Tuesday, April 29, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமக்கள் அதிகாரத்தை முடக்க நினைக்கும் திருச்சி மண்டல போலீசு !

மக்கள் அதிகாரத்தை முடக்க நினைக்கும் திருச்சி மண்டல போலீசு !

-

PP Logo

அனுப்புதல் :
க.காளியப்பன், மாநில பொருளாளர்,
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
அண்ணா நகர், சிவாஜி நகர் வழி
தஞ்சாவூர்.

பெறுநர் :
திருமிகு. காவல் துறைத் தலைவர் அவர்கள்,
மத்திய மண்டலம்,
திருச்சி.

அய்யா,

பொருள்: பொதுக்கூட்டம்,  ஆர்பாட்டம் போன்றவற்றிற்கு  காவல்துறை அனுமதி மறுக்கப்படுவது, அமைப்பு குறித்து அவதூறான கருத்துக்களை காவல்துறையினர் பரப்புவது குறித்து நடவடிக்கை கோரி மனு

எமது அமைப்பான மக்கள் அதிகாரம் தமிழகத்தையும், மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடி வரும் அமைப்பு என்பதை அனைவரையும் போன்றே தாங்களும் அறிவீர்கள். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படி எல்லா கட்சிகள், அமைப்புகள் போன்று எமது கருத்துக்களையும் மக்களிடையே பிரச்சாரம் செய்யவும், அமைப்பை வளர்க்கவும் எமக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்பதை தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறோம்.

ஆனால் அண்மைக் காலமாக தங்கள் தலைமையிலான திருச்சி மண்டலத்தில் எமது அரசியல் நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக பொதுக்கூட்டம், ஆர்பாட்டம், தர்ணா போன்றவற்றிற்குத் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்படுவதுடன் எமது தோழர்களின் பிரச்சாரத்திற்குத் தடைகளை உருவாக்குகின்றனர். மேலும் எமது அமைப்பைப் பற்றி தவறான கருத்தைப் பரப்பி மக்களிடம் பீதியூட்டுகின்றனர். இந்த நடவடிக்கைகளில் உளவுப்பிரிவினர்  குறிப்பாக கியூ பிரிவினர் ஈடுபடுகின்றனர்.

நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறையினர் குறிப்பிட்ட அமைப்புக்கு எதிராக செயல்படுவது சட்டவிரோதமானது,  ஜனநாயக விரோதமானது. இதற்கு ஆதாரமாக ஒருசில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறோம்.

  1. தமிழக விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் நாள் திருத்துறைப்பூண்டியில் பொதுக்கூட்டம் நடத்த 17.01.2017ல் அனுமதி கோரினோம். ஆனால் கடைசி நேரத்தில் ரத்து செய்து அறிவித்தனர். மீண்டும் 25.02.2017 அன்று நடத்த அனுமதி கோரினோம் இதையும் கடைசி நாள் நள்ளிரவு ரத்து செய்ததுடன் எமது தோழர்கள் முரளிஇ செல்வம் ஆகியோரைக் கைது செய்தனர். தற்போது 29.03.2017 அன்று நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தினை ஏற்கவே மறுத்துவிட்டனர். எனவே பதிவஞ்சலில் அனுப்பியுள்ளோம்.
  2. இம்மாதம் 15ந் தேதி (15.03.2017) மணப்பாறையில் தர்ணா நடத்த அனுமதி கோரினோம். வாய்வழியாக அனுமதியளித்து விட்டு தர்ணா தொடங்கிய நேரத்தில் அனுமதியை மறுப்பதாக அறிவித்து 25 தோழர்களையும் கைது செய்தனர்
  3. கரூரில் சுவரொட்டி ஒட்டியதற்காக இரு தோழர்கள் 26.01.2017 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
  4. பிப்ரவரி 17-ம் தேதி மாணவர்களின் புத்தக அட்டையில் திருவள்ளுவர் படம் கொண்ட லேபிள் ஒட்டியதற்காக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  5. அதே போன்று திருச்சியில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
  6. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு நல்லாண்டார் கொல்லை ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் வந்து ஆதரித்துப்பேசி வருகின்றனர். போராட்டத்திலும் கலந்து கொள்கின்றனர். எமது தோழர்களும் போராட்டத்தில் தொடர்ந்து கலந்து கொள்கின்றனர். ஆனால் அங்குள்ள உளவுப்பிரிவினர், குறிப்பாக கியூ பிரிவினர் எமது தோழர்களை மட்டும் குறிப்பாக தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என அவதூறாகப்பேசி மக்களிடம் பீதியூட்டுகின்றனர். எமது அமைப்புத் தோழர்களை ஆதரித்துப் பேச அனுமதிக்கக் கூடாது என மக்களை மிரட்டுகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அதை அவமதிக்கும் செயலாகும். மேலும் காவல் துறை குறிப்பிட்ட அமைப்பு மற்றும் அதன் அரசியல் கொள்கைகள் குறித்து எதிர்ப்பிரச்சாரம் செய்வதும், பொய்யான கருத்தைக் கூறி அவதூறு செய்வதும் சட்ட விரோத நடவடிக்கையாகும்.

எனவே போலீசார்  எமது அமைப்புக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தவும்,எமது சட்டப்பூர்வ உரிமைகளை மறுப்பதைக் கைவிடவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி !

தங்கள் உண்மையுள்ள
க.காளியப்பன்,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க