
நெடுவாசல் போராட்டத்துக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் கூறி வரும் பொய்களில் முதன்மையானது, இத்திட்டத்தை நாங்கள் கொண்டுவரவில்லை, காங்கிரசும் தி.மு.க.வும்தான் கொண்டு வந்தன என்பதாகும்.
காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் ஏற்கெனவே உள்ளன என்பது உண்மை. மீத்தேன் திட்டத்தை அனுமதித்துப் பின்னர் அதற்காக தி.மு.க. வருத்தம் தெரிவித்ததும் உண்மை. காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுவுக்கான ஆய்வுகளை ஓ.என்.ஜி.சி. மேற்கொண்டதும் உண்மை.
ஆனால் காங்கிரசு, தி.மு.க.வின் மேற்கண்ட நடவடிக்கைகளும், தற்போது மோடி கொண்டு வந்திருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் ஒன்றுதான் என்று பாரதிய ஜனதா சொல்கிறதே, அது கடைந்தெடுத்த பொய். அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் எடுப்பது எண்ணெயா, எரிவாயுவா என்று பார்க்கும் அதிகாரமும், எவ்வளவு எடுக்கிறார்கள் என்று சோதிக்கும் அதிகாரமும் இதற்கு முந்தைய அரசின் துரப்பணவுக் கொள்கையில் (New Exploration and Licencing Policy) அரசாங்கத்திடம் இருந்தது.
மார்ச் 2017-இல் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலிருந்து, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருக்கின்ற புதிய கொள்கை (Hydrocarbon Exploration and Licencing Policy – HELP), “கிணற்றை ஏலம் எடுக்கும் கார்ப்பரேட் கம்பெனி, அதிலிருந்து எண்ணெயோ, எரிவாயுவோ, மீத்தேனோ, ஹைட்ரோகார்பனோ எடுத்து விற்கலாம். எதை எடுக்கிறார்கள், எவ்வளவு எடுக்கிறார்கள் என்று அரசு கண்காணிக்காது. அவ்வாறு செய்வது கார்ப்பரேட்டுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருப்பதால், கண்காணிப்பை நீக்கவிட்டோம்” என அறிவிக்கிறது.
அதேநேரத்தில், நெடுவாசலில் போராடும் மக்களுக்குப் “பின்னால்” இருப்பவர்கள் யார், “சைடில்” இருப்பவர்கள் யார் என்றெல்லாம் கண்காணிக்க வேண்டுமென மாநில அரசுக்கு உத்தரவு போடுகிறார் இல.கணேசன். கள்ளனைக் கண்காணிக்கக் கூடாது, காப்பானைத்தான் கண்காணிக்க வேண்டும் என்ற இந்த உன்னதமான கொள்கையை மோடிஜி அவர்கள் அவசரமாகக் கொண்டு வருவதற்கும் ஒரு தனிச்சிறப்பான காரணம் இருக்கத்தான் செய்கிறது.
கிருஷ்ணா-கோதாவரிப் படுகை எரிவாயு ஊழல் என்றழைக்கப்படும் மோடி – அம்பானி கூட்டுக்கொள்ளையை (19,700 கோடி ரூபாய்) சி.ஏ.ஜி. கண்டுபிடிக்க முடிந்ததற்கு முக்கியமான காரணம், எண்ணெய் எரிவாயு உற்பத்தியைக் கண்காணிப்பதற்கு அரசு கொண்டிருந்த அதிகாரம். அந்த அதிகாரத்தையே அரசிடமிருந்து பிடுங்கினால்தான் கார்ப்பரேட்டுகள் பூரண சுதந்திரத்துடன் கொள்ளையிட முடியும் என்பதனால்தான் புதிய (ஹெல்ப்) HELP கொள்கையை உருவாக்கியிருக்கிறார் மோடி. ஹெல்ப் கொள்கையின்படி நெடுவாசலில் சித்தேஸ்வரா நிறுவனம், மண்ணெண்ணெய் எடுக்கலாம், ஷேல் வாயு எடுக்கலாம், புதையல் கிடைத்தாலும் எடுக்கலாம். அரசாங்கம் கண்காணிக்காது.
