Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மாருதி தொழிலாளர்களுக்காக கோவையில் ஆர்ப்பாட்டம் !

மாருதி தொழிலாளர்களுக்காக கோவையில் ஆர்ப்பாட்டம் !

-

நீதித்துறையும் போலீசும் நமக்கானதல்ல – மாருதி ஆலைத் தொழிலாளர்களை பாதுகாப்போம் ! எனும் முழக்கத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினோம். நீதித்துறையை விமர்சித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தர முடியாது என வழக்கம் போல் காவல்துறை கூறிவிட்டது.

17.03.2017 வெள்ளி மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பு.ஜ.தொ.மு மாவட்டக்குழு தோழர் சரவணன் தலைமை தாங்கி கம்பீரமாக முழக்கமிட ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. காவல்துறை தடை காரணமாக மாநிலத் துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி மட்டும் கண்டன உரையாற்றினார்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அரியானாவில் உள்ள மாருதி ஆலைத் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட அடக்கு முறையைக் கண்டித்து இங்கு நாம் முழங்குகிறோம். அரியானாவில் மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு இன்று தரப்படும் தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

எனவேதான் போராட்ட மரபில் எழுந்து நிற்கும் கோவை தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் நமது தோழமையை கண்டன ஆர்ப்பாட்டமாக முழங்குகிறோம்.

தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக நாம் நிற்கிறோம். இதனை ஏட்டில் மட்டும் எழுதாமல் நடைமுறையிலும் வெளிப்படுத்துகிறோம். மாருதி ஆலைத் தொழிலாளர்கள் நமது தோழர்கள் என்றால், அவர்களது எதிரிகளும் நமது எதிரிகளே. மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் தண்டனை என்பது இனி அடுத்து வரப்போகும் தாக்குதல்களுக்கு முன் அறிவிப்பு ஆகும்.

நாட்டில் ஏறத்தாழ பெரும்பகுதி தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக மாற்றப்பட்டு விட்டனர். சிறுபகுதி மட்டும் நிரந்தரம், இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் என சின்ன சின்ன சலுகைகள் தங்கள் போராட்டங்கள் மூலம் பெற்று உள்ளனர். இவர்களைக் காரணம் காட்டி இதர தொழிலாளர்கள் உரிமை கேட்கின்றனர். எனவே நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த கூலிகளாக மாற்ற வேண்டும் என்பது கார்ப்பரேட்களின் உத்தரவு. இதனை உபி தேர்தல் வெற்றிக்கு பிறகு உற்சாகமாக அமுல்படுத்துவோம் என தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா அறிவிக்கிறார்.

வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாட்டில் அகதிகள் போல ஏதிலிகளாய் எந்தவித உரிமைகளும் அற்று அலைகிறார்கள். அவர்களது உழைப்பு வரைமுறையற்று சுரண்டப்படுகிறது. அதே நிலைமை இனி அனைவருக்கும் ஏற்படும். அரசு ஊழியர்களும் ஒப்பந்தக் கூலிகளாய் மாற்றப்படுவர்.

எனவே இப்போதே இந்தக்கணமே விழித்தெழுந்து போராட வேண்டும் எனக்கூறி முடித்தார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு அண்ணாமலை அரங்கில் வைக்கப்பட்டனர். அங்கும் தோழர்கள் நித்தியானந்தன் பி.ஜெகநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் தண்டனை இந்தியா தொழிலாளி வர்க்கத்தை மிரட்டும் என ஆளும் வர்க்கம் முடிவெடுத்துள்ளது. ஆனால் நாம் இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்தி ஒன்றிணைய வேண்டும்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு – 90924 60750

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க