“நான் இந்த உலகத்திற்கு தனியே வந்தேன், தனியே செல்வேன். குழந்தைப் பருவத்தில் தாயையும் ஆறுவயதில் தந்தையையும் இழந்தவன் நான். என்னுடையவர்கள் என்று சொல்ல எனக்கு எவருமே இருந்ததில்லை. பெற்றோரின், குடும்பத்தாரின் அன்பு எனக்கு எப்போதுமே கிடைத்ததில்லை”
”ஏழ்மையின் பிடியில் கையறு நிலையில் உழன்று கொண்டிருந்தேன். ஒன்னரை ரூபாய் நாள் கூலிக்கு மாதம் 45 ரூபாய் சம்பாதிக்க தச்சு வேலை செய்திருக்கிறேன். இன்றைக்கும் நான் தச்சு வேலை செய்த கருவிகளை ஞாபகமாக வைத்திருக்கிறேன்”
– கலிகோ புல்லின் தற்கொலைக் குறிப்பிலிருந்து.

சுமார் அறுபது பக்கங்களுக்கு சமஸ்கிருதமயமான இந்தியில் தட்டச்சு செய்யப்பட்டு ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது அந்தக் கடிதம். இவ்வாறாக ஒரு குறிப்பு இருப்பதை முதன் முதலாக வெளிப்படுத்தியவர் முன்னாள் கவர்னர் ராஜ்கோவா. ஏராளமான முரண்பாடுகளுடன் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தை உண்மையாகவே கலிகொ புல் தான் எழுதினாரா, அல்லது அரசியல் நோக்கங்களுக்காக இடைச்செருகல் செய்யப்பட்டதா என்பதை விசாரணை தான் தீர்மானிக்கும் – ஆனால், அந்த விசாரணையின் முடிவு எப்படியிருக்கும் என்பதை அதே அரசியலின் தேவைகள் தான் தீர்மானிக்கப் போகிறது.
எனினும், நாம் கலிகோ புல் எழுதியதாகச் சொல்லப்படும் தற்கொலைக் குறிப்பின் வரிகளுக்கிடையே ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைகளை அருணாச்சல பிரதேசத்தின் அரசியலுடன் – அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இந்துத்துவ கும்பலின் அரசியல் செயல்திட்டத்துடன் உரசிப் பார்ப்பதன் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். மேற்படி குறிப்பானது “எனது சிந்தனைகள்”, ”தற்போதைய நீதிமன்ற விவகாரங்கள்” மற்றும் “எனது செய்தி” என மூன்று உட்பிரிவுகளாக உள்ளது.
தனது ஏழ்மையான வாழ்க்கைப் பின்னணி குறித்து துவங்கும் கலிகோ புல், எப்படி படிக்கும் காலத்திலேயே கோடீஸ்வரனாக உயர்ந்தேன் என்பதை விவரிக்கிறார். விக்கிரமனின் சினிமாவைப் போலிருக்கும் அந்தக் காட்சிகளில் இருந்து சில பகுதிகள் கீழே …
“ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நான் இரவுக் காவலனாக பணிபுரிந்தேன். காலை ஐந்து மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி மாலை ஐந்து மணிக்கு இறக்க வேண்டும். இதற்காக எனக்கு 212 ரூபாய் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டது”

”பின்னர் காண்டிராக்டுகள் எடுத்துச் செய்தேன். 400 ரூபாய்க்கு மூங்கில் வீடுகள் கட்டிக் கொடுக்கத் துவங்கினேன்.. பின்னர் அரசு வீடுகள் மற்றும் பாலங்களைக் கட்டும் காண்டிராக்டுகளையும் எடுத்துச் செய்தேன். நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போதே ஒரு ஜிப்சி ஜீப்பும் நான்கு டிரக்குகளும் வாங்கி விட்டேன். நான் முதன்முதலாக எம்.எல்.ஏ ஆன போது (26 வயது) எனது ஆண்டு வருமானம் 46 லட்சங்களாக இருந்தது. எனது மாணவப் பருவத்திலேயே நான் கோடீசுவரனாகி விட்டேன். ஆனால், அதற்காக எப்போதும் நான் பீற்றிக் கொண்டதில்லை”
ஒரு வள்ளலாரின் வாழ்வைப் போல் விரியும் அந்தச் சுயபுராணத்தில் இருக்கும் ஏராளமான முரண்பாடுகளுக்கு மேலே சுட்டிக்காட்டிருப்பவை சிறிய உதாரணங்கள் மட்டும் தான். சூரிய வம்சம் சரத்குமாரை விட அதிவேகமான இந்த வளர்ச்சியை எட்டியிருக்கும் கலிகோ புல், அதனை அரசு காண்டிராக்டுகளின் வழியே தான் சாதித்ததாகச் சொல்கிறார்.