நெடுவாசலின் “மண்ணெண்ணெய் குழாய்”, ஹைட்ரோகார்பன் குழாயாக மாற்றப்பட்ட கதை இதுதான்.
000

வடக்கே பாண்டிச்சேரியில் தொடங்கி தெற்கே மன்னார் வரை நிலத்தில் 25,000 ச.கிலோ மீட்டரும், கடலில் 30,000 ச.கிலோ மீட்டரும் கொண்டது காவிரிப்படுகை (Cauvery Basin) என்ற அவர்கள் குறிப்பிடும் பகுதி. காவிரிப்படுகையில் இவர்கள் எடுக்கத் திட்டமிட்டிருக்கும் ஹைட்ரோ கார்பனின் பெயர், ஷேல் எரிவாயு.
இந்தியாவில் 584 டிரில்லியன் கன அடி ஷேல் வாயு இருப்பதாகவும் அதில் 96 டிரில்லியன் கன அடி காவிரிப்படுகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிக செலவில்லாமல் இலாபகரமாக எடுக்கத்தக்கதாக 9 டிரில்லியன் (9,00,000 கோடி) கன அடி ஷேல்வாயு காவிரிப்படுகையில் உள்ளது.
1990-களின் துவக்கத்தில் ஷேல் எனப்படும் ஒருவகை களிமண் பாறைகளில் இருக்கும் துளைகளுக்குள் எரிவாயு தங்கியிருப்பதை எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் கண்டுபிடித்தன. சில ஆண்டுகளுக்குப் பின், பூமியில் 5 கி.மீட்டருக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, அப்படியே பக்கவாட்டில் குடைந்து செல்வதற்கான தொழில் நுட்பமும் உருவாக்கப்பட்டது.
அவ்வாறு குடையப்பட்ட துளையின் வழியே வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீரை ஷேல் பாறைகளின் மீது பாய்ச்சி, அவற்றின் துளைகளுக்குள்ளே இருக்கும் எரிவாயுவை வெளியேற்றி எடுக்கின்ற “நீரியல் விரிசல் முறை”யும் (Fracking) கண்டுபிடிக்கப்பட்டது.
நரிமணம், குத்தாலம் போன்ற இடங்களில் ஏற்கெனவே இருக்கின்ற கிணறுகள் வழமையானவை (convenitional) என்றழைக்கப்படுகின்றன. ஷேல் கிணறுகள் வழமைக்கு மாறான ரகத்தை சேர்ந்தவை (unconventional). இரண்டும் ஒன்றுதான் என்று பா.ஜ.க.வினர் சித்தரிப்பது மிகப்பெரிய பித்தலாட்டம். ஷேல் வாயுக் கிணறுகள் ஏற்படுத்தும் பாதிப்பு பன்மடங்கு அதிகமானது.
தற்போது தஞ்சை டெல்டாவில் இருக்கும் பழைய வகை எரிவாயுக் கிணறுகள் ஒவ்வொன்றும் பத்து சதுர கி.மீ சுற்றளவில் உள்ள எரிவாயுவை உறிஞ்சி எடுக்கக் கூடியவை. எனவே தான், இந்த கிணறுகளுக்கான உரிமம் நூறு முதல் ஐநூறு சதுர கி.மீ. சுற்று வட்டாரத்துக்குத் தரப்படுகிறது. ஆனால், ஷேல் வாயுக் கிணறுகளைப் பொருத்தவரை அவற்றின் உரிமப் பரப்பளவு சுமார் 25,000 சதுர கி.மீ இருக்கும் என்கிறார் இந்திய எரிசக்தி துறையின் ஆலோசகர் அனில் குமார் ஜெயின். எனவே, காவிரிப் படுகை முழுவதும் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்படும் என்ற அச்சம் கற்பனையானதல்ல.
இந்த துளைகளுக்குள் 78 விதமான வேதிப் பொருட்களும் மணலும் கலந்த தண்ணீர், ஒரு சதுர அங்குலம் பாறையின் மீது சுமார் 6 டன் அழுத்தத்தைக் கொடுக்கின்ற வேகத்தில் செலுத்தப்படும். வேதிப்பொருட்கள் கலந்த மணல் பாறைகளின் மெல்லிய துளைகளுக்குள் இருக்கும் எரிவாயுவை விடுவித்து மேல்நோக்கி அனுப்பும்.
