சக்கர நாற்காலியில் ஏற்றப்பட்டிருக்கிறது.
    அரசியல் நிர்ணயச் சட்டம் என்ற விஸ்தாரமான காகிதக் கட்டையில்
    உட்கார்ந்துகொண்டு காப் பு கருப்பு பஞ்சாயத்தார்
    ஆசனவாயால் தீர்ப்புச் சொல்கிறார்கள்.
    நாத்தம் பொருக்க மாட்டாமல்
    உரிமைகள் பற்றிய வாசகங்கள்
    மடித்துப்போகின்றன.
    மேலிருந்து பெற்றுத் தரப்பட்ட உரிமைகள்
    கீழோர் உணரத்தலைப்படும்போதே
    மேலிருந்தும், கீழிருந்தும், பக்கவாட்டிலிருந்தும்
    அழிக்கப்படுகின்றன.
    மக்கள் சக்கர நாற்காலியில் இருந்து இறங்குவதற்காக
    களம் தயார் செய்யப்படுகிறது.

  2. மகாராஷ்டிர நீதிமன்றத்தின் இந்தக் கொடிய செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது. அதற்கு நாம் எவ்வகைப் போராட்ட வடிவத்தைக் கொள்ள முடியும் என்பது தெரியவில்லை. கிரீன்பீஸ் இந்தியா, ஆவாஜ் போன்றவை மின்னஞ்சல் வடிவப் போராட்டத்தைக் கையெடுப்பது போல, இங்கும் ஏதாவது ஓர் அமைப்பு இதற்கான போராட்டத்தை மேற்கொண்டால் பங்களிக்க இயலும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க