அதே குறிப்பின் வெவ்வேறு இடங்களில் அருணாச்சல பிரதேசத்தின் அரசாங்கமும், அதன் ஒவ்வொரு திட்டமும், நடைமுறைகளும் எந்தளவுக்கு ஊழல் கறைபடிந்துள்ளதென விவரிக்கும் கலிகோ புல், அதனைச் சீர்திருத்தி மக்களுக்கு சேவையாற்றுவதே தனது கொள்கை என குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் மேல் தீவிரமான குற்றச்சாட்டுகள் இடம்பெற்ற அந்தக் கடிதத்தில் பாரதிய ஜனதாவின் பெயர் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இன்று கலிகோ புல் குற்றம் சுமத்திய அத்தனை எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் அவரது இறப்பிற்குப் பின் ஒருசில மாதங்களிலேயே மொத்தமாக பாரதிய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளனர்.
மேலும் சுவாரசியமான விசயம் என்னவெனில், அந்தக் கடிதத்தில் மிக மோசமான ஊழல்வாதியாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சோவ்னா மெய்னை, கலிகோ புல் தனது அமைச்சரவையில் துணை முதல்வராகவே நியமித்திருந்தார். அரிதினும் அரிதாக கலிகோ புல்லின் அமைச்சரவையில் இரண்டு துணை முதல்வர்கள் இருந்தனர்.
மேலும் எப்போதெல்லாம் அருணாச்சல பிரதேசத்தில் அரசியல் குழப்ப நிலை ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் எம்.எல்.ஏக்கள் தங்களை பத்து கோடிக்கும் பதினைந்து கோடிக்கும் விற்று விடுகின்றனர் என்றும், இது மிக கேவலமான மக்கள் விரோத அரசியல் எனவும் சாடுகிறார் கலிகோ புல். இவ்வாறு சாடும் அதே கலிகோ புல் தான் நபாம் டுக்கியின் அரசை உடைத்து தனது தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களைத் திரட்டி பாரதிய ஜனதாவின் 11 எம்.எல்.ஏக்களின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர். இதற்கு ஆன செலவு எவ்வளவு என்கிற விவரமும் மிக கவனத்துடன் தவிர்க்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் கலிகோ புல் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் உள்ள முரண்பாடுகள் என்றாலும், கலிகோ புல் தற்கொலை செய்து கொண்டது மட்டும் உண்மை (குறைந்தபட்சம் இதிலும் சதிக்கோட்பாடுகள் எழாத வரை). கலிகோ புல்லின் தற்கொலை முடிவை (அல்லது மரணத்தை) எது தூண்டியிருக்கும்? அவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த 60 பக்க குறிப்புகளால் யார் பலனடைந்துள்ளனர்?
அதற்கு முன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்த அரசியல் குழப்பத்தால் சந்தேகமின்றி ஆதாயமடைந்திருப்பது பாரதிய ஜனதா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ’மோடி அலையையும்’ மீறி தேர்தலில் படுமோசமாகத் தோற்று வெறும் பதினோரு சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா மாறி மாறி நடந்த தாவல்களுக்குப் பின் ஆட்சியைப் பிடித்துள்ளது. கலிகோ புல் பாரதிய ஜனதாவின் ஏஜெண்டாக செயல்பட்டார் என்பதும் மிகத் தெளிவாகத் தெரியும் உண்மை. எனில் பாரதிய ஜனதா ஏன் அவரைக் கைவிட வேண்டும்? கலிகோ புல் ஏன் மரணமடைய வேண்டும்?