இந்த ஆழ்துளைகளின் சுவர்கள், இரும்பாலும் கான்கிரீட்டாலும் கவசமிடப்படுவதால் கசிவு ஏதும் ஏற்படாது என்று எரிவாயு நிறுவனங்கள் கூறிக்கொண்டாலும், கசிவு ஏற்படுவது உண்மை என்று அமெரிக்காவிலேயே நிரூபணமாகியிருக்கிறது.
எரிவாயுவுடன் மீத்தேனும் சேர்ந்தே வெளியேறும் என்பதால், அது நிலத்தடி நீருடன் காற்று மண்டலத்திலும் கலந்து அதனை நஞ்சாக்கும். பாறைகளின் இடுக்குகளில் பல பத்தாயிரம் ஆண்டுகளாக பூமியினுள் தங்கியிருக்கின்ற கடல் நீர், பன்மடங்கு உவர்த்தன்மை வாய்ந்தது. கதிர் வீச்சையும் வெளிப்படுத்தக் கூடிய தன்மை கொண்டது. இந்தக் கடல் நீரும் மேல் நோக்கி வந்து நிலத்தடி நீருடன் கலக்கும்.
பூமிக்குள் செலுத்தப்பட்ட கோடிக்கணக்கான லிட்டர் வேதிப்பொருட்கள் கலந்த நீரீல், மெத்தனால், ஹைட்ரஜன் புளூரைடு, கந்தக அமிலம், புற்று நோயை உருவாக்கும் பி.டெக்ஸ், காரீயம், பார்மால்டிஹைடு ஆகியவையும் அடக்கம். புற்றுநோயை உருவாக்குபவை என்று வகைப்படுத்தப்பட்ட 650 இரசாயனப் பொருட்களை, சுமார் ஒரு கோடி காலன் அளவுக்கு அமெரிக்க ஷேல் வாயு நிறுவனங்கள் பூமிக்குள் செலுத்தியிருப்பதாக 2011-இல் அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.
மாசுபட்ட இந்த நீரை மீண்டும் அவர்கள் பயன்படுத்துவதில்லை. பென்சில்வேனியாவிலும் மேற்கு வர்ஜீனியாவிலும் இக்கழிவுநீர் ஆறுகளில் விடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. நம் ஊரில் என்ன நடக்கும் என்பதை திருப்பூர், ஆம்பூர், கடலூர் ஆகியவற்றுக்கு நேர்ந்திருக்கும் கதியிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம்.

பூமியில் குப்பையைப் புதைப்பது போல, அருகாமையிலேயே இன்னொரு கிணறு தோண்டி, கழிவுநீரை பூமிக்குள் செலுத்துகின்றன எரிவாயுக் கம்பெனிகள். இதனால் நிலத்தடி நீர் நஞ்சாவது மட்டுமல்ல, ஷேல் வாயு எடுக்கப்படும் மாநிலங்களிலெல்லாம் நிலநடுக்கம் அதிகரித்திருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் மேல் முதன்மையான பிரச்சினை தண்ணீர். நீரியல் விரிசல் முறைக்கு மிகப்பெருமளவு தண்ணீர் தேவை. ஷேல் கிணறுகள் இருக்கிற நீரை உறிஞ்சுவதுடன், மிச்சமிருக்கும் நீரையும் நஞ்சாக்கி விவசாயத்தையும் குடிநீரையும் அழிப்பதால், எல்லா நாடுகளிலும் இதனை மக்கள் எதிர்க்கின்றனர்.
உலகில் மிக அதிகமான ஷேல் வாயு இருப்பு உள்ள நாடு சீனா. அடுத்து அல்ஜீரியா. சீனாவில் ஷேல் வாயு இருக்கின்ற பகுதிகள் வறட்சிப் பகுதிகள் என்பதால் அப்பகுதிகளில் எடுக்கப்படுவதில்லை. அல்ஜீரியா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் எதிர்ப்பால் இது கைவிடப்பட்டிருக்கிறது. பல்கேரியா, பிரான்சு போன்ற நாடுகளில் முற்றாகவும் ஜெர்மனியில் கணிசமாகவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் ஷேல் வாயு எடுப்பதற்கு உதவுவதாக அமெரிக்கா கூறியபோதிலும், தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக அந்நாட்டு அரசு இதுவரை இதில் இறங்கவில்லை.
அமெரிக்காவைப் பொருத்தவரை, அங்குதான் ஷேல் வாயு எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பதுடன், எண்ணெய் கம்பெனிகள் அமெரிக்க அரசியலைக் கட்டுப்படுத்தும் முக்கிய சக்திகளாகவும் இருக்கின்றன. அமெரிக்காவில் பெரும் நிலப்பரப்பு இருப்பதாலும், தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதாலும் ஷேல் வாயு எடுப்பது ஒப்பீட்டளவில் அதிகமாக நடக்கிறது. நீரும் சூழலும் நஞ்சாவது குறித்து எதிர்ப்புகள் இருந்த போதிலும், தமது அரசியல் செல்வாக்கின் மூலம் அந்த எதிர்ப்புகளை எரிவாயுக் கம்பெனிகள் முடக்கி விடுகின்றன.
ஷேல் வாயு நிறுவனங்களை அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்ய முடியாது என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் சட்டத்திலிருந்து நீரியல் விரிசல் நடவடிக்கைக்கு விலக்களித்தும் 2005-இல் அதிபர் புஷ் சட்டத்திருத்தமே நிறைவேற்றியிருக்கிறார்.
அம்பானியும் அதானியும்தான் மோடியின் புரவலர்கள் என்பது போல, ஜார்ஜ் புஷ்ஷும் துணையதிபர் டிக் செனியும் ஹாலிபர்ட்டன் என்ற எண்ணெய்க் கம்பெனியின் கைப்பிள்ளைகள். சுற்றுச்சூழல் சட்டத்தில் போடப்பட்டிருக்கும் இந்த ஓட்டைக்கு, “ஹாலிபர்ட்டன் ஓட்டை” என்றே அங்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். (நாமும் மோடியின் எரிசக்திக் கொள்கையை “ஹெல்ப் அம்பானி கொள்கை” என்று அழைக்கலாம்.)
ஷேல் வாயு எடுக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மூளை, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடியவை; தோல் நோய்கள் முதல் புற்றுநோய் வரை பலவற்றையும் தோற்றுவிக்கக் கூடியவை என்று அமெரிக்க சூழல் ஆய்வு நிறுவனம் பல தரவுகளைத் தொகுத்திருக்கிறது. ஆனால், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டபின் அத்தரவுகளை தனது ஆய்வறிக்கையிலிருந்தே நீக்கியிருக்கிறது.
இதுதான் அமெரிக்காவின் நிலை என்றால், இந்தியாவில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. 2022-இல் எண்ணெய் இறக்குமதியில் 10% குறைக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காகத்தான், காவிரி உள்ளிட்ட படுகைகளைப் பாலைவனமாக்குகிறார்களாம். இந்தப் பேரழிவுக்கு மோடி சூட்டியிருக்கும் பெயர் வளர்ச்சி. அந்த வளர்ச்சிப் பாதையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, இந்த அழிவுப்பாதையிலிருந்து நாம் நாட்டை மீட்க முடியாது.
– சூரியன்
புதிய ஜனநாயகம், மார்ச் 2017
மேலும் படிக்க:
- Prospectivity of Cauvery Basin inDeep Syn-rift Sequences, SE India, Arijit Chaudhuri , M. V. Rao , Feb3, 2010
- Shale Gas Scenario in India and Comparison with USA,- Harsh Anjirwala, Bhatia
- A review on shale gas prospect in Indian sedimentary basins
- Global Shale Gas Development: Water Availability and Business Risks
- Our Drinking water at risk: Oil and Gas Accountability Project April, 2005
- Reliance, ONGC, BP and Others to Gain from Cabinet’s decision on new pricing for undeveloped fields in India
- Drilling for Earthquakes, Scientific American, March 28, 2016