அந்த தற்கொலைக் குறிப்பில் கலிகோ புல் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தாலும், அவர் யாரையெல்லாம் குற்றம்சாட்டியிருந்தாரோ அவர்களுக்கே பதவிகளை வாரி வழங்கித் தன்னோடு வைத்துக் கொண்டார். அருணாச்சல பிரதேசத்தின் தேர்தல் அரசியல் களத்திலும் தேர்தல் களத்திலும் ’ஊழல்’ – குறிப்பாக பொது விநியோகத் துறையின் ஊழல் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பேசு பொருளாக இருந்து வந்தது.
பாரதிய ஜனதாவின் வடகிழக்குத் திட்டங்கள் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. அரசியல் ரீதியில் காங்கிரசையும் வட்டாரக் கட்சிகளையும் ஒழித்து இந்துத்துவ அரசியலை நிலை நாட்டி அப்பகுதியை இந்து தேசியத்தின் மையநீரோட்டத்தில் சேர்ப்பது மற்றும் பொருளாதார ரீதியில் ”அரசியல் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலைநாட்டப்பட்ட” வடகிழக்கின் இயற்கை வளங்களை தரகு முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பது.
’தூய்மையான’ ஆட்சி நிர்வாகத்தை வலியுறுத்திய கலிகோ புல்லின் மூலம் புறவாசல் வழியாக அரசியல் அதிகாரத்தைக் கைபற்றுவதில் பாரதிய ஜனதா வென்றது – சில மாதங்கள் நீடித்த தனது ஆட்சிக்காலத்தில் ஹைட்ரோகார்பன் துரப்பணம் செய்வது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களுக்கு கலிகோ புல் அனுமதியளித்துள்ளார். அதே காலகட்டத்தில் தொலைதூரப்பகுதிகளில் இருந்து மருத்துவ சிகிச்சைகளுக்காக மாநிலத் தலைநகருக்கு வரும் பழங்குடி இன மக்களைத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்க வைப்பது, (ஊழல்வாதிகளை கக்கத்தில் வைத்துக் கொண்டே) ஊழல் எதிர்ப்பு சவடால்கள் அடிப்பது என தனது சொந்த அரசியல் நலனுக்கான ’இமேஜ் மேக் ஓவர்’ வேலைகளையும் செய்து வந்தார்.
இந்நிலையில் தான் உச்சநீதிமன்ற வழக்கு சூடு பிடிக்கிறது. கலிகோ புல்லின் கடிதத்தில் தீர்ப்பை தனக்குச் சாதகமாக வழங்க கோடிக்கணக்கில் லஞ்சம் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஏஜெண்டுகள் அணுகிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் உண்மையாக இருக்கும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. எந்நேரமும் தாவுவதற்குத் தயாராக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருபுறமும் தீர்ப்புக்கான பேரம் இன்னொருபுறமும் நடந்து வந்த நிலையில் – தீர்ப்புக்காக அத்தனை செலவு செய்த பின்னும் உறுப்பினர்களைத் தக்க வைக்கும் சாத்தியம் குறைவு என்பதை கலிகோ புல் உணர்ந்திருக்க வேண்டும்.

மற்றொருபுறமோ கலிகோ புல்லுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற பெமா கந்து பாரதிய ஜனதாவுக்குத் தாவிய வேகத்தைப் பார்த்தால், அவரைத் தனது சிலீப்பர் செல் ஏஜெண்டாக பல மாதங்களாகவே பாரதிய ஜனதா பராமரித்து வந்திருக்க வேண்டும் – இதுவும் கலிகோ புல்லுக்குத் தெரியாமல் இருக்க சாத்தியமில்லை. கடைசியாக, கலிகோ புல்லுக்குள் இன்னமும் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்திருக்க (மிகக் குறைந்தபட்சமாகவாவது) சாத்தியமுள்ள அந்த ஏழைத் தச்சனின் மனசாட்சி. இவையனைத்தையும் கடந்து பேரம் படியாமல் போயிருக்கும் சாத்தியங்களையும் தள்ளி விடுவதற்கில்லை.
கலிகோ புல் ஆட்சியை இழக்கிறார் – அதிகாரம் கையை விட்டுப் போனதும் கிழிந்த நெல்லிக்காய் மூட்டையாக சிதறியோடிப் போகின்றனர் அவர் வசமிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள். அரசியல் பேரங்களில் திறமையைக் காட்டாத பழைய ’பன்னீர்செல்வமான’ கலிகோ புல்லைக் கழற்றி விடுகின்றது பாரதிய ஜனதா. கலிகோ புல் மரணமடைகிறார் – உடனே அவரது தற்கொலைக் குறிப்புகள் குறித்த வதந்திகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. முதலில் அதை பா.ஜ.கவின் விசுவாசியான ராஜ்கோவாவே துவக்கியும் வைக்கிறார்.
மேற்படி தற்கொலைக் குறிப்பும் அதன் உள்ளடக்கமும் தற்போது பதவியிலிருக்கும் அத்தனை பேரின் அரசியல் எதிர்காலத்தையும் (குறிப்பாக பெமா கந்து) காவு வாங்குமளவுக்குத் தீவிரமானவை என்கிற நிலையில் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்த பேரையும் கடத்திக் கொண்டு பாரதிய ஜனதாவில் ஐக்கியமாகிறார் பெமா கந்து. தற்கொலைக் குறிப்பு ஒன்று இருப்பதாக முன்னாள் கவர்னர் சொல்லி விட்டார், கலிகோ புல்லின் மனைவியும் அப்படியொன்று இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளார் – ஆனால், இன்று வரை அதன் மேல் சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனினும், அந்த மசால் வடையைக் காட்டி பெமா கந்து என்கிற ஊழல் பெருச்சாளியையும், அவருடன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களையும் பாரதிய ஜனதா வளைத்திருக்கிறது.
அருணாச்சல பிரதேசத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகள், அவற்றின் பின்விளைவுகள் மற்றும் அதனால் ஆதாயம் அடைந்த தரப்பு யார் என அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் சித்திரம் என்ன? முன்னாள் தச்சுத் தொழிலாளியாக இருந்து ‘முன்னேறிய’ கலிகோ புல் இறந்து விட்டார். வடகிழக்கில் உள்ள ஒரு சிறிய மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பாரதிய ஜனதா ஆடியிருக்கும் அரசியல் கோர தாண்டவம் திகைப்பூட்டுவதாக உள்ளது. ஒரு சிறிய மாநிலத்துக்கே இந்தளவுக்கு மெனக்கெடுவார்கள் எனில், தமிழகம் போன்ற (வரலாற்று ரீதியாக இந்துத்துவத்தின் தொண்டையில் சிக்கிய கடப்பாறையாக உள்ள) மாநிலத்தின் அதிகாரத்தைக் கைப்பற்ற எந்தளவுக்கு இறங்கிப் போவார்கள் என்பது நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஜல்லிக்கட்டு, ஜெயா மரணம், நெடுவாசல், மீனவர் கொலை என்று பல்வேறு பிரச்சினைகளில் பாரதிய ஜனதா ஆடி வரும் அரசியல் சூதாட்டங்களை அருணாச்சல பிரதேசம் காட்டும் உதாரணத்தின் ஒளியில் பார்ப்பதுடன், இந்து பாசிஸ்டுகளின் அரசியல் அபிலாசைகளை முளையிலேயே கிள்ளியெறிந்து அவர்களைக் களத்தில் மோதி முறியடிப்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் கடமையாகும்.
– சாக்கியன்